பொதுவாக, மாரடைப்பின் அறிகுறியாக நெறிப்பு (angina) உள்ளது. இதயம் தொடர்பில்லாக் காரணங்களாலும், வலி உண்டாகலாம். வலி எங்கிருந்து உண்டாகிறது என்பதை அறிவது சில போது, கடமையாகும். இதயம் தொடர்பான நெறிப்புப் போன்ற வலி, இதயத் தசைக்கு வேண்டிய ஆக்சிஜன் பயன்பாட்டிற்கும், தேவைக்கும், இடைவெளி இருந்தால் உண்டாகிறது. இவ்வலி நெறிப்பு, இறுக்கம், எரிச்சல், நெஞ்சுச் சுமை, அமுக்கி நெறிப்பது போன்ற பல வகையாக இருக்கும். உடல் உழைப்புக்குப் பின்னான வலி, உணவு, உணர்ச்சி வயப் படுதல், குளிர் தட்ப வெட்ப நிலை ஆகியவற்றில் வலி உண்டாகலாம். புகை பிடித்தலின் போது, நுரையீரலின் உட்செல்லும் கார்பன் மோனாக்சைடும், ஹீமோகுளோபினும் சேர்ந்து, திசுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவைக் குறைக்கிறது. புகை பிடித்தலுடன், உள்ளிழுக்கப் படும் நிக்கோடினும், இதயத் துடிப்பு விகிதத்தை அதிகரிக்கிறது. சுருக்கழுத்தமும், விரிவு அழுத்தமும் கூடுதலாகும். கேட்டகால் அமீன்கள் வெளிப் படுவதால், இதய உந்து திறன் குறைகிறது. வலி மார்பிலோ, மார்பு நடு எலும்பின் பின்னேயோ, விலா எலும்புச் சந்திப்புக்குக் கீழேயோ, தோன்றிக் கழுத்துக்கோ, தோள் பட்டைக்கோ சில போது, பின் தலை அல்லது கீழ்த் தாடைக்கோ போகலாம். இவ்வலி ஒரு நிமிடத்திற்குக் குறைவாகவே இருக்கிறது. ஓய்வு எடுத்தாலோ, நைட்ரோ கிளிசரின் மருந்து அருந்தினாலோ, வலி நின்று விடுகிறது. நெறிப்பு அல்லது வலி என்பது ஓர்அறிகுறி மட்டுமேயன்றி,நோயன்று என்பது கருதத் தக்கது. காரணங்கள் இதயக் காரணங்கள். இதயப் பெருந்தமனித் தடிப்பு (coronary atherosclerosis), இதயத் தமனி நாள இறுக்கம், நுரையீரல் குருதி மிகு அழுத்தம், இதயக் குருதி மிகு அழுத்தம், பெருந்தமனித் தடுக்கிதழ்ச் சுருக்கம், பெருந்தமனிச் செயலிழப்பு, கடும் சோகை, ஆக்சிஜன் பற்றாக்குறை, இதய உறை அழற்சி, ஈரிதழ்ப் பிறழ்சி (mitral prolapse). நுரையீரல் காரணங்கள். நுரையீரல் தமனி அடைப்பு, நுரையீரல் உறைக் காற்று, நுரையீரல் அழற்சி. இரைப்பை–சிறுகுடல் காரணங்கள். உணவுக் குழல் இறுக்கம், உணவுக் குழலில் எதிர்க்களிப்பு, உணவுக் குழல் கிழிந்து விடல். உளவய காரணங்கள். மனத் தளர்வு, சிடுசிடுப்பு, நடிப்பது. நரம்பு–தசை–எலும்புக் காரணங்கள். மார்பு வெளி வாயில் நோயியம், கழுத்து, மார்பு முள்ளெலும்பு நசிவு நோய், விலா எலும்பு மற்றும் குருத்தெலும்பு அழற்சி. —மு.கி. ராஜாசுப்பிரமணியம் துணை நூல். W. Dressler, Clinical Acids in cardiac Diagnosis, Grune & Stratton, New york, 1970.