இது நீர் சேர்ந்த மக்னீசியம் சிலிக்கேட் களிக் கனிமமாகும். ஒரு வகைக் குட்டி மீன் முள்ளைப் போல் இக்கனிமம் தோற்றமளிப்பதால், இப்பெயர் இதற்கு ஏற்பட்டது. இதை, கடல் நுரை என்றும் கூறுவர். செப்பியோலைட்டின் (sepiolite) வேதி இயைபு 2H₂O.2MgO.3SiO₂, Mg₈(H₂O)₄ (OH)₄Si12O30. இதன் இயைபு கனிமத்தில் நீர் சேரச் சேர மாறு படும். எனினும், இதன் வேதியலமைப்பு திட்டமானது; தூய கனிமத்தின் அடர்த்தி 2.26. இக்கனிமம் மண் தன்மையது; வழவழப்பானது; நார்ப் பொருளாகவும், படிகத் தன்மையற்ற பொருளாகவும் காணப்படுகிறது. நார்ப் பொருளுக்கு ஆல்ஃபா செப்பியோலைட் என்றும், படிகத் தன்மையற்ற பொருளுக்குப் பீட்டா செப்பியோலைட் என்றும் பெயர். இது சாம்பல் கலந்த வெண்மை, மங்கிய மஞ்சள், நீலங் கலந்த பசுமை, இளஞ் சிவப்பு நிறங்களில் காணப்படும். இரட்டை ஒளி அச்சுகளைக் கொண்டது. (-)2v மிகச் சிறியது. ஒளி விலகல் எண் 1.52–1.53. பல திசைப் புலன்களை யுடைய நார்க் கனிமங்களால் பின்னப்பட்ட கூட்டுக் கனிமமாக அமைந்த பின், இது திண்ணிய பொருளாக மாறுகிறது. இரு விதமான நார்க் கனிமங்கள் காணப்படுகின்றன. இவை திண்ணிய பின்னல்களைக் கொண்ட இழையமைப்பை உருவாக்குகின்றன. இவ்வமைப்புகளில், படிவடுக்குகளிடையே ஏடு போன்ற அமைப்பில், வளர்ந்திருக்கும் கல் நார் போன்ற நார்க் கனிமங்களைக் கொண்ட செப்பியோலைட் ஆம்பிபோல் குழுவிலுள்ள கனிமங்களைப் போன்ற படிக அமைப்பைக் கொண்டிருக்கும். இரட்டை அலகுகளைக் கொண்டு, ஆம்பிபோல் சங்கிலித் தொடரமைப்புக் கொண்ட கனிமத்தைப் பாலிகோர்ஸ்கைட், ஆட்டபுல்கைட் என்பர். படிகக் கட்டமைவில் மூன்று அலகுகளைக் கொண்ட கனிமத்தைச் செப்பியோலைட் என்பர். இல்வினைட் என்னும் கனிம நார், செப்பியோலைட்டின் இரண்டு மக்னீசியம் அயனிக்குப் பதிலாக, நான்கு சோடியம் அயனிகளைக் கொண்டிருக்கும். அதனால், இக்கனிமம் மக்னீசியம் குளோரைடில் நனைந்திருக்கும் போது, கல் நார் போன்ற நார்களையுடைய செப்பியோலைட் கனிமமாக மாறுகிறது. மிகவும் நுண் துளைத் தன்மைபெற்றமையால், காய்ந்த கனிமங்கள் நீரில் மிதக்கும் இயல்பின. இக்கனிமத்தாலாகிய கற்களை எளிதாகக் குடையலாம். மெழுகுடன் சேர்த்துக் கல்லில் மிகுந்த பள பளப்பை ஏற்படுத்தலாம். இக்கனிமத்தைச் சூடு படுத்த நீரிழந்து, உறுதியடைகிறது. கிழக்கு மையக் கடல் நிலப் பகுதிகளில் அணிகலன்களாகவும் புகைக் குழாய்களாகவும் பயன் படுகிறது. செப்பியோலைட் குழுக் கனிமப் படிவங்களை, எண்ணெய்க் கிணறுகளில் உள்ள துரப்பண நீர்மங்களை உறிஞ்சி வெளியேற்றப் பயன் படுத்துகின்றனர். துரப்பணங்கள் உப்படக்கம் மிக்க நீரிடையே ஊடுருவிச் செல்கையில், செப்பியோலைட் கனிமங்கள் துரப்பண நீர்மங்களை வெளியேற்றப் பெருமளவில் பயன் படுகின்றன. எண்ணெய்களின் நிறங்களை வெளுக்கவும், இவை பயன்படுகின்றன. உறிஞ்சு பொருளாக அமையும். பூச்சி கொல்லி மருந்துகளை எடுத்துச் செல்லவும், பூச்சி கொல்லி மருந்தின் நிரப்பிகளாகவும் பயன் படுகிறது. செப்பியோலைட் இரண்டாம் நிலைக் கனிமமாகச் செர்பன்டின், மாக்னசைட், ஒப்பல் ஆகிய கனிமங்களுடன் படிகமாக வளரும். பாலிகோர்ஸ்கைட் ஆட்டபுல்கனட்டுப் படிகங்கள், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஃபுளோரிடா, ஜியார்ஜியா பகுதிகளில் தோண்டி எடுக்கப் படுகின்றன. சோவியத் ஒன்றியக் குடியரசில் உக்ரைனிலும், காகசஸ் மலைப் பகுதிகளிலும் வெட்டியெடுக்கப் படுகிறது. செப்பியோலைட் ஸ்பெயின், வட ஆஃபிரிக்கா, அரேபியா ஆகிய நாடுகளில் தோண்டி எடுக்கப்படுகிறது. —இரா. இராமசாமி நூலோதி. W.A.Deer, et. al., An Introduction to Rock Forming Minerals, ELBS, London, 1966.