முதுகு நாண் உயிரிகளில், வால் நாணுடைய வகையைச் சார்ந்த இது பாலிலி உருவம், பால் உருவம் ஆகிய இரண்டு உருவங்களைக் கொண்டு காணப்படுகிறது. வாழ்க்கை வரலாற்றில் இரண்டு உருவங்களும் மாறி, மாறி வருவதால், இது தலைமுறை மாற்றத்தைப் பெற்றுள்ளது. முட்டையிலிருந்து பாலிலி சினைச் சுற்றுயிரியாக (oozoid) வளர்ச்சி அடைந்து இனச்செல் சுரப்பியற்று நீண்ட கொடியைப் (stolon) பெற்றுக் காணப்படும். பீப்பாய் வடிவத்திலும், ஒளி ஊடுருவும் தன்மையிலும் உள்ள இது சமச்சீருடன், ஆழமற்ற கடற்பகுதியில் காணப்படும். செவுளும், ஏட்ரியத் துளையும் எதிரெதிர் முனைகளில் காணப்படுகின்றன. ஏழு தசைப் பட்டைகள் அடிப்புறத்தில் முற்றுப் பெறாமல் உடலைச் சுற்றிக் காணப்படுகின்றன. இவை சுருங்குவதால், ஏட்ரியத்துளை வழியாக நீர் பீறிட்டு அடிக்கப்பட்டு, உயிரி முன்னோக்கித் தள்ளப்படுகிறது. பின் முனையில் இரைப்பை, குடல், குழல் சுரப்பி (pyloric gland) ஆகிய மூன்றும் ஒரே தொகுப்பாக உள்ளமையால், இது உட்கரு எனப்படுகிறது. முதல் இணைச் செவுள் பிளவுகள் ஒரு பெரிய தனியான குற்றிழைச் செவுளாகச் செவுள் மேல் சட்டகமாக (hyper branchial bar) மாறியுள்ளன. பாலிலி உருவில் காணப்படும் கொடி நீண்டு, அரும்புகளைக் கொண்ட சங்கிலியாகப் பிரிகிறது. இவ்வரும்புகள் வளர்ந்து, இனப்பெருக்கச் சிற்றுயிரியாக (blastozooid) மாறுகின்றன. இனப் பெருக்க உயிரி இனச் செல் சுரப்பியைக் கொண்டும், கொடியற்றும் காணப்படுகிறது. இது பாலிலி உருவை ஒத்துக் காணப்பட்டாலும், உடல் சமச்சீரற்று, ஒரு சில தசைப் பட்டைகள் மட்டுமே காணப்படும். இதன் உடலுள் தொண்டைச் சுவரின் மேல் கரு வளர்கிறது. வளர்கரு கொப்பூழ்க் கொடி (placenta) மூலம் தேவையான உணவைப் பெறுகிறது. வளர்ச்சியுற்ற கரு தனிப் பாலிலி சினைச் சிற்றுயிரியாகத் தாய் உயிரியிடமிருந்து வெளியேறி முதிர்ச்சி பெறுகிறது. உலகெங்கும் இவ்வுயிரி பரவலாகக் காணப்படுகிறது. —மு. சங்கரன் நூலோதி. E. L. Jordan and P.S. Verma, Chordate Zoology and Animal Physiology, S. Chand and Co. Ltd., New Delhi, 1983.