கில்சி மரபு அரசர்களுள் தலைசிறந்தவர். ஆட்சித்திறனும் போர்த்திறனும் கொண்ட அலாவுதீன், நிலையான இராணுவம் அமைத்த முதல் துருக்கியத் தில்லி சுல்தான் ஆவார். வரிவிதிப்புச் சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்திய முதல் துருக்கியச் சுல்தானும் இவரே. விந்தியமலையைக் கடந்து தக்காணத்தை வென்று ஏறத்தாழ இந்தியா முழுமைக்கும் அரசியல் ஒற்றுமையை வழங்கிய முதல் துருக்கியச் சுல்தான் என்ற சிறப்பையும் இவர் பெறுகிறார். அலாவுதீன் மாமனாகிய சலாலுதீன் பிரோசு இவரை அன்புடன் வளர்த்து மாப்பிள்ளையாக்கிக் கொண்டார். அரியணை ஏறியதும் சலாலுதீன், அலாவுதீனைக் காரா என்னும் பகுதிக்குத் தலைவராக்கினார். இங்குத்தான் அலாவுதீன் மனத்தில் “பேராசையின் விதைகள்” ஊன்றப்பட்டன என்று மசும்தார் குறிப்பிடுகிறார். காரா கலகக்காரர்களின் நுட்பமான தீய கருத்துகள் இவர் மனத்தில் நன்கு வேரூன்றின என்று பரணி (Barani) கூறுகிறார். அலாவுதீன் மாளவத்தின்மேல் படையெடுத்துப் பில்சா நகரத்தைக் கி.பி. 1292–இல் சூறையாடி, அளவற்ற பொருளைக் கொள்ளை கொண்டார். மகிழ்ச்சியுற்ற சுல்தான் அவரை அயோத்தி ஆளுநராகவும் அமர்த்தினார். அலாவுதீன், தேவகிரி அரசின் பெருஞ் செல்வத்தைப் பற்றிக் கேள்வியுற்றார். மேற்குத் தக்காணம் வரை பரவியிருந்த இந்த அரசை யாதவ குலத்தைச் சேர்ந்த இராமச்சந்திரன் என்பார் ஆண்டு வந்தார். சுல்தானின் இசைவு பெறாமலேயே கி.பி. 1296 இல் அலாவுதீன் தேவகிரியீன் மீது படையெடுத்துச் சென்று. அரசரைத் தோற்கடித்துப் பெரும் கொள்ளைப் பொருள்களுடன் காராவிற்கு மீண்டார். இதுவே அலாவுதீனின் முதல் தென்னிந்தியப் படையெடுப்பாகக் கருதப்படுகிறது. இப்படையெடுப்பால் தக்காணத்தின் பொருள் வளம் வறண்டதோடு மட்டுமன்றி, விந்திய மலைக்குத் தென்பகுதியில் நிலையான முசுலிம் ஆட்சி ஏற்படுவதற்கான வழியும் பிறந்தது. “திட்ட அமைப்பு, அதனை நிறைவேற்றும் துணிவு, அச்சாதனையின் விளைவாக ஏற்பட்ட நல்வாய்ப்புகள் முதலிய எல்லா வகையிலும் இவ்வீரச் செயலுக்கு இணை வரலாற்றில் காண்பதரிது” என்று இச்செயலைப் பெரிட்டா பாராட்டுகிறார். அலாவுதீன் வெற்றியை அறிந்த சலாலுதீன் அவரை வரவேற்கக் குவாலியரிலிருந்து தில்லிக்குச் சென்றார். அலாவுதீன் நயவஞ்சகமாக அவரைக் ‘காரா’வுக்கு அழைத்து சென்று கொன்றார். அலாவுதீன் தில்லிச்சுல்தானாக கி.பி. 1296–இல் முடிசூட்டிச் கொண்டார். அரியணை ஏறிய அலாவுதீனைப் பல இடர்ப்பாடுகள் சூழ்ந்தன. இறந்த சுல்தானின் ஆதரவாளர்கள் அலாவுதீனை வஞ்சம் தீர்க்க முயன்றனர். மாண்ட அரசரின் மனைவி மக்கள் அரசு உரிமைக்காக, ஏனைய குறுநில மன்னர்கள் துருக்கிய ஆட்சியை அகற்ற விரும்பினர். மங்கோலியப் படையெழுச்சிகள் மைய அரசிற்குத் தொல்லையளித்தன. அரசுக்கெதிரான இடையூறுகளை அழித்து வட இந்தியாவில் முசுலிம் ஆட்சியை வேரூன்றச் செய்வதும், வட இந்திய–தென் இந்திய அரசர்களால் அரசுக்கு இன்னல் ஏற்படாவண்ணம் காப்பதும், சிறந்ததோர் ஆட்சிமுறையை அமைப்பதும் அலாவுதீனின் குறிக்கோள்களாயின. பொன்னை வாரி வழங்கிப் பிரபுக்களையும் அரசு அலுவலர்களையும் தில்லிப் பெருங்குடி மக்களையும் அலாவுதீன் தம் பக்கம் சேர்த்துக் கொண்டார். இவர் கி.பி. 1296 அக்டோபர் 3–ஆம் நாள் தில்லி சுல்தானாக முடிசூட்டிக் கொண்டார். அலாவுதீன் மனைவி சிறை வைக்கப்பட்டாள்; மக்கள் கொல்லப்பட்டனர். பொன்னாசைக்காகத் தங்கள் மன்னனைக் கைவிட்டுத் தம்பக்கம் சாய்ந்த பிரபுக்களையும் அலாவுதீன் தண்டித்தார். மங்கோலியர்களின் படையெடுப்பு, தில்லி ஆட்சிக்கு அச்சத்தை விளைவித்தது. பஞ்சாபு மக்கள் துன்புற்றனர். அலாவுதீன் அதனைத் தீர்க்க முற்- அலாவுதீன் கில்சியின் பேரரசு பட்டார். முதலில் தம்முடைய படையையும் செல்வத்தையும் பெருக்கிக் கொண்டு, மங்கோலியர் வரும் வழியில் இருந்த பழைய கோட்டைகளைப் புதுப்பிக்கவும், புதிய கோட்டைகளைக் கட்டவும் சுல்தான் பணித்தார். சமானா, திபால்பூர் ஆகிய இடங்களில் காவற் கூடங்கள் அமைக்கப்பட்டன. திறமையான வீரர்கள் அவற்றைக் காவல் புரிந்தனர். மங்கோலியப் படையெழுச்சிகள் கி.பி. 1297 முதல் தொடங்கின. 1299–ஆம் ஆண்டில் நிகழ்ந்த படையெழுச்சி கொடியது. குட்லக்கு குவாசா என்பார், பல்லாயிரம் மங்கோலியர்களுடன் இந்தியாவிற்குள் புகுந்தார். இம்முறை அவர்கள் நாடு பிடிக்கும் நோக்குடன் படையெடுத்தனர். தில்லியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பெருவீரன் சபார்கான் என்பவர் மங்கோலியரைத் தாக்கினார். போரில் அவர் கொல்லப்பட்டாலும் மங்கோலியர் பின்வாங்கினர். கி.பி. 1304–இல் மீண்டும் மங்கோலியர் படையெடுத்து அம்ரோக் வரையில் முன்னேறினர்; இழப்பிற்காளான அவர்கள் பின்னடைந்தனர். கி.பி. 1307–1308–இல் மீண்டும் மங்கோலியப் படையெடுப்பு நிகழ்ந்தது. அடுத்தடுத்து ஏற்பட்ட தோல்விகளால் மங்கோலியர் மருண்டு, மீண்டும் அலாவுதீன் காலத்தில் படையெடுக்கவே இல்லை. அலாவுதீனின் மங்கோலியக் கொள்கை வெற்றி பெற்றது. முதல் மூன்று ஆண்டுகளில் தாம் பெற்ற வெற்றிகளால் அலாவுதீன் மிகவும் செருக்கடைந்தார். புதிய சமயத்தையும் இனத்தையும் நிறுவவும், அலெக்சாந்தரைப் பின்பற்றி உலகையே வெல்லவுமான வீணான பேராசை இவர் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. அரசியலும் சமயமும் தனித்தனியானவை என்றும், வடஇந்தியச் சிற்றரசர்களை வெல்லுவதையும் மங்கோலியப் படையெழுச்சிகளைத் தடுப்பதையும் சுல்தான் தம் கடமைகளாகக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர்கள் அறிவுறுத்தினர். திட்டங்களைக் கைவிட்டபோதிலும், அலாவுதீன் தம்மை “இரண்டாம் அலெக்சாந்தர்” என்று புகழ்ந்துகொள்ளும் ஆர்வத்தை மாற்றிக்கொள்ள விரும்பாததால் அப்பட்டத்தைத் தம் காசுகளில் பொறித்துக் கொண்டார். வடஇந்தியப் போர்கள் “அலாவுதீனின் ஆட்சியே, தில்லி சுல்தானியப் பேரரசைத் துவக்கியது” என்று உல்சிலி பெயிக்குக் கூறியுள்ளார். இவர் காலத்தில் முசுலிம் பேரரசு பல பகுதிகளிலும் பரவியது. அலாவுதீனின் குசராத்துப் படையெடுப்பு, காரணமின்றி மேற்கொள்ளப்பட்டதாகும். உலுக்கான் நசரத்கான் என்பார் தலைமையில் பெரும் படை கர்ண தேவன் ஆட்சி செய்த குசராத்திற்குச் சென்றது. தாக்குதலைத் தடுத்து நிறுத்த இயலாத கர்ணதேவன் தம் மகள் தேவாலதேவியுடன் தேவகிரி அரசர் இராமச் சந்திரனின் அவையில் தஞ்சம் புகுந்தார். அவர் மனைவி கமலாதேவி சிறைபிடிக்கப்பட்டு, அலாவுதீனின் அந்தப்புரத்திற்கு அனுப்பப்பட்டார். திரண்ட செல்வத்துடன் படையினர் தில்லி திரும்பினர். காம்பேயில் வாணிகச் செல்வரைக் கொள்ளையடித்து, காபூர் என்ற அலியைப் பொருள் கொடுத்து வாங்கினர். அவன் பின்னர்ச் சுல்தானின் அன்பைப் பெற்று உயர் பதவி அடைந்தான். இராந்தாம்பூர் கி.பி. 1299–ஆம் ஆண்டு முற்றுகை விடப்பட்டது. அமீர் தேவன் என்ற வீர ராசபுத்திரத் தலைவர் அதனை ஆட்சி செய்தார். அவர் புரட்சி செய்த புதிய முகலிம்களுக்குப் புகலிடம் அளித்த காரணத்திற்காக அலாவுதீன் இராந்தாம்பூர் கோட்டையை முற்றுகையிட, நசரத்கான், உலுக்கான் ஆகியவர்களின் தலைமையில் படையை அனுப்பினார். முற்றுகையின்போது நசரத்கான் கொல்லப்பட்டார். உலுக்கான் விரட்டியடிக்கப்பட்டார். படைகளின் தோல்வியை அறிந்த அலாவுதீன் தாமே போர்க்கோலம் பூண்டார். வஞ்சகத்தைக் கையாண்டதால் கி.பி. 1301–இல் அரண் வீழ்ந்தது. அமீர்தேவனின் முதலமைச்சர் நயவஞ்சகச் செயலால் கோட்டை வீழ்ந்தது, அமீர்தேவனும் புதிய முசுலிம்கள் பலரும் கொல்லப்பட்டனர். காட்டிக்கொடுத்த கயவனும் கொல்லப்பட்டான். இராந்தாம்பூரின் ஆட்சிப் பொறுப்பை உலுக்கானிடம் ஒப்படைத்த பின் அலாவுதீன் தில்லிக்குத் திரும்பினார். அலாவுதீனின் கவனம் இராசபுத்திரர்களின் தாயகமான மேவார் நாட்டின் மீது திரும்பியது. இப்படையெடுப்பு, சுல்தானின் நாடு பிடிக்கும் ஆசையால் நிகழ்ந்தது எனலாம். ஆனால், உடனடிக் காரணம் இராணா இரத்தன்சிங்கின் இராணி பேரழகி பத்மினியின்பால் கொண்ட மையல் என்று கூறப்படுகிறது. அக்காலத்திய வரலாற்றுச் சாசனங்கள் இதைப்பற்றிக் கூறவில்லை. ஓசா, இலால் போன்ற இக்கால வரலாற்றுப் பேராசிரியர்கள் பத்மினியைப் பற்றிய நிகழ்ச்சிகள் புனைந்துரைக்கப்பட்டவை என்று கூறுகின்றார்கள். சிறைபிடித்துச் சுல்தானின் முகாமிற்கு அனுப்பப்பட்ட இராணாவை இராசபுத்திரர்கள் விடுதலை செய்தனர். சித்தூர்க் கோட்டையைக் காப்பாற்றக் கோரா, பதால் என்பவர்கள் எதிர்த்து நின்றனர். எதிர்க்க இயலாது என்பதை உணர்ந்தவுடன் வீரமரணத்தை விரும்பி ஏற்றனர். இராசபுத்திரப் பெண்மணிகள் தம் குலவழக்கப்படி “சோகர்” எனப்படும் தீக்குளித்த நிகழ்ச்சியை டாடு என்னும் ஆங்கிலேயர் அழகுற வருணித்துள்ளார். சித்தூர் வீழ்ச்சியுற்றது. ஆனால், கி.பி. 1325–ஆம் ஆண்டளவில் இராசபுத்திரர்கள் சித்தூரை மீட்டனர். மீண்டும் அது மேவாரின் தலைநகராயிற்று. சித்தூரைப் பணியவைத்த பின்னர் அலாவுதீன் மாளவ நாட்டின் மீது படை எடுத்தார். அதன் அரசர் தோற்கடிக்கப்பட்டார். மாண்டு, உச்சயினி, தார், சாந்தேரி போன்ற நகரங்கள் அலாவுதீனால் கைப்பற்றப்பட்டன. கி.பி. 1308-இல் பேரரசுப் படைகள், மார்வாரின் வலிமைமிக்க கோட்டையான சிவானாவைக் கைப்பற்றின. அலாவுதீனின் தலைமையில்தான் கில்சிகள் தக்காணத்தை முதல் முறையாக வென்றனர். அவர் தம் தென்னாட்டுப் படையெடுப்புகள் அரசியல், பொருளாதாரத் தூண்டுதல்களால் விளைந்தவை. தம் பேரரசின் எல்லை தென்னிந்தியாவில் பரவவேண்டும் என்பதும், தெற்கில் இந்து ஆட்சிக்கு மாறாக முசுலிம் ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதும் அவர் நோக்கமன்று, “தென்னிந்தியப் படையெழுச்சியின் நோக்கம் கொள்ளையடிப்பது” என்று சத்தியநாதையர் கூறுகிறார். தென்னாட்டு அரசர்கள் அலாவுதீனின் வலிமையை உணரவேண்டுமென்பதும், வடஇந்தியாவில் உள்ள முசுலிம் ஆட்சிக்கு இடையூறு செய்யாமலிருக்க வேண்டுமென்பதும் அலாவுதீனின் நோக்கங்களாகும். தென்னிந்தியாவில் நிலவிய அரசியல் சூழல், அலாவுதீன் படையெடுத்துச் செல்லுவதற்கான வாய்ப்பை அளித்தது. அப்போது தென்னிந்தியாவில் நான்கு இந்து அரசுகள் இருந்தன. 1. தேவகிரியில் யாதவர்கள் அரசு. இராமச்சந்திர தேவர் என்பார் அதன் அரசர். 2. வாரங்கல்லில் காகதீய அரசு. அதனை ஆண்டவர் பிரதாபருத்திர தேவர் 3. துவார சமுத்திரத்தில் ஒய்சால அரசு; மூன்றாம் வீரபல்லாளர் இப்பகுதியை ஆண்டுவந்தார். 4. மதுரையில் பாண்டிய அரசு; பாண்டியர் ஆண்டனர். முசுலிம் எழுத்தாளர்கள் இதனை மாபார் என அழைத்தனர். மாறவர்மன் குலசேகரன் அப்பொழுது மன்னராகவிருந்து வாணிகத்திற்கு ஆதரவு அளித்து, அதனால் நாட்டின் செழிப்பைப் பெருக்கினார். தென்னிந்திய இந்து அரசர்களிடம் ஒற்றுமை நிலவவில்லை. ஆகவே அவர்கள் கில்சியின் படைத்தலைவர் மாலிக்காபூரால் தோற்கடிக்கப்பட்டனர். கி.பி. 1307-இல் தேவகிரியும், கி.பி. 1310-இல் வாரங்கலும் துவாரசமுத்திரமும் வீழ்ந்தன. கி.பி. 1311-இல் மதுரை கொள்ளையடிக்கப்பட்டது. இராமேசுவரம் வரை மாலிக்காபூர் சென்று கொள்ளையடித்தமை தெரிகிறது. மாலிக் காபூர் கி.பி. 1313-இல் மீண்டும் தில்லியிலிருந்து தேவகிரியின் மீது படையெடுத்துக் கைப்பற்றினார். நான்கு தென்னிந்திய இந்து அரசுகளும் அடிபணிந்து சுல்தான் மேலாதிக்கத்தை ஏற்றனர் ஆனால், தில்லி அரசோடு அவை இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நகரங்களைக் கொள்ளையிடுதல், மக்களைக் கொன்று குவித்தல், கோயில்களைச் சூறையாடுதல் போன்ற செயல்கள் தென்னிந்திய மக்களைப் பெரிதும் வேதனையுறச் செய்தன. அவர்கள் மனத்தில் ஏற்பட்ட ஆழ்ந்த வெறுப்பின் அரசியல் விளைவே விசயநகரத்தின் எழுச்சியாகும் என்று மசும்தார் குறிப்பிடுகின்றார். பால்பனைப் போன்று அலாவுதீன் தெய்விக உரிமைக் கோட்பாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அரசு அலுவல்களில் அவர் உலேமாக்களின் செல்வாக்கினை விரும்பவில்லை. தம்முடைய விருப்பத்திற்கேற்றவாறு சட்டங்களை ஏற்படுத்தினார். சமயத் துறையை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து சமயச் சார்பற்ற அரசைத் தோற்றுவித்த முதல் தில்லிச் சுல்தானும் அலாவுதீனே ஆவார். அலாவுதீன் இசுலாமிய சமயத்தைப் புறக்கணித்தார் என்று கருதக் கூடாது. இசுலாம் சமயத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்று நினைவுச் சின்னங்களின் மீது காணப்படும் சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. மத்தியில் வலிமை வாய்ந்த ஓர் ஆட்சியை ஏற்படுத்த அலாவுதீன் விரும்பினார். ஆனால், சில புரட்சிகளால் இவரது ஆட்சி மாசுபட்டது. புதிய முசுலிம்களால் தோற்றுவிக்கப்பட்ட சூழ்ச்சியும் ஆகாத் கானால் தோற்றுவிக்கப்பட்ட கலகமும் சுல்தானைக் கொல்வதனைக் குறிக்கோளாகக் கொண்டன. இவர்தம் இரு மக்களால் உருவாக்கப்பட்ட புரட்சி, தில்லிக் கொத்தவாலின் உயிரை வாங்கிக் காசி மௌலானாவால் தோற்றுவிக்கப்பட்ட புரட்சி ஆகிய அனைத்துப் புரட்சிகளையும் இவர் அடக்கினார். இவர் இப்புரட்சிகள் தோன்றியதற்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்தறிந்தார். திறமை குறைந்த ஒற்றர்கள், குடிப்பழக்கம், பெருங்குடிமக்களின் நெருக்கம், பணப்பெருக்கம் ஆகிய நான்கும் புரட்சிகள் தோன்ற அடிப்படைக் காரணங்களாகும் எனவுணர்ந்த அலாவுதீன் அடக்குமுறைச் சட்டங்களை உருவாக்கினார். முதல் சட்டம், சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நோக்கங் கொண்டது. இதனால் ஓய்வுத் தொகைகளும் சமய அறக்கொடைகளும் மானிய நிலங்களும் அகற்றப்பட்டதன் பயனாக உயர்குடிமக்கள், அலுவலர்கள், பெரும் வணிகர்கள் ஆகியோரின் இல்லங்களைத் தவிர வேறெங்கும் பொன்னைக் காண முடியாது போயிற்று. இரண்டாவதாக, அலாவுதீன் திறமையான ஒற்றர் படையை நிறுவினார். அப்படையினர் நாட்டு மக்களைப் பற்றியும் அலுவலர்களைப் பற்றியும் குறித்த செய்திகளை அவருக்கு அறிவித்து வந்தனர். மூன்றாவதாக, குடிப்பழக்கம், வெறியூட்டும் சாராயம், இன்தேறல் முதலியவற்றை விற்றல், பகடையாட்டம் முதலியன தடை செய்யப்பட்டன. குடிப்பழக்கத்தைத் தாமும் கைவிட்டுச் சுல்தானே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினார். நான்காவதாக, பணப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்தார். சுல்தானின் ஒப்புதல் இன்றி உயர்குடி மக்கள் விருந்துகள் அணித்தல், திருமண ஒப்பந்தங்கள் செய்து கொள்ளுதல் போன்றவை தடை செய்யப்பட்டன. இதனால் விருந்துகளும் இலவச உணவளிக்கும் முறைகளும் ஒழிந்தன. அலாவுதீன் இந்துக்களை மிகவும் துன்புறுத்தினார். அரசுக்கு வரி தண்டும் இந்து மதச்செல்வர்கள் கூடச் சுல்தானின் அடக்குமுறை நடவடிக்கைகளிலிருந்து தப்ப இயலவில்லை. இந்துக்கள் தம் வருவாயில் பாதியை அரசாங்கத்திற்குக் கொடுக்க வேண்டுமென வற்புறுத்தப்பட்டனர். தலைவரி, உள்நாட்டுப் பொருள்களின் மீதான வரி, சுங்கவரி போன்ற பழைய வரிகளுடன் மேய்ச்சல் வரி, வீட்டு வரி போன்ற வரிகளும் திரட்டப்பட்டன. வரிவாங்கும் அலுவலர்களைக் கண்டு இந்து மக்கள் அஞ்சினர். மிக ஏழ்மையான நிலைக்கு இந்துக் குடும்பங்கள் தாழ்த்தப்பட்டதால், இந்துப் பெண்டிர் முசுலிம்களின் இல்லத்தில் பணிப்பெண்களாக ஊழியம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மரம் அறுத்தல், நீர் இறைத்தல் ஆகிய தொழில்களில் ஈடுபடவும், அரசாங்க அடிமைகளாக இருக்கவுமே இந்துக்களுக்கு அலாவுதீன் வாய்ப்பளித்தார். தம் அரசு நன்கு செயற்பட வலுவான படை வேண்டும் என்பதை அலாவுதீன் நன்கு உணர்ந்தார்; நிலையான படையின் தேவையையும் அறிந்தார். நிலையான படையை ஏற்படுத்திய முதல் துருக்கியச் சுல்தான் அலாவுதீன் கில்சியேயாவார். படை வீரர்கள் இராணுவ அமைச்சரால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசுக் கருவூலத்திலிருந்து படை வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. போர்க்கலங்களும் அரசரால் அளிக்கப்பட்டன. உயர் வகுப்பினர் தனிப் படைகளை வைத்திருப்பதை அனுமதிக்கவில்லை. போர் வீரர்களைப்பற்றிய தனிக்குறிப்புகளை எழுதி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி ஊழலை ஒழித்தார். குதிரைகளுக்குச் சூடு போடும் முறையைக் கையாண்டு பொய்க்கணக்கை ஒழித்தார். குறைந்த ஊதியத்தில் படைவீரர்கள் வாழ்க்கை நடத்த, வாழ்க்கைக்கு மிகவும் தேவையான பண்டங்களின் விலைகளைக் கட்டுப்படுத்த, அலாவுதீன் சில கட்டளைகள் பிறப்பித்தார். கள்ளச் சந்தைக்காரர்களும் பதுக்கல் செய்தவர்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். அரசுக் களஞ்சியங்களில் தானியங்கள் சேகரித்து வைக்கப்பட்டன. இதனால் வறட்சிக் காலத்தில்கூட உணவுப் பொருள்கள் கிட்டின. அங்காடிகளைக் கட்டுப்படுத்தத் திவான்–இ–ரியாசத், சகான் இ மண்டி என்னும் இரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். வணிகச் சட்டங்களை மீறினோர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். இதன் விளைவாக உணவுப் பொருள்களின் விலைகுறைந்தது. இச்சட்டங்கள் நாடுமுழுவதும் செயற்படுத்தப்பட்டனவா அல்லது தில்லி நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் மட்டுமே செயற்படுத்தப்பட்டனவா என்பது பற்றி மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. தில்லியிலும் அதன் சுற்றுப்புறத்தில் மட்டுமே மேற்கூறிய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன என்று கொள்வது பொருத்தமானதாகும். பொது வருவாய்த் துறையைப் பெருக்கத் தனிப்பட்டவர்களின் நலன்களை இயன்ற அளவு குறைக்க வேண்டும் என்பது அலாவுதீனின் நோக்கமாகும், அவருக்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள் வருவாய்த்துறைச் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவில்லை. ஓய்வூதியங்கள், சமய அறக்கொடை, நிலங்களை மானியமாக அளித்தல் போன்ற முறைகளை அலாவுதீன் அகற்றினார். இந்து அரசு ஊழியர்கள் பெற்ற சலுகைகள் மறுக்கப்பட்டன. அவர்களும் நிலவரி, வீட்டுவரி, மேய்ச்சல் வரி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர். அரசின் வருவாயை முடிந்த அளவு உயர்த்த மொத்த விளைச்சலில் பாதி அரசின் பங்காகுமெனவும், இந்துக்கள் சிசியா வரியையும் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. மற்றும் நிலங்கள் அளக்கப்பட்டு நிலத்தின் அளவு மதிப்பிடப்பட்டது. இச்சட்டதிட்டங்களைச் செயற்படுத்த நேர்மையும் திறமையும் மிக்க வருவாய்த்துறை அலுவலர்கள் அமர்த்தப்பட்டனர். வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நிலமாக ஊதியம் வழங்கும் முறையை அலாவுதீன் ஏற்றுக் கொள்ளவில்லை. அலாவுதீன் கில்சி படையின் அடிப்படையில் ஆட்சியை அமைத்த வல்லாட்சியாளர் ஆவார். அரசரே அனைத்து அதிகாரங்களையும் கைக்கொண்டார். அமைச்சர்கள் தனித்துச் செயற்படவில்லை. அலாவுதீனின் விருப்பு வெறுப்பிற்கேற்றவாறு அவர்கள் நடத்தப்பட்டனர். அலாவுதீன் கில்சி தில்லியில் உள்ள குவ்வத்–உல்–இசுலாம் (Quwwatu'l–Islam) என்னும் மசூதியை விரிவுபடுத்தினார். இம்மசூதியின் தென்புற நுழைவாயில் இவரால் கட்டப்பட்டது. இந்நுழைவாயில் அலைதர்வாசா என்று கூறப்படுகிறது. குதுப்மினாருக்கு அருகில் அலாய்மினார் என்ற உயர்ந்த மினாரையும் இவர் கட்டத் தொடங்கினார். அது முடிவுறா நிலையிலேயே இவர் காலமானார். தில்லியின் இரண்டாம் பெருநகரை அலாவுதீன் கில்சி நிறுவினார். அது ‘சிரீ’ (Siri) எனப் பெயரிடப்பட்டது. அலாவுதீன் மகன் கிசிர்கான் என்பவரும் தில்லியில் சில இசுலாமியக் கட்டடங்களைக் கட்டினார். கி.பி. 1312–ஆம் ஆண்டிற்குப் பிறகு இவரது வாழ்க்கையின் வெற்றி ஒளி மங்கத் தொடங்கியது. அத்து மீறிய செயல்களால் இவர் உடல் நலம் கெட்டது. மாலிக் காபூரின் ஆதிக்கத்தில் இவர் கைப் பொம்மையானார். காபூரின் தீயபழக்கங்களின் விளைவாகச் சுல்தானின் மூத்த மைந்தர் கிசிர்கான் சிறைவைக்கப்பட்டார். அவருடைய தாயாரும் தில்லியில் சிறை வைக்கப்பட்டார். குசராத்து ஆளுநர் கொலை செய்யப்பட்டார். நாட்டின் பல பகுதிகளிலும் கலகங்கள் தோன்றின. தேவகிரியில் அரபாலர் புரட்சிக் கொடி பிடித்தார். சித்தூரின் இராணா அமீர் இராசபுதனத்திலிருந்து முசுலிம்களை விரட்டியடித்தார். குசராத்திலும் கிளர்ச்சி ஏற்பட்டது. அலாவுதீன் கில்சி கி.பி. 1316 சனவரி இரண்டாம் நாள் மரணமடைந்தார்.இரா.இரா. துணை நூல் Majumdar, R.C., & Others, “An Advanced History of India”, Macmillan, India, 4th Ed., 1981.