மத்தியபிரதேச மாநிலத்தில் இந்தூரிலிருந்து 51 கி.மீ. தொலைவில் சிப்ரா ஆற்றங்கரையிலமைந்துள்ள நகரம். இந்நகரம் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு நடைபெறும் பல்வேறு திருவிழாக்களைக் காண மக்கள் பெருமளவில் இந்நகருக்கு வருகின்றனர். அத்திருவிழாக்களுள் ‘கும்பமேளா’ என்னும் திருவிழா சிறப்புப் பெற்றது. புராணக் கதைகளில் கூறப்படும் அரசர் விக்கிரமாதித்தருடன் உச்சயினி இணைத்துப் பேசப்படுகிறது. அவந்தியின் தலைநகரமான இந்நகரம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பதினாறு மகாசனபதங்களுள் ஒன்றாக விளங்கியது. இந்நகரை அவந்திகாபுரி என்றும் கூறுவர். புத்தரின் காலத்தில் இந்நகரைப் பிராத்யோதர் (Prodyoda) என்னும் மன்னன் ஆட்சி புரிந்தான். அக்காலத்தில் இந்நகரத்திலிருந்தே மணி காட்டும் நெடுங்கோடு (Longtitude) தொடங்கியதாக வானவியல் அறிஞர்கள் கணக்கிட்டனர். இந்நகரம் அக்காலத்தில் இன்றைய கிரீன்விச்சுப் போன்று செயற்பட்டது. பல்வேறு சமயங்களுடனும் இந்நகரம் தொடர்புடையது. சீனப்பயணி யுவான்சுவாங்கு இந்நகருக்கு வந்து இந்நகரைப் பற்றித் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நகரம் 30 இலி (30 li–8 கி.மீ.) சுற்றளவுடையது என்றும், இந்நகரை இந்து அரசர் ஒருவர் ஆண்டுவந்தார் என்றும், நகரில் பல பௌத்த மடா- லயங்கள் இருந்தனவென்றும், இம்மடாலயங்களில் ஏறக்குறைய 300 பௌத்தத் துறவிகள் இருந்தனரென்றும், மக்கள் நெருக்கம் மிக்க நகரமாக விளங்கிய இவ்வூரில் இந்துக் கோயில்களும் விளங்கின என்னும் அவர் குறிப்பிட்டுள்ளார். குப்தர் பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தர் சகசந்திரபர்களை வென்று உச்சயினியைத் தம் பேரரசுடன் இணைத்தார். பிரதிகார அரசர்கள், பரமார அரசர்கள் போன்றோர் ஆதரவைப் பெற்று விளங்கியது இந்நகரம். பின்னர்த் தோமரர், சௌகான் மரபுகளின் ஆளுகையின்கீழ் உச்சயினி வந்தது. இல்துத்மிசு என்னும் தில்லிச் சுல்தானிய மன்னர் கி.பி. 1236–இல் இந்நகரைக் கைப்பற்றினார். கில்சி மரபினர் வசம் கி.பி. 1305–இல் இந்நகரம் வந்தது. இந்நகரை மொகலாயர்கள் கி.பி. 1570 முதல் ஆண்டனர். காளிதாசரின் மேகதூதம் இந்நகர்ப் பெருமையை எடுத்துரைக்கிறது. இது தமிழ் இலக்கியங்களில் உஞ்சை, உஞ்சேனை, அவந்தி எனவும் வழங்கப்படுகிறது. கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதையில் இந்நகரம் விரிவாகப் பேசப்படுகிறது. இது அவந்தி நாட்டில் உள்ளதென்பதும் அதன் தலைநகரமாக அமைந்த இந்நகர் உஞ்சையம்பதி எனப் பெயர் கொண்டது என்பதும் சிலப்பதிகாரத்தால் புலனாகின்றன (சிலப். 5–103. உரை; 6–29). இது பிரச்சோதன மன்னன் தலைநகரமாக விளங்கியது என்று பெருங்கதை கூறுகிறது. இந்நகரின் புறத்தே காளவனம் (மகா காளவனம்) எனப் பெயர் கொண்ட ஒரு காடு இருந்தமையும், அதில் மாகாளிக்குக் கோயில் அமைந்திருந்தமையும் கொங்குவேளிர் குறிப்பிட்டுள்ளார் (பெருங். உஞ்சை. 36:240). இந்நகரில் உச்சயினி மாகாளம் என்னும் ஒரு சிவாலயம் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மாநிலச் சீரமைப்பிற்கு முன்பு இருந்த குவாலியர் அரசின் தொல்லியல் துறையினர் இந்நகரின் பழமையை எடுத்தியம்ப இங்கு அகழாய்வினை மேற்கொண்டனர். பின்னர், இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையைச் சார்ந்த என். பானர்சி தலைமையில் இங்கு விரிவான அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அகழாய்வில் இந்நகரில் நான்கு நாகரிகப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. முதல் பண்பாட்டு மக்கள் கி.மு. 750 முதல் கி.மு. 500 வரையில் இங்கு வாழ்ந்திருந்தனர். இவர்கள் கருப்பு சிவப்பு மட்பாண்டங்களையும், சிவப்பு மட்கலன்களையும், கரடுமுரடான மட்கலன்களையும் பயன்படுத்தினர். களிமண் சுவர்களாலான வீடுகளில் இவர்கள் வாழ்ந்தனர். அகழாய்வில் 13 மீட்டர் உயரமுடைய கோட்டைச் சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இச்சுவரின் அடிப்பகுதி 75 மீட்டர் அகலமுடையது. இணைவக அமைப்பையுடைய கோட்டைச்சுவரைச் சுற்றி 24 மீட்டர் அகலங்கொண்ட அகழி ஒன்றும் உள்ளது. இக்கோட்டைச் சுவரில் பல முறை பிளவுகள் ஏற்பட்டு அவை புதுப்பிக்கப்பட்டன. ஆற்றுப் பக்கத்திலிருந்த கோட்டைச்சுவர் பிற பக்கங்களில் இருந்த சுவர்களை விட மிக்க வலிமை உடையதாகக் காணப்பட்டது. மர உத்தரங்கள் மர உத்தரங்களின் மீது களிமண்ணைப் பூசி இவ்வரண் கட்டப்பட்டது. வடமேற்குக் கோட்டைச் சுவரின் பக்கம் நகரினுள் நுழையும் பெருவாயில் காணப்பட்டது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்குச் சாலைகள் பிரிந்து சென்றன. இரண்டாம் பண்பாட்டுக் காலம் கி.மு. 500 இலிருந்து கி.மு. 200 வரை ஆகும். இப்பண்பாட்டுக் கால மக்கள் வடக்கத்திய பளபளப்பு மிக்க மட்- பாண்டங்களைப் (N.B.P.) பயன்படுத்தினர். இவை உள்ளூரில் இருந்த குயவர்களாலேயே வனையப்பட்டன. எலும்பாலான அம்பு முனைகளும் முத்திரைகளும் காசுகளும் இரும்புப் பொருள்களும் சுடுமண் பொம்மைகளும் அணிகலன்களும் வெண்கலம், தந்தம், இரவைக்கல் (Jasper), களிமண் போன்றவற்றால் செய்யப்பட்ட காதணிகளும் இக்காலப் பண்பாட்டு மண்ணடுக்குகளில் கிடைத்தன. மக்கள் சுட்ட செங்கற்களாலும் பச்சைச் செங்கற்களாலும் வீடுகளைக் கட்டினர். இக்காலத்தைச் சேர்ந்த தொட்டியும் கால்வாய் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டன. இத்தொட்டி 10 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் உடையது. கால்வாயின் நீளம் 56 மீட்டர். மணிகள், அம்புமுனைக் கருவிகள் ஆகியவற்றைச் செய்யும் தொழிற்கூடம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. மூன்றாம் பண்பாட்டுக் கால மக்கள் கி.மு. 200 முதல் கி.பி. 1300 வரை உள்ள காலப் பகுதியில் வாழ்ந்தனர். உச்சயினி அடையாளக் குறியுள்ள நாணயங்களும் சிறு சுடுமண் உருவங்களும் குசானர் காலத்தைச் சார்ந்த பெண் வடிவப் பொம்மை ஒன்றும் அகழாய்வில் கிடைத்தன. இப்பெண் பொம்மை அணிகலன்கள் மிக்கதாகக் காணப்படுகிறது. மணிகள் செய்யப்படும் தொழில் இக்காலத்தில் இங்குப் பெருமளவில் நடைபெற்றிருக்க வேண்டும். ‘பெரிப்ளூசின் செங்கடற்செலவு’ (Periplus of the Erythrean Sea) என்னும் நூல் உச்சயினியிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு மணிக்கற்கள் (Semi–Precious Stone) புரோச்சுத் துறைமுக வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டன எனக் கூறுகிறது. நான்காம் பண்பாட்டுக் கால மக்கள் குறைந்த காலமே வாழ்ந்தனர். சில நாணயங்களும், கருங்கற்களாலும் செங்கற்களாலும் கட்டப்பட்ட சில வீடுகளும் இக்காலப் பண்பாட்டு மண்ணடுக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டன. தொன்மை மிக்க நகரம் இன்று பருத்தி ஆலைகளையும் எண்ணெய் வித்துகளின் ஆலைகளையும் பருத்திக் கொட்டையைப் பிரிக்கும் தொழிற்சாலைகளையும் கொண்டு விளங்குகிறது. இங்குத் துணிகளுக்குச் சாயம் தோய்க்கும் தொழிலும் கம்பனித் துணி நெய்தலும் நடைபெறுகின்றன. பாத்திரங்கள் செய்தல், ஓடுகள் செய்தல் போன்ற தொழில்களும் சிறப்புப் பெற்றுள்ளன. இவ்வூர் தின்பண்டங்களுக்குப் பேர் பெற்று விளங்குகிறது. உச்சயினி மாகாளி சக்திவாய்ந்த தெய்வமாகக் கருதப்படுகிறாள். ஆண்டுதோறும் விழாவெடுத்து மக்கள் இம்மாகாளியை வழிபடுகின்றனர். இத்தெய்வம் தமிழக ஊர்களில் உச்சுமாகாளி, உச்சுமாளி என்னும் பெயர்களையும் பெற்று வழிபடப்படுகிறது.