அஜந்தா
ajantā
(Ajanta) ஐதராபாத் இராச்சியத்திலுள்ள ஒளரங்கபாத்திலிருந்து வடக்கே ஒரு மைல் தூரத்திலுள்ள கிராமம்.
(Ajanta) ஐதராபாத் இராச்சியத்திலுள்ள ஒளரங்கபாத்திலிருந்து வடக்கே ஒரு மைல் தூரத்திலுள்ள கிராமம். இங்கிருந்து மூன்றரை மைல் தொலைவில் உலகப் புகழ் பெற்ற பல பௌத்த குகைக் கோயில்கள் உள்ளன. இவற்றில் எல்லாம் ஓவியங்கள் தீட்டப்பெற்றிருக்கின்றன. ஓர் அருவியையடுத்துள்ள செங்குத்தான பாறையில் இக் குகைகள் குடையப்பட்டுள்ளன. பாறையின் மீது ஏறிச் செல்லும் போதே பல குகைகளின் வாயில்கள் காணப்படும். மொத்தம் 29 கோயில்களும் குகைகளும் உள்ளன. இவற்றை யிணைப்பதற்குப் பாதைகளும் படிகளும் இருக்கின்றன. இவை வெவ்வேறு காலங்களில் கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து 7ஆம் நூற்றாண்டுவரை உண்டாக்கப்பட்டவை.
சில குகைகள் குப்த மன்னர் காலத்தைச் சேர்ந்தவை. 16, 17ஆம் குகைகள் சுமார் கி. பி. 500-ல் ஏற்பட்ட விஹாரங்கள். இவை தூண் மண்டபங்கள். பின்னாலுள்ள சுவரில் ‘பிரலம்பபாத’ ஆசனத்தில் வீற்றிருக்கும் புத்த உருவங்கள் காணப்படுகின்றன. இத்தூண்களின் அழகும் வகையும் குறிப்பிடத்தக்கவை. இரண்டு குகைகளிலும் உள்ள தூண்கள் வெவ்வேறு வகையைச் சார்ந்தவை. இங்குள்ள தூண்கள் ஒன்றைப்போல மற்றொன்று இருப்பதில்லை. இவை வாகாடக மன்னர்கள் காலத்தவை. குப்த காலத்து ஓவியங்கள் இவற்றிலும் 19ஆம் குகையிலும் காணப்படுகின்றன. புத்தர் வாழ்க்கையைப்பற்றிய ஓவியங்கள் இவை.
பௌத்த ஓவியங்களில் மிக முக்கியமானவை அஜந்தாவில் காணப்படுவன. சுதை ஓவியங்கள் (Fresco Paintings) நன்கு பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஒரு மாளிகையின் முன்புறத்தே தாழ்வாரத்தின் மறைவில் இரண்டு காதலர்கள் உட்கார்ந்திருப்பதாக 17ஆம் குகையின் வலப்புறத்தில் சித்திரித்திருக்கிறது. பல வேலைக்காரர்கள் தொடர்ந்துவரத் தோட்டத்து வழியே செல்லும் ஓர் அரச குமாரனையும் அவன் மனையாளையும் ஒரு ஜன்னல் வழியே இரு காதலர்கள் பார்ப்பதாக இடப்புறத்தில் சித்திரித்திருக்கிறது. இவ்விரண்டும் மிக அழகான சுதை ஓவியங்கள்.
19ஆம் குகை நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. சுமார் 550-ல் கட்டப்பட்ட வழிபாட்டு அறையில் புத்தர் படிமங்களும் ஏனைய பௌத்தப் படிமங்களும் தோற்றமளிக்கின்றன. இக்குகை பண்டைய முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருப்பினும், முகப்பு வேறு மாதிரியாக அமைந்துள்ளது. மகாயான உருச் சிற்பத்தின் வளர்ச்சியை இது காட்டுகிறது. இரட்டை மடிப்பு உச்சியுள்ள தூண்கள் முகப்பைத் தாங்குகின்றன. இம் முகப்பில் சுற்றுப்புறமெல்லாம் சித்திரத் தலைகள் அமைந்த சைத்தியப் பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஆந்திரர் சிற்ப வகையைச் சார்ந்தவை ; குப்தர்களால் கையாளப்பட்டவை.
1 முதல் 5, 21 முதல் 26 ஆகிய குகைகள் எல்லாம் விஹாரங்கள் அல்லது மடங்கள்; ஒரு குகைமட்டும் சைத்தியம் எனப்படும் வழிபாட்டுக்கூடம். இவை 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த 4, 24ஆம் குகைகள் பூர்த்தியாகாதவை; ஆயினும் இவை பூர்த்தியாகியிருந்தால் அஜந்தாக் குகைகள் யாவற்றுள்ளும் மிகச் சிறந்த வேலைப்பாடு அமைந்தவையாக இருந்திருக்கும். அதே நூற்றாண்டைச் சேர்ந்த முதற் குகையில் அவலோகிதேசுவரர் (போதிசத்துவர்) சித்திரம் ஒன்று மிக அழகாகக் காணப்படுகிறது. இது வைணீகம் என்னும் ஒரு முறை யைச் சார்ந்த ஓவியமாகும். அவலோகிதேசுவரர் உருவம் காதணிகளையும், அழகிய முத்துக்கோவையையும் அணிந்து ஒரு நீல அல்லியைக் கையில் ஏந்தியுள்ளது. மங்கலான அல்லது அழுத்தமான வர்ணப் பூச்சினால் ஒளியும் இருளும் போன்ற தோற்றங்களும் காண்கின்றன. 1,2 குகைகளில் உள்ள ஓவியங்கள் குப்த ஓவிய நெறியைப் பின்பற்றியுள்ளன. அவற்றில் முதற்குகையில் மேற்கூறிய அவலோகிதேசுவரர், மாரன் தோல்வி, களியாட்டக் காட்சிகள், காதற் காட்சிகள், சிபி, நாகர் ஜாதகக் கதைகள், கூரையின் அடிப்பரப்பில் செய்துள்ள வேலைப்பாடுகள் முதலியவையும், இரண்டாம் குகையில் அரண்மனைக் காட்சிகள், இந்திரலோகம், சிராவஸ்தியின் சாதனை, சாந்திவாதி, மைத்ரிபாலா கதைகள், கூரை அடிப்பரப்பு வேலைப்பாடுகள் முதலியவையும் முக்கியமானவை. அஜந்தா ஓவியங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்தது அவலோகிதேசுவரர் ஓவியந்தான். மிகச் சிறந்த நிகரற்ற கலையென்று கூறி உலகம் புகழ்வது அஜந்தாவிற்கு இவ்வோவியத்தாலேயே கிடைத்துள்ளது.
7ஆம். நூற்றாண்டைச் சார்ந்த 26ஆம் குகை பொது அமைப்பில் கார்லே குகைக்கோயிலைப் போலவே இருப்பினும், தூண்களின் உச்சியில் பல பகுதிகளில் காணப்படும் உருச் சித்திரவேலைப்பாடுகளில் மிகவும் முக்கியமானவை. இங்குள்ள தூபசிற்பத்தில் புத்தர் பிரலம்பபாத ஆசனத்தில் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. காண்போர் உள்ளத்தைப் பிணிக்கும் தன்மையது இங்குள்ள புத்த நிருவாண சிற்பம். பூத்துநிற்கும் இரண்டு சால மரங்களுக்கிடையே, வலப்புறம் சாய்ந்து, பாதத்தின் மீது பாதத்தை வைத்துக்கொண்டு ததாகதர் (புத்தர்) படுத்தபடியே நிருவாணம் அடைகின்றார். அவருடைய சீடர்கள் சுற்றியிருந்து புலம்பு கின்றனர். கந்தர்வர்களும் தேவர்களும் இன்னிசை செய்துகொண்டு அந்தரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர். டி. என். ரா.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 329)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/znxq39ew/
தமிழ்“அஜந்தா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/znxq39ew/APA
Oliyon Research. (2026). அஜந்தா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/znxq39ew/MLA
"அஜந்தா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/znxq39ew/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment