அகிம்சை என்பது கொல்லாமை, தீங்குசெய்யாமை என்று பொருள்படுவதுடன் தீமையான செயல்களைப் பற்றி மனத்தாலும் நினையாமை என்றும் பொருள்படும். காந்தியடிகள் கடைப்பிடித்த அகிம்சைக் கொள்கைக்கும் இதுவே விளக்கமாகும். இதிலிருந்து அகிம்சை என்னும் அறப்பண்பு எவ்வளவு ஆழமானதென்பது அறியப்படும். காந்தியடிகள் மேல் வாரியான நோக்கில் அறத்தின் இலக்கணத்தைக் கூறவில்லை. அவற்றைச் செயற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் தமது அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்திய பின்னரே பிறருக்கு அறிவுரை செய்தார். அதனால்தான், தமது சுயசரிதைக்கு உண்மையின் ஆராய்ச்சி (சத்திய சோதனை–My Experiments with Truth) என்ற தலைப்பினையும் அமைத்தார். காந்தி அடிகளின் அகிம்சைத் தத்துவத்திற்கு இன்னும் விளக்கம் தருவது, எல்லாச் சமயங்களின் அடிப்படையும் அகிம்சைதான் என்பது. இது அடிகளின் அசையாத நம்பிக்கை. இதுதான் உண்மையுமாகும். இந்நிலையில், வாய்மையும் அகிம்சையும் நெருங்கிய தொடர்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று விரும்பினார். அன்றாட வாழ்க்கையில் அகிம்சை நேரடியாகவே தொடர்பு கொண்டுள்ளது; வாய்மை அத்தொடர்புக்கு உறுதியளிக்கிறது. ஆகவே, வாய்மையில்லாத அகிம்சை பொருளற்ற செயலாகிவிடும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அகிம்சையின் ஆழமான பகுதியை மேலும் விளக்க முற்பட்டு அதனை மூன்று பிரிவுகளாக எடுத்துக் காட்டினார். தெளிந்த சிந்தனையும் ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டவர்கள் பின்பற்றும் அகிம்சை (Non-Violence of the Enlightened) முதன்மையானதாகும். அறிவு வளர்ச்சியும் ஆழ்ந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள் பின்பற்றும் அகிம்சை (Passive Non–Violence) இரண்டாம் நிலையினதாகும். கோழைகள் பிடிவாதமாகப் பின்பற்றும் அகிம்சை (Non–Violence of the coward) மூன்றாம் நிலையினதாகும். இவற்றுள் முதலில் குறிப்பிடப்பட்ட அகிம்சையே காந்தி அடிகள் சிறப்பானதென்று வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு வாய்மை, அகிம்சை என்னும் அறக் கருத்துகளின் ஆழமான விளக்கங்களைக் கூறியதுடன் காந்தியடிகள் அமையவில்லை; அக்கருத்துகள் எந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் பயன்படும், பயன்படுத்தவேண்டும் என்பதையும் வரையறைப்படுத்திக் காட்டியுள்ளார். காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவம் சிந்தனை, சொல் என்ற அளவில் நின்றுவிடாமல் செயல் வடிவம் பெற்றுச் சிறப்பெய்துவதாகும். பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் துன்பமும் தொல்லையும் மனிதனை எதிர்கொள்ளத்தான் செய்கின்றன. அவற்றை அகிம்சையின் அடிப்படையில் அமைதியோடும் உறுதியோடும் வாய்மையின் அடிப்படையில் உள்ளத்தூய்மையோடும் துணிவோடும் அணுகும் செயல் முறையையே அவர் சத்தியாக்கிரகம் என்று கூறினார். காந்தி அடிகள் வழங்கிய சத்தியாக்கிரகக் கோட்பாடு இன்றைய அரசியல் உலகில் ஒரு சிறந்த தத்துவமாகவே திகழ்கிறது. தீமைகளைத் தீமையாலும் வன்முறைகளாலும் தீர்த்துவிட முடியாது; உண்மையான அன்பினாலும் தன்னலமற்ற தியாகத்தினாலும்தான் அவற்றை அகற்றவியலும், இக்கருத்தினையே திருவள்ளுவரும் வலியுறுத்திக் கூறியுள்ளார். ‘அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுபவர் உண்மையை அறியாதவரே; ஆராய்ந்து பார்க்குங்கால் பகையை ஒழிப்பதற்கும் துணையாக நின்று செயற்படுவது அன்பே’. காந்தி அடிகளின் சத்தியாக்கிரகம் என்னும் கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்கள் முதற்கண் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து தீய எண்ணங்களையும் தன்னல உணர்வுகளையும் களைந்தெறிய வேண்டும்; உள்ளம் தூய்மை அடையும்போதுதான் அங்கே வாய்மை வலிமைபெறும்; உண்மை ஒளிவீசும்; அப்போதுதான் எதிரியின் உள்ளத்தையும் உருக்க முடியும். இந்நிலையில்தான் வாய்மையே வெல்லும் (Satyameva Jayate) என்ற அடிப்படைத் தத்துவம் மலருகிறது. இவ்விளக்கங்களிலிருந்து சத்யாக்கிரகம் என்னும் அறப்போர் எல்லோராலும் எளிதாகக் கையாளக் கூடியது அன்று என்ற உண்மையும் நன்கு விளங்குவதாகும். எனினும் இம்முறையைக் கடமை உணர்வுடனும் கட்டுப்பாட்டுடனும் கண்ணியமாகக் கையாண்டால் மனிதனுக்கு மனிதன் வேறுபாடுகளை உண்டாக்கிப் பகைமையை வளர்க்கும் மனப்பான்மை அழியும்; ஒழியும். சுருங்கக் கூறின், காந்தி அடிகளின் சத்தியாக்கிரகக் கோட்பாடு அறத்திறன் அடிப்படையில் அமைந்து அகிம்சையில் உருப்பெற்று வாய்மையில் செயற்படுவதாகும். அதில் வன்முறைக்கு இடமில்லை. மனிதனின் தன்னடக்கத்தாலும் உள்ளுணர்வாலும் தன்னலமற்ற தியாக உணர்வாலும் ஊக்குவிக்கப் பெற்று, வாய்மையே வெல்லும் என்னும் புனிதமான உணர்வின் அடிப்படையில் சத்யாக்கிரகம் இயங்க வேண்டும்; இயக்கவும் வேண்டும் என்பதுதான் காந்தியடிகளின் கொள்கையாகும். உண்ணாமை (Fasting), ஒத்துழையாமை (Non-Co-operation), அரசு பணி மறுப்பு (Civil-disobedience) போன்ற நடவடிக்கைகள் சத்தியாக்கிரகத்தின் செயல் வடிவங்களாகக் கருதப்பட்டன. இருந்தபோதிலும், அச்செயல் வடிவங்களனைத்திற்கும் அடிப்படையாகிய அறத்தை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. ஏனென்றால் அறத்தை அடிப்படையாகக் கொள்ளாத எந்தச் செயலையும், காந்தியடிகள் மனிதச் செயலாகக் கருதவில்லை. அதனால்தான், அரசியலைப் புனிதப்படுத்தியவர் காந்தியடிகள் என்றும் அவர் புகழப்பட்டார். அறக்கருத்துகளேயாயினும், அவை அரசியல் அரங்கில் செயற்படும் நிலையில் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதனையும் காந்தியடிகள் அறிவுறுத்தியுள்ளார்கள். வழியும் முடிவும் என்பதே அக்கோட்பாடாகும் (Means and End). வாய்மையும் அகிம்சையும் என்னவென்பதைத் தெளிவாகத் தெரிந்து உணர்ந்து அவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர்களே, வழியும் முடிவும் என்ற கோட்பாட்டினையும் பின்பற்ற முடியும். பொதுவாக, ஒவ்வொருவரும் – ஆடவரும் பெண்டிரும், இளைஞரும் — முதியோரும் — ஏதாவதொன்றினை அடைவதற்கே முயன்றுகொண்டு இருக்கிறார்கள், பொருளைச் சேர்ப்பதிலோ பொன்னைப் பெறுவதிலோ புகழை ஈட்டுவதிலோ பதவிகளைப் பெறுவதிலோ வரம்பற்ற அதிகாரத்தைப் பெறுவதிலோ மனிதமனம் சிக்கி உழல்கிறது. இந்நிலையில், தாம் அடைய விரும்பும் எதனையும் சிறந்ததாகக் கருதி, எப்படியேனும் அதை அடைந்துவிட வேண்டும் என்று முயன்றால், அது தவறாகும். ஒரு பொருளை அடைய முற்படுவது எவ்வளவு சிறந்ததோ அவ்வளவு சிறந்தது அதனை அடைவதற்காகப் பின்பற்றும்வழி முறைகளும். சுருங்கக் கூறின், தவறான முறைகளைக் கொண்டு நல்லதொரு முடிபை அடைதல் கூடாது; வழிமுறையும் தூயதாக இருத்தல் வேண்டும். முடிவாகக் கூறுமிடத்து, இன்றைய அரசியல் உலகில் இந்தியாவில் மட்டுமன்றி அனைத்துலக அரங்கிலும் காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவம் மனித சமுதாயத்தின் அனைத்துச் சிக்கல்களையும் நல்ல முறையில் தீர்த்து உறவு மனப்பான்மையுடன் அனைத்து மக்களும் நாடுகளும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு உற்ற துணையாக உள்ளது என்பதை மேல்நாட்டு அரசியல் அறிஞர்களே ஏற்றுப் போற்றியுள்ளனர்.மு.மு.