தமிழகத்தின் தொன்மை மிக்க அரசியல் பிரிவுகளுள் மழநாடும் ஒன்று. இம்மழநாடு, பண்டு மேல் மழநாடு கீழ்மழநாடு–என்னும் இருபெரும் பிரிவுகளைக் கொண்டு விளங்கியது. அரியலூர் கீழ் மழநாட்டைச் சேர்ந்தது. மழநாட்டில் வாழ்ந்தவர்கள் மழவர் என அழைக்கப்பட்டனர். மழவர் என்னும் இத்தொல்குடியினர் சிறந்த வீரர்களாய்த் திகழ்ந்தனர். சங்க நூல்களிலும் பண்டைய சாசனங்களிலும் மழவர் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அரியலூர் மழவராயர் குடியின் முன்னவர்களாக இராமநயினார், பூமி நயினார் என்னும் உடன் பிறந்தோர் இருவர் இருந்துள்ளனர். இவ்விருவரும் விசயநகரப் பேரரசில் கசபதி வம்சத்தினரான திம்மராயரின் காலத்தில் அவர் துணையுடன், அரியலூர்ப் பகுதியை ஆண்டு வந்தனர். திம்மராயருக்குப் பின் அரியணையேறிய நரசிம்மராயர், இவ்விருவருக்கும் அனுமதி வழங்கி, மதுரையை ஆண்டு வந்த விசுவநாத நாயக்கரின் (கி.பி. 1529–64) கீழ்ச் சிற்றரசராக இராமநயினாரை அமர்த்தினார். ஊட்டத்தூருக்கும் சிதம்பரத்திற்கும் இடைப்பட்ட நிலப்பகுதிக்கு இராமநயினார் தலைவரானார். அரியலூரில் கோயில் கொண்டுள்ள ஒப்பில்லாத அம்மனின் அருளால், இராமநயினாரின் கால்வழியினர், ‘குன்றை ஒப்பிலாத மழவராயர்’ என்னும் பட்டத்தினைப் புனைந்து கொண்டனர். இம்மரபினைச் சேர்ந்த எட்டாவது மன்னர் அரங்கப்ப ஒப்பிலாத மழவராயர், கி.பி. 1651–இல் மதுரை நாட்டின் மீது முசுலிம் படையெடுப்பு நிகழ்ந்தபோது, மதுரையை ஆண்ட வீரப்ப நாயக்கருக்குப் படையுதவி அளித்து வெற்றி பெறச் செய்தார். இம்மரபின் 16–ஆம் அரசரான இராம விசய ஒப்பிலாத மழவராயர் மிகச் சிறந்த வீரராகத் திகழ்ந்தார். ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் தென்னிந்தியாவில் உண்டான ஆதிக்கப் போட்டியில் மழவராயரின் பங்கு யாது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கி.பி. 1765–இல் கருநாடக நவாப்பு அரியலூரைக் கைப்பற்றி, அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கினார். அரியலூர் மன்னரோ முதலில் தஞ்சைக்கும் பின்னர் மைசூருக்கும் சென்று தஞ்சம் புகுந்தார். கி.பி. 1780 இல் மைசூர் ஐதர் அலியின் தலையீட்டால், அரியலூர் மீண்டும் மழவராயர் வசம் வந்தது. கி.பி. 1783–இல் அரியலூர் அரசர், ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவினால் நிலக்கிழாராக அமர்த்தப்பட்டு, வரிவசூல் செய்யும் உரிமையைப் பெற்றார். கி.பி. 1817–இல் அரியலூர் அரசருக்கு ஆங்கிலேயர் ‘சன்னது’ வழங்கினர். அச்- சமயம் அவருக்கு 57 கிராமங்கள் சொந்தமாய் இருந்தன. ஆனால் 1907–இல் இவரிடம் 7 கிராமங்களே மிஞ்சின. இறுதியாக, கி.பி. 1951–இல் இவையும் அகற்றப்பட்டு, நட்ட ஈடு வழங்கப்பட்டது. இவர்களின் 400 ஆண்டு ஆட்சியும் முடிவுக்கு வந்தது. அரியலூர் மழவராயர்கள் கலைகளையும் கல்வியையும் ஆதரித்தார்கள். இவ்வூரிலுள்ள கோதண்ட இராமசாமி கோயிலில் விளங்கும் வனவாசம் செல்லும் இராமரின் நின்ற கோலம் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தசாவதாரச் சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் கொடைப்பண்பு மிக்கவர்கள் என்பதனை அரியலூர் கிருட்டிணன் கோயில், உடையார் பாளையம், திருமழபாடி, திருப்பழுவூர் முதலான இடங்களிலுள்ள கோயில் கல்வெட்டுகளாலும் செப்பேடுகளாலும் அறியலாம். இவர்கள் வடமொழி, தெலுங்கு, தமிழ், இசை ஆகிய துறைகளில் வல்ல புலவர் பெருமக்களைத் தம் அரசவையில் அமர்த்திப் பேராதரவு நல்கினர். மழவராயர் சிலரும் புலவர்களாகத் திகழ்ந்தனர். கிருட்டிணைய மழவராயர் அந்தகக் கவி வீரராகவ முதலியாரையும், விசயரங்க ஒப்பிலாத மழவராயர் கடல் இருவாட்சிப் புலவரையும், யுவரங்க மழவராயர் சுப்பிரமணியக் கவிராயரையும் பேணித் தக்க பரிசில்கள் வழங்கினர். இருவாட்சிப் புலவர் “திருக்கை வளம்” என்னும் நூலை இயற்றி அரசவையில் அரங்கேற்றினார். தமிழறிஞர் உ.வே.சா. அவர்களின் தந்தையார் வேங்கடசுப்பையர், அரசவையில் இசைப் புலவராகத் திகழ்ந்தார். இதற்காக இவருக்கு இலந்தங்குழி என்னும் கிராமத்தில் 10 காணிநிலம் முழுமானியமாக அளிக்கப்பட்டது. புலவர் சண்பக மன்னரும் அவரது கால்வழியினரும் அரியலூர் அரசவையில் தொடர்ந்து தமிழ்ப்பணி புரிந்தனர். நவராத்திரி நாடகம், சிவராத்திரி நாடகம், பார்வதி திருக்கல்யாண நாடகம், அரியிற் சிலேடை வெண்பா, இராமாயண வண்ணம், இராமாயணச் சிந்து, சார்ங்க சருக்கரை விநாயகர் பஞ்ச ரத்தினம், பஞ்சாயத்து மாலை, சீவபிரம்ம ஐக்கிய சரித்திரம் போன்ற இலக்கியங்கள் ஆங்கு மலர்ந்தவையே ஆகும். அவற்றில் ஒன்றும் இன்று கிடைக்கப்பெற வில்லை. அரியலூர் அரசவைப் புலவர்களின் மரபினர் இன்றும் அரியலூரில் வாழ்ந்து வருகின்றனர். அரியலூர் மழவராயரின் கலைப்பணி இன்றும் நின்று நிலவி, இவர்களது பெருமையைக் கூறுகிறது.ம.இரா.