நோய்த் தடுப்பு முறைகள்
nōyt taṭuppu muṟaikaḷ
கால்நடைகளில் நோய்களைத் தடுக்க, நோய்க்கு இடமளிக்கும் சூழல்களைக் களைதல், தடுப்பூசி போடுதல், நோய்ப் பரப்பிகளைக் கட்டுப் படுத்தல், தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், கால்நடைகளைத் தனித்து வைத்து ஆய்தல், நோய் தொற்றிய பொருள்களை அகற்றுதல், நோயுற்ற விலங்குகளை விலக்குதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கால்நடைகளில் நோய்களைத் தடுக்க, நோய்க்கு இடமளிக்கும் சூழல்களைக் களைதல், தடுப்பூசி போடுதல், நோய்ப் பரப்பிகளைக் கட்டுப் படுத்தல், தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், கால்நடைகளைத் தனித்து வைத்து ஆய்தல், நோய் தொற்றிய பொருள்களை அகற்றுதல், நோயுற்ற விலங்குகளை விலக்குதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோய்க்கு இடமளிக்கும் சூழல்களைக் களைதல். வைட்டமின், தாதுப்பு நிறைந்த உணவைக் குறிப்பாக, வைட்டமின் A மற்றும் புரதம் நிறைந்த உணவினை இளங் கால்நடைகளுக்கு வழங்கினால், நோய் எதிர்ப்புத் திறன் பெறும். சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோய்களும் நீங்கும்.
சீம்பாலில் நோய் எதிர்ப்பாற்றல் நிறைந்துள்ளதால், இளம் கன்றுகள் நன்கு அருந்த விட வேண்டும். குடற்புழுக்களின் சுமையால், கால்நடைகள் நலிவுறும் போது, நோய் எதிர்ப்புத் திறனும் குறைகிறது. எனவே முறையாகக் குடற்புழு நீக்கம் (deworming) செய்ய வேண்டும். குறிப்பாக, மழைக் காலத்திற்கு முன்னும், பின்னும், தடுப்பூசி போடும் முன்னரும் இதைச் செய்தல் நன்று. அதிகக் குளிர், வெப்பம், காற்றோட்டமின்மை, இட நெருக்கடி ஆகியவற்றால் கால்நடைகளில் நோய்கள் உண்டாகக் கூடும். எனவே, இருப்பிட அமைப்பில் கவனம் தேவை.
தடுப்பூசி போடுதல். மாட்டினங்களுக்கு நுண்ணுயிரியால் ஏற்படும் சப்பை நோய், தொண்டையடைப்பான் போன்ற தொற்று நோய்கள் மழைக் காலத்தில் வருகின்றன. எனவே மழைக் காலம் தொடங்கும் முன்பு, நோய்க் கிளர்ச்சி(out break) ஏற்படும் காலம் அறிந்து, அதற்கு முன்பே நோய்த் தடுப்பூசி போட வேண்டும். 5–10 மி.லி. மருந்தினைத் தோலுக்கடியில் செலுத்த வேண்டும்.
அடைப்பான் நோய்த் (anthrax) தடுப்பூசியில் 1 மி.லி. தோலுக்கடியில் செலுத்தினால், 1 ஆண்டு வரை எதிர்ப்பாற்றல் இருக்கும். கருச் சிதைவு நோயைத் தடுக்க, 4 முதல் 8 மாதம் வரையிலான கன்றுகட்குக் காட்டான் ஸ்டெரைன் புருசெல்லா அபார்டஸ் 19 எனும் மருந்தைச் செலுத்த வேண்டும். வெக்கை (rinderpest) எனும் வைரஸ் நோய்க்குத் திசுவில் வளர்ந்த தடுப்பு மருந்து (Tissue culture vaecine) 1 மி.லி. தோலுக்கடியில் ஆண்டு தோறும் போட வேண்டும். கால் மற்றும் வாய் நோய்களுக்குப் பல்வகை நச்சுயிரிகளுக்கான தடுப்பு மருந்து(polyvalent) உள்ளது.
ஆட்டினங்களில் துள்ளுமரி (enterotaxaemia) எனும் நுண்ணுயிரி நோய்க்கு, 3–5மி.லி மருந்தினைத் தோலடியில் செலுத்த வேண்டும். வைரஸ் நோயான அம்மைக்குத் (sheep pox) தடுப்பு மருந்தினைக் காது மடல் தோலில் செலுத்த வேண்டும்.வெக்கை அடைப்பான், கால் மற்றும் வாய் நோய்த் தடுப்பூசிகளும், மாடுகளைப் போலவே, ஆடுகட்கும் உரியன. வளர்ப்பு நாய்கட்கு, டிஸ்டம்பர் நோய்த் தடுப்பு மருந்தினை 10 வார வயது ஆனவுடன் போட வேண்டும். பிறகு, ஆண்டுக்கொரு முறை வழங்க வேண்டும். வெறி நோய்த் (rabies) தடுப்பு மருந்தின் புது வகையினை ஒரு மாதக் குட்டியிலிருந்தே போடலாம். பிறகு ஆண்டுக்கொரு முறை வழங்குதல் ஏற்றது.
பன்றிக் காய்ச்சல் நோய்த் தடுப்புக்காக 2–4 வாரக் குட்டிகளுக்கு, இந்தியக் கால் நடை மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (VRI) தயாரிக்கும் தடுப்பு மருந்துகளை வழங்கலாம். கோழி இனங்களுக்கு , மேரெக்ஸ் நோய்க்குரிய தடுப்பு மருந்தினைக் குஞ்சு பொரிந்து, முதல் நாளே போட்டு விட வேண்டும். கோழி அம்மைக்குரிய (fowl box) தடுப்பு மருந்தினை, ஆறாம் வார வயதில் வழங்க வேண்டும். சுவாசக் குழல் நோய் எனும் நச்சுயிரி நோய்க்கு 3–4 வாரங்களில் கண்களில் செலுத்த வேண்டும். வெள்ளைக் கழிச்சல் (ranikhet disease) நோய்க்குக் குஞ்சுப் பொரிந்து ஒரு வாரத்துக்குள், லசோடா அல்லது தடுப்புமருந்தினைச் செலுத்த வேண்டும். பிறகு ஆர். டி. வி. கே. மருந்தினை இறகின் அடியில் ஊசி மூலம் செலுத்திட வேண்டும்.
நோய்ப் பரப்பிகளின் கட்டுப்பாடு நத்தை. மாடுகளில் ஒட்டுண்ணியால் ஏற்படும் மூக்குப் புற்று எனப் படும் குறட்டை நோய்க்கு (Nasal sctistcsomiasis) இடைநிலைக் காப்பானாக (intermediate host) நத்தைகளிலிருந்து நோய் பரவும். ஈரல் புழு (Liver flikes) மற்றும் ஒரு வகைத் தட்டைப் புழு (amphistomes) செம்மறியாடு, வெள்ளாடு, மாடுகளின் உள்ளுறுப்புகளிலும் சுழன்று நோய் உண்டாக்கும். இதற்கும், இடைநிலைக் காப்பானான நத்தை, மேய்ச்சலுக்குச் செல்லும் கால் நடைகளைத் தொற்றிக் கொள்கிறது.
நத்தைகளை ஒழிக்க 1:1, 00,000 காப்பர் சல்ஃபேட் நீர் நிலைகளிலும் , புல்வெளி மற்றும் மேய்ச்சல் நிலங்களிலும் தெளிக்க வேண்டும். வாத்து வளர்த்தல் நத்தை ஒழிப்புக்கு ஏற்றது.
ஈ. குதிரை வலிப்பு (trypanasomiasis) எனும் ஓரணு ஒட்டுண்ணி நோய், மாடு, ஒட்டகங்களைத் தாக்கும் டபானஸ் (tabanus) மற்றும் ஸ்மோமாக்சிஸ் எனும் குருதிக் குடிக்கும் ஈ மூலம் பரவுகிறது. செம்மறி ஆடுகளில், நீல நாக்கு நோய் (blue tongue) மாடுகளில் மூட்டு வலிக் காய்ச்சல் (ephemeral fever) போன்ற வைரஸ் தொற்று நோய்களை மணல் ஈ (sand flies) பரப்புகிறது. முக ஈ (face flies) கால்நடைகளில் கண் நோய்களைப் பரவச் செய்கிறது. ஈக்களை ஒழிக்கச் சுற்றுப் புறத் தூய்மை பேணப் பட வேண்டும்.
கொசு. மனித இனத்திற்கு மலேரியா, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களைப் பரப்புவது போலவே கொசு, கால்நடைகளில் தோல் புழு நோய் (cytaneous filariasis) குதிரை மூளைக் காய்ச்சல் (equine encephalitis) போன்ற நோய்களை ஏற்படுத்துவதுடன், அதிக அளவில் குருதியைக் குடித்து, இளம் குட்டிகளில் குருதிச் சோகையினையும் ஏற்படுத்துகிறது. எனவே, கொசு ஒழிப்புக்கு, நீர் தேங்காத நிலையும், புறத் தூய்மையும் வேண்டும்.உண்ணி. குருதிச் சிறுநீர் நோய் (falesiasis) எனும் உண்ணிக் காய்ச்சல், அனபிளாஸ்மா நோய் (anaplasmosis) தைலேரியா காய்ச்சல் (theilariasis) போன்ற ஓரணு ஒட்டுண்ணி நோய்கள், செம்மறி ஆடுகளில் லெரீமியா (larimak), குட்டிகளில் உண்ணிச் சீழ்க் காய்ச்சல் (tick pyaemia) போன்ற நுண்ணுயிரி நோய்கள் ஆகியன குருதி உறிஞ்சும் உண்ணி மூலம் பரவுகின்றன. பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தனித் தனியே உண்ணி பீடித்துள்ள கால்நடைகளில் தடவலாம். கால்நடை இருப்பிடங்களிலும், இம்மருந்தைத் தெளிக்க வேண்டும்.
தூய்மை. நீர் மூலம் நோய் நுண்ணுயிரிகள் பரவுவதைத் தடுக்க வேண்டும். இதனால் மழைக் காலங்களில், நோய்க் கிளர்ச்சி மிகுதியாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கால்நடைகள் தேங்கியுள்ள நீரைக் குடிக்க விடாமல், தூய்மையான நீரை வழங்க வேண்டும். மேலும் தீவனங்களை நன்முறையில் பாதுகாத்து வழங்க வேண்டும். சில சமயங்களில் பூசணக் காளான்களால், தீவனம் கெட்டு விட்டால், அப்ளோ நச்சுப் (aflo toxin) பாதிப்பு ஏற்படும். நோயுற்ற மாட்டிலிருந்து உயிரிகள் (germs) வைக்கோல், புல், அடர்தீவனம் மூலம் தொற்றிக் கொண்டு, மற்ற மாடுகட்குப் பரவுவதைத் தடுக்க, தீவனம் வழங்குவதில் விழிப்புத் தேவை. மேய்ச்சல் நிலங்களில், நோய்த் தொற்றுகள் மற்றும் புழு முட்டைகள் பரவி இருக்கும் என்று கருதினால், புதிய இடங்களில் மேய்ச்சலுக்கு விட வேண்டும். இருப்பிடம் தூய்மையாக இருக்க வேண்டும். அதனால், பால் மடிக் காம்பு மூலம் நுண்ணுயிரிகள் நுழைந்து, மடி வீக்க நோய் (mastitis) ஏற்படாமலும், காயமுற்ற கால்நடைகளில், டெட்டனஸ் (tetanus) நுண்ணுயிரிகள் நுழைந்து விரைப்பு நோய் ஏற்படாமலும் பாதுகாக்கலாம். ஈ, கொசு, பேன் , உண்ணி ஆகியன பெருகா வண்ணம் இருப்பிடத்திலும், அதன் சுற்றுப்புறத்திலும் தூய்மை பேணப்படல் வேண்டும். எருக்குழிகளைத் தொலைவில் அமைக்க வேண்டும். பண்ணையில் தெரு நாய்கள் புகா வண்ணம், பாதுகாப்பதன் மூலம் வெறி நோய், தோல் நோய், நீர்க் கட்டி நோய், குடற்புழுத் தொற்று ஆகியவற்றைத் தடுக்கலாம்.
தனித்து வைத்து ஆய்தல் (quarantisne). சில வேளைகளில், கால்நடைகள் தொற்று நோய் நுண்ணுயிரிகளைச் சுமந்து உள்ளுறை (latent form) வடிவில் இருக்கும். எனவே, பண்ணையில் புதிதாகக் கால்நடை களையோ, கோழிகளையோ சேர்க்குமுன், 10–15 நாள்கள் தனிமைப் படுத்தி, ஆய்வு செய்த பின், நோயின் வெளிப்பாடு தோன்றாமலிருப்பின், அவற்றை உண்ணி நீக்கம் மற்றும் தொற்று நீக்கம் (dipping & disinfectant) செய்து, உள்ளே அனுமதிக்கலாம். புதிய கால்நடைகளை, நன்கு அறிமுகமான , தொற்று நோயில்லாத பண்ணையில் வளர்க்க வேண்டும்.
நோய்த் தொற்றிய பொருள்களை அகற்றல். நோயுற்ற கால் நடைகளிலிருந்து வடியும் குருதி, சீழ்,சிறுநீர், சாணம் கலந்த வைக்கோல், தீவனம், படுக்கைப் பொருள் போன்றவற்றையும், கருச் சிதைவு நோய் மற்றும் விப்ரியோ நோயுற்ற மாடுகளிலிருந்து இறந்து பிறந்த குறைக் கன்றுகளின் நஞ்சுக் கொடி மற்றும் குருதிக் கழிவுகளையும் மேய்ச்சல் இல்லாத நிலத்தில் ஆழமான குழியில், தொற்றுக் கொல்லி, சுண்ணாம்பு நீர்த் தெளித்துப் புதைத்து விட வேண்டும் அல்லது எரித்து விட வேண்டும். அந்த இடங்களையும் 0.5% பினால் அல்லது கிரிசால் போன்ற தொற்றுக் கொல்லி மூலம் தூய்மை செய்ய வேண்டும்.
கோழிப் பண்ணைகளில் மேரெக்ஸ் நோய் தாக்கி உதிர்ந்த இறகுகளிலிருந்து நச்சுயிரிகள் பரவுவதால், அவற்றை எரித்து விட வேண்டும். தொற்று நோய் கண்ட ஆழ் கூளத்தை அகற்றி, அந்த இடம் முழுதும் தொற்றுக் கொல்லி மருந்து தெளித்துச் சில காலம் வரை புதிய கோழிகளை அங்கு சேர்க்காமல் இருக்க வேண்டும். தீவனம் , நீர் கொடுக்கும் பாத்திரங்களையும், சோடியம் கார்பனேட் அல்லது 0.5% பீனால் கலந்த நீரில் கழுவி, வெயிலில் உலர்த்த வேண்டும்.
நோயுற்ற விலங்குகளை விலக்குதல். பண்ணையில் உள்ள மாடுகளுக்குச் காச நோய் ஆய்வு ஊசி மூலம் காச நோயினையும் மற்றும் ஜோன் ஆய்வு ஊசி மூலம் கருச் சிதைவு நோயையும், கால்நடைகளில் கண்டு பிடித்துப் பண்ணையிலிருந்து அகற்றி, நோய் பரவுதலைத் தடுக்கலாம்.
நோயுற்ற இறந்த மாடுகளை நிலம் மற்றும் நீர் நிலை அருகில் புதைப்பதோ, தோலை உரித்துப் போடுவதோ கூடாது. அவற்றை எரித்து விட வேண்டும் அல்லது சுண்ணாம்புத் தூள் தெளித்த குழிகளில் போட்டுப் புதைத்து விட வேண்டும். குறிப்பாக , அடைப்பான் (anthrax) நோய் கண்டு இறந்த கால்நடைகளைத் தோலுக்காக உரிக்கவோ, இறைச்சிக்காக அறுக்கவோ கூடாது. ஏனெனில், நுண்ணுயிரிகள் தம்மைச் சுற்றிக் காப்புக் கோட்டை உருவாக்கி, வித்துகளாக மாறிப் பல நாள் வாழ்ந்து, தொற்றும் தன்மையுடைதாக மாறும். —ச. தமிழரசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 338)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2kbey6w3/
தமிழ்“நோய்த் தடுப்பு முறைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2kbey6w3/APA
Oliyon Research. (2026). நோய்த் தடுப்பு முறைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2kbey6w3/MLA
"நோய்த் தடுப்பு முறைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2kbey6w3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment