இந்திய இலக்கியங்களுள் புராணங்கள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றன. புராணம் என்பதற்குப் பழைய வரலாறு என்பது பொருள். எது தொன்மைக் காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து பரந்துள்ளதோ அது புராணம் எனப்படும். புராணம் பற்றிய குறிப்புகள் அதர்வண வேதம், உபநிடதங்கள், மகாபாரதம் ஆகியவற்றுள் இடம்பெற்றுள்ளன. வடமொழி நிகண்டுகள் புராண அமைப்புப் பற்றிய செய்திகளைக் கூறியுள்ளன. இவ்வகையில் வடமொழியில் அமைந்த மகா புராணங்களின் எண்ணிக்கை பதினெட்டாகும். அவற்றை வேதவியாசர் இயற்றினார் எனக் கூறுகின்றனர். அந்த மகா புராணங்களுக்குத் துணையாகப் பதினெட்டு உபபுராணங்கள் தோன்றின என்பது கூறப்படுகிறது. மகாபுராணங்களுக்குத் துணையாக அமைவதால் அவை உபபுராணங்கள் எனப்பட்டன. அவை சனத்குமார புராணம், காந்த புராணம், நந்திபுராணம், நாரத புராணம், மானவ புராணம், பிரமாண்ட புராணம், காளிபுராணம், சாம்பபுராணம், பராசர புராணம், நரசிம்மபுராணம், சிவதருமபுராணம், துருவாசபுராணம், ஔசநச புராணம், கபிலபுராணம், வருணபுராணம், மகேசுவர புராணம், கௌரபுராணம், மாரீச புராணம் ஆகியவையாகும். சனத் குமாரர், நந்தி, துருவாசர், நாரதர், கபிலர், மநு, சுக்கிரர், பராசரர், மரீசி ஆகியோர் இயற்றிய உபபுராணங்கள் அவரவர் பெயரால் வழங்கப்படுகின்றன. எஞ்சிய உபபுராணங்களை வேதவியாசர் இயற்றினார் என்று கூறுகின்றனர். உபபுராணங்கள் முதன்மையான படைப்பு, இடைக்காலப் படைப்பு, சந்திர சூரிய மரபு, மனுக்களின் காலங்கள், அரச மரபு, முனிவர் மரபு ஆகியவற்றைச் சிறப்பாக விளக்கிக் கூறுகின்றன. இந்த உபபுராணங்களிற் சிலவே அச்சில் வெளிவந்துள்ளன.