அச்சோதை என்பது ஒரு புனித ஆறு. ஒரு பெண் தன் முன்னோர் சாபத்தால் ஆறாக மாறிய கதை மச்ச புராணத்தில் இடம் பெற்றுள்ளது. சத்தியவதி என்னும் பெண் மீன் வயிற்றில் தோன்றியவள். இவளுக்குப் பரிமள கந்தி என்னும் வேறு பெயரும் உண்டு. இவள் மீனவ மன்னன்பால் வளர்ந்து ஓடம் செலுத்தியபோது, இயமுனை ஆற்றினைக் கடக்க, அங்கு வந்த பராச முனிவர் அவளைக் கூடியதால் வியாசரைப் பெற்றெடுத்தாள். பின்னர்ச் சந்தனுவின் மனைவியாகிச் சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்னும் இரு ஆண்மக்களை ஈன்றாள். அதன் பிறகு அவள் அச்சோதை என்னும் புண்ணிய ஆறாக மாறினாள். சாபத்தால் மீன் வயிற்றில் பிறந்து, இறுதியில் ஆறாகிய இவளது முன் வரலாற்றினை மச்ச புராணம் பின்வருமாறு கூறுகிறது. மரீசியின் மக்களாகிய பிதிர்களுக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் தன் முன்னோரால் அமைக்கப் பெற்ற அச்சோதம் ஆற்றங்கரையிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்தாள். அதன் பயனாக அவள் பிதிர்கள் அவள் முன் தோன்றினர். அப்பிதிர்களுள் ஒருவனாகிய மாவசு என்பானைத் தன் கணவனாக எண்ணினாள். அதனால் ஒழுக்கக் கேடுற்ற அவள் சுவர்க்கத்திலிருந்து தள்ளப் பெற்றாள். பூமியில் விழாமல் அந்தரத்தேயிருந்து தவம் புரிந்தாள். அவள் வயப்படாத மாவசு அச்செயல் நிகழ்ந்த நாளை அமாவாசை என்று ஆக்கினான். அந்த நாளில் இறந்த முன்னோர்களை நினைத்துக் கருமம் செய்தால் அது அவர்களுக்கு உவப்பாகி நன்மை தரும் என்று கருதப்பட்டது. மாவசுவின் கூற்றுப்படி அப்பெண்ணே பின்னர்ச் சத்தியவதியாகி, இறுதியில் அச்சோதை என்னும் புண்ணிய நதியாக விளங்கினாள்.