பெரிய புராணத்தில் சிறப்பிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். பெரிய புராணத்தில் இவரது வரலாறு கூறும் பகுதி 27 பாடல்கள் கொண்டமைந்துள்ளது. இவர் வரலாறு, ‘அன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அமுது படைக்கும்’ திருத்தொண்டின் பெருமையை உணர்த்துகிறது. இவ்வடியவர் வாய்மை தவறாத குலத்தில் அக்குலம் செய் தவத்தால் தோன்றினார்; ஏர்த் தொழிலால் வளம் பெருக்கி, எல்லையில்லாச் செல்வம் படைத்தார்; அச்செல்வத்தை அடியார்க்கு அமுதூட்டப் பயன்படுத்தினார். இவர் சிவனடியார் யாவராயினும் அவரை அன்புடன் வரவேற்றுக் கை கூப்பித் தொழுது இனிய முகமன் கூறுவார்; மனைக்குள் அழைத்துச் சென்று, திருவடிகளை விளக்கி, நல்லாசனத்திடை இருத்தி, அறுசுவை உணவினைப் படைப்பார். செல்வச் செழுமையின் காரணமாசு இவர் குபேரன் எனச் சிறப்புடன் வாழ்ந்தார். செல்வம் மேவிய காலத்தில் இத்தகைய தொண்டு செய்வது எளிது. அல்லல் நல்குரவினை அடைந்த போதும் இத்தொண்டினைத் தொடர்ந்து செய்யும் வல்லமை உடையார் இவர் என உலகிற்கு அறிவிக்கச் சிவபெருமான் திருவுள்ளத்தெண்ணினார். அதனால், நீடிய செல்வம் மெல்ல மறைந்தது. செல்வ வளம் சுருங்கியபோதும், வழங்கும் மனம் சுருங்காத இளையான்குடி மாறனார் தக்காரிடம் கடன் பெற்றும் சிவத்தொண்டினைத் தொடர்ந்தார். இவரது பெருமையை உலகத்தார்க்கு உணர்த்த இறைவன் நற்றவ வேடங்கொண்டு வந்தான். மாரிக்காலத்து இரவில் வந்த தவ வேடத்தினரை இளையான்குடி மாறனார் பண்புற எதிர் கொண்டார். மழை பெய்து கொண்டிருந்தது. மாறனார் வந்த விருந்தினரின் ஈரமேனியைத் துடைத்தார்; மனைவியிடம் அடியார் அமுதுண்ணச் செய்யவேண்டும் என்றார். தமக்குணவில்லை யாயினும் அடியாரை உண்பிக்கும் கடமை அவர்களின் முன் நின்றது. வீட்டிலும் உணவில்லை. கடன் தருவாரும் இலர். வேறு எங்கும் செல்லவும் இயலாத மாரிக்கால இரவு. ஆகவே பகலில் வயலில் வித்திய செந்நெல்லை வாரிக் கொண்டு வந்தால் அமுதாக்கலாம் என மாறனார் மனைவி கூறினார். நள்ளிருள் வேளை காரிருட் கணம் கட்டுவிட்டு உருகுவது போல உலகம் இருண்டு கிடந்தது. புள்ளும் உறங்கும் அவ்வேளை வள்ளல் மாறனார் தம் வயலை அடைந்தார். முன்பெல்லாம் சென்ற பயிற்சியினால் காலினால் தடவிச் சென்று, கைகளால் அரிதின் முயன்று சாலிவெண் நெல்லை அரிதின் கொணர்ந்தார். மனைவியார் சேறுநீங்க அதனைக் கழுவி எடுத்தார். செந்தழல் மூட்ட விறகில்லை. வீட்டின் முற்றத்தே இருந்து முறித்தவற்றை விறகாக்கி இன்னடிசில் ஆக்கினார். கறியமுது வேண்டும் எனக் கருதிப் பாசக் குழி முதல் பறிப்பார் போலப் பல்வேறு பயிர்களைப் பறித்தார். மனமகிழ் கறிகளை மனைவியார் ஆக்கித்தர, இணையிலாத் தவமுடையாரை அமுது செய்விப்போம் என எண்ணி. உறங்கும் அடியவரை எழுப்பச் சென்றார். அடியவர் உரை கேட்ட இறைவன் சோதி வடிவாகத் தோன்றினான். ஏலவார் குழலியொடு இடப வாகனத்தில் தோன்றிய இறைவன், ‘அன்பனே நீ என்பெரும் உலகம் எய்துவாய். இருநிதிக் கிழவன் எனச் சிறப்புறுவாய்’ என வாழ்த்தி அருளினான். பெரிய புராணப் பதிப்பாசிரியராகிய ஆறுமுக நாவலர் இவரது புராணத்தைப் பற்றித் தம் கருத்தாகப் பின்வருமாறு கூறியுள்ளார். ‘சிவபூசையிலும் சிறந்தது மகேசுர பூசை. இத்துணைப் பெருஞ் சிறப்பானதாகிய மகேசுர பூசையை எந்நாளும் சிறிதாயினும் தவறாது சிவாகம விதிப்படி மெய்யன்போடு செய்தமையால் பெருஞ்சிறப்புற்றவர் இவ்விளையான்குடி மாற நாயனார். தாம் நல்லோர்க்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும், அந்நயம் இறுதியிலேயே பலிக்கும் என்பதையும், அக்கருத்தறியாது அதற்குள் புண்ணியம் செய்த எமக்குக் கடவுள் இடர் தந்தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதையும் சர்வான்மாக்களும் உணர்ந்து உய்யும் பொருட்டுப் பரமசிவன் இவர்கட்கு வறுமையைக் கொடுத்து இவர்களது செயற்கரும் செய்கையை வெளிப்படுத்தினார்.ஜி.ஆர்.சி.