ஆப்பிரிக்காவிலுள்ள எத்தியோப்பியாவில் வாழும் பழங்குடிகளாவர். ஏறக்குறைய ஐம்பது இலட்சத்திற்கும் மிகுதியான அம்காரா (Amhara) பழங்குடியினர் இங்கு வாழ்கிறார்கள். எத்தியோப்பியாவின் மக்கள் தொகையில் இவர்கள் நான்கில் ஒரு பகுதியே ஆயினும், அந்நாட்டு அரசியலில் மேலாதிக்கம் கொண்டு விளங்குகின்றனர். இந்த அம்காரா சமயத் தலைவன் நிலையினை இவர்கள் அடைய நாட்டின் பல மாநிலங்களிலும் இருந்த பிரபுக்களோடு பல்வேறு போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. கிறித்து பிறப்பதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அராபிய மக்கள் செங்கடல் வழியே எத்தியோப்பியாவிற்கு வந்து அங்கு முன்னரே குடியேறி இருந்த மக்களோடு கலந்திருக்கக் கூடும் என்பது கருதப்படுகிறது. கி.பி. 330–இல் எத்தியோப்பியாவில் ‘அக்சம்’ எனும் வடபகுதியை ஆண்டுவந்த அசானா என்னும் மன்னன் கிறித்தவ சமயத்தைத் தழுவியதாகவும், ஆனால் அம்மாற்றம் அப்போது பொதுமக்களிடையே எவ்வித மாறுதலையும் ஏற்படுத்தவில்லை என்பதாகவும் கூறுகின்றனர். கிறித்தவக் கருத்துகள் கி.பி. 5–ஆம் நூற்றாண்டு அளவில் தோன்றிய கீசு எனும் மொழியில் எழுதப்பட்டன. இம்மொழியினின்றும் உருவாகிய சில மொழிகளுள் இறுதியாகத் தோன்றியது அம்காரா மொழியாகும். அம்காரா மொழி இறுதியாகத் தோன்றியதைப் போலவே, எத்தியோப்பியாவின் வரலாற்றிலும் அம்காரா மக்கள் பிற்காலத்தில்தான் சிறப்புப் பெற்று விளங்கினர். இக்காலத்தில் அம்காரா பழங்குடிகளிடையே கிறித்தவ சமயம் நன்கு வேரூன்றிக் காணப்படுகிறது. இம்மக்களின் வாழ்க்கையில் திருச்சபை முதன்மைப் பங்கு பெறுகிறது. குழந்தை பிறந்த முதல் வாரத்தில் பாதிரியார் புனித நீரைத் தெளிப்பார்; ஆண் குழந்தைகளுக்குச் சுன்னத்துச் செய்யப்படும்; திருமணங்களைப் பாதிரியார் முன்னின்று நடத்தி வைப்பார்; மணமுறிவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் பாதிரியார்கள் மிகவும் உறுதியாக இருப்பார்கள். இறந்தவர் ஆன்மாவின் தந்தையாகப் பாதிரியார் கருதப்படுகிறார். இறந்தபின் நாற்பதாவது நாளில் பாதிரியார் சாவுச் சடங்குகளை நடத்தி வைப்பார். அம்காரா மக்கள் தம் நாள்பணியைக் கடவுள் வழிபாட்டுக்குப் பின்னர் அல்லது திரு நூலில் (Bible) ஏதேனும் சில பகுதியைப் படித்த பின்னர்த் தொடங்குவர். இவர்களின் முதன்மைத் தொழில் வேளாண்மை ஆகும். கால்நடை வளர்ப்பைச் சிறுவர்கள் மேற்கொள்ளுகின்றனர். குடும்பம், தந்தையின் தலைமை அமைப்பைக் கொண்டதாகும். குழந்தைகளைக் கடும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெற்றோரின் அதிகாரம் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள கல்வி, பொருளாதாரம் போன்ற வளர்ச்சியினால் மாறி வருகிறது.ஆ.செ.