ஓரியன் விண்மீன் குழுவிற்கு அருகில் வட வான கோளத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய குளிர் கால விண்மீன் குழு சிறு நாய் விண்மீன் குழு (canis minor) ஆகும். இவ்விண்மீன் குழுவின் அமைப்பு ஒரு சிறிய நாய் போல் இருப்பதால், இப்பெயரால் குறிப்பிடப்படுகிறது. இது 7 மணி 30 நிமிட வல ஏற்றத்திலும் (right ascension), +5° நடுவரை விலக்கத்திலும் (declination) அமைந்துள்ளது. இவ்விண்மீன் குழு, வான நடுவரைக்கு வடக்கே 5° இல் அமைந்துள்ளமையால், பெரும்பாலும் உலகில் எப்பகுதியிலிருந்தும் காண இயலும். இக்குழு வான கோளத்தில் 183 சதுரப் பாகை இடத்தை அடைத்துக் கொண்டுள்ளது. இவ்விண்மீன் குழுவில் உள்ள விண்மீன்களில் மிகவும் அதிக ஒளியுடையது புரசியான் (procyon) என்னும் ஓர் இரட்டை விண்மீன் (binary star) ஆகும். —பெ. வடிவேல்