(19–நூ) திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள தென் திருப்பேரையில் வாழ்ந்த ஒரு புலவர்; வைணவ அந்தணர். பெற்றோர் சீனிவாச ஐயங்கார், குழைக்காத நாச்சியார் ஆவர். தந்தையும் ஒரு கவிஞர், விரைந்து கவிபாடும் வல்லமை பெற்றிருந்தமையால் அபிநவ காளமேகம் என்றும் அபிநவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்றும் பாராட்டப் பெற்றார். இவர் வடமொழி தென்மொழிகளில் வல்லவராகத் திகழ்ந்தார். வானமாமலை மடத்துப் பரமகம் சேத்தியாதி சின்னக்கவியன் இராமானுச சீயர் சுவாமிகள் இவரைத் தம் அவைப்புலவராக ஆக்கிக் கொண்டார். தனிப்பா மஞ்சரி, மகுடதாரண வைபவ வெண்பாமாலை, திருவரங்கச் சிலேடை மாலை, திருப்பேரைக் கலம்பகம், கண்ணன் கிளிக்கண்ணி, பத்மநாப சுவாமி சந்திரன் பாமாலை, வேள்வி விளக்கமாலை, திவ்வியதேசப் பாமாலை, மணவாள மாமுனி ஊசல் திருநாமம், நீதிவெண்பா நாற்பது, கற்பக விநாயகர் பதிகம், வேண்டும் நீதி ஆகியன இவர் எழுதிய நூல்களாகும். தனிப்பா மஞ்சரி, இவர் இயற்றிய தனிப் பாடல்களின் தொகுப்பாகும். மகுடதாரண வைபவ வெண்பாமாலை, அப்போது இந்தியாவை ஆண்ட ஆங்கில அரசர் 5-ஆம் சார்சு மாமன்னர் தில்லியில் முடிசூட்டிக் கொண்ட சிறப்பைக் கூறுவதாகும்.த.கு.மு.