செல் ஒட்டுதல்
cel oṭṭutal
செல்கள் ஒன்றையொன்று இனம் கண்டு கொள்ளும் திறன் உடையன.
செல்கள் ஒன்றையொன்று இனம் கண்டு கொள்ளும் திறன் உடையன. இதனால், ஒரு திசுவில் உள்ள ஒரே வகையான செல்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்கின்றன. செல்களுக்கு இடையேயுள்ள தொடர்பு மூன்று வகையில் பகுப்படைந்து திசுக்களாகச் சேரும்.
பெரும்பாலானவற்றில், செல்லுக்குப் புறத்தேயுள்ள அடிப்படைப் பொருள் (matrix), செல்லின் வெளிப் புற உறையால் (coat) ஆனது. உறையின் பொருள்கள் (செல்லுலோஸ், ஹையலூரோனிக் அமிலம் முதலியன) செல்கள் ஒன்றையொன்று தொட்டதும் ஒன்று சேர்கின்றன.
செல்களுக்கு இடையிலுள்ள இடைவெளி பெரும்பாலும், 15 நானோ மீட்டர் உள்ளமையை, எலெக்ட்ரான் நுண்ணோக்கியில் அறியலாம். இருப்பினும், இச்சிறிய இடைவெளியிலும் சிறிது பொருள் உள்ளது; இது மியூகோ புரோட்டீன் ஆக இருக்கக் கூடும்; செல்களின் சேர்க்கைக்கு இதுவே காரணமாகும். மேலும், இச்செல்களைப் பிரிப்பதில் மிகுந்த விளைவை உண்டாக்கும் நொதிகள் மியூகேஸ்களும், புரோட்டியேஸ்களும் ஆகும்.
ஒரு திசுவில் உள்ள செல்கள், செல் வாய்க்கால்களைப் (cell channels) பயன்படுத்தித் தமக்குள் சற்றேறக் குறையத் தடையின்றிப் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. தாவரச் செல்களில் பிளாஸ்மா டெஸ்மேட்டா எனப் படும் சைட்டோபிளாசப் பாலங்கள் உள்ளமை அறியப் பட்டுள்ளது. இவை செல்களுக்கு இடையில் செல்லுலோஸ் சுவரில் குறுகிய இணைப்புகளை உண்டாக்கி, அவற்றின் மூலம் அயனிகளும், பெரிய மூலக் கூறுகளும் (macro molecules) தடையின்றிச் செல்ல உதவுகின்றன.
1908இல் வில்சன் என்பார், உயிரோடுள்ள கடற் பஞ்சை நுண்ணிய துளைகள் அமைந்த பட்டு வளையின் மூலம் அழுத்தினால், தனித் தனியாகப் பிரிக்கப் பட்ட நகரக் கூடிய செல்களாகி, அதன் பின், அப்படியே வைத்திருந்தால், மீண்டும் ஒன்று கூடிப் புதிய கடற் பஞ்சாக உருவாவதை விவரித்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு, வளரும் கருவின் திசுக்கள் டிரிப்சினுடன் சேர்க்கப் பட்ட போது, தனித் தனிச் செல்களாகப் பிரிகின்றன என்பதும், பின்னர், அவையே மீண்டும் ஒன்று கூடித் தொடக்கத்தில் இருந்த திசுவின் குறிப்பிட்ட அமைப்பை உண்டாக்குகின்றன என்பதும் கண்டு பிடிக்கப் பட்டது.
மீண்டும் ஒன்று கூடுதல் என்பது செல்களின் நகரும் தன்மையைப் பொறுத்தது. டிரிப்சினால் ஒரு கோழிக் குஞ்சுக் கருவில் உள்ள அனைத்துச் செல்களும் பிரிக்கப் பட்டு, அதன் பின், அப்படியே வைக்கப் பட்டால், மீண்டும் ஒன்று கூடும். ஒரே வகையான செல்கள் ஒன்றோடொன்று ஒட்டும் போது, அவை ஒரு குறிப்பிட்ட செல்களின் தொகுப்பாகின்றன; இவை ஒரு குறிப்பிட்ட தன்மையுள்ள செல் திரளாக (எ.டு: சிறுநீரகச் செல், எலும்புச் செல், விழித் திரைச் செல்) இருக்கும்.
மீண்டும், ஒன்று கூடுதல் என்பது இனங்களின் அடிப்படையில் ஏற்படுவதில்லை. சான்றாக, சுண்டெலிக் கருவின் செல்களும், கோழிக் குஞ்சுக் கருவின் செல்களும் கலக்கப் பட்டால், அவை செல் திரள் அடிப்படையில் ஒன்று கூடுகின்றனவேயன்றி, இன அடிப்படையில் கூடுவதில்லை. அதாவது, சுண்டெலியின் செல்கள் அனைத்தும் தம்முள் ஒன்று சேர்ந்தோ, கோழிக் குஞ்சின் செல்கள் அனைத்துமாகச் சேர்ந்தோ, ஒன்று கூடுவதில்லை. மாறாக, சிறுநீரகச் செல்களாகச் சேர்ந்து, சுண்டெலியின் செல்களும், கோழிக் குஞ்சின் செல்களும் கூடி, ஒரு சிறுநீரகத் திசுவை உண்டாக்கு- கின்றன. இவ்வாறு மீண்டும் ஒன்று கூடுவதற்குக் கால்சிய அயனிகளும், சில கார்போஹைட்ரேட்டுகளும், கிளைக்கோ புரதங்களும் இன்றியமையாதவை. —சோம. பேச்சிமுத்து
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 848)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zsmc9ymq/
தமிழ்“செல் ஒட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zsmc9ymq/APA
Oliyon Research. (2026). செல் ஒட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zsmc9ymq/MLA
"செல் ஒட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zsmc9ymq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment