அருணாசலம்பிள்ளை, மு
aruṇācalampiḷḷai, mu
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவருடைய ஊர் நெல்லை மாவட்டத்திலுள்ள இராயகிரி ஆகும். சோழிய வேளாள மரபினைச் சார்ந்தவர். முத்துப்பிள்ளை, செல்லம்மை ஆகியோர் புதல்வராக 26–3–1903-இல் தோன்றிய இவர், இளமையிலேயே இலக்கிய இலக்கணக் கல்வியினை அருணாசலக் கவிராயர் அவர்களிடம் பெற்றார். பின்னர்ப் புதுக்கோட்டையைச் சார்ந்த மேலைச்சிவபுரியில் அமைந்துள்ள கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் முறையாகத் தமிழ் பயின்று, அக்கல்லூரியிலேயே தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பண்டித மணி மு. கதிரேசச் செட்டியார் போன்ற தமிழ்ப் பெரும்புலவர்களின் அன்பாதரவில் விளங்கிய இவர் பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் தமிழ் விரிவுரையாளராகப் பதவியேற்று, ஓய்வு பெறுங்காலம் வரை தொடர்ந்து பணிபுரிந்து வந்தார். இசைத் தமிழில் நாட்டம் கொண்ட இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சார்பில் பல தமிழிசைப் பாடல்களை இயற்றியுள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கிடைத்த தமிழிசைப் பாடல்களைத் திரட்டித் தமிழ் இசைக்கலைஞர்களின் துணையொடு இசை வகுத்துப் பல தொகுதிகளாக அவை வெளிவரச் செய்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற தமிழ் மாணவர்களுக்கு, இலக்கண இலக்கியப் பாடங்களை அவர்கள் உளங்கொளக் கற்பித்துச் சிறப்புற்று விளங்கினார். அப்பல்கலைக்கழகத்தே பணிபுரிந்த காலத்தில், சென்னைப் பல்கலைக்கழகம் நடத்தும் வித்துவான் தேர்வினை 1939–ஆம் ஆண்டில் எழுதி, அதில் மாநிலத்தில் முதலாமவராகத் தேர்வு பெற்று, அதற்கான “ஐந்தாம் சார்சு அரசர் நினைவுத் தமிழ்ப் பரிசாக” (King George V Memorial Tamil Prize) ரூ 1000 பெற்றார். செந்தமிழ்ச் செல்வி, தமிழ் பொழில், ஞானசம்பந்தம் முதலிய இலக்கிய சமய இதழ்களில் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். மேலைச் சிவபுரிச் செந்தமிழ்க் கல்லூரி ஆண்டு விழாவில், தமிழ்ச் சான்றோர் இவருக்கு ‘முத்தமிழ் மணி’ என்னும் சிறப்புப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர். விபுலானந்தர், சோமசுந்தர பாரதியார் கந்தசாமியார், இராகவையங்கார், வேங்கட சாமிநாட்டார், கா. சுப்பிரமணிய பிள்ளை, இரா.பி. சேதுப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை முதலிய தமிழ்ப் பேரறிஞர்களோடு தொடர்பு கொள்ளும் வாய்ப்பினைப் பெற்ற இவர், 1966–ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பணி ஓய்வுபெற்று மதுரையில் வாழ்ந்து வந்தார். பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவியால் இவர் மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அறிஞராகச் சேர்த்து, தொல்காப்பிய உரைகளில் ஆய்வு புரிந்தார். இவரது ஆய்வு, தொல்காப்பிய உரைவளமாகத் திகழ்கிறது. இவர் தொல்காப்பிய அகத்திணை இயல், புறத்திணையியல் ஆகியவற்றிற்கு அவற்றின் பல்வேறு உரைகளையும் முறைப்படக் காட்டி, அவைபற்றிய தம் ஆய்வுக் கருத்தினை விளக்கியுள்ளார். அவை தொல்காப்பிய உரைவளம் என்னும் பெயரில் தனித்தனி நூல்களாக வெளி- வந்துள்ளன. தமிழ்த் தொண்டும் சைவத் தொண்டும் தொடர்ந்து ஆற்றி வந்த இவர் 24–4–1973–இல் மறைந்தார்.
அருணாசலம் பொன்னம்பலம் சர்
கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் வாழ்ந்த தமிழறிஞரும் புரவலரும் நீதிபதியுமாவர். இலங்கையிலுள்ள மானிப்பாய் என்பது இவருடைய ஊர். பெற்றோர் கொழும்பில் வாழ்ந்த பொன்னம்பலம் என்பாரும் செல்லாச்சி அம்மையாரும் ஆவார்கள். சர் பொன்னம்பலம் இராமநாதன் இவர்தம் இளவல். கி.பி. 1853 இல் பிறந்த இவர் தம் கல்லூரிக் கல்வியை இராயல் கல்லூரரியிலும் முதுகலைச் கல்வியை இங்கிலாந்திலும் பெற்றார். அங்குச் சட்டக் கல்வி கற்றுப் பாரிசுடர் (Barrister) பட்டம் பெற்றார். கற்குங்கால் கல்வியில் சிறந்து விளங்கியமையால் கல்விக்குரிய உதவித் தொகைகள் கிடைத்தன. இங்கிலாந்து நாட்டில் உயர் கல்வியும் சட்டக் கல்வியும் பெற்ற இவர், தஞ்சையைச் சேர்ந்த அருட்புரானந்த தேசிகர் எனப்பட்ட இலக்கணம் இராமசாமிப்பிள்ளையிடம் தமிழும் சமய நூற்கல்வியும் பெற்றார்.
சர் அருணாசலம் பொன்னம்பலம்
இலங்கை அரசாங்கத்தில் காவல்துறை நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர்த் தலைமைப் பதிவாளராகவும், குருணாகல் என்னுமிடத்திலுள்ள உயர்நீதிமன்றத்தில் நடுவராகவும் பணியாற்றினார். இலங்கை நிருவாகப்பணித் (Ceylon Civil Service) தேர்வில் முதன் முதலாகத் தேர்வடைந்த இலங்கையர் என்னும் சிறப்பு இவருக்கு உண்டு. இலங்கைச்சட்ட நிரூபண அவையிலும் (1906) சட்ட நிருவாக அவையிலும் (1912) உறுப்பினராக அமர்த்தப்பெற்றுச் சிறப்புறப் பணியாற்றினார்.
இலங்கைத் தேசிய காங்கிரசு தோற்றுவிக்கப் பெற்ற காலத்தில் (1919) அதன் முதல் தலைவராக விளங்கினார். இவர் அவ்வாண்டில் இலங்கையில் தொழிற்சங்கத்தை உருவாக்கித் தொழிளாளர் நலத்திற்குப் பணிபுரிந்தார். இலங்கையில் தாய்மொழிக் கல்விக்கு அடிப்படை அமைத்தவரும் இவரே. இவர் இலங்கைப் பல்கலைக் கழகம் தோன்றுதற்குப் பெரிதும் முயன்றார்; இராயல் ஆசிய சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்; இலங்கைச் சைவ பரிபாலன சபையின் முதல் தலைவராக இருந்து, அதன் வாயிலாகச் சைவசமய கருத்துகள் பரவுவதற்கு வேண்டிய தொண்டுகளை ஆற்றினார்.
இவர் ஆற்றிய பல்துறைப் பணிகளையும் பாராட்டும் வகையில் அன்றைய ஆங்கில அரசு இவருக்குச் சர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இலங்கையில் பல்கலைக் கழகம் அமைவதற்கு இவர் மேற்கொண்ட முயற்சிகளைப் போற்றும் வகையில், பேராதனையில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தில், இவர் பெயரால் ‘அருணாசல மண்டபம்’ என்ற ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இலங்கைக்கு இவர் ஆற்றிய தொண்டினை மதித்துப் போற்றும்வகையில் இலங்கைப் பாராளுமன்றக் கட்டிட முற்றத்தில் இவர்தம் உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாடு போற்ற வாழ்ந்த இவர் 1924–இல் காலமானார், ‘இலங்கைச் சரித்திரக் குறிப்புகள்’ என்னும் கட்டுரை எழுதிச் ‘சித்தாந்த தீபிகை’ எனப் பெயரிய இதழில் வெளியிட்டார். திருமுருகாற்றுப்படையினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். புறநானூறு, திருவாசகம், திருக்கோவையார், கல்லாடம், தாயுமானவர் பாடல்கள் ஆகிய நூல்களிலிருந்து பல செய்யுள்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவருடைய மொழி பெயர்ப்புகளையும் ஆங்கிலக் கட்டுரைகளையும் தொகுத்து, ஆராய்ச்சியும் மொழிபெயர்ப்பும் (Studies and Translations) எனப்பெயரிய நூலாக வெளியிட்டுள்ளனர். இவருடைய மற்றொரு நூலின் பெயர் “கீழை நாட்டு ஒளி” என்னும் (Light from the East) கருத்தில் அமைந்ததாகும்.
அருணாசல முதலியார்
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் சென்னையைச் சார்ந்த திருமயிலையில் வாழ்ந்த புலவர். இவர் கொடியிடை மாலை, சிதம்பரம் சிவகாமியம்மை பதிகம், திருமுல்லை வாயில் மாசிலாமணியீசர் பதிகம், திருமயிலைக் கபாலீசர் பதிகம் கற்பகாம்பிகை பதிகம், பிரமராம்பிகை பதிகம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இவர் பாடிய ஐந்து தனிப்பாடல்கள் தனிச் செய்யுட் சிந்தாமணி என்னும் நூலில் காணப்படுகின்றன.ஏ.சி.பா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 815)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2psgyrhf/
தமிழ்“அருணாசலம்பிள்ளை, மு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2psgyrhf/APA
Oliyon Research. (2026). அருணாசலம்பிள்ளை, மு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2psgyrhf/MLA
"அருணாசலம்பிள்ளை, மு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2psgyrhf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment