இது துணிகளுக்கும், இழைகளுக்கும் நிறமேற்றும் செயல் முறையாகும். சாய மூலக் கூறுகளை இழைகளுடன் இணைக்கும் விசைகள் பலவகைப்பட்டவை.எனினும், மூன்று கட்டங்களில் இச்செயல் முறை நிகழ்கிறது. அவை: சாயக் கரைசலிலிருந்து சாயம் இழையின் பரப்பின் மீது படர்தல்; இழையின் பரப்பிலிருந்து இழைக்கு இடைப்பட்ட பகுதிக்குச் சாய மூலக்கூறு நகர்தல்; இழையின் மூலக்கூறுகளுடன் சாய மூலக்கூறுகள் வாண்டர் வால்ஸ் வகை, ஹைட்ரஜன் பிணைப்பு அல்லது சக பிணைப்பு மூலம் இணைதல் எனப்படும். சாய மூலக்கூறுகள் கரைசலிலிருந்து இழைக்கு நகர்தல் இழைப் பரப்பின் மின்னேற்றத்தையும், வெப்ப நிலையையும், கரைசலைக் கலக்கும் விளைவையும் பொறுத்தமையும். இழை மின்னேற்றத்தின் அடிப்படையில் எந்த இழைக்கு எந்தச் சாயம் ஏற்றது என்பது தீர்மானிக்கப்படுகிறது. சாயம் இழைகளுக்கு இடையே அமர்தல், சாய மூலக்கூறுக்கும் இழையின் மீதான துளைக்கும் உள்ள குறுக்களவு விகிதத்தைப் பொறுத்தது. சாயமிடும் அமைப்புகள். சாயமிடும் கருவிகளின் வடிவமைப்பு சாயம் மற்றும் இழை வகையைப் பொறுத்தது. சில சாயங்களுக்கு உயர் அளவுக்கு நீர்மம் தேவைப்படுவதால், கூடுதலான அளவில் கரைசல்களைக் கையாளக் கூடிய அமைப்புகள் தேவை. சில இழைகளின் மீது சாயமிடுவதற்கு அழுத்தம் தேவை. இழையின் வடிவம் ஒரு முதன்மையான துணையலகாகும். உதிரி இழைகள், நூல்கள், துணிகள் ஆகிய ஒவ்வொரு வடிவத்திற்கும் தனித்தனி வகைச் சாயமிடும் கருவிகள் தேவைப்படுகின்றன. சாயமிடும் வழிமுறையில் பயன்படும் பொறிகளில் பின்வரும் மூன்று வகை உள்ளன: பற்றுப் பொருள் (அதாவது துணி, சாய நீர்மத்தில் மூழ்கி நகர்தல்), சாய நீர்மம் (அசையா இழை அல்லது துணி மீது பாய்ந்து செல்லுதல்), துணி (அல்லது நூல்), சாயம் இரண்டுமே இயக்கத்துக்குள்ளாதல், சாயமிடும் அமைப்பில் இன்றியமையாதவை. பற்றுப் பொருளின் பரப்பில் ஒரே சீராகச் சாயப் பொருள் பரவுவதற்குத் தக்கவாறு இயக்கம் அமைதல்; இவ்வியக்கம் துணிக்கு ஊறு விளைவிக்காதிருத்தல்; எவ்வுலோகத்தால், பீங்கான்அல்லது நெகிழியால் (plastic) சாயமிடும் அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளதோ, அப்பொருள் சாயத்தின் வேதிப் பொருள்களால் பாதிப்புக்குள்ளாகாமல் இருத்தல்; சாயமிடும் அமைப்பு முழுதும் சீரான வெப்ப நிலை நிலவச் செய்தல்; செயல்முறையில் குறுக்கிடாது தேவைப்படும் போதெல்லாம், சாய ஓட்டத்தில் புதிதாகச் சாயத்தைக் கலக்கும் அமைப்பு இருத்தல். சாயமிடல் வகைகள் கச்சா இழையைச் சாயமிடல் (raw-stock dyeing). நூற்புக்கு முன்பே சாயமிடும் இவ்வழி முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட வண்ணங்களை ஒரே நூலில் கலக்க இயலும். சாயச் சீர்மை இவ்வழி முறையில் எளிதில் எய்தப்படும். இவ்வகைச் சாயமிடல் திறந்த தொட்டிகளிலும், மூடிய அழுத்தமிக்க கலன்களிலும் நிகழ்த்தப்படுகிறது. நூற்கண்டு சாயமிடல் (skein dyeing). நூல் சிட்டங்கள் துளையிடப்பட்ட (கறைபடா எஃகினாலான) தண்டுகளிலிருந்து தொங்க விடப்பட்டுக் கீழே திறந்த தொட்டியில் சாயக் கரைசல் தேக்கப்படும் (படம் 1). தொட்டியிலுள்ள சாயம் இறைப்பிகள் மூலம் துணி தொங்க விடப்படும் தண்டுகளுக்குள் செலுத்தப்படுகிறது. இத்தண்டுகளின் துளை வழியே இழையின் மீது பீச்சப்படும் சாய நீர்மம் மீண்டும் தொட்டிக்குள் விழுகிறது. துளையிடப்பட்ட தண்டுகளை அவ்வப்போது அசைப்பதால் சாயத்தைச் சீராகத் துணி அல்லது நூல் மீது பரவச் செய்தல் எளிதாகிறது. நூற்கண்டு சாயமிடல் (ஹஸ்ஸிங் கருவி). ஒரு பற்சட்டத்திலிருந்து தொங்க விடப்பட்ட நூற்கண்டு களைச் சாயத் தொட்டியில் அமிழ்த்த வேண்டும். ஓர் உந்தி, நூல் கண்டுகளின் மீது சாயத்தைப் பாய்ச்சுவதற்கு உதவுகிறது. சில அமைப்புகளில் அழுத்தத்தில் சாயமிட வேண்டியிருப்பதால் மூடிகள் தேவைப்படும். சிப்பங்கட்டிச் சாயமிடல் (package dyeing). நூற்கண்டு கட்டுகளைச் செங்குத்தான விசைத் தண்டின் (spindle) மீது அமர்த்தி, சாயக் கலனில் பொருத்த வேண்டும். அச்சாய நீர்மம் விசைத் தண்டிலுள்ள சிறு துளைகள் வழியே நூற்கண்டின் மீது சுழற்றி வீசப்படுகிறது. நீர்ம ஓட்டத்தின் திசையை நேர் எதிராக மாற்றி, மாற்றி அமைத்து இறுதியில் விரும்பத் தக்க வண்ணமேற்றப்படுகிறது. வழியுறுதி கொண்டு சாயமிடல் (dyeing by jig). துணி பல உருளைகளில் மேலும் கீழுமாக உராய்ந்து சென்று, சாயத் தொட்டியில் மூழ்சி மீண்டும் உருளைகளினூடே சென்று வெளிவருகிறது. (படம் 2) துணியின் ஓட்டத்தைப் பல முறை தலைகீழாக்கித் தேவைப்படும் அளவுக்குச் சாயத்தை ஊன்றச் செய்யலாம். சாயமேற்றப்பட்ட துணியைப் பிழி உருளை (squeeze roller) வழியே செலுத்திச் சாயத்தைத் துணியில் நன்கு ஊடுருவச் செய்யலாம். சாயம் காட்டுதல் (dye beck). துணிகளை முனைக்கு முனை தைத்து நீண்ட சாளரமாக்கி, வழிப்படுத்தும் உருளை மூலமாகவும், சுற்றி (reel) மூலமாகவும் சாயத் தொட்டியில் நீள் வளையங்களாகச் செலுத்த வேண்டும் (படம் 3). துடுப்புப் பொறி முறை (paddle machine). முழுமையாக உருவாக்கப்பட்ட உடைகளையும், பனியன் வகைத் துணிகளையும் வலைத்துளை மிக்க பைகளில் கட்டிச் சாயத் தொட்டியில் அமிழ்த்தி, துடுப்பு வகை விசிறியால் தொட்டியைக் கலக்க வேண்டும். விட்டவகைத் தொட்டி (beam dyeing). பர்லிங்டன் விட்டத் தொட்டி எனும் அமைப்பில் துளையிட்ட விட்டத்திலிருந்து துணிகளைத் தொங்க விட்டுத் துளை வழியாகச் சுழற்றப்படும் சாயத்தைத் துணிகளின் மீது ஏற்றலாம். நெருக்கமாக நெய்யப்பட்ட துணிகளை விட வலையாகப் பின்னப்பட்ட துணிகளுக்கு இம்முறை சிறந்தது. பொதுவாக, சாயப் பொருள்கள் அமிலச் சாயங்கள், காரவகை அல்லது நேர் அயனிச் சாயங்கள், நேர் சாயங்கள், பரவும் சாயங்கள், தொட்டிச் சாயங்கள், வினைபுரி சாயங்கள் என ஆறுவகையாகப் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சாயத்திற்கும் தகுந்த சாயமிடல் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அமிலச் சாயங்கள் பெரும்பாலும் சல்ஃபோனிக் அமில உப்பு ஆகும், புரத வகை இழைகளுக்கு அமிலச் சாயங்கள் ஏற்றவை. கரை திறன் கூடுதலாக இருப்பதால், சாயக் கரைசலிலிருந்து மிகப் பெரிய அளவில் சாயம் துணிகளிடையே ஊடுருவுகிறது. அமிலச் சாயங்களைத் துணிகளுக்கு ஏற்றுவதற்கான வழிமுறைகளுள் ஒன்றான சாய நீர்மத்தில் நீர், NaSO.HSO ஆகியன முதலில் இடப்படுகின்றன. 40°C வெப்ப நிலையில் நூல் அல்லது துணியை இக்கலவையில் அமிழ்த்தி, 10—20 நிமிடங்கள் வரை பொறுத்துச் சாயத்தைச் சேர்க்க வேண்டும், வெப்ப நிலையை மெல்ல மெல்லக் கொதி நிலைக்கு உயர்த்தி, சாயமிடலை 45—60 நிமிடங்கள் வரை நிகழ்த்த வேண்டும். சாய நீர்மத்தின் pH மதிப்பு 2—3 என்ற வரம்புக்குள் இருத்தல் தகுந்த பயன் தரும். சமநிலைப் பரவு தன்மை சற்றே குறைவாக அமையப் பெற்று, அமிலச் சாயங்களுக்கு அமிலத் தன்மையைச் சரி செய்வதற்கு அசெட்டிக் அல்லது ஃபார்மிக் அமிலத்தைப் பயன்படுத்த வேண்டும். அசெட்டிக் அமிலம், சோடியம் சல்ஃபேட், சாயம் ஆகியவற்றின் கலவையை 37-48°C வரம்பில் நிறுத்தித் துணியைப் புகுத்த வேண்டும். பின்பு, வெப்ப நிலையை மெல்லக் கொதிநிலைக்கு உயர்த்தி, 60—90 நிமிடங்கள் வரை சாயமிட வேண்டும். காரச் சாயங்களில் சாய மூலக்கூறின் எதிர் அயனி வண்ணமுடையதாகும். இவ்வயனி இழை மீதுள்ள நேர் மின்னேற்றம் கொண்ட பகுதிகளால் ஈர்க்கப்படுகின்றது. இதன் விளைவாக ஓர் இழைக்கும், சாயத்திற்கும் இடையே ஒரு வலிய சக பிணைப்புத் தோன்றக் கூடும். எந்த இழையும் எக்காரச் சாயத்துடனும் இவ்வகைப் பிணைப்பை ஏற்படுத்தி விடுவதில்லை, ஆதலால், இச்சாயத்தின் திடம் (durability) இழைக்கு இழை வேறுபடுகிறது. காரச் சாயங்களின் தனிப் பண்புகள் அவற்றின் சாய அழுத்தமும், ஒளிர்வுமாகும். பிற சாயங்களை விட நீரில் கரையும் திறன் குறைவு. 65°Cக்கு மேல் சிதைவுறும். அமிலச் சாயத்துடன் காரச் சாயத்தை ஒரே கலவையில் பயன்படுத்த இயலாது; முயன்றால், வீழ்படிவு தோன்றும், அக்ரிலிக் வகை இழைகளைத் தலிர ஏனையவற்றுடன் காரச் சாயங்களின் ஒட்டும் திறன் குறைவு. பொதுவாக, காரச் சாயங்களுக்குச் சாய நீர்மத்தின் pH வரம்பு 7. 5—8 ஆகும். யூரியாக் கரைசலைத் தாங்கல் கரைசலாகப் பயன்படுத்தினால், pH வரம்பை 5—6 ஆக மாற்றலாம். வெப்பநிலை 60—80°C டானிக் அமிலம் (tannic acid) இணை பொருளாகப் பயன்படுகிறது. சாய நீர்மத்திலிருந்து சாயம் விரைவில் அகன்று, இழையில் புகுவதற்கு உதவியாக வினை மட்டாக்கிகள் சேர்க்கப்படுகின்றன. மிகப் பெரும்பாலான சாய வகைகள் நேரடியாகச் சாயமேற்றத் தகுந்தவை. இவை தனி நிலைச் சாயங்களாகும். இவை நீரில் கரைவன; செல்லுலோஸ் இழைகளுக்குச் சாயமேற்றத் தகுந்தவை. இவ்வகைச் சாய மூலக்கூறுகள் நேர் சங்கிலி அமைப்புக் கொண்டவை. இழை மூலக்கூறுகளால் எளிதில் உட்கவரப்படக் கூடியவை; மேலும்; ஹைட்ரஜன் பிணைப்பும், வாண்டர் வால்ஸ் ஈர்ப்பு விசையும், பற்றுப் பொருளுடன் சாயத்தைப் பிணைக்க உதவுகின்றன. இருப்பினும், இவ்வகைச் சாயங்கள் ஒட்டும் திறன் குறைவாக அமையப் பெற்றவை. கெட்டிச் சாயமாக மாற்றப்படுவதற்குச் சில தனி வழி முறைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றில் மூன்று உட்பிரிவுகள் உள்ளன. தானே சமநிலையாகப் பரவும் தன்மை கொண்டவை (A); உப்புச் சேர்ந்து சீராகப் பரவும் தன்மை பெறுபவை (B); உப்பும், உயர் வெப்ப நிலையும் தேவைப்படும் நிலையிலுள்ளவை (C). A—வகைச் காயத்தை நீரில் குழைத்து, நேர் அயனித் தன்மை கொண்ட அல்லது அயனித் தன்மையற்ற நனைப்பூட்டியையும் (wetting agent) கொதி நீரையும் சேர்த்து, தகுந்த செறிவுள்ள உப்புக் கரைசலுடன் கலக்க வேண்டும். இழை அல்லது துணியை இச்சாய நீர்மத்தில் அமிழ்த்தி, 30—40 நிமிடங்களில் கொதி நிலைக்கு உயர்த்தி, கொதி நிலையில் 45—60 நிமிடங்களுக்குச் சாயமேற்ற வேண்டும். B—வகைச் சாயத்திற்கு உப்புச் சேர்த்தல் தவணைகளில் நிகழ்த்தப்படுகிறது C வகைச் சாயத்திற்குக் கொதி நிலை எய்திய பிறகு உப்புச் சேர்க்கப்படுகிறது. சாயத்தை உறுதியாக்குவதற்காகச் சாயமேற்றிய பின்பு, ஃபார்மால்டிஹைடு, சோடியம் குரோமேட், கரிம எதிர் அயனி நிலை நிறுத்திகள் ஆகியவற்றுடன் வினையுறுத்தலாம், நிலை நிறுத்தும் (fixing) முறைகளில் சிறந்தது டைஅசோ ஆக்கல் (diazotisation) ஆகும். பீட்டா—நாஃப்தால், ஃபீனால் ரெசார்சினால் போன்ற உருதுலக்கிகளைச் (developers) சாய மூலக்கூறுகளிலுள்ள அமினோ தொகுதியுடன் வினையுறச் செய்யலாம். வினை இழை மீது நிகழும். வழக்கம் போல, சாயமேற்றத்தை நடத்திய பிறகு துணி மீதுள்ள சாயத்தைச் சோடியம் நைட்ரைட், சல்ஃப்யூரிக் அமிலம் ஆகியவற்றுடன் டைஅசோ ஆக்கலுக்குட்படுத்தி, உரு துலக்கியைச் சேர்க்க வேண்டும். பிரிகை நிலைச் சாயங்கள் முதன்முதலாகச் செல்லுலோஸ் அசெட்டேட் இழைக்காகவே தயாரிக்கப்பட்டமையால், அவற்றை அசெட்டேட் சாயங்கள் என்றே கூறினர். நீர் தவிர்க்கும் (hydrophobic) செயற்கை இழைகள் பலவும் தயாரிக்கத் தொடங்கிய பின்பு, இவ்வகைச் சாயங்களின் பயன்கள் விரிவாக்கப்பட்டன. நீரால் ஈர்க்கப்படாத தன்மை கொண்டவையாதலால், இவை எளிதில் கரிம இழையின் பரப்பை அடைந்து, ஊடுருவி, இழை மூலக்கூறுடன் திண்மக் கரைசலைத் தோற்றுவிக்கின்றன. இழைப் பற்றுப் பொருளின் தன்மைக்குத் தக்கவாறு, இவ்வகைச் சாயத்தின் கெட்டித் தன்மை அமைகிறது. அசெட்டேட் ரேயான், நைலான் போன்ற இழைகளுக்கு ஏற்றப்பட்ட இச்சாயம் வளிமம் அல்லது புகை மூட்டத்தில் நிறமிழக்கிறது. மிக உயர் வெப்ப நிலைகளில் இச்சாயம் பதங்கமாகிறது. இச்சாயங்களை அழுத்தம் கொண்டு சாயமேற்றலாம். பாலி எஸ்ட்டர் இழைகளுக்கு இம்முறை ஏற்றது; பின் வரும் சாயமேற்றும் முறை பின்பற்றப்படுகிறது. சாய நீர்மத்துடன் மேற்பரப்புச் செயலி, அணைவு ஒதுக்கி (sequestering agent) இவற்றைச் சேர்த்து, 10 நிமிடங்களுக்கு இழையை நனைத்து 20—40 நிமிடங்களுக்குச் சாயமிட வேண்டும். வெப்ப நிலை 93°C ஆகும். மிகையான சாய நீரை அகற்றிய பின்பு, இழையைக் கழுவுவதற்கு அணைவு ஒதுக்கி கலந்த நீரைப் பயன்படுத்தலாம். இவ்வகைச் சாயங்களை வெப்பக் கரைசால் (thermosol) என்ற வழி முறையாலும் சாயமேற்றலாம். தொட்டிச் சாயங்கள் தொன்மை வாய்ந்தவை. இயற்கையான தொட்டிச் சாயங்கள் எகிப்தில் கி.மு. 2000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. இயற்கையான தொட்டிச் சாயங்களுக்குச் சான்றுகள் இண்டிகோ (indigo), டிரியன் பழுப்பு (tyrian purple) ஆகியனவாகும். செயற்கைத் தொட்டிச் சாயம் முதன்முதலாக 1897 இல் தயாரிக்கப்பட்டது. தொட்டிச் சாயங்கள் நீரில் அரையா. காரக்கரைசலில் சோடியம் ஹைட்ரோ சல்ஃபைட் என்ற மென்மையான ஆக்சிஜன் ஒடுக்கியால், நிறமற்ற நீரில் கரைய வல்ல சேர்மமாக மாறுகிறது. நிறமற்ற இக்கரைசலில் துணியை நனைத்து, காற்றுப் படும்படியோ சோடியம் பெர்போரேட் எனும் சேர்மத்தைச் சேர்த்தோ, மீள் ஆக்சிஜனேற்றத்திற்குட்படுத்தினால், சாயம் உரிய நிறத்தை அடைந்து விடும். தொட்டிச் சாயங்கள் பெரும்பாலும் கெட்டிச் சாயங்களே ஆகும். வினைபுரி சாயங்கள், இழையுடன் சக பிணைப்புறுவாதல் ஏனையவற்றிலிருந்து தனித்தவை; கெட்டித் தன்மை (colour fastness) மிக்கவை. பெரும்பாலும் செல்லுலோஸ் வகை இழைகளுக்கே பயன்படுத்தப்படுவனவாயினும், பட்டு, கம்பளி, நைலான், அக்ரிலிக் போன்ற இழைகளுக்கும் தகுந்தவையே. வினைபுரி சாயத்திலுள்ள ஒரு வேதித் தொகுதி செல்லுலோஸ் இழையின் —OH தொகுதியுடனோ, மற்றவகை இழையின் —NH தொகுதியுடனோ பிணைப்புறுகிறது. கெட்டித் தன்மை மிக்க இச்சாயங்கள் விலையுயர்ந்தவை. இச்சாயத்திற்குச் சேர்க்கப்படும் துணைப் பொருள்களின் எண்ணிக்கை, சற்றுக் கூடுதலாகும். இவ்வகைச் சாயக் கரைசலை நீண்ட நாள் சேமித்து வைத்தால், வேதி நிலையிறக்கம் காணக் கூடும். வினைபுரி சாயமேற்றலைத் தொடர்ச்சியாகவோ, தொகுதி முறையிலோ (batch process) நிகழ்த்தலாம். தொடர்முறையில் நான்கு உட்பிரிவுகள் உள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளைக் கொண்ட கலப்பு இழையைச் சாயமேற்றுதல் எளிதன்று. ஏனெனில், ஒவ்வொரு வகை இழையும் அனைத்துச் சாயங்களுக்கும் ஒரே வகைப் பிணைப்பைத் தோற்றுவிப்பதில்லை. எனவே, ஒரு வகை இழையைச் சாயமேற்றி, துணியை நன்கு கழுவி, பிறகு மற்றோர் இழைக்குச் சாயமேற்ற வேண்டும். சாயமேற்றும் துறையில் பின்வரும் சில சிறப்புச் சொற்றொடர்கள் பயன்படுகின்றன. கோடிழை (barre). துணியில் கோடுகளாகத் தெரியும் சாயம். தடுக்கும் செயல் (blocking). ஒரு சாயத்தின் ஒட்டுவிப்பை மற்றொரு சாயம் பிரித்தல் அல்லது பாதித்தல். உதிர்தல் (crocking). சரியாக நிலை நிறுத்தப்படாத சாயம் உராய்வால் உதிர்தல். தீர்தல் (exhaustion). சாயம் நீர்மத்தை விட்டு இழைக்கு இடம் பெயர்தல். கெட்டித் தன்மை (fastness), கசிதல் மூலமோ, மங்குதல் மூலமோ நிறமிழப்பு நேர்வதைத் தடுக்கும் ஆற்றல். காரிக்கண் துணி(grey or greige goods). சாயமேற்றப்படாத, முழுமையுறாத தறியிலிருந்தோ, பின்னல் பொறியிலிருந்தோ (knitting machine) நேராகப் பெறப்பட்ட துணிகள். குழைத்தல் (pasting). சாயத்தை ஈரமேற்றிக் குழைத்தல். வடமடிப்பு (rope crease). சாயமிடுகையில் துணி முறுக்கேற்றமடைவதால் தோன்றும் சாயக் கீறல். மாறுபட்ட நிற ஊன்றுகை (shading). கலப்பு இழைகளில் ஓர் இழையின் நிறம் மற்றொன்றை விட ஆழமாக ஊன்றுதல். சோப்பால் அகற்றம், மிகையான சாயத்தைச் சோப்பால் கழுவி அகற்றுதல், சமநிலைப் பரப்புத் தன்மை (levelling). சமச் சீராகச் சாயத்தைத் துணி அல்லது இழை மீது பரவச் செய்தல்.கலப்பிழைச் சாயமிடல் (union dyeing). இரண்டையோ அதற்கு மேற்பட்ட இழைகளையோ, ஒரே நூற்கண்டு அல்லது துணியில் சாயமேற்றுதல். —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. Douglas M. Considine. Chemical Process and Technology. First Edition, McGraw Hill Book Company, New York. 1974.