இலஞ்ச ஊழல்
ilañca ūḻal
இலஞ்ச ஊழல் என்ற சொற்றொடர்.
இலஞ்ச ஊழல் என்ற சொற்றொடர். ‘இலஞ்சம்’, ‘ஊழல்’ ஆகிய இரண்டையும் தனித் தனியே பிரித்துக் குறிப்பதாகச் சட்டமுறையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பொய், களவு, கள், காமம், கொலை ஆகிய பெருங்குற்றங்களின் பட்டியலில் இலஞ்சம் சேர்க்கப்படலில்லை. இருப்பினும், ‘பழிதீர் செல்வமொடு’ என்ற சொற்றொடர் தொல்காப்பியத்திலிருப்பதிலிருந்தும், ‘தீது இன்றி வந்த பொருள்’, ‘அறம் நோக்காது ஈட்டிய ஒண் பொருள்’, ‘சலத்தால் பொருள் செய்து’, ‘தாழ்வு இலாச்செல்வரும்’, ‘ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு’, ‘கைம்மாறு வேண்டா கடப்பாடு’ ஆகிய சொற்றொடர்கள் திருக்குறளிலிருப்பதிலிருந்தும், ‘அறத்தின் ஈட்டிய ஒண்பொருள்’ என்று மணிமேகலையிலிருப்பதிலிருந்தும், ‘இலஞ்சம்’ போன்ற தகாத முறையில் பொருளீட்டிய நிலை, தமிழ்நாட்டிலும் பழங்காலத்தில் ஓரளவு இருந்திருக்கக்கூடும் என்பதை உய்த்துணரலாம். வட இந்தியாவில் கி.மு. 3–ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சந்திரகுப்த மௌரிய மன்னரின் அமைச்சரான சாணக்கியர், தாம் வடமொழியில் எழுதியுள்ள அருத்தசாத்திரத்தில் அக்காலத்தில் பல்வேறு வகைகளில் நிலவிய இலஞ்ச ஊழலை விவரித்துள்ளளார் என்ற குறிப்பு, ஊழல் தடுப்புப்பற்றி இந்திய அரசிற்கு 1964–இல் கொடுக்கப்பட்ட சந்தானம் குழுவின் அறிக்கையில் உள்ளது. குறிப்பிட்டுக் கண்டிக்க வேண்டிய அளவில் ‘இலஞ்ச ஊழல்’, தமிழகத்தின் பண்டைய சமுதாயத்தில் பரவலாக இருந்திராவிட்டாலும், இதுபோன்ற கூடா ஒழுக்கச் செயல்கள் இருந்தமையினாலேயே ஒழுக்க நெறி, அறநெறி, பழி அஞ்சுதல் ஆகியவை பற்றிய அறிவுரைகளும் ‘இலஞ்ச ஊழல்’ பழங்காலத்திலேயே தோன்றி வளர்ந்துள்ளது என்பதற்கான சான்றுகளும் இந்திய நாட்டின் வரலாற்றிலேயே உள்ளன.
‘இந்தியாவில் காரியம் சாதித்துக்கொள்ளச் செல்லும் யாரும் வெறுங்கையுடன் செல்வதில்லை’ என்று கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் சாசகான் (Shah Jahan) ஔரங்கசீபு (Aurangzeb) ஆகிவ முகலாய மன்னர்களின் அரசவைக்கு வந்து சென்ற பிரான்சு நாட்டுப் பயணியான பெர்னியர் (Bernier) எழுதியுள்ளார். இந்தியாவில் வாணிகத்தில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சுக் கிழக்கு இந்திய வணிகக்குழுவுக்கும். ஆங்கிலக் கிழக்கு இந்திய வணிகக்குழுவுக்குமிடையே, கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் போட்டி ஏற்பட்டதைத் தொடர்ந்து இலஞ்ச ஊழல் மிகுதியாயிற்று, இரு வணிகக் குழுக்களும் அக்காலத்திலிருந்த மன்னர்களுக்கும் நவாபுகளுக்கும் பொருளைக் கொடுத்து, அவர்களிடமிருந்து சில பயன்களைப் பெற்றன. அதுபோலவே, மன்னர்களும் நவாபுகளும், வணிகக் குழுக்களுக்குப் பரிசுகள் (Rewards) கொடுத்து, வணிகக் குழுக்களின் ஆதரவைத் தேடிக்கொண்டார்கள். வங்காள நவாபு சிராசு–உத்–தவுலாவுக்கு (Siraj–Ud–Daula) எதிராகச் கி.பி. 1756–அளவில் மீர்சாபரை (Mir Jafar) ஆதரித்து, அவரை நவாபு ஆக்கியதற்கு, ஆங்கிலேய வணிகக்குழு 24 பர்கானாக்களைப் பெற்றதோடல்லாமல், ஆங்கில வணிகக்குழுவின் நிருவாகக் குழுவினர்களும் இராபர்ட்டுக் கிளைவும் மிகுதியான பரிசுகளைப் பெற்றார்கள் என இந்திய வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இதேபோல், தட்சிண நவாபு வட சர்க்கார் என்ற நிலப்பகுதியைப் பிரஞ்சு வணிகக் குழுவுக்கு அளித்திருக்கிறார். அரசப் பேராளராக கி.பி. 1775 முதல் 1785 வரை இருந்த வாரன் ஏசுடிங்சு (Warren Hastings) மீது இலஞ்ச ஊழல் புகார் ஏற்பட்டதும், இந்த இலஞ்ச ஊழல் புகாருக்குக் காரணமாயிருந்த இராசா நந்தகுமார் தூக்கிலிடப்பட்டதும், பிறகு, வாரன் ஏசுடிங்சு பேரில் இங்கிலாந்து மக்கள் அவை (House of Commons) அரசியல் குற்றச்சாட்டு நடவடிக்கை (Impeachment) எடுத்ததும் உலகச் சிறப்புப் பெற்ற வரலாற்று நிகழ்ச்சிகளாகும். ஆங்கில வணிகக்குழுவினர் இலஞ்சம் பெற்றதன் காரணமாக வணிகக்குழுவின் நிருவாகத்தில் முறைகேடுகள் நடைபெற்றதால் வணிகக்குழுவின் நிருவாகப் பொறுப்பினைப் பிரிட்டிசு அரசு கி.பி. 1784–இல் ஏற்றுக்கொண்டதும், அதைத் தொடர்ந்து இந்திய அரசப் பேராளராக வந்த கார்ன்வாலிசு பிரபு (Lord Cornwallis) இந்தியாவில் வணிகக்குழு ஊழியர்கள் முறைகேடான முறையில் ஆதாயம் தேடி வந்ததை நிறுத்த நடவடிக்கை எடுத்ததும் இந்திய நிருவாக வரலாற்று உண்மைகளாகும்.
இவ்வாறு பரிசுகள், கைம்மாறு போன்ற பெயர்களில் இந்திய அரசியலில் கடந்த இரண்டுமூன்று நூற்றாண்டுகளுக்கு முன் காணப்பட்ட இலஞ்ச ஊழல் மேன்மேலும் வளர்ந்தது.
இந்நூற்றாண்டின் முற்பகுதி வரையில் அரசுப் பணியாளர்களிடத்தேதான் இலஞ்ச ஊழல் மிகுதியாக இருந்தது. இதைத் தடுக்கும் நோக்கத்துடன், அரசுப் பணியாளர்களின் நடத்தையைக் கட்டுப்படுத்தக் கடந்த நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டிலும், அரசுப்பணியாளர்களின் நடத்தை விதிகள் (Government Servants Conduct Rules) பல மத்திய மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இலஞ்ச ஊழல் குற்றங்கள் புரியும் பொது ஊழியர்களைத் (Public Servants) தண்டிக்க, கி.பி. 1860–ஆம் ஆண்டு இந்தியத் தண்டனைச் சட்டத்தில் (The Indian–Penal Code) தனிப் பிரிவுகள் (Sections) உள்ளன. தவறுகள், முறைகேடான நடத்தை, இலஞ்ச ஊழல் ஆகியற்றில் ஈடுபடும் அரசுப் பணியாளர்களைத் தண்டிக்கவும் (Punishment), சிறிதுகாலம் பதவி நீக்கம் செய்யவும் (Suspension), வேலையிலிருந்து நீக்கவும் (Removal or Dismissal), கட்டாய ஓய்வில் அனுப்பவும் (Compulsory Retirement) நடவடிக்கை எடுக்கவும் அரசு விதிகள் வழிவகுத்தன.
கடந்த இரண்டாம் உலகப் போர்க்காலத்தில், இந்தியாவில் எடுக்கப்பட்ட போர் நடவடிக்கைகளும் அப்போர் முடிந்த சில ஆண்டுகளில் இந்தியா விடுதலை பெற்று அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல், நிருவாக மாற்றங்களும், சுதந்திர இந்தியாவின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகளும், இலஞ்ச ஊழல் மிகுதியாகப் பரவுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தின. இதனால், மேலும் தீவிரமான இலஞ்ச ஊழல் தடுப்பு நடவடிக்கை தேவையென அரசு உணர்ந்து, புதிய சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் கொண்டுவந்தது. இதன் தொடர்பான 1947–ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் முக்கியமானதாகும். மேலும், பொது ஊழியர் என்ற பிரிவில், அரசுப் பணியாளர்களோடு இன்னும் பல்வேறு துறைகளிலும் நிறுவனங்களிலும் கழகங்களிலும் பணிபுரிபவர்கள் சேர்க்கப்பட்டனர். மத்திய அரசும், மாநில அரசும் இந்தியத் தண்டனைச் சட்டம், 1947–ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய இரண்டு சட்டங்களின் பிரிவுகளையும் இணைத்து, இலஞ்ச ஊழல் குற்றம் புரிந்த பொது ஊழியர்கள் பேரில் எடுத்த நடவடிக்கைகள், இலஞ்ச ஊழலைச் சிறிதளவு கட்டுப்படுத்தின.
இந்தியா 1950 சனவரியில் குடியரசு நாடாகிய பின், மக்களின் பேராளர்கள் ஆட்சிப் பொறுப்பில் முழுமையாக இடம்பெறவும், அரசுத் துறைகள் அளவிலும் எண்ணிக்கையிலும் விரிவடையவும், பல புதிய நிருவாக அமைப்புகள் ஏற்படவும், சமத்துவ வளர்ச்சிக்காகக் கட்டுப்பாடுகளும் வரையறைகளும் நிறைந்த சட்டதிட்டங்களையும் நிருவாக நடைமுறைகளையும் அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பொதுமக்கள், அரசுகளையும் பொது ஊழியர்களையும் அரசியலாளர்களையும் பெருமளவிற்குச் சார்ந்திருக்க வேண்டியவராயினர். இச்சூழ்நிலையில், இலஞ்ச ஊழல், பொது ஊழியர்களிடத்து மட்டுமன்றி, ஆட்சிப் பொறுப்பேற்ற பொது மக்களின் பேராளர்கள், அரசியலாளர்கள் பொது வாழ்வில் ஈடுபட்டவர்கள் ஆகியோரிடத்தேயும் பரவலாயிற்று. இத்தகைய நிலை உலக நாடுகள் பலவற்றில் பல ஆண்டுளுக்கு முன்பு ஏற்படவே, பொதுவாழ்வு தூய்மை பெற வேண்டி, ‘ஆம்பூட்சுமென்’ (Ombudsman) என்ற பெயரில், தக்க அதிகாரத்துடன், பொதுக்கடமை செய்வோர்மீது வரும் இலஞ்ச ஊழல் குற்றங்களை விசாரணை செய்வோரடங்கிய ஓர் அமைப்பு, சுவீடன் நாட்டில் கி.பி. 1809–இலும், பின்லாந்து நாட்டில் 1919–இலும் தென்மார்க்கு (Denmark) நாட்டில் 1953–இலும், நார்வே நாட்டில் 1963–இலும் இங்கிலாத்தில் 1967–இலும் ஏற்படுத்தப்பட்டது. அது போன்றதொரு நடவடிக்கை மேற்குச் செருமனி போலந்து, யூகோசுலேவியா, உருசியா, சப்பான், ஆசுத்திரேலியா நாடுகளிலும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் இந்தியாவிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று தக்க பரிந்துரைகளைச் செய்ய 1962–இல், மத்திய அரசினால் ‘சந்தானம் குழு’ அமர்த்தப்பட்டது. அக்குழு 1964–இல் கொடுத்த அறிக்கையில் கண்ட பரிந்துரைகளை ஏற்று, மத்திய, மாநில அரசுகள் கண்காணிப்புக் குழுக்களை அமர்த்தி அவற்றின் மூலம், இலஞ்ச ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளைச் செயற்படுத்துகின்றன. அரசுத் துறைகளும் அரசு அலுவலகங்களும் பிற நிருவாக அமைப்புகளும் நேர்மையாகவும் திறமையாகவும் இயங்குகின்றனவா என்பதையும் அக்கண்காணிப்புக் குழுக்கள் கவனித்து வருகின்றன. மேலும், அரசுகளின் கண்காணிப்புக் குழு கொடுக்கும் ஆண்டு அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை ஒட்டி, அலுவலக நடைமுறைகள் அவ்வப்போது சீராக்கப்பட்டும் வருகின்றன.
இருப்பினும், நம்-நாட்டில் இலஞ்ச ஊழல் ஒரு பெரிய சமுதாய, நிருவாகச் சிக்கலாகவே தொடர்ந்திருந்து வருகிறது. இலஞ்ச ஊழல் பற்றியும், அதை அகற்றுவது பற்றியும் எங்கும் அடிக்கடி பேசப்படுவதிலிருந்து, இலஞ்ச ஊழல் நாளுக்கு நாள் பெருகி வருவது புலனாகிறது. இலஞ்ச ஊழல் எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது; இலஞ்ச ஊழலை ஓர் உலக நிகழ்ச்சி என்று குறிப்பிட்டு, அதனால் அது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டதாகக் கருதப்படும் மனநிலை, எல்லாப் பிரிவினர்களிடத்தேயும் காணப்படுகிறது. ஒருவர் தமக்கு வேண்டியதைச் செய்துகொள்ள மற்றவருக்குப் பணம் அல்லது பொருள் கொடுக்கும் கடப்பாடு இல்லாதிருந்தும் அதனைக் கொடுத்தும் வேறு வகைகளிலும் மன நிறைவுபடுத்துவது இலஞ்ச ஊழல் எனச் சுருங்கச் சொல்லலாம். அதனால், இலஞ்ச ஊழல், தனி மனிதன் செய்யும் குற்றம் என்று மட்டும் கருதக் கூடாது. இக்காலத்தில், இலஞ்ச ஊழல் எல்லாத் துறைகளிலும், எல்லாப் பிரிவினர்களிடத்தும், எல்லா நிலையினரிடத்தும் பெருகியுள்ளது. சமுதாயமே இக்குற்றத்திற்கு உள்ளாகியுள்ளதால்தான், வாழ்க்கைத் துறைகள் அனைத்திலும் இலஞ்ச ஊழல் ஊடுருவி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. மிகுதியான விலைக்கு விற்கும் வணிகர், பொருள்களைப் பதுக்கும் வணிகர், கலப்படம் செய்யும் வணிகர், போலிப் பொருள்களை விற்கும் வணிகர், ஒழுங்கான வரவு செலவுக் கணக்கு வைத்துக்கொள்ளாத வணிகர், மிகுதியாகப் பணம் கேட்கும் மருத்துவர், நல்ல முறையில் வேலைசெய்து கொடுக்காத பொறியாளர், மிகுதியான பணம் கேட்கும் வழக்குரைஞர், கல்விப் பயிற்சியை நல்ல முறையில் கல்வி நிலையங்களில் அளிக்காமல் தனிப் பயிற்சி (Tuition) கொடுத்துக் கூடுதல் ஊதியம் பெறும் ஆசிரியர், உழைப்பிற்குத் தகுந்த ஊதியத்தில் மன நிறைவு பெறாத தொழிலாளி, நேர்மையற்ற பொது ஊழியர், அளவுக்கு மீறி வாடகை கேட்கும் வீட்டுக்குரிமையாளர், நிலம், வீடு முதலிய பொருள்களைப் பெருத்த விலைக்கு விற்பவர், கொள்ளைப் பணம் பெற்று நடிக்கும் நடிகர், நடிகை, மிகுதியான பணம் கேட்கும் இசைவாணர், மிகுதியான பணம் கேட்கும் மற்றைய கலைஞர்கள், நேர்மையற்ற பணிகளில் ஈடுபடும் அரசியலாளர், பொதுவாழ்வுப் பணியில் ஈடுபட்டுப் பின்னர், ஆதாயம் கருதிக் கட்சி மாறும் அரசியலாளர்கள், பொது நலனைக் கருதாது செய்பவர், பொருளாசையோடு எந்த வேலையையும் செய்பவர், எதிலும் மிகுதிப் பலனடைய விரும்புபவர், கடமை உணர்வற்றவர் ஆகிய எல்லோருமே இலஞ்ச ஊழல் புரிபவர்கள். மேலே கூறியவற்றில் பல இப்பொழுதுள்ள சட்டங்களின்படி இலஞ்ச ஊழல் குற்றமாகாமலிருக்கலாம். ஆனாலும் அவை எல்லாம் நேர்மையற்ற, முறைகேடான பழிச் செயல்கள் என்ற உண்மை யாவராலும் உணரப்பட்டால், இலஞ்ச ஊழலைக் களைவதற்கு வேண்டிய நடவடிக்கை பற்றித் தெளிவு ஏற்படும். இலஞ்ச ஊழலினால், கருப்புப் பணம் உண்டாகிறது; கருப்புப் பணத்தினால் இலஞ்ச ஊழல் ஊக்குவிக்கப்படுகிறது. இவ்விரண்டு தீங்குகளினால், விலைவாசி உயர்வும் பணவீக்கக் கேடுகளும் ஏற்படுகின்றன. இன்றைய சமூகத்தில் எந்தப் பிரிவிலாவது அல்லது சாதாரண நிலையில் உள்ள எந்த மனிதருக்காவது பணப் பற்றாக்குறை ஏற்படுகிறது என்றால், அதற்குச் சமுதாயத்தில் விளக்கப்பட்டுள்ள ஒழுக்கக் கேடான நிலை சிறப்பான காரணமாகும்.
பொது ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில் ஆட்சி நிருவாகத்தில் பங்கு கொண்டுள்ளனர். அதனால், அவர்களின் ஒழுக்கக் குறைவான நடத்தை மக்களை நேரடியாகவும் கடுமையாகவும் பாதிக்கிறது. ஊதியக் குறைவினால்தான் பொது ஊழியர், இலஞ்சம் வாங்குகிறார் என்ற விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று. பெருத்த ஊதியம் பெறுபவர்களும், வசதி படைத்தவர்களும் இலஞ்சம் வாங்குகிறார்கள். ஒருவருடைய தோராய வருவாய்க்கு (Per capita income) மிகுதியாகவே பொது ஊழியர்கள் ஊதியம் பெறுகிறார்கள். வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களோடு ஒப்பிடும்போது, பொது ஊழியர்களின் பொருளாதார நிலை எவ்வளவோ மேலாக இருக்கிறது. அங்ஙனமிருந்தும், சமூகத்தில் ஒழுக்கமும் நேர்மையும் குறைந்து கொண்டு வருவதால், பொது ஊழியர்களின் கடமை உணர்ச்சியும் நேர்மையும் குறைந்துவிட்டன என்றறியலாம். அத்தாழ்வினால் அவர்கள் இலஞ்ச ஊழல் செயல்களில் தயக்கமின்றித் தன்மானமின்றி ஈடுபடுகிறார்கள். மேற்பார்வைப் பொறுப்பிலுள்ளவர்களிடத்தும் இக்குறைகளிருக்கின்றன. முன்போல உயர் அதிகாரிகள், விரிவாகச் சுற்றுப் பணயம் செய்து தணிக்கை செய்வதில்லை; பொதுமக்களோடு போதிய தொடர்பும் கொள்வதில்லை. அந்தந்த நிலையில் உள்ளவர்கள், தங்கள் கடமைகளை நேர்மையாகவும் திறமையாகவும் சட்ட விதிகளுக்கேற்பக் குறித்த காலத்தில் நிறைவேற்றித் தங்கள் கீழ் உள்ளவர்களும் அவ்வாறு வேலை செய்கிறார்களா என்று கூர்ந்து கவனித்துத் தவறிழைப்பவர்கள் மீது அச்சமின்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால், நிருவாகம் சீராக நடைபெறும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டுடன் இருந்து தம் கீழ் உள்ளவர்களும் கட்டுப்பாட்டுடன் அக்கறையுடன் பணி செய்யுமாறு செய்ய வேண்டும். பொது ஊழியர் சட்ட விதிகளைத் தவிர வேறு எதற்கும் அஞ்சக் கூடாது. அத்தகைய மனவலிமையும் ஏனைய நற்குணங்களையும் நல்லொழுக்கத்தையும் நன்னடத்தையையும் நியாய உணர்வையும் ஒவ்வொரு பொது ஊழியரும் பெற்றால்தான், நிருவாகம் தூய்மையாக இருக்கும்.
இதேபோல் அரசியலாளர்களும் பொதுவாழ்வில் பொறுப்புள்ள பதவி வகிப்பவர்களும் அரசியல் கட்சிகளும், ஒழுக்க நெறியோடு பணிசெய்து அவர்களின் கீழ் உள்ள நிருவாக இயந்திரம் நடு நிலையிலிருந்து, சட்டவிதிகளின்படி நேர்மையாக, விரைவாகத் திறமையாக இயங்குமாறு செய்யவேண்டும். இவர்களுக்கும் சட்டவிதிகள்தாம் வழிகாட்டியாக இருக்கவேண்டும். ஆட்சிப் பொறுப்பில் உள்ள அரசியலாளர்கள்மீது வரும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஆய்வு செய்யத் தனி அமைப்புத் தேவை. அந்த ஆய்வின் பேரில் இலஞ்ச ஊழல் செய்தவர்கள்மீது தக்க நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென்று மத்திய மாநில அரசுகள் உணர்ந்துள்ளன. மத்திய அரசைப் பொறுத்த வரையில், ‘உலோக் பால்’ (Lok pal) என்ற பெயருடன் உள்ள பதவியாளரை அமர்த்த வகைசெய்யும் சட்டமுன் வடிவு, அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்றச் சிறப்புக்குழுவின் (Select Committee) ஆய்விற்கு விடப்பட்டுள்ளது. மாநில அரசு ‘உலோக் அயுக்தா’ (Lok Ayukta) என்ற பெயருடன் ஒரு பதவியாளரை அமர்த்தலாமா என்பது பற்றிச் சிந்தித்து வருகிறது.
முன்பே உள்ள சட்டங்கள், விதிகள் ஆகியவற்றின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளும், இனிமேல் வரக் கூடிய சட்டங்களின் கீழ் ஆட்சிப் பொறுப்பில் உள்ள அரசியலாளர்கள், பொதுவாழ்வில் ஈடுபட்டுப் பொறுப்புகளை ஏற்பவர்கள் ஆகியோர்மீது எடுக்கக் கூடிய நடவடிக்கையும் இலஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்தலாம். இந்த நடவடிக்கைகளோடு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள சமூகத்திலிருக்கும் அனைத்துப் பிரிவினர்களும் நன்னெறி உணர்வினையும், வினைத் திட்பத்தையும் பெற ஆவன செய்யப்படவேண்டும். தீ நெறி வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். இந்த உணர்வுகளை மக்கள் சமுதாயம் கொள்ள வேண்டும். மக்களுக்குப் பணி செய்பவர்கள், மக்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் பெறவேண்டும். மக்கள் சமுதாயத்தின் கருத்து மிகவும் ஆற்றல் வாய்ந்தது. விழிப்புடன் இருக்கும் மக்களின் பொதுக் கருத்தினை யாரும் ஒதுக்கித்தள்ள முடியாது. அத்தகைய மக்கள் கருத்து எதிலும் உறுதியாகத் தோன்றவேண்டும்.
ஒருவர் மற்றொருவரைக் குறைகூறும் குணம் சமூகத்தில் மிகுதி, இதை விட்டு, ஒவ்வொருவரும் அவரவர் துறையில், பணியில், ஒழுக்கத்தையும் நேர்மையையும் கடைப்பிடித்து, நியாயமான கொள்கைகளின் அடிப்படையில் கடமைகளை விரைவாக நிறைவேற்றினால் இலஞ்ச ஊழலுக்கு இடமிருக்காது. யு.சு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 317)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zyyq66aw/
தமிழ்“இலஞ்ச ஊழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zyyq66aw/APA
Oliyon Research. (2026). இலஞ்ச ஊழல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zyyq66aw/MLA
"இலஞ்ச ஊழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zyyq66aw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment