அகோரமூர்த்தி
akōramūrtti
அகோரமூர்த்தி என்பது அச்சத்தினை விளைவிக்கும் சிவபெருமானது திருவுருவங்களுள் ஒன்றாகும்.
அகோரமூர்த்தி என்பது அச்சத்தினை விளைவிக்கும் சிவபெருமானது திருவுருவங்களுள் ஒன்றாகும். அகோரமூர்த்தியின் திருவுருவக் குறிப்புகள் காரணாகமம், சிவதத்வரத்னாகரம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. இத்திருவுருவம் எட்டு, பத்து, முப்பத்திரண்டு கைகளுடையதாக அமைக்கப்படுவதுண்டு. எட்டுக் கைகளுடைய திருவுருவத்தில் சூலம், உடுக்கை, பாசம், கபாலம், தண்டம், வில், அம்பு, குறுவாள் ஆகியவை இடம் பெறும். கருத்த நிறம் உடைய இவரது உடல் ஆடையின்றியோ யானை, சிங்கம் ஆகியவற்றின் தோல்களிலான ஆடையணிந்தோ காணப்படும். உடலில் பாம்புகள் தேள்கள் ஆகியவை அணிகலன்களாகத் திகழும். மிகுந்த அச்சத்தினையூட்டும் முகத்தோற்றமும், வாயின் இருபுறமும் வளைந்த கோரைப் பற்களும், பாம்பினால் கட்டப்பட்ட தலைமுடியும், கழுத்தில் மட்டும் நீல நிறமும் இத்திருவுருவத்தின் சிறப்புகளாம்.
மற்றொரு திருவுருவ அமைப்பில் எட்டுக் கைகளும், மூன்று கண்களும், அச்சம் தரும் முகத்தோற்றமும், கறுத்த நிறமும், வளைந்த கோரைப் பற்களும் காணப்படும். இவரது கழுத்தில் தலை மாலையும், குறுவாள் (Kadagamala) மாலையும் தேள்களாலான மாலையும் இடம் பெறுவதுண்டு. தலைமுடி தீச்சுடர் போலிருக்கும். செந்நிற ஆடையும் சிவந்த மலர் மாலையும் இவருக்கு அணிவது வழக்கம். இவர் கைகள் வேதாளம், குறுவாள், உடுக்கை, கபாலம், மணி முதலியவைகளைக் கொண்டும், மற்றிரு கைகள், சூலத்தை மார்புக்கு எதிராகச் சற்று மேல் நோக்கிப் பிடித்தவாறும் காணப்படும்.
பத்துக் கைகளையுடைய அகோரமூர்த்தி ‘தசபுய’ அகோரமூர்த்தி எனச் சொல்லப் பெறுவார். இவர் எட்டுக் கைகளில் பரசு, உடுக்கை, குறுவாள், கேடயம், அம்பு, வில், சூலம், கபாலம் ஆகியவை கொண்டிருப்பார். எஞ்சியுள்ள இரண்டு கைகள் அபயம், வரதம் ஆகிய முத்திரைகளைக் கொண்டு விளங்கும். முப்பத்திரண்டு கைகளையுடைய அகோரமூர்த்தி அச்சத்தின் வடிவாய்த் தலையில் சடாமகுடம், பிறைச் சந்திரன் ஆகியவற்றையும் முக்கண்களையும் கொண்டவராகக் காட்சியளிப்பார்.
தமிழகத்தில் காணப்படும் அகோரமூர்த்திச் சிற்பங்களுள் திருக்கழுக்குன்றம், பட்டீசுவரம் போன்ற இடங்களிலுள்ளவை அழகும் சிறப்பும் வாய்ந்தவையாகும்.ஏ.ஏ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 139)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zwshy7qr/
தமிழ்“அகோரமூர்த்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zwshy7qr/APA
Oliyon Research. (2026). அகோரமூர்த்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zwshy7qr/MLA
"அகோரமூர்த்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zwshy7qr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment