இராசசுதான் மாநிலத்தில் ‘பானசுவாரா’ நகரத்திற்கு மேற்கே 39 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர். இவ்வூரின் பழைய பெயர் ‘உத்தூண்கா’ என்பதாகும். தம்பரசிம்மன் என்ற அரசன் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இந்நகரைத் தனது தலைநகரமாக்கிக் கொண்டு ஆட்சி செய்தான். கி.பி. 11,12-ஆம் நூற்றாண்டுகளில் இவ்வூர், தாரா நகரில் அரசாண்ட பரமார அரசர்களின் கீழ் ஆட்சி செய்தவர்களின் தலைநகரமாக விளங்கியது. இங்குப் பன்னிரண்டு இந்துக் கோயில்களும் பல சமணக் கோயில்களும் உள்ளன. இவ்வூரில் ‘மண்டலேசா’ என்ற சிவன் கோயில் உள்ளது. இங்குச் சிவனடியார்கள் வாழ்ந்த மடங்களும் உள்ளன. அனுமன் கோயில், வராகர் கோயில், விட்டுணுக் கோயில் போன்றவை மிகத் தொன்மையான கோயில்களாகும்.