இக்காய்கறியின் தாவரப் பெயர் பிராசிக்கா ஒலிரேசியா வகை காங்கிலோடெஸ் (Brassica oleracea Var gongylodes) <!---- Checked the botanical name with https://en.wikipedia.org/wiki/Kohlrabi----> என்பதாகும். பிராசிக்கா ஒலிரேசியா வகை காலோராபா (Brassica oleracea var. Caulorapa) என்பது இதன் இணை தாவரப் பெயராகும். இச்செடி குரூசிஃபெரே குடும்பத்தைச் சேர்ந்தது. நூல்கோல் வடக்கு ஐரோப்பியக் கடற்கரையோரப் பகுதிகளையே தாயகமாகக் கொண்டதாகக் கருதப் படுகிறது. அமைப்பு. இது ஒரு சிறு செடி; தண்டு நேரானது; தண்டு வீங்கி உருண்டையாக, 5–10 செ.மீ. குறுக்களவுள்ளதாக மாறும். இலைகள் பளபளப்பானவை. இலைக் காம்பு நீண்டிருக்கும். மஞ்சரி ரெசீம் வகையைச் சேர்ந்தது. 10–20 செ.மீ. நீளமுடையது, பூக்காம்புச் செதில், பூவடிச் செதில் அற்றது. மலர்கள் இரு பால் ஆரச் சமச் சீரானவை. புல்லி இதழ்கள் நேரானவை. அல்லி இதழ்கள் 1–1.5 செ.மீ. நீளமானவை. புல்லி இதழ்களை விட ஏறக் குறைய, இரு மடங்கு நீளமானவை. எலுமிச்சை மஞ்சள் நிறமானவை. ஆறு மகரந்தத் தாள்களும் நேரானவை. மேல் மட்டச் சூல் பை. கனி நெற்று (pod) வகையைச் சேர்ந்தது. இரண்டு இணைப்புகளினின்றும் கீழிருந்து மேல் நோக்கிக் கனிகள் வெடிக் கின்றன. இவ்வாறு அறைகள் பிரியும் போது, தடுப்புச் சுவரில் இணைத் திசுவின் மூலம் சூல்கள் பொருந்தியுள்ளன. கனி 5–10 செ.மீ. நீளத்தில் உருண்டையாகவும், நுனி கூரியதாயும் இருக்கும். .கனியின் நுனி விதை அற்றது. ஒவ்வொரு கனியிலும் 8–16 விதைகள் அடங்கியிருக்கும். கனி அடர் சாமபல் பழுப்பு நிறத்தில் 2–4 மி.மீ. குறுக்களவுடன் இருக்கும். விதைகளில் கரு பெரியதாகவும், முழுமையாக விதையை அடைத்துக் கொண்டும் இருக்கும். சாகுபடி முறை. இதன் சாகுபடிக்குப் பல வகையான மண் வகைகள் ஏற்றவையாக இருந்த போதிலும், செம்மண் கலந்த இரு மண்பாட்டு நிலம் மிகவும் ஏற்றது. விதைகள் பெரும்பாலும் ஜுன்–ஜூலை மாதங்களிலும், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் விதைக்கப் படுகின்றன. இந்தியாவில், வியன்னா, கருநீல வியன்னா என்னும் வகைகளே சாகுபடியில் உள்ளன. கிங் ஆஃப் நார்த் என்னும் வகையும் தற்போது பயிராகிறது. வெள்ளை வியன்னா 60–80 நாளில் விளையும். தண்டங்கிழங்கு சற்று நீள் சதுரமாகவும், மென்மையாகவும் இளம் பச்சை நிறமாகவும் இருக்கும். கரு நீல வியன்னா 80–90 நாளில் விளைகிறது. இதில் கரு நீலமான நடுத்தர பருமனுடைய தண்டங்கிழங்குகள் உண்டாகின்றன. ஒரு ஹெக்டேர் நிலப் பரப்பில் சாகுபடி செய்வதற்கு 1.250 கிலோ விதையைப் பயன் படுத்த வேண்டும். பின்னர், 500 கிராம் 15:15:15 தொழு உரத்தைச் சேர்த்து, மண்ணுடன் கலக்க வேண்டும். 7.5 செ.மீ. இடை வெளியில் கோடுகளை இழுத்து, விதைகளை விதைத்து, மண்ணால் மூடி, நீர் பாய்ச்ச வேண்டும். பெரும்பாலும், 3–4 வார நாற்றுகள் 30–22.5 செ.மீ. இடைவெளியில் பார் முறையில் நடப் படுகின்றன. ஹெக்டேருக்கு 150 கி.கி. தழைச் சத்து, 100 கி.கி. மணிச் சத்து, 125 கி.கி. சாம்பல் சத்து ஆகியவை தேவை. மணிச் சத்து உரமும், சாம்பல் சத்து உரமும் முழுமையாக அடியுரமாக இடப் படுகின்றன. தழைச் சத்தில் பாதியளவு அடியுரமாகவும், பாதியளவு நடவு செய்த நான்கு வாரங்களுக்குப் பின்பும், இடப் படுகிறது. நீர் பாய்ச்சிய பின், நடவு செய்தல் வேண்டும். பின்பு நூல்கோல் தோட்டத்திற்கு 4–6 நாளுக்கு ஒரு முறை நீர் இறைக்க வேண்டும். தண்டின் அடிப் பகுதி 5–7 செ.மீ. குறுக்களவிற்குக் கருத்தவுடன், செடிகள் பிடுங்கப் பட்டுக் கிழங்குகள் அறுவடை செய்யப் படுகின்றன. நாற்று நட்ட 45–60 நாளில் அறுவடை நடை பெறுகிறது. நோய்கள். இப்பயிரை அசுவுணி, இலைப் பேன், தத்து வண்டு, அரைக் காவடிப் புழு மஞ்சரித் துளைப்பான் போன்றவை தாக்குகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த நாற்றங்காலில் 10 லி. நீருக்குக் குவினால் பாஸ் 20 மி.லி. வீதம் கலந்து தெளிக்க வேண்டும். நூல்கோல் உள்ள தோட்டத்தில், நட்ட 2, 4 ஆம் வாரத்தில் மேற்குறிப்பிட்ட மருந்தைத் தெளித்துப் பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்கலாம். நோய்களுள், பாக்டீரியாக் கருப்பழுகல், இலைக் கருகல், வெள்ளைத் துரு முதலியவை குறிக்கத் தக்கவை. பாக்டீரியக் கருப்பழுகல் நோயைக் கட்டுப் படுத்துவதற்கு 10 லி. நீருக்கு டெட்ராசைக்ளின் ஹைட்ராக்சைடு 100 மி.கி. கரைத்துத் தெளிக்க வேண்டும். ஏனைய நோய்களைக் கட்டுப் படுத்த, 10 லி. நீருக்கு 25 கிராம் என்னும் அளவில் தாமிர ஆக்சி குளோரைடு மருந்தைக் கரைத்துத் தெளிக்க வேண்டும். பயன். நூல்கோல் தண்டங்கிழங்கு பச்சை அல்லது நீல நிறத்தில் காணப் படும். அறுவடை செய்த செடிகளிலிருந்து பச்சைத் தழைகளை அரிந்து நீக்கி விட்டுக் கிழங்குகளைச் சிறு, சிறு துண்டுகளாக்கிச் சமைத்து உண்பதுண்டு. —கோ. அர்ச்சுனன். துணை நூல். J.W. Purseglove, Tropical Crops-Dicotyledons, Longman Group Ltd., London, 1974.