அக்கியாபு
akkiyāpu
அக்கியாபு என்னும் நகரம் பர்மா நாட்டு வடமேற்குக் கடற்கரையிலுள்ள அரக்கான் பகுதியில் அமைந்துள்ளது.
அக்கியாபு என்னும் நகரம் பர்மா நாட்டு வடமேற்குக் கடற்கரையிலுள்ள அரக்கான் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியைக் கொண்ட மாவட்டமும் அக்கியாபு. (Akyab) எனப்படும். அக்கியாபு ஒரு துறைமுகத் தீவு. பர்மாவின் நான்கு பெரும் துறைமுகங்களுள் இது மூன்றாம் இடத்தைப் பெறுகிறது. அக்கியாபுத் தீவு, கலடன் ஆறு கடலில் கலக்கும் கழிமுகத்தில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது, இத்தீவு பெரும்பாலும் தட்டையானது. இந்நகருக்குக் கிழக்கில் உள்ள பகுதி பசுமை நிறக் காடுகளைக் கொண்ட வெப்ப மண்டலத்தில் உள்ளது. கடற்கரையில் பெரும்பகுதி சதுப்புநிலமாகவும், தாழைக் காடுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. சமவெளியின் ஒரு பகுதியில் வேளாண்மை நடைபெறுகிறது. இங்குச் சணலும் நெல்லும் பயிரிடப்படுகின்றன. பர்மாவின் கடற்கரையை அடுத்துள்ள தீவாயினும், அரக்கான் யோமாவின் அடர்ந்த காடுகளும், மலைப்பாங்கான நிலப்பகுதியும் அக்கியாபைப் பர்மாவிலிருந்து தனிமைப்படுத்தியுள்ளன. இதனை இரங்கூனுடனும் அரக்கானின் ஏனைய பகுதிகளுடனும் இணைக்கும் வானவூர்தி, கப்பல் தடங்கள் ஆகியவை உள்ளன. இத்தீவு ஆண்டொன்றுக்கு 510 செ.மீ. மழையைப் பெறுகிறது. கோடையில் பருவக்காற்றுகளால் இம்மழை பொழிகிறது. அக்கியாபில் பொன்னிறப் பகோடாக்கள் என்னும் புத்த சமயக் கோயில்கள் நிறைந்துள்ளன. அவற்றுள் மிகப்பெரியது மகாமுனி பகோடாவாகும்.
அரக்கான் பகுதி கி.பி. 1826–ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. அக்கியாபு மீனவர் சிற்றூராக விளங்கியது. இந்நகரே அரக்கானின் தலைநகராகவும் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாகவும் விளங்கலாயிற்று. இரண்டாம் உலகப்போரின்போது, அக்கியாபு அமைந்திருக்கும் சிறப்பான இடத்தைக் கண்ட சப்பானியர் அதனைக் கைப்பற்றி 1942 முதல் 1945 வரை தம் ஆளுகையில் வைத்துக்கொண்டனர். அவர்கள் அங்குச் சாலைகளை அமைத்தார்கள். அக்கியாபு நகரை இன்று சிட்வே (Sittwe) என்று கூறுகின்றனர். இந்நகரின் மக்கள் தொகை 1,43,125 ஆகும் (1973).
ஆங்கிலப் படை 1945–ஆம் ஆண்டு பெருந்தாக்குதல் நடத்திச் சப்பானியரை இப்பகுதியை விட்டு வெளியேற்றியது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 44)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2peqngjn/
தமிழ்“அக்கியாபு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2peqngjn/APA
Oliyon Research. (2026). அக்கியாபு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2peqngjn/MLA
"அக்கியாபு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2peqngjn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment