நோயியல், தாவர
nōyiyal, tāvara
தாவரங்களில் ஏற்படும் நோய்களைப் பற்றி அறிவது தாவர நோயியல் (Plant pathology) எனப் படும்.
தாவரங்களில் ஏற்படும் நோய்களைப் பற்றி அறிவது தாவர நோயியல் (Plant pathology) எனப் படும். தற்போது பல்வேறு ஆய்வுகளுக்கும், கண்டு பிடிப்புகளுக்கும் பொருளாதாரப் பயன்களுக்கும் தகுந்தவாறு அறிவியல் பிரிவாகத் திகழும் இதில் பல உயிரியல் பிரிவுகள் உள்ளன. தாவர நோயின் இயல்பு. தாவர நோயின் இயக்க ஆற்றல் பற்றி அறிந்து கொள்வதற்குத் தாவரவியலின் பல துறைகளான உள்ளமைப்பியல், செல்லியல், மரபியல், செயலியல் ஆகியவை பற்றிய அறிவு தேவைப் படுகிறது. நோய் உண்டாவதற்கு உரிய காரணங்களைப் பற்றி அறியப் பாக்டீரியாவியல், பூசணவியல், வைரசியல் போன்றவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நோய்களின் வீரியத் தன்மைகளைப் பாதிக்கக் கூடிய சூழ்நிலைக் காரணிகள் பற்றி அறியச் சூழ்நிலை இயல், கால நிலை இயல் ஆகியன பற்றியும் அறிய வேண்டியுள்ளது. சமுதாயத்தில், தாவர நோயினால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறியச் சமூகவியல், பொருளாதார இயல் பற்றிய அறிவு தேவைப் படுகிறது. தாவர நோயியல் என்னும் அறிவியலில் நோயின் இயல்பு, அதற்குரிய காரணம் ஆகியவை பற்றிய நடைமுறைத் திறமும், நோய்களைக் குறைத்து விளைச்சலைக் கூடுதலாக்கும் நோக்கமும் அடங்கும்.
நோயறிதல். கண்ணுக்குத் தெரிகிற வகையில், தாவரத்தில் உண்டாக்கும் நிற மாறுதல், அமைப்பு மாற்றம், உருமாற்றம் போன்றவற்றைக் கொண்டு, நோயினை அறிந்து கொள்ளலாம். இத்தகைய மாறுதல்கள் அறிகுறிகள் எனப் படும். அவற்றுள், கொலை நோய், அழுகல் நோய் போன்றவை செல்களும், திசுக்களும் இறப்பதால் ஏற்படுகின்றன. பச்சைய நீக்கம், வளர்ச்சி குன்றல் போன்ற அறிகுறிகள் தாவரங்களின் வளர்ச்சி, வளர்முறை குன்றுவதால் ஏற்படுகின்றன. முண்டு போன்ற நோய்கள் செல் எண்ணிக்கையிலும், அளவிலும் கூடுவதால் ஏற்படுகின்றன. நோய் விளைவிக்கக் கூடிய நோய் நுண்ணுயிரியின் அடையாளங்களும் காணப் படுகின்றன. எடுத்துக் காட்டாக, பாக்டீரியாக் கசிவு, பொடிப் பூசண நோய் ஆகியவற்றில் நோய்க் காரணியை இனம் கண்டு கொள்வது நோய் அறி இயலில் சிறப்பானது. இதன் அடிப்படையில், நோய்க் கட்டுப்பாட்டிற்கு உரிய நடைமுறைத் திறத்தினை வகுக்கலாம். நோய் விளைவிக்கக் கூடிய பல நுண்ணுயிரிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, அவற்றைச் செயற்கை முறையில் வளர்க்கலாம். அவற்றை நோய் இல்லாத தாவரத்தினுள் ஊசி மூலம் செலுத்தி, அவற்றின் நோய் உண்டாக்கும் தன்மையினை ஆய்வு செய்யலாம். நோய் அறிவதற்கு ஒளி, எலெக்ட்ரான் நுண்ணோக்கி நிற மாலை அறிமுறை, மின் பிரிதல் ஆய்வு போன்ற உயிரி வேதி ஆய்வுகள், அடர்த்திக் கணிப்பு, புற ஊதா ஒளிர்வு போன்ற இயல்பியல் ஆய்வுகள், அகார் ஊடுருவுதல், நொதி இணை நோய்த் தடுப்புப் பகுப்பாய்வு போன்ற நீர் அறிமுறை ஆய்வுகள் போன்றவை பயனாகின்றன.
நோய்க் காரணி இயல் என்பதில் நோயிற்கான காரணம் பற்றி ஆராயப் படுகிறது. நோயின் காரணமாகத் தாவரங்கள் வெளிப் படுத்தும் அடையாளங்கள் அறிகுறி இயல் (Symptomology) எனப் படும். முதல் நிலை நோய்க் காரணி என்பது ஒரு தாவரத்திலிருந்து, நோயினை மற்றொரு தாவரத்திற்குப் பரப்பக் கூடியது. இது பாக்டீரியா, பூசணம் அல்லது வைரசாக இருக்கலாம். அல்லது நோய் மற்றொரு தாவரத்திற்குப் பரப்ப முடியாததாகவும் இருக்கலாம். எடுத்துக் காட்டாக, நைட்ரேட் மிகை நோயைக் கூறலாம். நோய் உயிரி என்னும் பெயர், வைரஸ், வைராய்டு போன்ற நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளுக்கே வழங்கப் படுகிறது. ஊட்டச் செறிவு அல்லது குறைவு போன்ற உயிர் அற்ற காரணிகளினாலும் நோய்கள் உண்டாகின்றன. ஒட்டுண்ணி என்பது ஓம்புயிரியில் இருந்து உணவினை உண்டு வாழும். நோய் ஏற்கக் கூடிய ஓம்புயிரித் தாவரத்திலிருந்து நோய் நுண்ணுயிரி உணவினைப் பெற்றுக் கொண்டு, ஓம்பியிரித் தாவரத்திற்கும் நோயினை உண்டாக்குகிறது. உயிரிக் கூட்டத்தில் நோய்ப் பரவும் விதம் பற்றிய ஆய்வு நோய்ப் பரவு இயல் எனப் படும். திடீரென விரைந்து பரவும் நோயிற்குக் கொள்ளை நோய் என்று பெயர்.
தாவர நோய்களின் வகைகள். முதலில் நோய்கள், அவற்றின் அறிகுறிகளின் அடிப்படையில் வகைப்பாடு செய்யப் பட்டன. நோய்களுக்கான காரணம் அறியப் படாததற்கு முன்பே, மூன்று பெரும் அறிகுறித் தொகுப்புகள் அறியப் பட்டன. அழுகல், புள்ளி வாடல் நோய்கள் நோய்ப் பாதிப்புற்ற செல் திசுக்களின் புரோட்டோ பிளாஸ்ட்டுகள் அழிவதால் உண்டாகின்றன. பச்சைய நீக்கம், குன்றிய வளர்ச்சி போன்றவை, தாவரங்களின் வளர்ச்சிக் குறைவினால் ஏற்படுகின்றன. இது நோயினை அடையாளம் கண்டு கொள்வதற்கும், நோய் அறிவதற்கும் பயன் படுகிறது. நோயிற்கு உரிய காரணிகளான பூசணம், பாக்டீரியா, வைரஸ், உருண்டைப் புழுக்கள் போன்றவை கண்டு பிடிக்கப் பட்ட பிறகு, நோய்க் காரணியைக் கொண்டு, நோய்களை வகைப்பாடு செய்வது எளிதாயிற்று. நோயிற்கு உரிய காரணி, தொற்று நோய்களை வகைப்பாடு செய்வது எளிதாயிற்று. நோயிற்கு உரிய காரணி தோற்று நோய்ப் பரப்பியாக இருந்தால், நோய்கள் பாக்டீரியாவாலும், வைரசாலும், உருண்டைப் புழுவாலும் உண்டாக்கப் படுகின்றன என்று வகைப்பாடு செய்யலாம். மேற்கூறியவற்றுள், பூக்கும் விதைத் தாவரங்கள், முன்னுயிரிகள், மைக்கோபிளாசம்கள், ஸ்பைரோ பிளாசம்கள், வைராய்டுகள் போன்ற நோய்க் காரணிகளும் சேர்க்கப் படுகின்றன.
இரண்டாம் தொகுதியில் தொற்று நோய் இல்லாத நோய்க் காரணிகளான காற்று மாசுகள், போதுமான அளவை விடக் குறைந்த அளவு ஆக்சிஜன் உள்ள நிலை, ஊட்டக் குறைவு அல்லது மிகையால் உண்டாகின்றன. பிற வகைப்பாடுகளில் குறிப்பிட்ட தாவர உறுப்புகளுக்கு ஏற்படும் நோய்கள், செயலில் தன்மை மாறுபாடுகளினால் உண்டாகும் நோய்கள் குறிப்பிட்ட தாவரத்திற்கு அல்லது கனி மரங்கள், காய்கறித் தாவரங்கள் போன்ற தாவரத் தொகுதிகளுக்கு உண்டாகும் நோய்கள் என்று வகைப்பாடு செய்யலாம். 1950ஆம் ஆண்டில் ஜி.எல்.மேக் நியூ என்பார், பின் வரும் செயலியல் காரணிகளினால், நல்ல நிலையில் உள்ள தாவரங்களில் நோய்கள் உண்டாகின்றன என்று கருதினார். அவை உணவுச் சேமிப்பு, சேமித்த உணவினைப் பயன் படுத்துதல், நீர், கனிமங்களை வேர்கள் உறிஞ்சுதல், ஆக்கு திசுக்களின் வளர்ச்சியும், வளர் முறையும், நீர் கடத்தல், ஒளிச் சேர்க்கை போன்ற செயலியல் தன்மைகளில் ஏற்படும் உலைவுகள் என்பன. மேற்கூறிய சிறப்பான செயலியல் தன்மைகளில் ஏற்படும் மாறுதல்களின் அடிப்படையில் நோய்கள் தொகுக்கப் பட்டன. இந்த நோய் வகைப் பாட்டியலில் நோயிற்கு உரிய காரணிகளை விட, நோய்த் தன்மைக்கு இன்றியமையாமை தரப் படுகிறது. எ–டு: நாற்றுகளில் உண்டாகும் கொள்ளை நோய். இந்த வகைப் பாட்டியலில் குறிப்பிட்ட நோய்க் காரணியை விடச் சூழ்நிலை எவ்வாறு நோய்ச் செயலினைப் பாதிக்கிறது என்பது சிறப்புப் பெறுகிறது.
தனி வளர்ப்பு (monoculture). ஒருமித்த மரபியல் தன்மை உடைய பயிர்களை உருவாக்கும் போது, நோய்கள் மிகுதியும் உண்டாகின்றன. இத்தகைய சூழ்நிலை தாவரத் தனி வளர்ப்பின் மூலம் ஏற்படுகிறது. 1970ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட மக்காச் சோள நோய் நவீன பயிர் வகைகளுக்கு உண்டாகும் நோயின் தீவிரத் தன்மையினை உணர்த்துகிறது. இதனால், உலகில் மக்களுக்குத் தேவையான மக்காச் சோளம் கிடைக்காமல் போயிற்று. புதிய நோய்த் தடுப்பு முறைகள், புதிய பூசணக் கொல்லிகள் போன்றவை கண்டு பிடிக்கப்பட்ட போதிலும், இன்று நோய்களினால் ஏற்படும் பயிர் இழப்பு மிகுந்தே உள்ளது.
நோய் அறிகுறிகள். தாவரங்களில் நோய்ச் செயல்களினால் ஏற்படும் வெளிப்பாடுகளே அறிகுறிகள் ஆகின்றன. இவை கட்புலனாகும் நிறம், அமைப்பு, உருவம் ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்கள் ஆகும். இந்நிலையில், இலைகளில் புள்ளிகள் உண்டாகி, மஞ்சள் நிறம் பெற்று இறுதியில் அவை அழிந்து விடுகின்றன. கனிகள், தாவரங்களில் இருக்கும் போது அல்லது சேமித்து வைக்கும் போது அழுகி விடுகின்றன; தண்டுகளில் திட்டுகள் உண்டாகின்றன; தாவரங்களில் கொள்ளை நோய் ஏற்பட்டு அவை வாடி விடுகின்றன; குறிப்பிட்ட நோய்கள் தனிப்பட்ட அறிகுறிகளைக் காட்டுவதால், நோயிற்கு உரிய நோய் நுண்ணுயிரிகளைக் கண்டு பிடிக்கவும் செய்கின்றனர். கட்புலனாகக் கூடிய வெளிப்படையான அறிகுறிகள் அமைப்பியல் அறிகுறிகள் எனப் படும்.
அனைத்து நோய் அறிகுறிகளையும் மூன்று பெரும் பிரிவுகளில், அவை தாவரங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பொறுத்து, வகைப்பாடு செய்யலாம். பெரும்பாலான நோய் நுண்ணுயிரிகள் திசுக்களை அழிக்கின்றன. இது திசு இறப்பு எனப் படும். திசு இறப்பின் தொடக்க நிலையில் நீர்க் கசிவு, மஞ்சள் நிறமாதல், வாடல் போன்றவை ஏற்படுகின்றன. செயல்களும், திசுக்களும் அழியும் போது, தாவரப் பகுதி அல்லது தாவரத்தின் தோற்றம் மாறுகிறது. அதனால், கொள்ளை, திட்டு நோய், புள்ளி அழுகல் போன்றவை உண்டாகின்றன. பெரும்பாலான நோய் நுண்ணுயிரிகள் திசு இறப்பினை உண்டாக்குவதில்லை; ஆனால், அவை செல் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. செல் எண்ணிக்கை, அளவுகளில் குறைவு ஏற்பட்டால், அத்தகைய நோய்ச் செயல், குறை வளர்ச்சி என்று வகைப்பாடு செய்யப் படும். செல் எண்ணிக்கை, அளவு ஆகியவை நோயினால் அதிகரித்தால், இந்நிலை மிகை வளர்ச்சி எனப் படும். மேற்கூறிய செயல்கள் நோய் நுண்ணுயிரிகளில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக ஏற்படுவதால், நோயினை அறிந்து கொள்வதற்கு அவை மிகவும் பயன் படுகின்றன. குறை வளர்ச்சித் தொகுப்பினுள் தாவர நிறம், அளவு, அமைப்பு முதலியவற்றின் குறைவினால் பல் வண்ணம் (mosaic), குவி மைய அமைவு (rosetting), வளர்ச்சிக் குறைவு போன்ற அடையாளங்கள் உண்டாகின்றன. மிகை வளர்ச்சியினால் முண்டுகள் பெருக்குப் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
நோய்க் காரணிகள்பூசணம், பாக்டீரியா, வைரஸ், வைராய்டு, உருண்டைப் புழு, ஒட்டுண்ணி விதைத் தாவரம் போன்ற காரணிகள், தாவரங்களில் நோய்களை உண்டாக்குகின்றன.
பூசணம். ஏனைய காரணிகளை விடப் பூசணமே பெருமளவில் தாவரங்களில் நோய்களை உண்டாக்குகிறது. பூசணத்தில் நிறமிகள் அற்ற பல்லாயிரக் கணக்கான இனங்கள் அடங்கியுள்ளன. இவற்றுள், பெரும்பாலானவை நுண்ணோக்கியினால் மட்டும் காணக் கூடிய அளவில் மிகச் சிறியவை. ஒரு சில பூசணங்களின் வாழ்க்கைச் சுழற்சியின் சில பருவத்தில் அவை கண்ணுக்குத் தெரியும் அளவிலான புதிய பூசணத்தைத் தோற்றுவிக்கின்றன. மிகச் சிறிய இவ்விதைகளால், பூசணம், பால் இனப் பெருக்கமும், பாலிலாப் பெருக்கமும் பெறுகின்றன. ஓம்புயிரித் தாவரங்களில் இருந்து உணவைப் பெற்று, வாழும் பூசண நோய் நுண்ணுயிரி, ஒட்டுண்ணி எனப் படும். உயிருள்ள தாவரத் திசுக்களுடன் மட்டுமே இயைந்து வாழும் பூசணம் முழு ஒட்டுண்ணி எனப் படும். ஒரு சில பூசணங்கள் தமக்குத் தேவையான உணவுப் பொருள்களை, இறந்த கரிமப் பொருள்கள் அல்லது உயிருள்ள தாவரங்களில் இருந்து பெற்றுக் கொள்கின்றன. இனப் பெருக்க நிலைகளில் அமைப்பியல் தன்மைகளின் அடிப்படையில், பூசணம் பல வகுப்புகளாக வகைப்பாடு செய்யப் படும்.
பாக்டீரியா. இது பேரினங்களைச் சார்ந்த 100 பாக்டீரியா இனங்கள் நோய்களைத் தோற்றுவிக்கின்றன.
பரவல். இவைகளில் உள்ள பாக்டீரியா நோய் உயிரிகள் மழைத் துளிகளாலும், காற்றினாலும் அடித்துச் செல்லப் பட்டு ஒரு தாவரத்தில் இருந்து, மற்றொரு தாவரத்திற்குப் பரவுகின்றன. இலை, தண்டுகளில் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் புறத் தோல் துளைகள், தண்டு துளைகள், திசு முறிவினால் இத்தகைய பாக்டீரியாக்கள் ஏனைய தாவரங்களிலும் பரவிச் சென்று, நோய் உண்டாக்குகின்றன. பூச்சி நீர்ப் பாசனத்திற்குரிய தண்ணீர், வளர் பருவத்தில் செய்யப் படும் பல பயிர் வளர்ப்புப் பணிகள் போன்றவற்றாலும் பாக்டீரியா நோய்கள் பரவுகின்றன.
நோய் தரும் பாக்டீரியா. தெள்ளுப் பூச்சி, விட்டில் பூச்சி போன்றவற்றுள் பாக்டீரியா தன் பணிக் காலத்தைக் கழிக்கும். மக்காச் சோள வாடல், நோயின் தீவிர தன்மை குளிர் கால வெப்ப நிலையைப் பொறுத்து அமைகிறது. ஏனெனில், அந்த குளிர் வெப்ப நிலையில் எத்தகைய விட்டில் பூச்சிகள் உயிர் வாழும் தன்மை பெற்றுள்ளன என்பதைப் பொறுத்து, அடுத்த பருவத்தில் மக்காச் சோளத்தில் வாடல் நோய் ஏற்படுகிறது. ஸ்பைரோபிளாஸ்மா போன்ற நோய் நுண்ணுயிரிகள், வெட்டுக் கிளிகளின் உடலினுள், குளிர் காலத்தைக் கழிக்கின்றன. ஓம்புயிரித் தாவரங்களுள் பெரும்பாலான பாக்டீரிய நோய் நுண்ணுயிரிகள் தம் ஒவ்வாத சூழ்நிலையைக் கழிக்கின்றன. ஓம்புயிரித் தாவரங்கள் கிடைக்காத போது, குறைந்த எண்ணிக்கையில் உள்ள பாக்டீரியாக்கள் மண்ணில் வாழ்கின்றன. குளிர் காலங்களில் ஓம்புயிரி இல்லாத புல் வேர்களில் பாக்டீரியாக்கள் நுழைந்து, அங்குத் தமக்கேற்ற அடுத்த பருவம் வரும் வரை உயிர் வாழ்கின்றன. ஒரு சில பாக்டீரியாக்கள் ஒவ்வாத குளிர் காலத்தில் விதைகளினுள் வாழ்கின்றன. உருளைக் கிழங்கில் வளைய அழுகல் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள், உருளைக் கிழங்குகளைச் சேமித்து வைத்திருக்கும் போது, அவற்றினுள் குளிர் காலத்தைக் கழித்து விடுகின்றன. உருளைக் கிழங்குகளை நடுவதற்காகக் கத்தியினால் நறுக்கும் போது, அந்தக் கத்தியில் ஒட்டிக் கொண்டு, நோய் இல்லாத கிழங்குகளிலும் இவை நோயைப் பரப்புகின்றன. தண்டு, மரப் பட்டை, இலையுறை, தாவரங்களில் இயற்கையாக ஏற்படும் திறவு, காயங்கள் மூலம் பாக்டீரியா நுழைய முடிவதில்லை. இலையில் உள்ள புறத் தோல் துளை, தண்டுத் துளை, இலையின் நீர்த் திறவு போன்றவை பாக்டீரியாவிற்கு இயற்கையாக அமைந்த உட்செல்லும் வழிகளாகச் செயல் பட்டு, அவற்றின் மூலம் பாக்டீரியா தாவரங்களினுள் நுழைகிறது. இலைகளை மென்று தின்னும் பூச்சி, வேர் முடிச்சு நோய் உண்டாக்கும் உருண்டைப் புழு போன்றவை தாவரங்களில் காயங்களை ஏற்படுத்துவதால், பாக்டீரியா அத்தகைய காயங்களினுள் நுழைய வாய்ப்பு ஏற்படுகிறது.
நோய்ச் செயல்பாடு. பாக்டீரியா, தாவரங்களில் நோய்களைத் தூண்டும் விதம் பற்றிச் சரி வர அறியப் படவில்லை. தாவரங்களில் உள்ள ஆயிரக் கணக்கான செல்கள், அவற்றைச் சூழ்ந்துள்ள பல்லாயிரக் கணக்கான செல்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இதனால், ஓம்புயிரித் தாவரத்தினுள் நொதிகளும், நச்சுப் பொருள்களும் நுழைய வாய்ப்பு உள்ளது. மென் அழுகல் நோய் உண்டாக்கும் பாக்டீரியா தன் நொதிகளினால், செல் இடைப் பொருள்களைக் குறைக்கிறது. இதனால் நீர், செல் இடைவெளிப் பகுதிகளில் கசிவதால், இதன் திசு மிகவும் மென்மையாகி விடுகிறது. புகையிலை நோயளிக்கும் பாக்டீரியா இலைகளின் மூலம் உட்சென்று, குறைந்த மூலக் கூற்று எடை கொண்ட நச்சுப் பொருள்களை உண்டாக்கி ஓம்புயிரிச் செல்களின் வளர் சிதை மாற்றத்தில், மஞ்சளான வெற்றிடங்களை உண்டாக்கும். காற்றுக் குழாய்க் கற்றைகளில் நோய் விளைவிக்கும் கோந்து போன்ற பொருளைப் பாக்டீரியா உற்பத்தி செய்கிறது.
கட்டுப்பாடு. சரி வரச் சிதைவடையாத தாவரமட்கு, விதை ஆகியவற்றிலிருந்து நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகள் தாவரங்களைத் தாக்கி, நோய் உண்டாக்குகின்றன. பயிற்சி முறை, நோய் உயிரி நீக்கிய விதைகளை விதைத்தல் மூலம் இலைகளைத் தாக்கும் பாக்டீரியாக்களைப் பெருமளவில் குறைக்கலாம். பாக்டீரிய இலை நோய்களுக்கு மருந்துத் தெளித்தல், தூவுதல் முதலியன பயனளிக்காமையால், நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற புதிய வகைகள் உருவாக்கப் பட்டன. ஆப்பிள், பேரி போன்றவற்றில் காணும் நெருப்புக் கொள்ளை நோயிற்கு, இது வரை சரியான பொருளாதாரப் பயன் உடைய தெளித்தலோ, தூவுதலோ கண்டு பிடிக்கப் படவில்லை. தக்காளி, உருளைக் கிழங்கு வாடல் நோயினை உண்டாக்கும் பாக்டீரியா மண்ணில் நீண்ட காலம் நிலைத்து வாழ்கிறது. நோய்க் கட்டுப்பாட்டு முறையில் நோய்த் தடுப்பு ஆற்றல் பெற்றவற்றை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. மக்காச் சோளத்தில் உண்டாகும் நோயினைத் தடுக்கப் பயிர்ச் சுழற்சி முறை பயன் படுகிறது. சிறிய வீட்டுத் தோட்டங்களில், மண்ணோடு கலந்துள்ள நோய் விளைவிக்கும் பாக்டீரியாவை நீக்க, மெத்தில் புரோமைடு, புகையூட்டம் முதலியன போடப் படுகின்றன. கண்ணாடி வீடுகளில் உள்ள தாவரங்களில் உண்டாகும் பாக்டீரிய நோயினை நீக்க, நீராவியின் மூலம் உயிரி நீக்கம் செய்யப் படுகிறது. வெள்ளரி வாடல் நோயினை உண்டாக்கும் பாக்டீரியா, பூச்சிகளின் மூலம் பரவுவதால், பூச்சிகளை அழித்து, வாடல் நோயைக் கட்டுப் படுத்தலாம்.
வகைப்பாடு. தாவரங்களில் நோய் உண்டாக்கும் பாக்டீரியாவை அதன் பண்பு, செல் அமைப்பியல், நிறங்களை ஏற்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இனங்களாகப் பிரிக்க இயலாது. இதனால், உயிரி வேதியியல், இயற்பியல் ஆய்வுகள் மூலம் பொதுவாகப் பாக்டீரியாவை வேறுபடுத்தி உணர இயலும். பாக்டீரியப் புரத ஆய்வு, டி.என்.ஏ. கலப்பு முறை, கொல்லிகளுக்கு ஈடு கொடுக்கும் தன்மை, புரதங்களின் மின் பகுப்பு ஆய்வு போன்ற செயல்முறைகளினால் பாக்டீரியாவை இனங் காணலாம்.
வைரசும் வைராய்டும். தாவரங்களில் நோய் உண்டாக்கக் கூடிய மிக எளிய அமைப்புடைய இவற்றின்அடிப்படை நியூக்ளிய அமிலங்கள் ஆகும். வைரசில் நியூக்கிளிய அமிலத்தைச் சுற்றிலும், ஒரு புரத உறை உள்ளது. ஆனால், வைராய்டில் இத்தகைய புரத உறை கிடையாது. ஏறத் தாழ 400 வைரஸ்களும், 10 வைராய்டுகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இவற்றின் நுண்ணிய அளவினால், எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் மூலமே இவற்றைக் காண இயலும். இவை கோள வடிவமாகவும், குழல் வடிவமாகவும் உள்ளன. கோள வடிவ வைரஸ்கள் 25–50 நானோ மீட்டர் விட்டம் உடையவை. குழல் வடிவ வைரஸ்கள் 12–15 நானோமீட்டர் விட்டமும் 200–2000 நானோமீட்டர் நீளமும் கொண்டுள்ளன. பெரும்பாலான தாவர வைரஸ்களில், ஒற்றை இழை கொண்ட 1.5–4 மில் லியன் மூலக் கூறு எடை உள்ள ஆர்.எஸ்.ஏ. காணப் படுகின்றது. பல கோள வடிவமான வைரஸ்களில், இரட்டை இழை உடைய 10–20 மில்லியன் மூலக் கூற்று எடை கொண்ட ஆர்.என்.ஏ. இழைகள் உள்ளன. ஒரு சில வைரஸ்களில் 4–5 மில்லியன் மூலக் கூற்று எடை உள்ள இரட்டை டி.என்.ஏ. உள்ளது. சில வைரஸ்களில் 0.8 மில்லியன் மூலக் கூற்று எடை உள்ள ஒற்றை இழை டி.என்.ஏ. உள்ளது.
இரட்டிப்பு. வைரஸ் இரட்டிப்பதற்கு, உயிருடைய செல்கள் தேவைப் படுகின்றன. புகையிலைப் பல வண்ண வைரஸ், வெள்ளரிப் பல் வண்ண வைரஸ் ஆகியவை பல தாவர இனங்களிலும் காணப் படுகின்றன. கோதுமைக் கீற்றுப் பல் வண்ண வைரஸ் ஒரு சில புற்களில் மட்டுமே உள்ளது. தாவரங்களில் உள்ள காயங்கள் மூலம், வைரஸ் நுழைகிறது. வைரசில் உள்ள புரத உறை அகன்று, நியூக்ளிய அமிலம் ஓம்புயிரித் தாவரச் செல்லினுள் விட்ப் படுகிறது. வைரசில் உள்ள டி.என்.ஏ, ஆர்.என்.ஏ. போன்ற சேர்க்கைக்கு உரிய புரதங்களை உற்பத்தி செய்கின்றன. நியூக்ளிய அமிலம் இரட்டிப்பு அடைந்து, புரத உறை உண்டாகிறது. நியூக்ளிய அமிலமும், புரத உறையும் இணைந்து, வைரஸ் உண்டாகிறது. வைராய்டு இரட்டிப்பு அடையும் விதம் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. வைரஸ் ஒரு செல்லில் இருந்து, ஏனைய செல்களுக்கு எளிதாகப் பரவுகிறது. சில தாவரங்களில், முதலில் வைரஸ் நுழைந்த செல்கள் இறந்து விடுவதால், மீண்டும் வைரஸ் பரவுதில்லை.
பரவல். தாவரங்களுக்குத் தாவரம் வைரஸ்கள் ஊடுருவிச் செல்வது, பல விதஙகளில் நடைபெறுகிறது. தாவரப் பகுதிகளை ஒட்டு வைக்கும் போது, நோயுற்ற பகுதியிலிருந்து, நோயற்ற பகுதிக்கு வைரஸ் ஊடுருவி விடுகிறது. விதையிலாப் பெருக்கத்திற்கு எனத் தேர்ந்தெடுக்கப் படும் நறுக்குகள் வைரஸ் நோய் அற்றவையாக உள்ளமை அறியப் பட்ட பின்னரே, அவற்றை நிலத்தில் நட வேண்டும். நோயுற்ற இலைகள் நோயற்ற இலைகளுடன் உராயும் போது, உண்டாகும் காயங்களின் மூலம் வைரஸ் உட்சென்று விடும். வைரஸ் நோயுள்ள தாவரங்களை உண்ணும் பூச்சி, உருண்டைப் புழு, பூசணம் ஆகியவை வைரஸ் நோயினைத் தமக்குள் சில காலம் வைத்திருந்து, பிறகு அவை நோயற்ற தாவரங்களை உண்ணும் போது, அவற்றினுள் நோய் பரவுகிறது. நோயற்ற விதைகளின் மூலம், சில வைரஸ்கள் பல சந்ததிகளிலும் நோயினை உண்டாகுகின்றன. நோயற்ற தாவரங்கள், நோயுற்ற தாவரங்களில் தொடர்பு கொள்வதன் மூலமும், வெட்டும் கருவிகளின் மூலமும் வைராய்டுகள் பரவுகின்றன. கட்டுப்பாடு. நோய் எதிர்ப்புத் திறம் பெற்ற வகைகளைப் பயிர்ப் பெருக்க முறையில் உண்டாக்கியும், வைரஸ் இல்லாத தாவரங்களைப் பெருக்கத்திற்குப் பயன்படுத்தியும், வைரஸ் இல்லாத விதைகளை விதைப்பதன் மூலமும்,வைரஸ் பரப்பும் மாற்றிகளை அழிப்பதன் மூலமும், சில தாவரங்களில் மிதமான வைரஸ்களை, ஓம்புயிரித் தாவரத்தில் செலுத்துவதன் மூலமும், தாவரங்களை வைரஸ் நோய்களிலிருந்து காக்கலாம். முறைக்கு மிகுந்த செலவாகுமாதலால், பொருளாதாரச் சிறப்பு வாய்ந்த பணப் பயிர்களான உருளைக் கிழங்கு போன்றவற்றில் ஏற்படும் தங்க நிற உருண்டைப் புழுக்களைத் தடுக்கவே, இத்தகைய மண் புகையூட்டம் மேற்கொள்ளப் படுகிறது. உயிருள்ள தாவரங்களில் உள்ள உருண்டைப் புழுக்களைக் கட்டுப் படுத்த ஆர்க்னோபாஸ்ஃபேட், கார்பமேட் பூச்சிக் கொல்லிகள் பெரிதும் பயனாகின்றன.
விதைத் தாவரங்கள் . ஏறத்தாழ 3000 விதைத் தாவரங்கள் ஒட்டுண்ணிகளாக வாழ்க்கை நடத்துகின்றன. லொராந்தேசி, விஸ்கேசிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் ஒட்டுண்ணிகளாக உள்ளன. கண்வால்வுலேசி என்னும் குடும்பத்தில் ஒரே ஒரு பேரினம் மட்டும், அதாவது கஸ்குடா என்னும் தாவரம் மட்டும் ஒட்டுண்ணியாக உள்ளது. பெரும்பாலான ஒட்டுண்ணித் தாவரங்கள் தரை வாழ்வன. இவை ஓம்புயிரித் தாவரங்களின் வேர்கள் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அவற்றின் உணவுப் பொருள்களை உண்டு வாழ்கின்றன. சில தாவரங்கள் உணவு தயாரித்து, நிலத்தில் தற்சார்பு உடையவையாக வாழ்கின்றன. இவை தகுந்த ஓம்புயிரித் தாவரம் கிடைத்து, அதனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட பின்னரே, பூக்கத் தொடங்குகின்றன. இவை குறை ஒட்டுண்ணிகள் எனப் படும்.
ஸ்டிரிகா ஆசியாடிகா என்னும் குறை ஒட்டுண்ணிச் செடி மக்காச் சோளம், சோளம் ஆகிய தானியப் பயிர்களின் வேர்களில் ஒட்டிக் கொண்டு, அவற்றின் நீர், கனிமப் பொருள்களை உறிஞ்சி வாழ்வதால், தானியப் பயிர்கள் பெரிதும் பாதிக்கப் படுகின்றன. லொராந்தஸ், விஸ்கம் போன்ற தண்டு ஒட்டுண்ணிகள் காடு, கனித் தோட்டங்கள், அழகிற்காக வளர்க்கப் படும் மரங்கள் போன்றவற்றில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து, அவற்றில் பேரழிவை உண்டாக்குகின்றன. ஒட்டுண்ணி எதிர்ப்புத் திறன் பெற்றவற்றை உருவாக்குதல், குறைந்த அளவு நோய் ஏற்கும் இனங்களைப் பயிரிடுதல், வேதிப் பொருள்களைப் பயன் படுத்துதல், ஒட்டுண்ணி தாக்கப்பட்ட கிளைகளைக் களைதல், நோயுற்ற தாவரங்களையே அகற்றுதல் போன்ற பல ஒருமித்த செயல்களினால், ஒட்டுண்ணிகளிடமிருந்து பயன் தரு தாவரங்களைக் காக்கலாம்.
நோய்த் தொற்றாத காரணிகள். நோய் தொற்றாத காரணிகளினால் ஏற்படும் அறிகுறிகள்,மேலும் பரவுவதில்லை. இவை ஊட்டப் பொருள் மிகை அல்லது குறைவால் உண்டாகின்றன. மேலும் மாசுகளும், தாவரங்களுக்குப் புறத்தே ஏற்படும் உயிரியல் விளைவுகளும், நோய்த் தொற்றாத காரணிகளாக விளங்குகின்றன.
ஊட்டப் பொருள் குறை அல்லது மிகை. தாவரங்களின் இயல்பான வளர்ச்சிக்குத் தாவரங்களுக்கு நைட்ரஜன், பாஸ்ஃபேட், பொட்டாசியம் போன்றவை தொடர்ச்சியாகத் தேவைப் படுகின்றன. மண்ணில் உள்ள அமில–கார வினை களினால் ஊட்டப் பொருள் கிடைப்பது பாதிக்கப் படுகிறது. நைட்ரஜன் குறை உள்ள தாவரங்களின் இலைகளில் பச்சய நீக்கம் உண்டாகி, அதனால் முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறம் அடைகின்றன. பாஸ்ஃபேட் குறை உள்ள தாவரங்களின் இலைகள் இயல்பான இலைகளை விடக் கரும் பச்சை நிறமாகவும், நுனி சிவந்தும் காணப் படும். பொட்டாசியம் குறைவாக உள்ள தாவரங்களின் இலைகள் பசுமை நிறமும், நுனி விளிம்புகளில் புள்ளிகளும் பெற்று இருக்கும். சிறு ஊட்டப் பொருள் குறைவினாலும், பல நோய்கள் ஏற்படுகின்றன. பேரான் குறைந்தால், ஆப்பிள் கனியினுள் தக்கைத் திசு உண்டாகும். கால்சியம் குறைவினால், தக்காளியில் நுனிப் பூ அழுகல் ஏற்படும். இரும்பு குறைந்தால், பச்சய நீக்கம் ஏற்படும். மாங்கனீஸ் குறைந்தால், ஓட்ஸ் இலைகளில் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். மாலிப்டினம் குறைவினால், காலிஃபிளவரில் சாட்டை வால் நோய் காணப் படும். துத்தநாகக் குறைவால், பீச் மரத்தில் சிற்றிலைகள் தோன்றும்.
மாசுப் பொருள்கள். பூச்சி கொல்லி மருந்துகளைப் பெருமளவில் பயன் படுத்தினாலும், தாவரங்களுக்குத் தீமை உண்டாகிறது. பூசணக் கொல்லி, பூச்சி கொல்லிகளைத் தவறாகப் பயன் படுத்தவும் கூடாது. செடிக் கொல்லிகளைத் தெளிப்பான் மூலம் தெளிப்பதால், அருகமைந்த நிலப் பகுதியில் உள்ள பயிர்களுக்குத் தீமை ஏற்படுகிறது. செடிக் கொல்லி மருந்துகள் மண்ணில் தங்குவதால், அடுத்த பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கும் அழிவு உண்டாகிறது. செடிக் கொல்லி மருந்துகள், மண்ணினுள் நுழைந்து கிணற்று நீரில் கலந்தால், அந்த நீரைப் பயன்படுத்துவோருக்கும், விலங்குகளுக்கும், தாவரங்- களுக்கும் இடர் ஏற்படும். தூவுவான், தெளிப்பான், கலப்பான் போன்ற கருவிகளை நன்றாகத் தூய்மை செய்யாவிடில், செடிக் கொல்லி மருந்துகள் மாசாகக் கலந்து தீமை உண்டாக்கும்.
சல்ஃபர் கலந்துள்ள தொல்லுயிர்ப் படிம எரி பொருள்களை எரிப்பதாலும்,உலோக சல்பைடுகளைத் தூய்மை ஆக்கும் போதும், சல்பர் ஆக்சைடுகள் உண்டாகின்றன. நிலம் சூழ் ஓசோன், கதிரவனில் இருந்து வரும் வெப்பம் மக்களை அடையா வண்ணம் காக்கிறது. தொல்லுயிர்ப் படிம எரி பொருள்களைப் பயன் படுத்தும் ஊர்திகளில் இருந்து, ஹைட்ரோ கார்பன் மாசுகள் உண்டாகின்றன. தாவரங்களுக்குத் தீமை உண்டாக்கும் பிற காற்று மாசுகளும் உள்ளன. அலுமினியம், எஃகு, பீங்கான் பாத்திரங்கள், பாஸ்ஃபேட் உரங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வளிம வடிவில் ஃபுளோரைடு மாசுகள் தோன்றுகின்றன. இயற்கையாகக் கிடைக்கும் மீதேன், அதன் உண்மை வடிவில் தாவரங்களுக்கு நச்சாக அமைவதில்லை; ஆனால், அது மண்ணில் உள்ள மீதேனை உண்டு வாழும் பாக்டீரியாக்களுக்கு உணவாகிறது. இத்தகைய பாக்டீரியாக்கள் எண்ணிக்கையில் மிகப் பலவாகப் பெருக, மண்ணில் உள்ள ஆக்சிஜன் அளவுக் குறைவினால், உயர் தாவரங்களின் வேர்கள் கொல்லப் படுகின்றன. சல்ஃபர் ஆக்சைடு, ஃபுளோரைடு போன்ற மாசுப் பொருள்களைத் தாக்கமுற்ற தாவரங்களில் காண இயலாது. தனித் தனியாக இருப்பதை விட, ஓசோன், சல்ஃபர் ஆக்சைடு இரண்டும் கலந்திருந்த போது, தாவரங்களுக்குத் தீமை மிகுந்தமை அறியப் பட்டது. காற்று மாசுப் பொருள்களினால் இலைகளில் புள்ளிகளும், பல்வகை நிறங்களும் உண்டாகின. இலை, கனிகளில், சிவப்பு நிறம் அற்றுப் போய், பூ உறுப்புகள் வாடி, குறை வளர்ச்சி ஏற்பட்டு,தாவரம் முழுவதும் உள்ள தாவரப் பகுதிகள் அழிந்தன.
வெளி உயிரினங்களின் உயிரியல் விளைவுகள். ஆப்பிளில் இருந்து உண்டாகும் எதிலின், கேரட்டில் ஏற்படுத்தும் விளைவினை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். ஒரு தாவரத்தில் இருந்து உண்டாகிய நச்சுப் பொருள், மற்றத் தாவரத்தில் உண்டாகும் தீய விளைவும் இதில் அடங்கும். கறுப்பு வால்நட் மரங்களின் வேர்கள் உள்ள மண் பகுதியில், ஏனைய தாவரங்கள் நன்றாக வளர்வதில்லை. கறுப்பு வால்நட் மரங்கள் குயுனோனிக் சேர்மங்களைச் சுரப்பதால், மேற்கூறிய விளைவு ஏற்படுகிறது. பாசில்லஸ், சிரியஸ் போன்ற பாக்டீரியாக்களில் இருந்து சுரந்த ஐசோலுசின் என்னும் நச்சுப் பொருளால், புகையிலையில் நோய் ஏற்படுகிறது.
வாழ்க்கைச் சுழற்சி. தாவரங்களில் நோய் நுண்ணுயிரிகள் நோய்களைத் தொடக்கிப் பல தொடர்ச்சியான நிலைகளில் கீழ்க் காணும் நோய்ச் சுழற்சியினை உண்டாக்குகின்றன. இதில், நோய் உயிரிகள் குளிர் காலத்தைக் கழித்தல், நோய் உயிரிகளின் நுழைவு, பரவுதல், நோய் உண்டாக்குதல், வளர்ச்சி மற்றும் பெருக்கத்தினால் புதிய தாவரங்களில் நோய் உண்டாக்குதல் போன்றவை அடங்கும்.
குளிர் காலத்தைக் கழித்தல். நோய் உயிரிகள் தம் குளிர் காலத்தை, மரங்களின் தரைக் கீழ்ப் பகுதிகளில் கழிக்கின்றன. சில நோய் உயிரிகள் பல்லாண்டு வாழ் தாவரங்களிலும், தாவரமட்கிலும், விதைகளிலும், பூச்சிகளிலும் மண்ணிலும் கழிக்கின்றன. உயிள்ள செல்களில் மைக்கோப்பிளாஸ்மா, வைரஸ், முன்னுயிரி ஆகியவை தம் குளிர் காலத்தைக் கழிக்கின்றன. உயிருள்ள செல்களுடன் தொடர்பு கொண்டுள்ள போது, பாக்டீரியா குளிர் காலத்தைக் கழிக்கிறது. பூசணம். ஒட்டுண்ணி உயர் தாவரங்கள், உருண்டைப் புழு போன்றவை குளிர் காலத்தை முறையே விதை, விதை முட்டை போன்றவற்றில் கழிக்கின்றன.
நோய் உயிரியின் உற்பத்தியும், வெளியீடும். நோய் உயிரிகள் புதிய தாவரங்களில் நுழைவதற்கு வைரஸ், பாக்டீரியா, பூசணம், ஒட்டுண்ணி உயர் தாவரங்கள் ஆகியவற்றின் உடலப் பகுதி அல்லது விதைகளைப் பயன் படுத்துகின்றன. வளர் பருவத்தில் நோய் புகுத்தப் படுவது முதல் நிலை நோய்ப் புகுத்துதல் எனப் படும். இதனால், முதல் நிலை நோய்கள் ஏற்படுகின்றன. சில வகை வைரஸ், மைக்கோப்பிளாஸ்மா, முன்னுயிரி, பாக்டீரியா போன்றவை தாவரங்களின் வெளியே நோயைப் புகுத்தாமல், மொட்டு, ஒட்டு, பூச்சி மாற்றி போன்ற உயிருள்ள செல்களில் நோயினை மாற்றுகின்றன. பூசணம், ஒட்டுண்ணி உயர் தாவரங்கள், பெரும்பாலான பாக்டீரியாக்கள், உருண்டைப் புழு ஆகியவை, ஓம்புயிரித் தாவரங்களின் வெளிப் புறத்தில் நோயைப் பரப்புகின்றன அல்லது ஈரம் இருந்தால், தாவரத்தில் இருந்து வெளியேறுகின்றன.
உருண்டைப் புழு. அண்டார்டிக் கடல் முதல் வெப்ப நீருற்று வரையிலான நீர்ச் சூழல்களில் காணப் படும் முதுகெலும்பு இல்லாத விலங்குத் தொகுதி, உருண்டைப் புழுவாகும். இது நன்னீர்ச் சூழலிலும், கடல் நீர்ச் சூழலிலும் காணப் படும். தாவரங்கள் வாழும் மண் துகள்களைச் சூழ்ந்துள்ள நீர்ப் படிவங்களில் வாழும். பெரும்பாலான உருண்டைப் புழுக்கள், நுண்ணோக்கியினால் மட்டுமே காணத் தக்க சிறு தாவரங்கள், விலங்குகள், பாக்டீரியாக்களை உண்டு வாழ்கின்றன. ஒரு சில உருண்டைப் புழுக்கள், கொக்கிப் புழு,ஊசிப் புழு, மண் புழு,விலங்கு ஒட்டுண்ணி ஆகியவற்றை உண்டு வாழ்கின்றன. உருண்டைப் புழுவின் வெளிப் புறத்தில் ஒட்டு உறுப்பு இராமையால், இது பாம்பு போல் நகர்ந்து செல்கிறது. இது முட்டை மூலம் இனப் பெருக்கம் செய்கிறது. இதற்கு ஆண், பெண் இனப் பெருக்க உறுப்புகள் காணப் படுகின்றன. தனித்த ஆண் புழுக்களைக் காண்பது அரிது; அனைத்து இனங்களிலும், நான்கு இளம் நிலைகளும், சட்டை உரித்தலுக்குப் பிறகு, முதிர்ச்சிப் பருவமும் காணப் படும் முட்டைக் கூட்டினுள்ளேயே, முதல் சட்டை உரிதல் நிகழ்கிறது. ஒரு சில இனங்களில், முதிர்ச்சி அடைந்த பெண் புழு உப்பிய நிலையை எய்தி, இயக்கம் எதுவும் இன்றி, ஒரே இடத்தில் நிலையாக உள்ளது.
தீமை. அக ஒட்டுண்ணிகள் திசுக்களைத் தின்பதால், வேர்ப் பகுதியில் உள்ள திசுக்களில் அழிவு உண்டாக்குகிறது. இத்தகைய இயக்கம் உடைய உருண்டைப் புழு இலைகள் வரை சென்று, அங்கு பல பழுப்பு நிறப் புள்ளிகளை உண்டாக்குகிறது. இயக்கமற்ற ஒரே இடத்தில் உள்ள அக ஒட்டுண்ணிகள் ஓம்புயிரித் தாவரச் செல்களைக் கொல்லாமல்,அவற்றில் மாறுதல்களைத் தூண்டி, முண்டுகளை உண்டாக்குகின்றன. உருண்டைப் புழுவின் தலையைச் சூழ்ந்துள்ள ஓம்புயிரித் தாவரத்தின் செல்கள், தடித்த செல் சுவர்கள், அடர்த்தியான சைட்டோப்பிளாசம், நியூக்ளியஸ் ஆகியவற்றுடன் செல்கள் பெருப்பதால், அப்பகுதிகளில் மட்டும் முண்டுகள் ஏற்படுகின்றன. ஓம்புயிரித் தாவரத்திலிருந்து பெற்ற ஊட்டப் பொருள்கள், இத்தகைய பேருருவச் செல்களில் மிகுதியாக உள்ளன. ஒரு சில இனங்களில் தண்டு அல்லது விதைகளிலும் முண்டுகள் உண்டாகின்றன. ஒரு சில புற ஒட்டுண்ணிகளும் முண்டுகளைத் தோற்றுவிக்கின்றன.
புழுக்கள் உள்ள வேர் நுனிகள், தம் ஆற்றல் தன்மையினை இழந்து வளராமல் நின்று, அதனால், வேர்த் துடிப்போ, அழிவோ அடையாமல் இருக்கும். உருண்டைப் புழு,தாவரங்களில் நேரடியாகத் தீமையை உருவாக்குவதுடன், நோய்க் கூட்டுகளுக்கு உரிய சிறப்பான காரணியாகவும் விளங்குகிறது. நைவுப் புண், முண்டு மூலம் மண் வாழ் பூசணமும், பாக்டீரியாவும் நுழைகின்றன. உருண்டைப் புழு உடன் இருக்கும் போது, மண் வாழ் நோய் நுண்ணுயிரிகள் உண்டாக்கும் நோய்கள் தீவிரமாக உள்ளன. மண் வாழ் நோய்ப் பூசணத்திற்கு, எதிர்ப்புத் திறம் பெற்ற தாவர வகைகளினுள் இதற்கு முன்னர், ஒட்டுண்ணி உருண்டைப் புழுக்கள் வாழ்ந்தால், அத்தகைய தாவரங்கள் தம் எதிர்ப்புத் தன்மையினை இழந்து விடுகின்றன.
கட்டுப்பாடு. நோயற்ற தாவரங்களுடன், பயிர்ச் சுழற்சி செய்து, பயிரிட்டும் உருண்டைப் புழு எதிர்ப்புத் திறம் பெற்ற வகைகளைப் பயிரிட்டும், தாவர ஒட்டுண்ணி உருண்டைப் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம். சாமந்தியைப் போன்ற சில தாவரங்கள், உருண்டைப் புழுக்களுக்கு நச்சாக உள்ள சிறு சேர்மங்களைச் சுரக்கின்றன. நீர்ப் பாசன முறை மூலம் தாவரத் தீமைகளைக் குறைக்கலாம். பொட்டாசியத்தைக் கலந்து, நீர்ப் பாசனம் செய்வதால் உருண்டைப் புழுவினால் இழப்பு ஏற்பட்ட பொட்டாசியத் தாவரங்கள் மீண்டும் பொட்டாசியத்தைப் பெற வாய்ப்புள்ளது. விலங்கு உரம், தழை உரம், கரிமக் கழிவுப் பொருள்கள் ஆகியவை உருண்டைப் புழுவினை உண்ணக் கூடிய பூசணம் உண்டாகும் சூழலை ஏற்படுத்துகின்றன. வேதிக் கட்டுப்பாட்டில், மண்ணில் நீர்ம வடிவத்தில் உள்ள வேதிப் பொருள்கள் உருகி, நச்சுத் தன்மை உடைய புகையை உண்டாக்குவதால், இப்புகை மண்ணினுள் ஊடுருவிச் செல்கிறது.
நோயைப் பரப்புதல். காற்று, மழை, பூச்சி, விலங்கு, மனிதரால் பயன் படுத்தப் படும் கருவி போன்றவற்றால் நோய்கள் பரவுகின்றன. பாக்டீரியா, பூசணம், உருண்டைப் புழு போன்றவை ஒரு சில செ.மீ. வரை நகருகின்றன.
நோய் நுழைவு. நோய் உயிரி, நோய் ஏற்கக் கூடிய ஓம்புயிரித் தாவரத்தில் நுழைந்து, நோய் உண்டாக்குகிறது. ஓம்புயிரித் தாவரத்துடன் தொடர்பு ஏற்பட்டாலோ, காயங்கள் அல்லது இயற்கைத் திறவுகள் மூலமாகவோ, நோய் உயிரிகள் நுழைகின்றன. வைரஸ், மைக்கோப்பிளாஸ்மா, முன்னுயிரி, சில பாக்டீரியாக்கள் போன்றவை பூச்சி மாற்றிகள் மூலம் ஓம்புயிரித் தாவரங்களிலும் நுழைகின்றன. மேற்கூறிய நோய் உயிரிகள், தாவரங்களின் மேற்பரப்பில் தொடர்பு ஏற்படுத்தி, காயங்கள் அல்லது புறத் தோல் துளைகள், தண்டுத் துளைகள் மூலமாக நுழைகின்றன. நோய் உயிரிகள் நோய் ஏற்கக் கூடிய தாவரங்களில் நேரடியாக நுழைந்து, நொதிகளைச் சுரந்து செல் சுவர்களைக் கரைத்து, தாவரங்களில் இயற்பியல் அழுத்தம் தருகின்றது.
நோய் உண்டாதல். ஓம்புயிரித் தாவரங்கள் ஊட்டப் பொருள்களை உறிஞ்சத் தொடங்கிய உடனே, நோய் உண்டாகிறது. ஓம்புயிரித் தாவரம், நோய் உயிரினை எதிர்த்துப் போராட, அதைக் கொன்று விடுகிறது. அல்லது தீமையான விளைவுகளை நிறுத்துகிறது. நோய் உயிரியின் நோயினால், ஓம்புயிரித் தாவரம் அழிவதுன்டு. நோய் ஏற்கும் தன்மையும், நோய் உண்டாக்கும் தன்மையும், ஒத்து வரின், நோய் உண்டாகிறது. சில சமயங்களில், தொடக்கத்தில் உண்டாகும் இத்தன்மையும் நோய் உயிரி உண்டாக்கும் எலக்டின் என்னும் புரத மூலக் கூறுகளுடன் ஓம்புயிரித் தாவரம், அதன் பரப்பில் உண்டாக்கும் சிக்கலான சர்க்கரை மூலக் கூறுகளுடன் ஒத்தியங்கும். நோய் உயிரி நோய் உண்டாக்கும் போது, தாவரச் செல்களை மட்டுப் படுத்தி, நச்சுப் பொருள்களைத் தோற்றுவித்து அவற்றால், தாவரப் புரதங்களைச் செயல் இழக்கச் செய்து, தாவரச் சவ்வுகளின் பணிகளை அழித்து, தாவர ஹார்மோன் சம நிலையைக் குலைக்கும் வளர்ச்சி சீராக்கிகளை உண்டாக்கும். நோய் உயிரிக்கு எதிராகத் தாவரங்களும், நொதி நச்சுப் பொருள், வளர்ச்சிச் சீராக்கி முதலியவற்றை உண்டாக்கி, நோய் உயிரிக்கு எதிராகத் தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றன. நோய் ஏற்பவைக்கும், நோய் உயிரிக்கும் இடையே ஏற்படும் வினை, எதிர் வினை ஆகியன அவற்றின் குரோமாசோம்களில் அமைந்த டி.என்.ஏ மூலக் கூற்றினால் தீர்மானிக்கப் படும். அண்மைக் கால ஆய்வுகளின்படி, சில குறிப்பிட்ட நோய்களை உண்டாக்கும் நோய் உயிரிகளில் பிளாஸ் மிடுகள் என்னும் வட்ட வடிவமான டி.என்.ஏ. இழைகளுடன் கூடிய கூடுதலான மரபியல் பொருள்கள் உள்ளன என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
பிளாஸ்மிடு டி.என்.ஏ.இல் உள்ள மரபிகள் நச்சுப் பொருள்களை உற்பத்தி செய்து, கட்டுப்பாடு அற்ற செல் பகுப்புகள் தொடர்ந்து விரைவில் நடைபெறுவதால், முண்டு உண்டாகிறது. தாவரத்தில் நோய் உண்டாகும் போது, தாவரத்தின் பகுதிகள் அழிக்கப் படுகின்றன அல்லது நோய் ஏற்கும் தாவர, நோய் உயிரிச் சேர்க்கைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளப் படுகின்றது. நோய் தொடங்குவதற்கும், நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கும் இடையே உள்ள காலம், குறிப்பிட்ட நோய் ஏற்பி நோய் உயிரிச் சேர்க்கைக்குக் குறிப்பிட்டுச் சொல்லும் படியாகவும், அங்கு நிலவும் வெப்ப நிலைக்கு ஏற்றதாகவும் அமையும். பெரும்பாலான நோய்களில், இந்த இடைப்பட்ட காலம் 2 நாள்கள் முதல் 3 வாரங்களாகவும், சில நோய்கள் 2 முதல் 3 ஆண்டுகளாகவும் உள்ளன.
நோய் உயிரியின் வளர்ச்சியும், பெருக்கமும். நோய் உண்டாகும் போது, தாவரத்தில் உள்ள பெரும்பாலான நோய் உயிரிகள் அளவில் பெருக்கம் அடையாமல், எண்ணிக்கையில் மட்டும் பெருக்கம் அடைகின்றன. நோய் உண்டாக்கும் பூசணங்களும், ஒட்டுண்ணி உயர் தாவரங்களும் தம் அளவில் அதிகரிக்கின்றன. தாவரங்களில் நோய் உண்டாக்கும் நோய் உயிரிகளான பாக்டீரியா, மைக்கோ பிளாஸ்மா, முன்னுயிரி போன்றவை பிளவு முறையில் பெருக்கம் அடைகின்றன. அதாவது, ஒவ்வொரு நோய் உயிரியும், தம்மை முற்றிலும் ஒத்த மற்றொரு நோய் உயிரியை உண்டாக்குகிறது. தாவரங்களுள் உருண்டைப் புழுக்கள் இட்ட முட்டைகளில் இருந்து, பல புதிய புழுக்கள் உண்டாகின்றன.
பெரும்பாலான பாக்டீரியாக்களும், உருண்டைப் புழுக்களும் ஓம்புயிரித் தாவரத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் பரவுகின்றன. ஓம்புயிரித் தாவரங்களின் வேர்கள், மன் பரப்பில் நுழையும் போது, ஒட்டுண்ணிப் பூசணங்கள் உண்டாக்கும் எண்ணிறந்த விதைகள் மூலம் ஓம்புயிரித் தாவரங்களுக்கு வெளியில் தம் விதைகளைத் தோற்றுவிக்கின்றன.இவ்வாறு, ஒவ்வொரு நோயுற்ற தாவரத்திலும், கோடிக் கணக்கான புதிய நோய் உண்டாக்கிகள் தோற்றுவிக்கப் பட்டுத் தக்க சூழ்நிலைகளில் நோய் எங்கும் பரவி, புதிய இரண்டாம் நிலை நோய்கள் உண்டாகின்றன. இரண்டாம் நிலை நோய் உண்டாக்கும் நோய் செயல் ஒவ்வொரு வளர்ச்சி பருவத்திலும், நோய் உயிரிக்கு ஏற்றவாறு அமையும். வளர்ச்சிப் பருவத்தின் முடிவில், நோய் உயிரிகள் வளர்வடங்கிய நிலையை அடைகின்றன அல்லது சிறப்பு வாய்ந்த கெட்டித் தன்மை உடைய அமைப்புகளை உண்டாக்கி, அவை மூலம் குளிர் காலத்தைக் கழித்து, நோய்ச் சுழற்சியினை நிறைவு செய்கின்றன.
நோய் நச்சு. நோய் நச்சு(pathotoxin) என்பது, உயிரினங்களின் மூலம் உண்டானது. நொதியினின்றும் வேறுபட்ட இது தாவர நோயியலில் சிறப்பிடம் பெற்றது. தாவரங்களில் நோய் உண்டாக்கும் பூசணம், பாக்டீரியா போன்றவை பெரும்பாலான நச்சுகளை உண்டாக்குகின்றன. ஆனால், ஒரு சில நோய் நச்சுகள் உயர் வகைத் தாவரங்களில் இருந்து உண்டாகின்றன. தாவரமும், நோய் விளைவிக்கும் பாக்டீரியாவும் சேர்ந்து புரியும் வினை, எதிர் வினைகளில் மூலமாக நோய் நச்சு ஏற்படுகிறது. ஒரு சில நோய் நச்சுகள் பெரிதும் தேர்வுத் திறன் பெற்றவை. அவை நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகளின் வழியே நோய் நச்சை வெளிப்படுத்திப் பேரழிவைத் தருகின்றன.ஆனால், வேறு சில நோய்கள் நச்சுகள் தேர்வுத் திறன் அற்றவை. இவை, தாவரங்கள் நோய் ஏற்பவையாயினும், நோய் எதிர்ப்புத் திறன் பெற்றவையாயினும், அவற்றில் நச்சுத் தன்மையினை உண்டாக்குகின்றன. ஒரு சில நோய் நச்சுகள் இனத் தேர்வு உடையவை. எனவே, அவை அனைத்துத் தாவரங்களிலும் தீமை விளைவிக்காமல், ஒரு சில தாவரங்களில் மட்டும் தீமை விளைவிக்கின்றன. இத்தகைய சில தாவரங்கள் நோய் உயிரிக்கு எதிர்ப்புத் திறன் பெற்று விடுவதால், நச்சுப் பொருள்களை உணரும் நிலையில் உள்ளன. தேர்வுத் திறனும், நோய் நுண்மையும். குறிப்பிட்டுச் சொல்லும் படியான தேர்வுத் திறன் பெற்ற நோய் நச்சுகள் குறிப்பிட்ட ஓம்புயிரி நுண்மை நச்சுகள் எனப் படும். பல சிறப்பான தாவர நோய்களுக்குச் சிறப்பான நோய் நுண்மைக்கு உரிய செயல் முறைகள் விளக்கப் படுகின்றன. பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட மரபியல் காரணியைக் கொண்ட தனியான தாவரத் தொகுதி, குறிப்பிட்ட நோயை ஏற்கக் கூடியதாக உள்ளது. நோய் உயிரி உண்டாக்கிய தேர்வுத் திறன் பெற்ற நோய் நச்சுகளும் நுண்மை பெற்றுள்ள, அவை நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற தாவரங்களை விட, நோய் ஏற்கக் கூடிய தாவரங்களில் 4 இலட்சம் மடங்கு நச்சு உள்ளவையாகும். நோயின் செயலில் தன்மை, தாவரங்களின் நோய் எதிர்ப்புத் திறம் ஆகியவை பற்றிய ஆய்வுகளில் தேர்வுத் திறன் பெற்ற நோய் நச்சுகள் மாதிரி அமைப்புகளாக அறிவியல் ஆய்வுகளில் பயனாகின்றன. நோய் உயிரிகள் உண்டாக்குபவைக்கு மாற்றாக, நோயுற்ற தாவரங்களின் வளர் சிதை மாறுதல்கள் மாற்றப் படுகின்றன. நோயுற்ற தாவரங்களில், நாளடைவில் ஏற்படும் நோயியல் நிகழ்ச்சிகள், நச்சுச் செயலினால் சில மணி நேரங்களாகக் குறைக்கப் படுகின்றன.
தேர்வுத் திறன் பெற்ற நோய் நச்சுகளினால், இரண்டு பேரிடர்களிடமிருந்து பயன் தரக் கூடிய முடிவுகளைக் கண்டறிந்தனர். 1940ஆம் ஆண்டில் ஓட்ஸ் தானியத்தில் உண்டாகிய விக்டோரியாக் கோலை நோய் பேரழிவைத் தந்தது. எனவே, இந்த நோய்கள் தாக்காத நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற புதிய வகைகள் கண்டு பிடிக்கப் பட்டன. ஓட்சின் விக்டோரியாக் கோலை நோய் எதிர்ப்பிற்கு, pc² என்னும் நோய் எதிர்ப்புப் பண்பு புதிதாகத் தாவரத்தில் புகுத்தப் பட்டது. ஆனால், இத்தகைய நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ஓட்ஸ் பயிர் ஹெல்மிந்தோஸ்போரியம் விக்டோரியீ (Helminthosporium victoriae) என்னும் பூசண நோய் உயிரியினால் நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு அளித்தது. இந்தப் பூசணம் விக்டோரின் என்னும் வளர் சிதை மாற்றப் பொருளை உண்டாக்கியது.இது pc² என்னும் காரணியைக் கொண்ட பயிரிடும் வகை ஓட்சிற்கு மிகு நச்சுத் தன்மை உடையதாக இருந்தது. இதனால், விக்டோரியாக் கோலை நோயினைப் பெற்றது. துரு நோயிற்கும், விக்டோரியா கோலை நோயிற்கும், எதிர்ப்புத் திறன் பெற்ற ஓட்ஸ் வகையினை உண்டாக்க மிகப் பெரிய முயற்சிகள் மேற்கொண்டாலும், அவை வெற்றி பெறவில்லை. இதற்காக, 8 கோடி ஓட்ஸ் நாற்றுகள் விக்டோரியின் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன. இவற்றுள் பிழைத்திருந்த ஒரு சில நாற்றுகள் துரு நோயிற்கும், விக்டோரியாக் கோலை நோயிற்கும் எதிர்ப்புத் திறன் பெற்று விளங்கின. மற்ற தாவர நோய் உயிரிகள் உண்டாக்கும் நோய் நச்சு, சோளம், எலுமிச்சை, கரும்பு முதலிய பயிர்களில் எதிர்ப்புத் திறன் வாய்ந்த வகைகளை உருவாக்க உதவின.
வேதிச் செயல் முறை. பெரும்பாலான நோய் நச்சுகள் தேர்வு திறன் அற்றவை. ஜிப்பெரேல் வினை போன்ற ஒரு சில வளர்ச்சி சீராக்கிளாகப் பணி புரிகின்றன. ஜிப்பெரேல்லின் என்பது ஒரு வகைப் பூசணத்திலிருந்து எடுக்கப் பட்டது. இந்த பூசணம், நெல்லில் அறிவற்ற நாற்றுகள்(foolish seedlings) என்னும் நோயினை உண்டாக்குகிறது. செயல் முறையிலான வளர்ப்பின் போது, பூசணம் ஜிப்பெரேல்லின்களை உண்டாக்குகிறது. இந்தப் பூசணத்தால் தாக்கப் பட்ட பயிர்களில் நீண்ட கணுவிடைப் பகுதிகள் உள்ளன. ஏனெனில், இது தாவர வளர்வூக்கியாகச் செயல் படுகிறது. ஃபூசிகாக்கம் அமிக்டாலி (Fusicoccum amygdali <!---- See: https://en.wikipedia.org/wiki/Fusicoccum_amygdali---->) என்னும் பூசணத்திலிருந்து உண்டான ஃபூசிகாக்சின் என்பது வளர்ச்சிச் சீராக்கிப் பண்புகள் கொண்டது. இதை உண்டாக்கும் பூசணம் பீச்,பாதாம் மரங்களில் வாடல் நோயினைத் தோற்றுவிக்கிறது. இந்த வளர்ச்சிச் சீராக்கியும், தேர்வுத் திறன் அற்ற நோய் நச்சாகும்.இது தாவர இலைகளில் புறத் தோல் துளைகளைத் திறப்பதற்கும் காரணமாக உள்ளது. ஆல்டர்னேரியா ஆல்டர்னேடா (Alternarla alternata) என்னும் பூசணத்திலிருந்து உண்டான டென்டாக்சின் என்னும் நோய் நச்சு இனத் தேர்வுத் திறன் பெற்றது. இது வெள்ளரி,பருத்தி போன்றவற்றில் பல் வண்ணப் பச்சைய நீக்க நோயை உண்டாக்குகிறது. ஆனால், புகையிலை, முள்ளங்கி போன்றவற்றில் இந்தப் பூசணம் தாக்குவதில்லை.
தேர்வுத் திறன் பெற்ற வேதிப் பண்புகள் அறியப் பட்ட ஒரே நோய் நச்சு, AM நச்சு என்பதாகும். ஆல்டர்னேரியாமாலி என்னும் பூசணத்திலிருந்து எடுக்கப் பட்ட இது, ஆப்பிள் பழத்தில் நோய் உண்டாக்குகிறது. AM நச்சு என்பது நோய் ஏற்கும் ஆப்பிள் திசுக்களின் உட்செலுத்துந் திறனை 10–9 கரைசலில் தடை செய்கிறது. ஆனால், தடுப்பு ஆற்றல் பெற்ற திசுக்களில் இதை விட 10,000 மடங்கு மிகுதியானால் மட்டுமே, மேற்காணும் விளைவு தோன்றும். —கே.ஆர். பாலச்சந்திர கணேசன் பயிர் நோய்கள். பயிர்கள் தோன்றிய காலந் தொட்டே, பயிர்களில் நோய்களும் தோன்றியுள்ளன. பழங்காலத்திலிருந்தே பயிர் நோய்கள் காணப் படினும், அண்மைக் காலத்திலேயே, பயிர் நோய்கள் பற்றிய அறிவியல் நன்கு வளர்ந்துள்ளது. ஜெர்மனி நாட்டு அறிவியலரான ஆன்டன் டீ பேரி என்பார், 1853ஆம் ஆண்டில் நோய் நுண்ணுயிரிகளால் பயிர் நோய்கள் தோன்றுவதற்கான சான்றினை முதன் முறையாக வெளிப் படுத்தினார். இந்த ஆய்வே, பயிர் நோயியல் வளர்வதற்கு வழிகாட்டியாக அமைந்தது. இத்துறையில், விரிவான ஆய்வுகள் இருபதாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப் பட்டன.
நோய்க் காரணிகள். பயிர் நோய்கள் பல்வேறு நோய்க் காரணிகளால் உண்டாகின்றன. இக்காரணிகளை உயிருள்ளவை, உயிரற்றவை எனப் பகுக்கலாம்.
அறிகுறிகள். நோயினால் தாக்கப்பட்ட பயிரின் வெளிப் பகுதியிலும், உட்ப்புறத் திசுக்களிலும் பல வித மாற்றங்கள் தோன்றுகின்றன. அறிகுறிகளைக் கொண்டும், ஆய்வகத்தில் நுண்ணோக்கியின் துணை கொண்டும், ஆய்வு முறைகளின் அடிப்படையிலும் நோய்க் காரணிகளைக் கண்டறிந்து கொள்ளலாம். இத்தகைய நோய்க் காரணிகளால் பின் வரும் அறிகுறிகள் தோன்றுகின்றன.
இலைப் புள்ளி. இலைகளில் காணப் படும் குறிப்பிடத் தக்க நோய்களில் புள்ளி நோயும் ஒன்றாகும்.நோயினால் பாதிக்கப்பட்ட இலைகளில், வெண்மை, மஞ்சள், சிவப்பு, கருஞ் சிவப்பு, கறுப்பு நிறப் புள்ளிகள் தோன்றுகின்றன. சில வகைப் புள்ளிகளின் நடுவில் சிறிய கறுப்பு நிற வித்துத் திரள்கள் காணப் படும். நோய்க்குத் தகுந்தாற் போல், புள்ளிகளின் உருவமும், வடிவமும், காணப் படும். எ.டு. நிலக் கடலை டிக்கா இலைப் புள்ளி.
இலைத் துளை. இலைப் புள்ளி நோய்கள் சிலவற்றில், புள்ளிகள் ஏற்பட்ட பகுதிகள் மட்டும் காய்ந்து, நைந்து உதிர்வதால், அப்பகுதியில் துளைகள் உள்ளமையைக் காணலாம். எ.டு. மரவள்ளி இலைப் புள்ளி.
இலைக் கருகல். இலைகளில் தோன்றும் நோயின் காரணமாக, இலைகளில் பெரும் பகுதி பழுப்பு நிறமாகவோ, கரும் பழுப்பு நிறமாகவோ மாறி, நாளடைவில் கருகி விடுகிறது. எ.டு. உருளைக் கிழங்கு பின் இலைக் கருகல்.
தார்ப் புள்ளி. இலையின் மேல் பல கருமையான தடித்த புள்ளிகள் வட்ட வடிவில் பளபளப்பாகத் தோன்றும். எ.டு. சோளம் தார்ப் பள்ளி.
கரும் படலம். நோயினால் பாதிக்கப்பட்ட இலை , காய், மலர் முதலியவற்றின் மீது புகை படிந்தது போன்ற கருமை நிறப் பூசணப் படிவுகளைக் காணலாம். எ.டு. மாவிலைக் கரும் படல நோய்.
கொப்புளக் கருகல். இலையின் அடியில் பல பெரிய கொப்புளங்கள் தோன்றி, முதலில் வெண்மையாகக் காணப் படும் . இக்கொப்புளங்கள் பின்னர், இளங்காய்ப்பு நிறமாக மாறி விடும். கொப்புளங்களின் மேற்பகுதி வெளிர் மஞ்சள் நிறத்துடன் குழியாகக் காணப் படும். எ.டு. தேயிலைக் கொப்பளக் கருகல்.
துரு. செடியின் சில பகுதிகளில் கரும் பழுப்பு, சிவப்பு, கருஞ்சிப்பு நிறமான வட்ட வடிவ அல்லது நீள் சதுரமான தடித்த துருக் கூடுகள் தோன்றுகின்றன. நாளடைவில், இக்கூடுகள் உடைந்து, கருமை அல்லது ஆரஞ்சு நிறப் பொடியாக வெளிப் படுகின்றன. எ.டு. கோதுமைத் துரு.
சாம்பல் நோய். இலைகளில் வெண்மை அல்லது சாம்பல் நிறப் படிவு ஏற்பட்டுள்ளமையைக் காணலாம். எ.டு. வெண்டையின் சாம்பல் நோய்.
கரிப் பூட்டை. நோயற்ற கதிரில் உள்ள தானியங்கள் கரிப் பூட்டையாக மாற்றப் பட்டு, அவற்றில் கருமையான பூசணப் பொடிகள் உண்டாகின்றன. பாதிக்கப்பட்ட தானியங்கள் உருவில் பெரியனவாய், ஒரு மெல்லிய தோலால் போர்த்தப் பட்டிருக்கும்.எ.டு.சோளக் கரிப் பூட்டை.
வேரழுகல். நோயுள்ள செடியின் பக்க வேர்களும், ஆணி வேர்களும் அழுகி விடுகின்றன. இவற்றின் பட்டைகள் எளிதில் உரிந்து விடும். எ.டு. பருத்தியில் வேரழுகல். பிளவை. இலை,கிளை,கனி போன்றவற்றில் சொறி போன்று, சொரசொரப்பாகவோ மரு போன்ற வெளி வளர்ச்சியுடனோ அறிகுறிகள் காணப் படும். தாக்கப் பட்ட பகுதியின் மேற்பரப்பில் உள்ள திசுக்கள் அழிந்து, தக்கை போன்ற வளர்ச்சி காணப் படும். அவற்றின் மையப் பகுதிகள் குழியாகப் பிளவையாக தோன்றும். எ.டு. எலுமிச்சையின் பிளவை.
இலைச் சுருள். நோயினால் பாதிக்கப்பட்ட இலை, இயல்பான வடிவத்தை இழந்து, சுருக்கமுற்றுக் காணப் படும். எ.டு.புகையிலை இலைச் சுருள்.
தேமல். பசுமையான இலைப் பரப்பில், ஆங்காங்கே இளம் பச்சை நிறத் திட்டுகள் காணப் படும். எ.டு. மரவள்ளித் தேமல்.
கட்டுப்பாட்டு முறை. பயிர் நோய்கள் கட்டுப்படுத்துவதற்குத் தவிர்த்தல் (exclusion), அகற்றல் அல்லது (eradication), காத்தல் (protection), எதிர்ப்பு ஆற்றலூட்டல் (immunization), ஆகிய நான்கு முறைகள் கடைப் பிடிக்கப் படுகின்றன.
நோய் முன்னறிவிப்பு. நோய் முன்னறிவிப்புப் (disease forecasting) பற்றிய ஆய்வுகள் மேலை நாடுகளில் பெருகி வருகின்றன. ஆயினும், இந்தியாவில் இத்துறையில் முன்னேற்றம் குறிப்பிடத் தக்க அளவில் இல்லை. நோய் தோன்றவிருப்பதை முன்னரே அறிந்து கூறுவது, நோயினைத் தடுக்க வழி கோலும். கால நிலை, நோய் நுண்ணுயிரிகள் பரவியிருக்கும் நிலை போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வந்தால், நோய் தோன்றவிருப்பதை முன்னரே அறிந்து கொள்ளலாம்.
உருளைக் கிழங்கின் பின்கருகல் நோய் தோன்றவிருப்பதை முன்னறிவிக்கும் முறையினை, ஹாலந்து நாட்டினர் முதன் முதலில் உருவாக்கினர். இம்முறை இரவில் நான்கு மணி நேரமாவது பனி தோன்றுதல், இரவில் வெப்ப நிலை 50°C அளவுக்குக் குறையாமல் இருத்தல், அடுத்த நாள் மேகக் கூட்டங்கள் தென்படல், நான்கு மணி நேரமாவது பனி பெய்த மறுநாள் 0.1 மி.மீ. அளவுக்கு குறையாமல் மழை பெய்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.
மழை, வெயில், வெப்பம், சூறாவளிக் காற்று, புயல் போன்றவை பாக்டீரிய நோய்கள் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்க வல்லவை. கோடைக் காலத்தில் சில நாடுகளில் குளிர் பகுதிகளில், குறைந்த வெப்பமிருத்தல் செப்டம்பர் திங்களில் குறைந்த வெப்பமும் நிறைந்த மழையும் இணைந்திருந்தல் போன்றவை இந்நிலையில் குறிப்பிடத் தக்கவை.
நிலத்தில் உள்ள மண், பயிருக்குப் பாய்ச்சல் நீர் போன்றவற்றில் கலந்திருக்கும் பாக்டீரியா அழிவு நச்சுயிரியின் (bacteriophage) அளவுக்கும், நெல்லில் இலைக் கருகல் நோய் திடீரென்று தோன்றுவதற்கும் தொடர்புண்டு. இந்நோய் தோன்றுவதற்கு முன்பு, நச்சுயிரியின் எண்ணிக்கை மண்ணிலும், பாய்ச்சும் நீரிலும் கூடுதலாகிறது. எனவே, பயிர் வளரும் போது தக்க இடைவெளியில் ஒவ்வொரு பருவத்திலும், பாக்டீரியா அழிவு நச்சுயிரி கலந்திருக்கும் அளவினைக் கணக்கிட்டு வருதல் வேண்டும். இந்தக் குறியீட்டு அளவினைக் கொண்டு, முன் கூட்டியே நோய் தோன்றுதலைக் கணிக்க முடியும்.
வட இந்தியாவில் கோதுமைப் பயிரில் செந்துரு நோய் தோன்றுதல், பின் வரும் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கிறது. ஜனவரித் திங்கள் 15–20ஆம் நாளுக்குள், உத்திரப் பிரதேசம், வடக்கு பீகார் மாநிலங்களில், கோதுமைப் பயிரில் 20–30 கி .மீ. பரப்பில், நோயின் அறிகுறி தென்படும்.வடஇந்தியாவில் ஜனவரி–ஏப்ரல் 15ஆம் நாளுக்குள் பெய்யும் மொத்த அளவும், மழை பெய்யும் நாள்களின் எண்ணிக்கையும், இயல்பை விட இரண்டு மடங்காகக் காணப் படும். வடமேற்கு இந்தியப் பகுதிகளில் மார்ச் 15 வரை ஒவ்வொரு வாரத்தில் சராசரி உயர் வெப்ப நிலை, வழக்கத்தை விட 1°C கூடவோ, குறையவோ செய்யும்.
முதல் இரண்டு நிகழ்ச்சிகள் முறையாக இருந்தால், செந்துரு நோய் பெருவாரியாகத் தோன்றும். மூன்று நிகழ்ச்சிகளிலும், சிறிதளவு மாற்றமிருந்தால், செந்துரு நோய் ஓரளவே தோன்றும் . வெப்ப நிலை குறைவாக நிலவினால், ஓரளவு செந்துரு நோயும், பேரளவு மஞ்சள் துரு நோயும் கோதுமைப் பயிரில் தோன்றும்.
நோயின் தீவிரத் தன்மை. நோயின் தீவிரத் தன்மையினைப் (disease intensity) பயிர்களில் பல்வேறு வழிகளில் அளவிட்டுக் கூறலாம். பயிர்களின் நோய்கள் பல்வேறு நோய் நுண்ணுயிரிகளால் ஏற்படுகின்றன. நோயினால் பாதிக்கப்பட்ட பயிர் வெளிப் படுத்தும் அறிகுறிகளைக் கொண்டு, நோயின் தீவிரத் தன்மையை அளவிடலாம்.
தீவிரத் தன்மையை அறுதியிடும் முறைகள். வாடல், வேரழுகல் , நாற்றழுகல், தேமல் போன்ற நோய்களால் பாதிக்கப் பட்ட செடிகளின் அளவினைச் சதவிகிதத்தில் வெளிப்படுத்தலாம். செடிகளின் மொத்த எண்ணிக்கையும், அவற்றுள் நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளின் எண்ணிக்கையும் கணக்கிடப் பட்டு, அவற்றைக் கொண்டு பாதிக்கப் பட்ட செடிகளின் எண்ணிக்கையும் கணக்கிடப் பட்டு, அவற்றைக் கொண்டு பாதிக்கப்பட்ட செடிகளின் சதவிகிதம் அறியப் படுகிறது. சான்றாக, ஒரு பாத்தியில் 100 எண்ணிக்கையுள்ள மொத்த செடிகளில், 20 செடிகளில் வாடல் நோய் தென்பட்டால், அப்பாத்தியில் 20% வாடல் நோயின் அளவு இருப்பதாகக் கொள்ளலாம். அதற்கு அடுத்துள்ள பாத்தியில் மொத்தம் 100 செடிகளைக் கணக்கிட்டுப் பார்க்கும் போது, அவற்றுள் 30 செடிகளில் வாடல் நோய் தென்பட்டால், 30% வாடல் நோயின் அளவு இருப்பதாகக் கொள்ளலாம். எனவே, முதல் பாத்தியில் 20%உம், அடுத்துள்ள பாத்தியில் 30%உம் வாடல் நோய் உள்ளமையால், முதல் பாத்தியை விட, அடுத்துள்ள பாத்தியில் வாடல் நோயின் தீவிரத் தன்மை கூடுதலாக உள்ளமை புலனாகும். இலைப் புள்ளி போன்ற நோய்கள் தோன்றினால், அச்செடியில் பாதிக்கப் பட்டிருக்கும் இலையின் பரப்பளவைக் கொண்டு நோயின் தீவிரத் தன்மையை அளவிடலாம்.
தீவிரத் தன்மையை அறுதியிடும் காரணிகள். நோயின் தீவிரத் தன்மையை அறுதியிட வீரியமுள்ள நோய் நுண்ணுயிரிகள், அவை பெருவாரியாகப் பெருகும் தன்மை, அவை பிற பகுதிகளுக்குப் பரவுதல், நோய்க்கு எளிதில் இலக்காகும் தாவர வகை, நோய் தீவிரமாவதற்கு ஏற்ற சுற்றுப் புறச் சூழ்நிலை ஆகியவை பயன் படும்.
வீரியமுள்ள நோய் நுண்ணுயிரிகள் பெருக்கமடைந்து, பல்வேறு பகுதிகளுக்குப் பரவிப் பயிரைத் தாக்கும். நோய்க்கு எதிர்ப்புத் திறனுள்ள வகைகளைப் பயிரிடப் பயன் படுத்தப் படும் போது, நோய் எளிதில் தோன்றும் வாய்ப்புக் குறைவு. வெப்பம், வானீரப் பசை, சூரிய ஒளி, மழையூட்டம் போன்றவை நோய்கள் தீவிரமாகத் தோன்றும் தன்மைக்கு அடிப்படையாகின்றன.
நோய் பெருவாரியாகத் தோன்றுதல். நோய் பெருவாரியாகத் தோன்றுதல் (epidemiology) பல காரணங்களால் நிகழும். நோய் திடீரென்று தீவிரமாகத் தோன்றிப் பெருவாரியாகப் பரவுதற்கு மாறும் இயல்புகளைக் கொண்ட பயிர் அல்லது ஊண்வழங்கி (host) நோய் நுண்ணுயிரி (pathogen) சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகியவை காரணமாகின்றன. நிலையான தொடர்புடைய இவை, ஓரளவு ஒன்றையொன்று கட்டுப் படுத்தும் இயல்புடையவை. இவற்றில், பயிர் அல்லது ஊண் வழங்கி இன்றியமையாத காரணியாகும். பல பயிர்களில் எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகள் இருக்கின்றன. எதிர்ப்புத் திறனற்ற வகைகளைப் பயிரிடப் பயன்படுத்தும் போது, நோய் தோன்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. பயிர்களின் உடலமைப்பும் பயிர்ச் சாற்றில் அடங்கியுள்ள வேதிப் பொருள்களும் எதிர்ப்புத் திறத்தின் அளவினை அறுதியிடுகின்றன. பொதுவாகத் தழைச் சத்து மிகுதியாகவும், சாம்பல் சத்துக் குறைவாகவும் இருந்தால், எதிர்ப்புத் திறன் குறைகிறது. பயிர்களில் திசுக்கள் மென்மையானவையாகவும், மிகவும் சாறுள்ளவையாகவும் இருந்தால், எளிதில் நோய்த் தாக்கமுறுகின்றன.
நோய் நுண்ணுயிரிகளால் பயிரில் நோய் தோன்றுதல், சங்கிலித் தொடர் போன்று ஒன்றோடொன்று இணைந்த பல்வேறு இயல்புகளை உள்ளடக்கியதாகும். ஒவ்வோர் இயல்பும் நோய் பெருவாரியாகப் பரவுதற்கு அடிப்படை யாகிறது. பயிரில் நோய் நுண்ணுயிரிகள் உட்புகுதல், உட்சென்ற பின் பெருக்கமடைதல், நோயின் அறிகுறியை வெளிப் படுத்தல் , பின்னர் அடுத்த பயிருக்குப் பரவுதல் போன்றவை தொடர் நிகழ்வுகளாகும். இவ்வாறான வாழ்க்கைச் சூழல் பயிரிடும் பருவத்திலேயே பல முறை நிகழும். மேலும் நுண்ணுயிரி, அடுத்த பருவத்தில் பெருவாரியாக நோயினைத் தோற்றுவிக்க வேண்டுமாயின், பயிரிடப் படாத காலங்களில் அழியாது இருக்க வேண்டும். ஒரு பருவத்திலிருந்து, அடுத்த பருவம் வரை விதைகளிலும், பல்லாண்டு வாழ் செடிகளிலும், செடியிலிருந்து உதிர்ந்து கிடக்கும் சருகு, கிளை ஆகியவற்றிலும், வெட்டுப் பட்ட கிழங்கு போன்றவற்றிலும் நுண்ணுயிரிகள் பெருக்கமடைகின்றன. இவ்வாறு, ஒன்றோடொன்று தொடர்புடைய காரணிகளின் தொடர்பினைத் துண்டிக்காமல் விடுவதால், நோய்த் தோற்றம் மிகுதியாகிறது. பருத்தியில் கருங்கிளை நோய், நெல்லில் செம்புள்ளி நோய், சோளத்தில் கரிப் பூட்டை நோய் போன்றவை, விதை வழியாக ஒரு பருவத்திலிருந்து அடுத்த பருவத்திற்குப் பரவுவதாலும், நோயினால் தாக்கப் பட்ட பயிரிலிருந்து கிடைக்கும் விதைகளைப் பயன் படுத்துவதாலும் கூடுதலாகின்றன. வெள்ளரி வாடல் நோயை வெள்ளரியைத் தாக்கும் வண்டுகள் பரப்புவதால், பூச்சிக் கொல்லியைத் தெளித்து, வண்டுகளை ஒழிக்காவிடில், நோய் விரைந்து பரவும் சூழ்நிலை ஏற்படுகிறது. விதை நேர்த்தி மேற்கொள்ளாமை, பயிர்ச் சுழற்சியைக் கடைப் பிடிக்காமை, நோய் எதிர்ப்புத் திறன் வகையைப் பயன் படுத்தாமை போன்றவற்றால், நோய் மிகுதியாகப் பரவும். நோய்களால் ஏற்படும் இழப்பு ஒவ்வோர் ஆண்டுக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு வேறுபடும். இவ்வேறுபாட்டிற்குக் காரணம் அப்பகுதிகளிலே நிலவும் சுற்றுப் புறச் சூழ்நிலைகளுக்கேற்றவாறு நுண்ணுயிரிகள் பயிர்களைத் தாக்கும் அளவும், திறனும் வேறுபடுகின்றன. இவற்றுள் வெப்பமும், ஈரமும் குறிப்பிடத் தக்கவை. மண்ணில் ஈரமும், காற்றில் ஈரப் பதமும் மிகுதியாக இருந்தால், பயிர்களும் மிகுதியான நீரை எடுத்துக் கொள்கின்றன. இலைகள் மிகுதியான ஈரத்துடன் இருக்கின்றன. இலைகளில் நோய்களைக் கட்டுப் படுத்துவதற்காகத் தெளிக்கப் படும் வேதிப் பொருள்கள் இலைகளில் உள்ள நீரில் கலப்பதால், அவற்றின் அடர்வு ஓரளவு குறைகிறது. எனவே, வேதிப் பொருள்களின் திறன் குறைவதால், பயிர்கள் நோய்க்கு உள்ளாகின்றன. பெரும்பாலான பாக்டீரியாக்கள், காற்றுடன் கூடிய மழை பெய்யும் போது, சிதறும் மழைத் துளிகளின் மூலமும், நீர் நிலத்தின் மீது ஓடி, அடுத்துள்ள வயல்களில் வடிவதாலும் பரவுகின்றன. மழை பெய்யும் போது, இலைகளும் ஈரத்தை ஈர்த்துக் கொள்கின்றன. காற்றின் ஈரப் பதமும், மழைக் காலங்களில் கூடுவதால், பாக்டீரியாக்கள் செடிகளில் எளிதில் தொற்றுகின்றன.
வெப்பம், நோய் தோன்றுவதற்கு அடிப்படையாகிறது. பாக்டீரியா வாடல் நோய், தக்காளி பயிரிடும் இடங்களில் பொதுவாகக் காணப் படும். ஆயினும், மண்ணில் வெப்பம் கூடுவதாலேயே, இந்நோய் பெருவாரியாகத் தோன்றுகின்றன. குறைந்த வெப்பத்தினால், நோய் நுண்ணுயிரிகள் தொற்றினாலும், நோயின் அறிகுறி தோன்றுவதற்கு ஏற்ற கூடுதல் வெப்ப நிலை தேவைப் படுகிறது. அளவுக்கு மிகுதியான வெப்பமும், நோய் தோன்றுவதற்கு ஏற்றதன்று. பெரும்பாலும் 89°C வெப்பத்தில் வளரும் தக்காளிச் செடிகளில், கொப்புளங்கள் தோன்றுவதில்லை.ஆனால் 82°C வெப்பத்தில் வளரும் செடிகளில், கொப்புளங்கள் தோன்றுகின்றன.
மண்ணில் உள்ள வெப்ப நிலை, 20–27°C இருந்தால், பருத்தியில் வாடல் நோய் தோன்றுகின்றது. மண்ணில் 40°C அளவுள்ள வெப்ப நிலையில் வளரும் பருத்திச் செடிகளில், கருங்கிளை நோய் தோன்றுவதில்லை. ஆயினும், ஏறத் தாழ 28°C வெப்பம், இந்நோய் பெருவாரியாகத் தோன்றுவதற்கு வழி வகுக்கிறது. குளிரூட்டிய அறைகளில், உருளைக் கிழங்கை வைத்திருந்தால், பாக்டீரியாவால் ஏற்படும் அழுகல் நோய் தோன்றுவதில்லை. ஆனால், வெப்பம் கூடுதலாக வுள்ள அறைகளில், சேமித்து வைத்திருக்கும் உருளைக் கிழங்கில் எளிதில் நோய் தோன்றுகிறது. தழைச் சத்து மிகுதியானால், நெல்லின் குலை நோய், பருத்தியின் கருங்கிளை நோய் போன்றவை மிகுதியாகின்றன. சாம்பல் சத்து கூடுவதால், இத்தகைய நோய்கள் குறைவாகத் தோன்றுகின்றன.நோய் அகற்றல். பயிர் நோய்க் கட்டுப்பாட்டில், கடைப் பிடிக்கப் படும் சிறப்பான முறையில், நோய் அகற்றல் அல்லது ஒழித்தல் (eradication) என்பது குறிப்பிடத் தக்கது. இந்நோக்குடன், நோய் கண்ட பயிரிலிருந்து கிடைத்த விதை, கரணை, கிழங்கு முதலானவற்றைப் பயிரிடப் பயன் படுத்தாமல் அழித்து விடல், நோய் கண்ட பகுதியை மட்டும் செடியிலிருந்து பிரித்தெடுத்து அழித்தல், நோய் கண்ட செடி முழுவதையுமே அழித்தல், நோய் காணப் படும் பகுதிகளில் நோய் பரவுதற்கு ஏற்ற பயிர்கள் பயிரிடப் பட்டிருந்தால், அப்பயிர்களை அழித்தல், நோய்க் காரணிகள் தங்கும் மாற்றுப் பயிர்களை அழித்தல் போன்ற பல முறைகள் கையாளப் படுகின்றன.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில், எலுமிச்சை வகைச் செடிகளின் பேரழிவுக்குக் காரணமான பிளவை நோய்(Canker) இவ்வகை அழிப்பு முறைகளால், சிறப்பாகக் கட்டுப் படுத்தப் பட்டுள்ளது. கரும்பைத் தாக்கும் பாக்டீரியா நோய்கள்,பல்வேறு புல் வகையைச் சேர்ந்த செடிகளையும் தாக்குவதால், இவை மூலம் கரும்புப் பயிருக்கு, நோய்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, மாற்று விருந்தோம்பிகளை அழிப்பதால், நோய் பரவுதல் குறையும் எனலாம். ஆப்பிள், பேரி மரங்களில் தோன்றும் செந்தீசல் நோய்க்குக் காரணமான பாக்டீரியாக்கள், அம்மரங்களின் கிளைகளில் தோன்றும் பிளவுகளில் தங்கியிருக்கின்றன. எனவே, இத்தகைய நோய் கண்ட பகுதிகளை வெட்டி எரித்து விடுதல் சிறந்தது.
வெள்ளரி வாடல் நோய் காரணமாக, எர்வினியா டிரகிஃபிலா (Erwinia tracheiphila) என்னும் பாக்டீரியா, டயபிரோடிகா விட்டேடா (Diabrotica vittata) அல்லது டயபிரோடிகா டியோடெசிம்பங்க்டேட்டா (D.duodecimpunctata) என்னும் பூச்சியின் உடலுடன் இணைந்துள்ளமையால், இப்பூச்சிகளை அழிப்பது வெள்ளரி வாடல் நோய் மீண்டும் தோன்றுவதைத் தடுக்கும். மண்ணில் நோய்களைத் தோற்றுவிக்கும் பாக்டீரியாக்களும், பூசணங்களும் உள்ளன. வெப்ப நேர்த்தியை மேற் கொள்ளல், வேதிப் பொருள்களை நீரில் கலந்து ஊற்றி, மண்ணை நனைத்தல் போன்றவற்றால், மண்ணில் உள்ள பாக்டீரியா, பூசணம் போன்ற நுண்ணுயிரிகள் அழிக்கப் படுகின்றன. மேலும், மண்ணில் உள்ள இந்நுண்ணுயிரிகளுக்கு எதிர் விளைவினைச் சேர்க்கும் நுண்ணுயிரிகள், இயற்கையில் கலந்திருக்கின்றன. இவற்றால், நோயினை ஏற்படுத்தும் நோய்க் காரணிகளின் பெருக்கம், மண்ணில் ஓரளவு தடைப் படுகிறது. மண்ணில் கலந்திருக்கும் ஆக்டினோ மைசிட்ஸ் போன்ற எதிர் உயிரிகளைப் பிரித்தெடுத்துப் பிண்ணாக்கிலோ, தொழு உரத்திலோ வளர்த்து, அவற்றை நிலத்திற்கு இட்டால், மண்ணுடன் இணைந்துள்ள சில நோய்க் காரணிகள் அழிக்கப் படுகின்றன. பயிர்ச் சுழற்சியை மேற்கொண்டு நோய் தாக்காத மாற்றுப் பயிர்களை வளர்ப்பதால், நோய்க் காரணியின் பெருக்கம் கட்டுப் படுத்தப் படும்.
நோய் பரவுதலைத் தடுப்பதற்கு, நிலத் துப்புரவு முறைகளைக் கடைப் பிடிப்பது இன்றியமையாதது. நோய் கண்ட செடியின் உறுப்புகளை அறுவடைக்குப் பின், நிலத்தில் விழுந்து கிடக்காமல், அவற்றைத் திரட்டி அழித்து விடுதல் சிறந்தது. இம்முறையால், உருளைக் கிழங்கு வட்ட நோய், பருத்திக் கருங்கிளை நோய், எலுமிச்சைப் பிளவை நோய், கத்திரி போன்ற பயிரிகளின் வாடல் நோய் போன்றவற்றைத் தடுக்கலாம். பயிருடன் தோன்றும் களைகளின் மூலமும், பல்வேறான நோய்கள் தோன்றுகின்றன. மிளகாய்ப் பூண்டுச் செடிகளை அழித்து, நிலத்தைத் துப்புரவாக வைத்திருப்பதால், பருத்திக் கருங்கிளை நோயும், கீழா நெல்லிச் செடிகளை அழித்து விடுவதால், பயறு வகைப் பயிர்களில் ஏற்படும் சாம்பல் நோயும் நீக்கப் படுகின்றன.
நச்சுயிரிகள், மைக்கோப்பிளாஸ்மா போன்ற உயிரிகள் ஆகியன செடியின் பல பகுதிகளில் காணப் படுகின்றன. எனவே, நோய் தாக்கப் பட்ட பயிர்கள் தன்னிச்சையாக வாழும் செடிகள், களைச் செடிகள் முதலியவற்றின் அனைத்துப் பகுதிகளையும் முற்றிலும் அகற்றி அழிப்பது இன்றியமையாதது.
நோய்க் கண்காணிப்பு. பயிர் நோய்க் கண்காணிப்பு (plant disease quarantine)என்பது நோய்ப் பரவுதலைத் தடை செய்தலும், தவிர்த்தலும் ஆகும். ஓரிடத்தில் நோயுண்ட அல்லது நோயுண்டாவதற்குக் காரணமான பொருள்களை, மற்றப் பகுதிகளுக்கு எடுத்து செல்ல முடியாத படி, இம்முறைகள் தடுக்கின்றன. விளைச்சலைப் பெருக்குவதற்காகப் பயன் படும் விதை, இனப் பெருக்கத் தாவரப் பகுதிகளான கரணை போன்றவை, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கோ, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கோ எடுத்துச் செல்லப் படுகின்றன. இவற்றின் மூலம், அங்கு புதிதாக நோய்கள் தோன்றுகின்றன. காப்பித் துரு (Coffee Rust), வாழை முடிக் கொத்து (Banana Bunchy Top) போன்ற நோய்கள் மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் புகுந்து, பேரிழப்பினை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாறு, பிற நாடுகளிலிருந்து பரவுகின்ற நோய்களைத் தடுப்பதற்கு இந்தியாவில் 1914ஆம் ஆண்டில் பூச்சி, நோய்க் கண்காணிப்புக்கான தடுப்புச் சட்டம் இயற்றப் பட்டது.இதற்கு, வெளி நாட்டுத் தொற்றுக் கண்காணிப்புச் சட்டம் (Foreign Quarantine Law) என்று பெயர். இந்தியாவிலுள்ள, ஒவ்வொரு விமான நிலையத்திலும், துறைமுகத்திலும் தொற்று நோய்த் தடுப்புக் கண்காணிப்பு அலுவலங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவை வெளிநாட்டிலிருந்து வரும் தாவரங்களையோ, தாவரப் பகுதிகளையோ ஆய்வு செய்து நோயிருந்தால், அவற்றை அழித்தும், நோயில்லையெனில் நோயில்லாச் சான்றிதழ் வழங்கியும் வருகின்றன. மேற்குறிப்பிட்ட சட்டப்படி, கோகோ ஆப்பிரிக்காவிலிருந்தும், ரப்பர் அமெரிக்காவிலிருந்தும், கரும்பு ஆஸ்திரேலியாவிலிருந்தும் இந்தியாவிற்குள் வரக் கூடாது என்னும் கட்டுப்பாடு உள்ளது.
ஒரு நாட்டில் ஒரு பகுதியில் நோய் காணப் பட்டால், அந்நோய், மற்றப் பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்க, உள் நாட்டுத் தொற்றுக் கண்காணிப்புச் சட்டம் (internal or domestic quarantine law) இயற்றப் பட்டுள்ளது. தமிழ் நாட்டில், 1919ஆம் ஆண்டில் இயற்றப் பட்ட சட்டத்தின் படி, கேரளா, ஒரிசா ஆகிய மாநிலங்களில், வாழையின் முடிக் கொத்து, தமிழ்நாட்டில் ஆனை மலைப் பகுதியில் ஏலத் தேமல் , மேற்கு வங்காளத்தில் உருளைக் கிழங்கின் புற்று நோய் முதலியன மிகுதியான அளவில் தோன்றுவதால், அப்பகுதிகளிலிருந்து விதைப் பொருள்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வருவது தடை செய்யப் பட்டுள்ளது.
நோய் எதிர்ப்புத் திறன் வகை. நோய் எதிர்ப்புத் திறனுள்ள வகைகளையும், பயிரிடப் பயன் படுத்தல் மூலமாக, எளிதில் நோயைக் கட்டுப் படுத்தலாம். நோய் எதிர்ப்புத் திறனுள்ள வகைகள் கிடைக்கவில்லையெனில், நோய் தாங்கும் வகைகளைத் (disease tolerent varieties) தேர்ந்தெடுத்துப் பயிரிடப் பயன் படுத்தல் மூலம், ஓரளவு நோயைக் கட்டுப் படுத்த முடியும். இவ்விரு வகைகளும் கிடைக்காத நிலையில், நோய்க்குள்ளாகும் வகைகளைப் பயிரிட நேரும் போது , நோய் தீவிரமாகப் பாதிப்பதால், விளைச்சல் பெருமளவில் குறைகிறது.
நோய்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டிருப்பவற்றில் பெரும்பாலானவை காட்டு இனத்தைச் (wild species) சேர்ந்தவையாகவோ, மிகக் குறைந்த விளைச்சல் திறன் கொண்டவையாகவோ இருக்கின்றன. எனவே, இவற்றில் மிகுதியான விளைச்சல் திறன் ஒருங்கே அமையப் பெற்ற வகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் . நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கத் திடீர் மாற்ற முறை (mutation) பின் பற்றப் படுகிறது. இதற்கு வேதி முறையையோ, கதிரியக்க நுணுக்க முறையையோ பயன் படுத்தலாம். சில நேரங்களில், பண்பக மாற்றம் (gene alteration) ஏற்பட்ட வகையில், நோய்க்கு எதிர்ப்புத் திறன் காணப்படலாம். சிறப்புத் தேர்வு முறையிலும், உயர் விளைச்சல் தரும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகள், வயல் வெளி ஆய்வின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. இவ்வாறான வகைகளை, மீண்டும் பயிர் செய்து, அவற்றிலிருந்து உயர் விளைச்சலும், நோய் எதிர்ப்புத் திறனும் கொண்ட வகைகள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. பயிர்கள் நச்சுயிரிகளை எதிர்த்து நிற்கும் திறனைக் கீழ்க் காணும் நான்கு பிரிவுகளில் அடக்கலாம். அவை, விலக்குப் பெற்றவை, மீவுணர்வுள்ளவை, தாங்கு திறன் பெற்றவை, தப்பிப்பவை என்பன.
விலக்குப் பெற்றவை. பி.எஸ்.டி.ஏ. 41956 என்னும் உருளைக் கிழங்கு வகை, மிதத் தேமல் நோய் தாக்காததாகும். மிளகாய் பி.11 என்னும் வகையிலும் சொலானம் வகையிலும், உருளைக் கிழங்கு இலை நரம்புக் கருத்தல் நச்சுயிரி தோன்றுவதில்லை.
மீவுணர்வுள்ளவை. மீவுணர் திறன் பெற்ற செடிகள் நோய்க் காரணியால் பாதிக்கப் பட்டால், அப்பகுதியில் உள்ள திசுவறைகள் மட்டும் காய்ந்து விடும். நோய்க் காரணிகளும், பெரும்பாலான செடிகளில் செயலிழந்து விடும். எனவே, அவ்வாறு காய்ந்த பகுதிகளிலிருந்து, நச்சுயிரி பிற பகுதிகளுக்குப் பரவுவதில்லை.
இவ்வினையைப் புகையிலைத் தேமல் நச்சுயிரிச் சாற்றை நிகோடியானா குளுட்டினோசா இலைகளில் தடவி வெளிப் படுத்தலாம். நச்சுயிரிச் சாற்றைத் தடவிய இலைகளில், தனி இடம் சார்ந்த புள்ளிகள் (Local lesions) ஏற்படுகின்றன. அப்புள்ளிகளில் உள்ள திசுக்கள் காய்ந்து விடுவதோடு, நச்சுயிரியும் காய்ந்த பகுதியுடன் மட்டுமே தொடர்பு கொண்டுள்ளது.இது பிற பகுதிகளுக்குப் பரவுவதில்லை. மீவுணர் திறன் பெற்ற வகைகள் புகையிலை, மிளகாய், உருளைக் கிழங்கு, தட்டைப் பயிறு முதலிய பயிர்களில் உள்ளன. மீவுணர் திறன் பெற்றவை நிலத்தில் நோய் தோன்றுதலிலிருந்து விலக்குப் பெற்றவை எனக் கருதப் படுகின்றன.
தாங்கும் திறன் பெற்றவை. இவ்வகைச் செடிகள் நோய்களினால் பாதிக்கப்பட்டாலும், நோயின் அறிகுறிகளை வெளிக் காட்டாமல், உள்ளேயே தேக்கி வைத்திருக்கும் திறன் பெற்றவை. பாதிக்கப் பட்ட செடிகள் முழுவதுமே அறிகுறிகளை வெளிக் காட்டாதவையாக இருக்கலாம். அல்லது சிறிதளவு அறிகுறிகளை மட்டும் வெளிப் படுத்தி நிற்கும் திறன் பெற்றவையாகவும் இருக்கலாம். நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் உள்ள செடிகளால் பேரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. ஏனெனில், நோயின் அறிகுறி தெரியாமையால், அவ்வாறான செடிகளைக் களைந்தெறிதல் இயலாது. எனவே, நச்சுயிரிகள், பிற செடிகளுக்கும் இவற்றிலிருந்து பரவுவதற்கு வழி ஏற்படும்.
தப்பிப்பவை. சில வகைச் செடிகள் நச்சுயிரி நோயினால் பாதிக்கப் படாமல் தப்பிக்கின்றன. ஆயினும், இச்செடிகளில் செயற்கை முறையில் நச்சுயிரி நோயினைத் தோற்றுவிக்க முடியும். இவ்வாறு இயற்கையில் நோய் தோன்றாமல் தப்பிக்கும் இயல்பு ஒவ்வொரு வகைச் செடிக்கும் நச்சுயிரிக்கும் ஏற்றவாறு வேறுபடும். நோய் பரப்பும் பூச்சிகள் சில செடிகளை உண்ணத் தலைப் படுவதில்லையாதலால், அச்செடிகள் நோய் தொற்றுவதிலிருந்து தப்பிக்கின்றன. செக்கோயா என்னும் உருளைக் கிழங்கு வகையை இலை உருள்வு நோயைப் பரப்பும் அசுவினிகள் விரும்புவதில்லை. எனவே, அவ்வகை, இலை உருள்வு நோய்க்குத் தப்பிக்கும் இயல்பைப் பெறுகிறது. இதே போல வெள்ளரித் தேமல் நேயைப் பரப்பும் அசுவினிகள் ஒரு சில அரசாணிக் காய் வகைகளைத் தாக்குவதில்லையாதலால், அவ்வகைகளில் வெள்ளரித் தேமல் நோய் தோன்றுவதில்லை.
நோய் பரப்பும் பூச்சிகள். நோய் பரப்பும் பூச்சிகள், பூசணம், பாக்டீரியா, நச்சுயிரி போன்றவற்றால் ஏற்படும் பல்வேறு நோய்களைப் பரப்பும் திறனைப் பெற்றுள்ளன. பூச்சிகள் பயிரில் தொடர்பு கொண்ட பின், நோயால் பாதிக்கப் படாத பயிருடன் தொடர்புற்றால், அவற்றின் வழியாகப் பூசணம் பரவுகிறது. கம்புக் கதிர்களில் தோன்றும் தேனொழுகல் நோய், தேனீக்களாலும், ஈக்களாலும் பாதிக்கப் பட்ட பயிர்களிலிருந்து ஏனைய கம்புப் பயிர்களுக்கும் பரவுகிறது. டேக்கினாஃ போலக்ஸ் ஆக்சிசெடோனியா வெர்சிகலர், டாலி கோரிஸ் இன்டிகஸ், சிர்பஸ், கேம்பனோட்டஸ், கம்ப்ரசஸ் ஆகிய பூச்சிகளாலும் தேனொழுகல் நோய் பரவுகிறது. எரிவினியா டிரகீபிலா என்னும் பாக்டீரியா வெள்ளரியைத் தாக்கும் வண்டுகளால் பரவி, வாடல் நோயை ஏற்படுத்தும். பொதுவாகப் பாக்டீரியா நேரடியாகப் பயிரில் நுழைந்து செல்ல முடியாமையால், பூச்சிகள் ஏற்படுத்தும் காயங்கள் வழியாக எளிதில் உட்செல்லும்.
பூச்சிகள் நோய்த் தாக்கிய செடியின் சாற்றை உறிஞ்சி விட்டு, நோய் தாக்காத செடிகளைத் தாக்கும் போது, அத்தகைய நச்சுயிரிச் சாற்றை உட்செலுத்துகின்றன. பூச்சிகள் நோய் கண்ட செடிகளை உண்ணும் போது, நச்சுயிரிச் சாறு, பூச்சிகள் வாய்ப் பகுதியில் ஒட்டுகிறது. இப்பூச்சிகள் நோயினால் பாதிக்கப் பட்டிராத செடிகளை உண்ணத் தலைப் படும் போது, வாயிலுள்ள நச்சுயிரிச் சாறு செடியின் மேல் தோலில் சிறிதளவு உட்செல்வதால், அச்செடிகளிலும் நோய் பரவுகிறது.
இவ்வகையில் பரவும் நச்சுயிரிகளை, உறிஞ்சு குழல் வாய்ப் பகுதிகளின் மேல் ஒட்டிப் பரவும் நச்சுயிரிகள் எனலாம்.
இரண்டாம் வகையில் உறிஞ்சு குழல் வாய்ப் பகுதியைக் கொண்ட பூச்சிகள் உறிஞ்சு குழல்களை நோய் கண்ட செடியின் சல்லடைக் குழாய்த் தசை வரை செலுத்தி, நச்சுயிரிச் சாற்றை உறிஞ்சுகின்றன. பூச்சியின் உடல் முழுதும் இந்த நச்சுயிரிச் சாறு குருதியுடன் சுழல்கிறது. நோய் தாக்காத செடிகளை நாடும் போது, இந்நச்சுயிரிச் சாறு மீண்டும் அச்செடிகளில் செலுத்தப் படுகிறது. இவ்வாறு பரவும் நச்சுயிரிகளைச் சுழலும் நச்சுயிரிகள் எனலாம்.
சில வகைப் பூச்சிகள், உடல் முழுதும் பரவிய நச்சுயிரிகள் உடலிலேயே தங்கிப் பெருக்கமடைகின்றன. இவை பெருகும் நச்சுயிரிகள் எனப் படுகின்றன. இவ்வகை நச்சுயிரிகள் நோய்ப் பரப்பும் பூச்சிகளின் உடலிலேயே வளர்ந்து பெருகிப் பூச்சிகளின் பின் தலைமுறைக்கும் வழித்தோன்றல் தன்மையுடையதாக முட்டை வழியாக உட்புகுத்தப் படுகின்றன.
நச்சுயிரியை எடுத்துக் கொள்வதற்குப் பூச்சிகள் நோய் கண்ட செடிகளுடன் குறிப்பிட்ட காலம் தொடர்பு கொள்ள வேண்டும். இக்காலம் பூச்சிகள் நச்சுயிரியைத் தொற்றும் காலம் அல்லது பெறும் காலம் எனப் படும். அதே போல, நச்சுயிரிச் சாற்றைப் பூச்சிகள் எடுத்துக் கொண்ட பின், அவற்றை உட்புகுத்துவதற்கும் குறிப்பிட்ட காலம் நோய் கண்டிராத செடிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும். இக்காலம், நச்சுயிரியை உட்செலுத்தும் காலம் ஆகும். இக்காலங்கள் பூச்சி வகைகளைப் பொறுத்தும், நச்சுயிரிகளைப் பொறுத்தும் வேறுபடும். வெள்ளரித் தேமல் நச்சுயிரி கண்ட செடிகளிலிருந்து ஏபிஸ் பேபே என்னும் அசுவினிகள், ஐந்து நிமிடங்களிலேயே நச்சுயிரியைத் தொற்றிக் கொள்கின்றன. உருளைக் கிழங்கு இலை நரம்புக் கருத்தல் நச்சுயிரியைத் தொற்றிக் கொள்ள மைசஸ் பெர்சிகே என்னும் அசுவினிகளுக்கு இரண்டு நிமிடங்களே ஆகும். ஆனால், உருளைக் கிழங்கு இலை உருள்வு நச்சுயிரியை தெரல்றிக் கொள்ள மைசஸ் பெர்சிகே என்னும் அசுவினிகளுக்கு ஆறு மணி நேரம் தேவைப் படுகிறது.
ஒரு முறை நோய்த் தொற்றினால், சில காலம் வரையே பூச்சிகள் நச்சுயிரித் தன்மையைக் கொண்டிருக்கின்றன. பின்னர், நச்சுயிரியைப் பரப்பும் திறன் அழிந்து விடுகிறது.
ஆனால், ஒரு சில வெள்ளைப் பூச்சிகளில், ஒரு முறை நச்சுயிரி நோய்த் தொற்றினால், இப்பூச்சிகள் உயிருள்ள வரை நச்சுயிரியைப் பரப்பும் திறனை அழியாமல் பெற்றிருக்கின்றன.
பூச்சிகள் நச்சுயிரிகளைத் தொற்றிக் கொண்ட பின், நோய்ப் பரப்பும் திறனைப் பெற்றிருக்கும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, நச்சுயிரிகளைத் தங்கி நிற்கும் நச்சுயிரிகள், தங்கி நிற்கா நச்சுயிரிகள் எனப் பகுத்துள்ளனர். இவை யிரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைப் பின் வரும் அட்டவணை விளக்கும்.
நோய்க் குறியீட்டெண். நோய்க் குறியீட்டெண் (disease index) என்பது பயிர்களில் அளவினைக் கணக்கிடப் பயன் படுகிறது. நோய்க்குத் தகுந்தவாறு குறியீட்டெண் முறையும் மாறு படும். குறியீட்டெண்ணின் அளவு, நோயின் தீவிரத்திற்குத் தகுந்தவாறு கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கும். குறியீட்டெண் குறைவாக இருந்தால், நோய் குறைவாகத் தோன்றியிருப்பதாகவும், கூடுதலாக இருந்தால், நோய் தீவிரமாக இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
நெல்லில் செம்புள்ளி நோயின் (brown spot disease) அளவினைக் கணக்கிட 1 முதல் 9 வரையுள்ள தர எண் (grade) ஒதுக்கப் பட்டுள்ளது. செம்புள்ளி நோயினால், பாதிக்கப் பட்டிருக்கும் இலைப் பரப்பளவை, அடிப்படையாகக் கொண்டு இந்தத் தர எண் ஒதுக்கப் பட்டுள்ளது.
இலையின் பரப்பளவு
50 இலைகளில் செம்புள்ளி நோயின் அளவினைத் தர எண் அடிப்படையில் கணக்கிட்டு, அவை யாவற்றையும் கூட்டி, 50 ஆல் வகுத்தால் சராசரித் தர எண் கிடைக்கும். இதனைச் சராசரிக் குறியீட்டெண் (mean index) எனக் குறிப்பிடலாம். —கா.சிவப்பிரகாசம் துணை நூல். R.S Singh, Plant Diseases, Oxford and JBH Publishing Company, Calcutta, 1968: J.C Walker, Plant Pathology, McGraw Hill Book Company, Newyork, 1957.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 346)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zkkdy892/
தமிழ்“நோயியல், தாவர”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zkkdy892/APA
Oliyon Research. (2026). நோயியல், தாவர. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zkkdy892/MLA
"நோயியல், தாவர." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zkkdy892/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment