குரல் வளை முழுதும் திடீரென அடைபட்டு மூச்சுத் திணறல் ஏற்படும் போது, உயிர் காக்கச் செய்யப்படும் அறுவை மருத்துவம் சுவாசக் குழாய்த் திறப்பு (tracheostomy) எனப்படும். கேலன், அரிட்டேஸ் என்போர் முதல் நூற்றாண்டிலேயே இம்மருத்துவத்தைச் செய்தனர். 1600ஆம் ஆண்டில் பேப்ரிசியஸ் என்பார் திடீர் இறப்பிலிருந்து நோயாளியை உயிர்ப்பிக்கச் செய்த இந்த அறுவை மருத்துவம் பற்றிக் கூறியிருக்கிறார். 17ஆம் நூற்றாண்டில், தாமஸ் ஃபீனஸ் காலத்தில்தான் இந்த அறுவை முறை ஒழுங்குபடுத்தப் பட்டது. குரல் வளை அடைபட்டிருக்கும் போதும், விபத்தினால், குரல் வளையில் காயம் பட்டு, மூச்சுத் திணறல் இருக்கும் போதும், உயிரைக் காக்க மட்டுமே இது செய்யப்பட்டது. சுவாசக் குழாய்த் திறப்பு அறுவையில் பல நன்மைகள் உள்ளன. குரல் வளை அடைப்பைத் தாண்டி, துளையிடப் படுவதால் எளிதாகச் சுவாசிக்க முடிகிறது. துளை வழியே நுரையீரலில் இருக்கும் நீர், சளி ஆகியவற்றை உறிஞ்சி மூலம் வெளியே எடுக்க முடியும். நுரையீரலுக்குள் மருந்து இடவும், அறுவை மருத்துவத்திற்கு மயக்கம் கொடுக்கக் குழாய் செலுத்தவும் முடியும். மூச்சுக் குழல் கீறலின் இன்றியமையாமை. பிறவிக் கோளாறுகளால் குரல் வளை சிறுத்திருத்தல், குரல் வளையில் வெளி மற்றும் உட்காயம், வெளிப் பொருள்கள் சிக்கியிருத்தல், தொண்டை அடைப்பானால் குரல் வளை அழற்சி, குரல் வளைக் கழலையங்கள், குரல் நாண் தாக்கம், குரல் வளையின் மேல் பகுதியில் உள்ள சில கோளாறுகள் ஆகியவற்றால் சுவாசப் பாதை அடைபடும். மூச்சுக் குழாய், நுரையீரல் பாதுகாப்பிற்கு மூச்சுக் குழல் கீறல் உதவுகிறது. இதனால், உமிழ் நீர், நீர், நீர்ம உணவு, குருதி ஆகியவற்றைச் சுவாசப் பாதையிலிருந்து அகற்றலாம். மேலும், நுரையீரலில் சுரக்கும் நீரையும் அகற்றலாம். போலியோ, டெட்டனஸ், தலை, கீழ் நாடிக் காயம், நஞ்சு அருந்திய மயங்கிய நிலை, முகம், கழுத்துப் பகுதிகளில் தீக்காயம் ஆகியவை இருக்கும் போது, மூச்சுக் குழலில் கீறல் ஏற்படுத்திக் குழாய் இடுவதால், எளிதாகச் சுவாசிக்க முடியும். ஆக்சிஜன்—கார்பன் டைஆக்சைடு பரிமாற்றம். ஏற்படப் பயன் படாத வாய், தொண்டை, மூச்சுக் குழாய் ஆகிய இடங்களிலுள்ள காற்றைச் சுவாசிக்க கடினப்பட வேண்டியதில்லை. தேவைப்பட்டால், மூச்சுக் குழல் கீறல் வழியாக, ஆக்சிஜனை அழுத்தத்துடன் செலுத்தவும் முடியும். அறுவை முறை. தைராய்டு சுரப்பியின் கீழாக, மூச்சுக் குழாயின் மூன்றாம் வளையத்தில் சிறு துளையிட்டு, மூச்சுக் குழலில் கீறல் போடப்படும், இதன் வழியே செலுத்தப் படும் மூச்சுக் குழல்—கீறல் குழாய் கழுத்துடன் நாடாவால் கட்டப் படுகிறது. முதலில் சிறிது இருமலுடன் சளி வெளியேறும். பிறகு அமைதியான சுவாசம் நடைபெறும். கண்காணிப்பு. கீறல் குழாய், சளி அல்லது படலங்களால் அடைபடாதவாறு கவனிக்க வேண்டும். உட்புறக் குழாயை, நாளும் மூன்று முறை வெளியே எடுத்து, நன்கு தூய்மை செய்து கொதிக்கும் நீரிலிட்டு உலர்த்தி, மீண்டும் பொருத்த வேண்டும். மூச்சுக் குழல் உலர்ந்து போகாதவாறு வைத்திருக்க வேண்டும். குழாயின் மேல் ஈரமான வலைத் துணியைப் போர்த்தலாம். பலமான இருமலால், குழாய் வெளியே வந்து விடாமல் கண்காணிக்க வேண்டும். துளை குழலை விடப் பெரியதாக இருந்தாலும், நாடா மிக இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தாலும், தோலின் அடியில் குழாய் வழியே வரும் காற்று இறங்கி, கழுத்து வீங்கி விடும். காற்றுக் குமிழ்களை விரலால் தொட்டு உணரலாம். நோய் நீங்கிக் குரல் வளை வழியாகச் சுவாசிக்க முடியும் நிலையில்தான் கீறல் குழாயை அகற்ற வேண்டும். —டி. எம். பரமேஸ்வரன்