சூல் காலத்தின் போது, எந்த நேரத்திலும் குழந்தை சூல் பையினுள்ளேயே இறக்கலாம். இது 28 வாரங்களுக்கு முன்பு நடந்தால், கருச் சிதைவு எனலாம்; 28 வாரங்களுக்குப் பிறகானால், இறந்து பிறந்ததாகவே கொள்ள வேண்டும். காரணங்கள். பிறவி ஊனங்கள், Rh முரண்பாடு, கருக் குடைக் கோளாறு, குருதி மிகு அழுத்தம், கொப்பூழ்க் கொடிச் சேதம், குழந்தைக்கு ஆக்சிஜன் பற்றாக் குறை, கருப் பை மிகைச் சுருக்கங்கள், நீடித்த மகப் பேற்று வேதனை, தாயின் நீரிழிவு, சிறுநீரக நோய், மேக நோய், நுண்ணுயிர்ப் பாதிப்புகள் முதலியன காரணங்களாகலாம். அறிகுறிகள். கருப்பையுள் குழந்தையின் அசைவுகள் இல்லாமை, குழந்தையின் இதய ஒலி கேளாமை, கருப்பை வளர்ச்சியடையாமை, மார்பக வளர்ச்சி குறைந்து கபில நிற நீர்மம் வெளிப்படுதல், எக்ஸ் கதிர்ப் படங்கள் எடுத்தால், கபால எலும்புகளின் சிதைவு, இதயத்திலும், குருதி நாளங்களிலும் வளிமத் தேக்கம், பந்து போல் குழந்தை சுருண்டு கிடப்பது ஆகிய அறிகுறிகளைக் கொண்டு, குழந்தையின் இறப்பை உறுதி செய்யலாம். இதற்கு எக்ஸ் கதிர் ஆய்வும் பயன்படும். இறந்த குழந்தை நீண்ட நாள் கருப் பையில் இருந்தால், இறந்த குழந்தையிலிருந்து திராம்போ பிளாஸ்டின் வெளிப்பட்டுக் குருதி உறைவை ஊக்குவிக்கும். குருதி நாள உள் உறைவுக்கு, ஹெப்பாரின் சிறந்த மருந்தாகும். பேறு தொடங்கிய பின்னர், நுண்ணுயிர்த் தாக்கம் ஏற்படக் கூடும். சிண்டோசினான் அல்லது புரோஸ்டாகிளாண்டின் E₂ சிரை வழியாகக் கொடுத்துக் குருதிப்பெருக்கத்தைத் தவிர்க்கலாம். —சாரதா கதிரேசன் நூலோதி. P.R. Myers Cough, Munro Kerr's Operative Obstetrics, Tenth Edition, Bailliere Tindall, London, 1982.