கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சென்னையில் வாழ்ந்த தமிழ்ப் புலவராவார். ஒரே நேரத்தில் எட்டு வகையான செயல்களில் ஈடுபட்டுச் செயல்படத்தக்க அட்டாவதானம் எனப்படும் நினைவாற்றல் பெற்றவராக விளங்கியமையால், இவர் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் என்று அழைக்கப் பெற்றார். இவர் சென்னை, சூளைப் பகுதியில் வாழ்ந்தார்; சென்னை அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்; நகைச்சுவை மலியப்பேசும் ஆற்றல் மிக்கவர். இராமாயணம், பாரதம் முதலிய நூல்களைப் பற்றிச் சொற்பொழிவாற்றுவதில் இவர் சிறந்து விளங்கினார். வின்சுலோ அகராதியினை உருவாக்கியவர்களுள் இவரும் ஒருவராவார். தமிழில் ‘விநோத ரச மஞ்சரி’ என்னும் உரைநடை நூலினை எழுதியுள்ளார். கம்பர், ஒட்டக்கூத்தர், ஔவையார், புகழேந்திப் புலவர், காளமேகப்புலவர் போன்ற பல புலவர்களின் வரலாறுகளை, அவர்தம் தனிப் பாடல்களோடு இயைத்து வரைந்துள்ளார். இப்புலவர்களைப் பற்றிச் செவிவழிச் செய்தியாக வழங்கப்பட்டவற்றையும் இணைத்துள்ளார். தெய்வக் கொள்கை, கற்பு நிலைமை போன்ற சில தமிழ்க் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. வீரமாமுனிவர் எழுதிய அவிவேக பூரண குரு கதையும் இதன்கண் உள்ளது. இவர் கதைகளுள் கூறப்படும் வரலாறுகள் பற்றிய உண்மை எதுவாயினும், இவை சுவையுடையனவாக உள்ளன. விநோதரச மஞ்சரி என்னும் பெயருக்கேற்பச் சுவைமிக்க செய்திகள் பல இவ்வுரைநடை நூலில் உள்ளன.