ஆழ் குழாய்க் கிணறுகளைத் தோண்டும் பணிக்கு அடிப்படையாக விளங்குவது சுழல் துளைப்புக் கருவி (rotary tool drill). இதன் நுனியில், சிறு துருவி (drill bit) ஒன்றும், அதோடிணைந்த சுழல் தண்டும் (rotor shaft) இருக்கும். எண்ணெய்த் தோண்டுமிடத்தில் உள்ள கூர்ங் கோபுரத்தின் தளப் பகுதியில் சுழல் மேசை ஒன்றிருக்கும். அதன் மையத்தில், உள்ளக எஃகுத் துளைப்புக் குழாய் சுழன்று கொண்டிருக்கும். உள்ளக எஃகுத் துளைப்புக் குழாயினுள் சுழலும் துருவி, பாறையை துளைத்துத் தோண்டுகிறது. இச்சமயத்தில், துளைப்புப் பாய்மம் உட் செலுத்தப்பட்டால், அதோடு பாறையின் துருவிய துகள்களும் கலந்து வெளியேறி விடும். இத்துளைப்புப் பாய்மம் காற்று, நீர் அல்லது சில வேதி கலவையோடிணைந்த களிமண் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கும், இக்களிமண் கலவை பயன்படுத்தப் படும் போது, அதில் கலந்துள்ள நீர்ப் பசை துருவியைக் (bit) குளிரச் செய்வதோடு, துருவிக்கு அதுவே மசகாகவும் விளங்குகிறது. ஆழ் குழாய்க் கிணறு தோண்டும் பணியில், காற்றழுத்தமே இயக்க ஆற்றலாகப் பயன்படுகிறது. எனவே, காற்றழுத்தியை இயக்க ஒரு பொறியும், காற்றழுத்தியும் இணைந்திருக்கும். காற்றழுத்தி மூலம் வரும் அழுத்தக் காற்று, சுழல் மேசையைச் சுழல வைப்பதோடு துருவியை மேலும், கீழும் ஏற்றவும், இறக்கவும் பயன்படுகிறது. துளைப்புக் குழாயின் மேற்பகுதி கனமான சதுர வடிவ கெல்லிக் குழாயுடன் இணைக்கப்பட்டு, அக்குழாய் கூர்ங் கோபுரத்தில் தாங்கப்பட்டு நிற்கும். இச்சதுர வடிவக் குழாய், சுழல் மேசைக்கு நல்ல பிடிப்பை அளிப்பதோடு, துளைப்புக் குழாயின் மேல்—கீழ் ஏற்ற இறக்கத்தின் போது, ஒரு காடியாகவும் அமைந்து, நல்ல பிடிப்புப் பயனை அளிக்கிறது. துளைப்புக் குழாயின் துளை வேகம் ஏறக் குறைய, நிமிடத்திற்கு 40-500 வரையிருக்கும். சில ஆழ் துரப்பணங்களில், இவ்வேகம் மேலும் உயரும். துளைப்புக் குழாய் ஏறத் தாழ, 9 மீ. உயரத்தில் கிடைக்கும். ஆழத்தைப். பொறுத்து, அவை ஒன்றோடொன்று இணைவமைவு (coupling) மூலமாக இணைக்கப்படும். துளைப்புக் கயிறு (drilling string) இவ்வமைப்புகள் அனைத்தையும் தாங்கி நிற்கும். இது கூர்ங் கோபுரத்திலுள்ள சுழல் வாளோடு (swivel blade) இணைக்கப்பட்டிருக்கும். துளைப்பு வடக் கயிறு (drilling cable) கூர்ங் கோபுரத்தின் மேல் பகுதியிலுள்ள முகட்டில் (crown block) தொங்க விடப்பட்டு, அதன் மறு முனை கொக்கியோடிணைந்து, சுழல் வாளுடன் பொருந்தியிருக்கும். இதனால், துளைப்பு வடக் கயிற்றை இயக்கி இழுக்கும் போது, அதனோடிணைந்த அனைத்து அமைப்புகளும் (துருவி வரை) ஏறி, இறங்கும். சுழல் வானின் மையப் பகுதியில் உள்ள புற வழி வழியே, கீழ் மட்டத்திலிருந்து துருவி எடுக்கப்படும் பாறை, உட்செலுத்தப்படும் குளிரூட்டி களிமண் கலவை முதலியவை வெளியேறும். துளைப்புக் குழாயின் முழு உயரத்திற்கும் துருவி துளைத்து முடித்த பின், மீண்டும் ஆழப் படுத்த வேண்டு- மாயின், துளைத்தல் பணி நிறுத்தப்பட்டுத் துளைப்புக் கயிறை மேலே இழுக்க வேண்டும், பின் இணைவமைவு மூலம், புதுத் துளைப்புக் குழாயை இணைத்து, பின் கெல்லிக் குழாய் பொருத்தி மீண்டும், துரப்பணப் பணியைத் தொடங்க வேண்டும். இம்மாற்றியமைக்கும் பணிகளை, துருவி மழுங்கிப் போகும் வரை பலமுறை செய்யலாம்.. துருவியின் முனைகள் மழுங்கி விட்டால், முழு அமைப்பையும் வெளியெடுத்துப் பின் துருவியை மாற்ற வேண்டும். இச்செயலுக்கெனத் துளைப்புக் குழாய் பொதுவான மும்மூன்று குழாய் அமைப்பாக ஏறக்குறைய 27 மீட்டராகப் பிரிக்கப் படுகிறது. இதைப் போல், இரண்டு அல்லது மூன்று மடங்குகளில் கூடச் சேர்த்துப் பிரிக்கலாம். இது, கூர்ங் கோபுரத்தின் உயரத்தைப் பொறுத்தது. ஒரு முறை துருவியை மாற்ற, மொத்த துளைப்பிற்கு ஆகும் காலத்தில், இரண்டு அல்லது மூன்று மடங்கு காலம் வீணாகும். துளைப்புக் கயிறை மேலெழுப்பும் போதும், கீழிறக்கும் போதும், சுழல்வான் இணைப்பைத் துண்டித்து விட வேண்டும். சரியான துளைப்பிடத்திற்குத் துருவியை இறக்கிய பின், இயக்கத்தை மீண்டும் தொடங்க வேண்டிய நேரத்தில் மட்டுமே சுழல்வான் இணைப்பு புதுப்பிக்கப் பட வேண்டும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> கூர்ங் கோபுரங்கள், கன ரக ஊர்திகளில் பொருத்தப் பட்டிருந்தால், அவை இயக்கத்தின் போது, அதிராமலும், நகர்ந்து விடாமலும் இருக்க தக்க காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனினும், மிகு ஆழ் துளைப்புகளுக்கு, கூர்ங் கோபுரங்கள் நிலையாகத் துளைப்பிடத்திலேயே அமைக்கப்படும். கூர்ங் கோபுரங்கள் ஏறத் தாழ, 20-60 மீ. உயரம் வரையிலும் உள்ளன. எண்ணெய் நில வளிம அமைப்புகளின் கூர்ங் கோபுரங்கள் மேலும் மிகு உயரம் இருக்கும். கூர்ங் கோபுரத்தில் தரை மட்டத்திலிருந்து ஏறத் தாழ, 2-3 மீட்டருக்குள் ஒரு தளம் அமைக்கப்பட்டு, அதில் கட்டுப்பாட்டுக் கருவிகள் நிறுவப்படும். —கே. ஆர். கோவிந்தன் நூலோதி. P.L, Ballaney, Theory of Machines, Fifteenth Edition, Khanna Publishers,New Delhi, 1987.