(நாமக்கல் கவிஞர்) இருபதாம் நூற்றாண்டில் விளங்கிய தமிழ்க் கவிஞர்களுள் ஒருவர்; ‘நாமக்கல் கவிஞர்’ என்று தமிழுலகிற்கு நன்கு அறிமுகமானவர். இவர் சேலம் மாவட்டம் மோகனூரில், வேங்கடராம பிள்ளைக்கும், அம்மணி அம்மாளுக்கும் எட்டாம் குழந்தையாக 19.10.1888–இல் பிறந்தார். இவருக்குத் தந்தை வைத்த பெயர் இராமலிங்கம் என்பதாகும். தாய் சூட்டிய பெயர் கறுப்பண்ணன். இராமலிங்கம் பிள்ளை, வே. இளம்பருவத்தில் ‘பதுலாபீம்’ என்ற முகமதிய மாதின் அன்பில் வளர்ந்த இவருக்குச் சாதி–சமய வெறி இல்லாமல் போயிற்று. தம் தொடக்கக் கல்வியை நாமக்கல்லில் உள்ள நம்மாழ்வார் பள்ளியில் தொடங்கினார். முதன்முதல் இவருக்கு எழுத்தறிவித்த ஆசிரியர், பழனி வாத்தியார் என்ற சண்முகம் பிள்ளையாவார். கோயம்புத்தூர்க் கல்லூரியின் கிளைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்த இவருக்குக் கணிதம் தவிர்ந்த பிற பாடங்களில் அதிக ஈடுபாடு உண்டு. இவர் இயற்கையாகவே ஓவியப் புலமை பெற்றிருந்தார். இவ்வியற்கை அறிவு, கோவைக் கல்லுாரி முதல்வர் ஈ.எச். எலியடு அவர்கள் ஆதரவாலும், ஓவிய ஆசிரியர் கோபால்ராவ் அவர்களின் உதவியாலும் செழித்து வளர்ந்தது. காட்டுப்புத்தூர்ச் சமீன்தார் உயர்நிலைப் பள்ளியில் ‘பள்ளியிறுதிப்’ படிப்பை முடித்தார். திருச்சி எசு.பி.சி. (S.P.G. College) கல்லூரியில் ‘எப்.ஏ’ வகுப்பில் சேர்ந்து படிக்கும்பொழுதே இவருக்குத் திருமணம் நடந்தேறியது. இவர் முத்தம்மாள் என்னும் மங்கையை 1907–ஆம் ஆண்டு மணந்து பதினான்கு ஆண்டுகள் இல்லறம் நடத்தினார். எனினும் இவருக்குக் குழந்தைப் பேறே இல்லாது போயிற்று. முதல் மனைவி முத்தம்மாள் திடீரென மாரடைப்பால் இறந்துவிடவே, மனைவியின் தங்கை சவுந்தரத்தை இரண்டாம் மனைவியாக ஏற்று, மூன்று ஆண், இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தையானார். கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட காதுவலி, இவர் படிப்பிற்குத் தடையாயிற்று. தம் மகன் அரசுப்பணியில் அமரவேண்டும் என விரும்பினார் தந்தையார். தந்தையின் எண்ணப்படி தாலுக்கா அலுவலகத்தில் எழுத்தராக மூன்று திங்களும், நாமக்கல் போர்டு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக மூன்று திங்களும் பணி செய்தார். பா.வெ. மாணிக்க நாயக்கரின் தூண்டுதலினால் அரியணையில் அமர்ந்திருக்கும் ஐந்தாம் சார்சு மன்னருக்குப் பாரத அன்னை முடிசூட்டுவது போன்ற படம் வரைந்து, தில்லியில் நடந்த பொருட்காட்சிக்கு அனுப்பித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். இப்பரிசு 12.12.1912–ஆம் நாள் இவருக்குக் கிடைத்தது. இவரது ஓவியப் புலமையை உலகறியச் செய்த படம், இவர் வரைந்த நாமக்கல் ஆசிரியர் வி. இலட்சுமண அய்யரின் படமே எனலாம். மராமத்துத்துறைப் பொறியாளர் சிம்சன் துரையவர்களின் இறந்த குழந்தையின் படத்தை உயிருள்ளது போன்று வரைந்து முடித்து 675 ரூபாய் அன்பளிப்புப் பெற்றார். சிம்சன் அளிப்பதற்கு இசைந்திருந்த தொகை ரூபாய் ஐம்பதே. இயற்கையாகவே கவியியற்றும் ஆற்றல் பெற்றிருந்த இவருக்கு நாடகக் கலைஞர் பலரின் நட்புப் பெரிதும் உதவியது. இளமையில் இவர் பாடிக் கொடுத்த மேடை நாடகப் பாடல்கள் பலவாகும். தூத்துக்குடியில் 1914–ஆம் ஆண்டில் நடந்த சுவிதைப் போட்டியில் இவர் ‘நாட்டுக்கும்மி’ என்ற தலைப்பில் 100 பாடல்கள் எழுதிக் கலந்துகொண்டார். இப்போட்டியில் பரிசு கிடைக்கவில்லை என்றாலும், சேலம் விசயராகவாச்சாரியாரின் நட்புக் கிடைத்தது. அவர் இவரைப் புலவர் என்று பாராட்டினார். காரைக்குடியில் பாரதியாரைச் சந்தித்துத் ‘தம்மரசைப் பிறர் ஆள’ என்னும் மேடை நாடகப் பாடலைப் பாடிக் காட்டியபோது, ‘பலே பாண்டியா! பிள்ளை நீர் ஒரு புலவன். ஐயமில்லை’ என்னும் பாராட்டைப் பெற்றார். நாடு, மொழி, கலை, சமூகம், காந்தியம் போன்ற பல துறைகளில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ‘நாமக்கல் கவிஞர் பாடல்கள்’ என்னும் தொகுப்பில் அடங்கியுள்ளன. ‘அவளும் அவனும்’ முதலாகத் ‘தமிழ்மணம்’ இறுதியாக 32 நூல்களை இவர் எழுதியுள்ளார். தமிழ்த்தேன், கீர்த்தனங்கள், தமிழன் இதயம், சங்கொலி, கீதாஞ்சலி, காந்தியஞ்சலி என்னும் கவிதை நூல்கள் இவரால் எழுதப்பட்டன. மோ.வெ. கோவிந்தராச ஐயங்காருடன் சேர்ந்து 1913–ஆம் ஆண்டில் ‘லோக மித்திரன்’ என்ற செய்தியிதழைத் தொடங்கி நடத்தினார். இராசாசி, ஈ.வே.ரா, பாரதியார், திரு.வி.க. போன்ற தலைவர் பலர் நட்பைப் பெற்ற இவர் கவிஞராக எழுத்தாளராக – பேச்சாளராக – செயல் வீரராகச் சிறந்து விளங்கினார். 15.8.1949 முதல் தமிழக அரசவைக் கவிஞராகப் பொலிந்த இக்கவிஞர் 1972–ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். மகா.வே.