அநுராதபுரம்
anurātapuram
இலங்கையின் வடக்கு மையப் பகுதியில் உள்ள பழம்பெரும் நகரம்.
இலங்கையின் வடக்கு மையப் பகுதியில் உள்ள பழம்பெரும் நகரம். இன்று ஆய்வாளர்களையும் சுற்றுலாவினரையும் கவர்ந்து ஈர்க்கக்கூடிய நிலையில் உள்ள அந்நகரம், இலங்கையின் தலைநகராக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் திகழ்ந்தது.
ஈழநாட்டு வரலாற்றுச் செய்திக் கோவையின்படி அந்நாட்டின் முதல் மன்னன் இந்தியாவைச் சேர்ந்த விசயன் ஆவான். அவனுக்குப் பின் அவன் உடன்பிறந்தானின் மகனான பாண்டுவாசு என்பானும் அவனைச் சேர்ந்த சில துறவிகளும் அநுராதபுரத்தை அமைத்ததாக மகாவம்சம் என்னும் நூல் கூறுகிறது. அந்நகரம் கி.மு. 4–ஆம் நூற்றாண்டில் உண்டாயிற்று என்ற கருத்தும் நிலவுகிறது.
அரசியல் வரலாறு
வரலாற்றின்படி அநுராத புரத்தைத் தலைநகராகக் கொண்ட ஈழநாட்டின் முதல் அரசன் தேவனாம்பிரியதிசாவை, (கி.மு. 247–207) இந்தியாவின் மௌரியப் பேரரசனாகிய அசோகன் அனுப்பிய சமயப் பரப்புக் குழுவினர், புத்தசமயத்திற்கு மாற்றினர். தன் தலைநகரில் “மகா விகாரம்” என்ற மடத்தை அவன் கட்டினான். புத்தகயாவிலிருந்து எடுத்துச் சென்ற போதிமரக் கன்றையும் அவ்வரசன் நட்டு வளர்த்தான்; ஒரு பெரிய தூபியையும் நிறுவினான். அவன் நட்டமரம் “உலகில் இன்றுள்ள மரங்கள் யாவற்றிலும் மிகப் பழைமையனது”. திசாவின் ஆட்சிக் காலத்திலிருந்து, அநுராதபுர (இலங்கை) – இந்தியத் தொடர்பு வரலாற்று முறையிலும் பண்பாட்டு முறையிலும் மிகுதியாகியது.
கி.மு. 2–ஆம் நூற்றாண்டில் தமிழினத்தைச் சேர்ந்த எல்லாளன் (எல்லாரன்) என்பான் (கி.மு. 145 – 101) அரசுரிமையைக் கைப்பற்றி, ஆட்சி முறையைச் செம்மைப்படுத்தினான். முதலாவது சிங்கள மன்னன் விசயன் காலத்திலிருந்தே அவர்கள் இந்திய மன்னர்களுடன் மணவினைத் தொடர்பு கொண்டிருந்தனர். முதல் தொடர்பு பாண்டிய நாட்டு மன்னன் மகளுடன் கொண்ட மணவினை உறவாகும். இத்தகைய மணவினைத் தொடர்பு காரணமாகவே சிங்களவர், தமிழ் நாட்டு அரசுரிமைக்கும், தமிழர் அநுராதபுர அரசுரிமைக்கும் போட்டியிட்டுப் போரிட்ட பல நிகழ்ச்சிகளைக் காணலாம்.
எல்லாளனின் தமிழ் ஆட்சியை முடிவுறச் செய்த துட்டகைமனு (துத்தகமணி எனவும் கூறுவர்) என்பவன் இலங்கை, தமிழராட்சியினின்று விடுபட்டு உரிமை நாடாகவும் ஒரு பௌத்த நாடாகவும் விளங்க வேண்டுமென்ற குறிக்கோளுடன் செயலாற்றினான். ஆனால், மீண்டும் அநுராதபுரம், தமிழரால் கைப்பற்றப்பெற்று வட்டகமணி என்பானாட்சியின் கீழ் வந்தது. ஆயினும் விரைவில் இது மாறிச் சிங்களவர் ஆட்சி மீண்டும் ஏற்பட்டது.
தொடக்க முதல் இலம்பகர்ணர், மோரியர் என்ற இரண்டு வலிமை வாய்ந்த குலங்கள், அநுராதபுர அரியணையைத் தம் வசப்படுத்திக் கொள்வதில் போட்டியிட்டுப் போரிட்டு வந்ததால், தமிழ்ச் சேர சோழ பாண்டிய நாட்டு மன்னர்களும் சில சமயங்களில் தமது ஆட்சியை அங்கே நிறுவினர். இவ்வாறு, முதல் ஆயிரம் ஆண்டுக் காலத்தில் அநுராதபுர அரசியலில் ஒரு நிலையான தன்மை இல்லை. இலங்கைத் தீவு முழுவதையும் இணைத்து ஒன்றுபடுத்தி, நிலையான ஓர் ஆட்சியைப் பல ஆண்டுகள் தொடர்ந்து நிறுவ இயலாமல் போயிற்று. சேனா, குட்டிகா (கி.மு. 177–155) முதலியோர் ஆட்சிக்குப் பிறகு, கி.மு. 43–இல் பாண்டிய அரசகுல ஆட்சி மீண்டும் ஏற்பட்டுச் சிறிது காலம் நீடித்தது. கி.பி. 174 முதல் 196 வரை அங்கு ஆட்சி புரிந்த முதலாம் கயவாகு (சிலப்பதிகாரத்தில் சிறப்பிக்கப்படுபவன்), தமிழ் நாட்டுச் சேரருடன் நட்புறவு பூண்டிருந்தான். கரிகாற் சோழன், ஈழநாட்டுக்கு இடையூறு செய்து கயவாகுவிடமிருந்து இழப்பீடு பெற்றான். கயவாகு கண்ணகி (பத்தினித் தெய்வ) வழிபாட்டு முறையை இலங்கையில் புகுத்தினான். கயவாகுவுக்குப் பின் போந்த அபயநாகா (கி.பி. 285–293) தன் ஆட்சியை உறுதிப்படுத்திக் கொள்ளத் தமிழ் நாட்டுப் படையின் உதவியை நாடியதாக மகாவம்சம் குறிக்கும். சிரிசங்காபோ (கி.பி. 300–302) துறவியாக மாறிக் காட்டில் வாழ்ந்தான். அவன் உயிரைப் பறித்துக் கொள்ள விழைந்த கொடுங்கோலன் தன் உடன் பிறந்தானின் தலையைக் கொணர்வோர்க்கு இரண்டாயிரம் பொற்காசுகள் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்ததை அறிந்த அத்துறவி மன்னன், ஓர் ஏழை அப்பொருளைப் பெற்றுக் கொள்ளட்டும் என்று தலையையே தந்தான்.
அநுராதபுரம்-தூபாராம தூபி
அக்குலத்தின் இறுதி மன்னனான மகாசேனன் (334–362) பல தூபிகளையும் மடங்களையும் கட்டியதுடன், நீர்ப்பாசனத்திற்கான ஏற்பாடுகளையும் செய்தான். கி.பி. 4–ஆம் நூற்றாண்டிலிருந்து 6–ஆம் நூற்றாண்டு வரை அந்நாட்டில் பல சிறந்த குளங்கள் வெட்டப்பட்டதால், அக்காலம் “குளங்கள் வெட்டப்பட்ட காலம்” என்றே குறிக்கப்படுகிறது.
மேகவர்மன் கி.பி. 379 வரை ஆட்சி புரிந்தான். அவன் இந்தியாவின் சமுத்திரகுப்த மன்னனுடன் நட்புறவு பூண்டிருந்தான். புத்தரின் நினைவுச் சின்னமான பல், கலிங்க நாட்டிலிருந்து இவனால் பெறப்பட்டது. பின்போந்த புத்தசாரன், பத்து ஊர்களுக்கு ஒரு மருத்துவமனை என்ற முறையில் மருத்துவமனைகளைக் கட்டிப் புகழடைந்தான். வடமொழியில் சிறந்ததோர் மருத்துவ நூலும் இவனால் இயற்றப்பட்டது. மொக்கலானா (கி.பி. 491–508) என்பான், அவனுடன் அரசுரிமைக்காகப் போட்டியிட்ட கசியபன் என்பானை விரட்டத் தமிழர்களைப் படையில் அமர்த்தியிருந்தான். பின்னர் அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்தவர்களும் தமிழர் படையையே நம்பியிருந்தனர். இதனால் தமிழரசர் படையின் செல்வாக்கு உயர்ந்து அவர்கள் அரசர்களை ஆக்குவோராகவும் அழிப்போராகவும் ஆயினர். அரசவையில் தமிழரின் செல்வாக்குப் பெருகியது. தென்னிந்தியாவில் தமிழ் நாட்டு அரசர்கள் வலிமை பெற்றிருந்த காரணத்தால், இலங்கையில் தமிழரின் செல்வாக்கைக் குறைக்க இயலவில்லை. கி.பி. 5,6,–ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பாண்டியர், பல்லவர், சோழர் ஆகியோரின் எழுச்சியின் காரணமாக, இலங்கைச் சிங்களவர்க்கும் தமிழ் நாட்டுக்குமிடையே பகைமையும் உறவும் நிலவின.
இந்து சமயத்தை ஆதரித்த தமிழ் மன்னர்கள், சிங்களவரின் பௌத்த சமயத்தைத் தாக்கினர். இலங்கையில் தங்கியிருந்த தமிழர்களின் உதவியும் அவர்களுக்குக் கிடைத்தது. ஆரிய இனத்தவரான சிங்களவர்க்கும் தமிழருக்கும் பகைமை இருந்த போதிலும், சில காலங்களில் ஒற்றுமையாகவும் வாழ்ந்தனர். ஆனால் நெருக்கடி நிலை இருந்துகொண்டே இருந்தது. அநுராதபுர வரலாற்றில் தென்னிந்தியத் தலையீடு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இந்த அச்சுறுத்தல் காரணமாகவே அங்கே நிலைத்த அரசு ஏற்பட முடியவில்லை. முடிவில் அவ்வரசும் அழிந்தது. ஈழம் கி.பி. 6,7,8–ஆம் நூற்றாண்டுகளில், உள்நாட்டுப் போர்களாலும் துயருற்றது. பல்லவன் சிம்ம விட்டுணு (575–600) ஈழத்தை வென்றதாகக் கூறிக் கொள்கிறான். கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் அநுராதபுர அரசுக்கும் பல்லவர்களுக்குமிடையே நட்புறவு நிலவியது. தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்த முதலாம் நரசிம்மவர்ம பல்லவனும் (கி.பி. 630–655) இலங்கை மன்னன் மானவர்மனும் சேர்ந்து, சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை வென்றதால், உள்நாட்டுப் போரால் பட்டமிழந்த மானவர்மனை, அநுராதபுர அரியணையில் மீண்டும் அமர்த்திப் புகழ் கொண்டதும் பல்லவப் பேரரசன் நரசிம்மவர்மனேயாவன்.
பல்லவர் வீழ்ச்சிக்குப் பிறகு தலைமை நிலை எய்திய சோழரும் பாண்டியரும் அநுராதபுர அரசுடன் வேறுவகையான உறவு பூண்டிருந்தனர். போராட்டமும் தொடர்ந்தது. அநுராதபுரத்தில், முதலாம் சேனன் (கி.பி. 833–853) ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில் பாண்டிய மன்னன் சிரீமாற சிரீவல்லபன் (கி.பி. 815–860) ஈழத்தில் படையெடுத்து, அங்கிருந்த தமிழர்களின் உதவி பெற்று வெற்றி எய்தினான். பெருந்தொகையை இழப்பீடாகப் பெற்ற பிறகே பாண்டியப் படை வெளியேறியது. வஞ்சத் தீர்க்கக் காத்துக் கொண்டிருந்த ஈழமன்னன் இரண்டாம் சேனன், பாண்டிய நாட்டில் ஏற்பட்ட அரியணைப் போட்டியைப் பயன்படுத்திக் கொண்டு, அரியணை வேண்டிய ஒரு பாண்டிய இளவரசனுக்கு உதவி செய்ய, மதுரையைத்தாக்கிச் சூறையாடினான்.
தமிழகத்தில் சோழர் தலைமை நிலையில் இருந்த தருணத்தில், சிங்களவர், தமது பழைய கொள்கையை மாற்றிக் கொண்டு சோழரின் பகைவர்களான பாண்டியருடன் இணைந்து கொண்டனர். இதைக்கண்ட இராசஇராச சோழன் (கி.பி. 983–1014) அநுராதபுரத்தைத் தாக்கி அதைத் தம் நேர் ஆட்சியின் கீழ்க் கொணர்ந்தான். அநுராதபுர சிங்களவ மன்னர்களுள் இறுதியானவன் கி.பி. 982–இல் அரியணையேறிய ஐந்தாம்மகிந்தன், அவன் கி.பி. 1017–இல் சோழரால் பிடிக்கப்பட்டுக் கைதியாகித் தென்னிந்தியாலில் மாண்டான். இராசராசனின் மகன் இராசேந்திர சோழன் (1012–1044) ஆட்சியில் இலங்கைத் தீவு முழுவதும் சோழப் பேரரசுக்கு உட்பட்டது. பண்டைய காலம் முதல் ஈழமண்டலத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம் சோழரால் அழிக்கப்பெற்றது. இதற்கு முன் ஈழத்தின்மீது படையெடுத்துச் சென்ற தமிழரசர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதைத் தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராசராசனோ அம்மண்டலம் முழுவதையுமே கைப்பற்றித் தன் ஆட்சிக்கு உட்படுத்த விரும்பியதால், பழைய தலைநகரை விடுத்து, நாட்டின் நடுவில் உள்ள (அநுராதபுரத்தின் தென்கிழக்கில் உள்ள) பொலன்னருவா என்னும் நகரைச் சனநாதமங்கலம் என்ற புதிய பெயருடன் தலைநகராக்கிக் கொண்டான்.
அநுராதபுரம் ஒரு தலைநகராக இருந்ததுடன், ஒரு வாணிக மையமாகவும் (கி.பி. 10–ஆம் நூற்றாண்டு வரை) திகழ்ந்தது. மிகப் பழங்காலத்திலேயே யவனர் அங்கே குடியேற்றங்கள் அமைத்திருந்தனர். உரோமானிய நாணயங்கள் கி.பி. 4–ஆம் நூற்றாண்டிற்குரியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவாதலின், உரோமானியருடன் வாணிக உறவு இருந்தமை புலனாகிறது. பாரசீக வணிகரும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் அங்கே குடியேறினர். தமிழர் குடியேற்றங்களும் இருந்தன. அநுராதபுரத்தைத் தமிழரசர்கள் தாக்கியதன் நோக்கம், அதன் வாணிகத்தைத் தம் வசப்படுத்திக் கொள்ளலே. முத்து, மாணிக்கம், விலை உயர்ந்த நிறக் கற்கள், தந்தம், மணப்பொருள்கள் முதலியன சிறப்பான வாணிகப் பொருள்களாகும். தமிழ் மன்னர்களிடமிருந்து பல உரிமைப் பட்டயங்களைப் பெற்றுச் சிறப்பு வாணிகத்தில் அவர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். உள்நாட்டு வாணிகம் சிறந்த முறையில் அமைந்திருந்தது. பெரும்பான்மையும் பண்டமாற்று முறை நிலவியது. ஓரளவு நாணய முறையும் வழக்கிலிருந்தது. அநுராதபுரத்துக்கு மிக்க புகழ் தந்தது அதன் பண்டைக்கால நீர்ப்பாசன முறை. அதை அவர்கள் அமைத்துக் கண்காணித்த முறையை இக்காலத்திய பொறியியல் வல்லுநர்களும் வியந்து பாராட்டுகிறார்கள். இதனாலும், கிராமங்களில் நல்லமுறையில் செயற்பட்டு வந்த பொருளாதார அமைப்பினாலுமே, அந்நகரம் கடுமையான அரசியல் குழப்பங்களை நீண்ட காலம் தாங்க முடிந்தது. இராசரதம் (அரசரின் தேசம்) எனப்பெறும் இலங்கையின் வடபகுதியில் தான், நாகரிகம் மிகுதியாகச் சிறப்புற்றிருந்தது. கி.பி. 7–ஆம் நூற்றாண்டு வரை பாரசீகர், அநுராதபுரத்துடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பாரசீகக் கிறித்தவரில் நெசுத்தோரியப் பிரிவினர் தம் குடியேற்றத்தையே அங்கு அமைத்திருந்தனர். அநுராதபுர-சீன வாணிகத் தொடர்பு கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது. அநுராதபுரம் ஒரு வறட்சிப் பகுதியாக இருந்ததோடு, நீர்ப்பாசன வசதிகளும் படையெழுச்சிகளின் விளைவாக அழிவுற்றதால், அந்நகர் தலைநகராகத் தொடர்ந்து இருக்க முடியவில்லை.
இலக்கியம்
பிராகிருத–தமிழ்க் கலப்பே சிங்கள மொழி. இதுவே மக்களின் சிறப்பு மொழியாகும். சிங்கள இலக்கியம் வளரப் பாலிமொழியும் உதவியது. சிங்களரின் பௌத்த சமயம் பாலி மொழித் தொடர்புடையது.
அநுராதபுர மன்னர்களின் காலத்தில் சிறப்பான சிங்கள நூல்கள் பாலி மொழியிலேயே இருந்தன. அநுராதபுரத்தில் 5 சிறப்பு வாய்ந்த தூபிகள் இருந்தன. முதலாம் தூபி, சிறிய, ஆனால் கவர்ச்சிகரமான திருப்பரமா தூபி. மன்னன் துட்டகை மனுவால் நிரிசவேதி, மகாதூபி என இரண்டு தூபிகள் எழுப்பப் பெற்றன. பின்னர் எழுந்த அபயகிரி தூபி, மிகப் பெரிய தூபி. இதனைப் பண்டைக்காலத்தில் புகழ்பெற்ற மற்ற உலக நினைவுச் சின்னங்களுடன் ஒப்பிடலாம். உருவனவலிசயே என்ற மன்னனால் இது கட்டப்பெற்றது. கயவாகு மன்னன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், அபயகிரி தூபியை 93 மீட்டர் உயரத்துக்கு உயர்த்தினான். சதாவனே என்ற தூபி 133 மீட்டர் உயரமுள்ளது. இதனை அக்காலத்தின் அற்புதங்களுள் ஒன்றாகக் கூறலாம். பௌத்த உலகிலேயே இதுதான் மிகப் பெரியது. இவற்றைத் தவிர, பல சிறிய தூபிகளும் அக்காலத்தில் எழுப்பப் பெற்றன. அநுராதபுரத்தைச் சேர்ந்த துப்பராமா என்னுமிடத்தில், தூபியைச் சுற்றி மிக்க வேலைப்பாட்டுடன் நான்கு வட்டங்கள் கல்லினால் கட்டப் பெற்றிருப்பது, அக்காலக் கட்டிடக்கலைச் சிறப்புக்குச் சிறந்த சான்றாகும். மகா விகாரத்தைச் சேர்ந்த துறவிகள் தங்குவதற்காக, துட்டகைமனு மன்னனால் தொடங்கப்பெற்ற, பிரேசன் அல்லது லோவமகாயாய மாளிகைக் கட்டிடம், பிறகு ஒன்பது அடுக்குகளையுடைய மாடிக்கட்டிடமாக வளர்ந்தது. அதன் சிதறுற்ற சின்னங்களை இன்றும் அநுராதபுரத்தில் காணலாம். அங்குத் தாந்திரிய மகாயான பெளத்தர்களின் பொருட்டுக் கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் விசயராமாதூபி எழுப்பப்பெற்றது. இதைச் சுற்றியுள்ள பகுதியில் ஏற்பட்ட மடாலயம், தெற்கு வடக்கில் 96 மீட்டர், கிழக்கு மேற்கில் 89 மீட்டர் பரப்பினைக் கொண்டு சிறப்பாகத் திகழ்ந்தது. பௌத்தக் கட்டிடங்களில் இந்துக் கடவுளையும் காணலாம். இவை- யெல்லாம் இன்று சிதைந்து 1600 கற்றூண்கள், அழிவுற்ற நிலையில் பழங்காலப் பெருமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. கட்டிடக் கலையைப் போலவே சிற்பத் துறையிலும் அக்கால அநுராதபுரம் சிறப்புற்றிருந்தது. அதிலும் இந்தியப் பண்பைக் காணலாம். அநுராதபுரத்து இசுருமுனிவர் கோயிலுக்கு மாமல்லபுரத் தேர்களை ஒத்த பெருஞ்சிறப்பு உண்டு. அரசர்களின் குளியலறைகளில் எழில் மிக்க சிற்பங்கள் திகழ்ந்தன. அபயகிரி விகார வழிபாட்டில் கல்லாலாகிய ஒரு புத்த உருவமும், அநுராதபுர வெண்கல உருவங்களுள் சிலவும், பல்லவர் கலைப் பண்புகளைப் பெற்றுள்ளன. மகா மேக வனம் எனப்படும் அரசர் பூங்காவில், தெற்கில் இயற்கையாக இருந்த கற்பாறையை உளியால் செதுக்கித் தரையிலும் சுவரிலும் அதை இணைத்திருக்கும் அற்புதத்தை அநுராதபுரத்தில் இன்றும் காணலாம்.டி.பா.
துணை நூல்கள்
சபாநாதன் முதலியார், க., “யாழ்ப்பாண வைபவ மாலை”, கொழும்பு, 1953.
Arunachalam, P., “Sketches of Ceylon History”, Colombo, 1956.
Ariyapala, M.B., “Society in Mediaeval Ceylon”, Colombo, 1956.
Burrows, S.M., “Buried Cities of Ceylon.”
Cane, H.W., “The Book of Ceylon”, London, 1913.
Mendis, G.C., “Early History of Ceylon”, Calcutta, 1940.
Navaratna, C.S., “Tamils and Ceylon”, Jaffna, 1958.
Parker, H., “Ancient Ceylon”, London, 1909.
Pillai, K.K., “South India and Srilanka”, Madras, 1975.
Srinivasa Ayyaugar, P.T., “History of the Tamils from the Earliest Times to 600 AD.”, Madras, 1929.
Wijesekere, N.D., “The People of Ceylon”, Colombo, 1951.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 384)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2vcuc9kn/
தமிழ்“அநுராதபுரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2vcuc9kn/APA
Oliyon Research. (2026). அநுராதபுரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2vcuc9kn/MLA
"அநுராதபுரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2vcuc9kn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment