அதீசர் என்பவர் புத்தசமயத் துறவியும் கொள்கைப் பரப்புநருமாவார். இவர் இயற்பெயர் சந்திரகர்ப்பர் என்பதாகும். கி.பி. 981–ஆம் ஆண்டில் வங்காள மாநிலத்தில் சகோர் என்னும் ஊரில் இவர் பிறந்தவராகக் கருதப்பெறுகிறார். தம் 31–ஆம் வயதில் இவர் புத்தசமயத்தை மேற்கொண்டார். காலப்போக்கில் இவர் புத்த சமயத்தில் வல்லுநரானார், திபேத்து நாட்டு அரசரின் அழைப்பினை ஏற்று இவர் திபேத்து நாட்டிற்குப் போந்தார். அங்குப் பன்னீராண்டுகள் தங்கி, வடமொழியிலும் திபேத்திய மொழியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிப் பௌத்த சமயத்தை வளர்த்தார். கி.பி. 1054–ஆம் ஆண்டில் தம் 73–ஆம் வயதில் திபேத்திலேயே காலமானார். திபேத்தியர்கள் இவரைப் போதி சத்துவர் என வழிபடுகிறார்கள்.