தென்மேற்கு ஈரானில் குசிசுத்தான் (Khuzistan), இலூரிசுதான் (Luristan) பகுதியே முன்பு ஈலம் (Elam) என்று குறிப்பிடப்பட்டது. இங்குத் தொன்மையான நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள் தொல்லியல் அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி சமவெளிகளும் மலைகளும் நிறைந்தது. கார்கேக்கு (Karkhch), கரூன் (Karun) ஆகிய ஆறுகளினால் இப்பகுதி வளம் நிறைந்து காணப்படுகிறது. இப்பகுதி மேட்டுப்பாங்கான நிலத்தைக் கொண்டிருந்ததால் இதனை யூதர்கள் ஈலம் எனப் பெயரிட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் ஈலமியர்கள் (Elamites) எனப்பட்டனர். ஈலமியர்கள் இப்பகுதியை ஆல்ட்டாம்டி (Haltamti) எனக் கூறினர். ஆல்ட்டாம்டி என்பதற்கு இறைநிலம் (Lord's land) என்று பொருள். ஈலமியர்கள் முதன்முதலில் ஈரானியப் பீடபூமி பகுதியில் வசித்து வந்தனர்; பின்னர்த் தாழ்நிலப் பகுதிகளிலும் வசிக்கத் தலைப்பட்டனர். அவர்கள் இப்பகுதியிலிருந்து குதிரைகள், மரப்பொருள்கள், மணிக்கல் வகைகள், உலோகப் பொருள்கள் போன்றவற்றை அக்காடு (Akkad), சுமர் (Sumer) பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்தனர். வரலாறு தொல்லியல் அறிஞர்கள் இப்பகுதியில் அகழாய்வுகள் செய்து இங்கிருந்த நாகரிகம் கி.மு. 4500–ஆம் ஆண்டைச் சார்ந்தது என்னும், எகிப்து, சுமேரியா, சிந்து நாகரிகங்களின் காலத்தை ஒத்தது என்றும் கூறினர். மேலும், இங்குப் புதிய கற்காலக் கருவிகளும் அக்காலத்தைச் சார்ந்த மட்பாண்டங்களும் கிடைத்ததிலிருந்து புதிய கற்கால மனிதன் வாழ்ந்ததற்கான அறிகுறி தெரியவந்துள்ளது. ஈலமிய மக்கள் முதலில் நாடோடிகளாக நிலையற்ற வாழ்க்கையைக் கொண்டிருந்தனர். பின்னர்ப் படிப்படியாக நிலையான இடத்தில் வாழத் தலைப்பட்டனர். ஈலமியர்கள் விலங்குகளை வளர்த்தும் பருவ காலங்களில் வேளாண்மை செய்தும் வந்தனர். செம்பின் பயனை இவர்கள் அறிந்திருந்தனர். தந்தம், சங்கு, செம்பு போன்ற பொருள்களிலிருந்து அணிகலன்கள் செய்தனர். கி.மு. 3–ஆம் நூற்றாண்டில் ஈலமியர்களுக்கும் சுமேரியர்களுக்கும் இடையே பகைமை ஏற்பட்டது. இதில் ஈலமியர்கள் வெற்றி பெற்றனர். அக்காடு மன்னன் சார்கன் (Sarcon of Akkad) கல்வெட்டுகள் ஈலத்தையும் சுமேரியாவையும் சார்கன் வென்றதாகக் கூறுகின்றன. அரசர்கள் கூட்டாட்சி முறையில் (Federation of Rulers) ஈத்தை ஆண்டார்கள். ஈலமியர்கள் சித்திர வடிவ எழுத்துமுறையை அறிந்திருந்தனர். இந்த ஆதி–ஈலமிய எழுத்து (Proto–Elimite) வகை இன்றளவும் புரிந்து கொள்ள இயலாததாகவே உள்ளது. ஈலத்தை அக்காடியர்கள் தங்கள் ஆட்சியின்கீழ்க் கொணர்ந்தபொழுது ஆப்பு எழுத்துகள் புழக்கத்தில் வந்தன. ஈலத்தின் தாழ்நிலப் பகுதி பன்னெடுங்காலமாகச் சுமேரியர்களின் வசம் இருந்தது. ஈலமியர்கள் சுமேரியர்களுக்குச் சொந்தமான சில பகுதிகளையும் குறிப்பாக ‘ஊர்’ (Ur) நகரையும் தங்களின் ஆட்சியின்கீழ்க் கொணர்ந்தனர். ஈலத்தையும் மெசபடோமியாவையும் வடக்கத்திய இனத்தவரான காசைட்டுகளும் (Kassites) உரியன்சுகளும் (Hurrians} கி.மு. 2000 ஆண்டளவில் கைப்பற்றினர். ஆக்கிரமிப்புக் கொள்கை கொண்ட ஈலமிய அரசர்கள் கி.மு. 1300–இல் கீழை மெசபடோமியாவைத் தங்கள் ஆளுகைக்குக் கொண்டு வர அசிரியாவுடன் போரிட்டனர். இக்காலத்தில்தான் ஈலத்தில் கலைகளும் கைத்தொழில்களும் பெருமளவில் வளர்ச்சியடைந்தன. நகரங்களில் பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டன. அவற்றில் சூசா (Susa), சிகுராத்து (Zigurats), சோகா-சான்பில் (Choga-Zanbil) நகரங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் சிறப்புமிக்கவை. நெபுகாத்நேசர் ஈலத்தை கி.மு. 1200–இல் போரிட்டுச் சூறையாடினார். சூசா நகரம் கொள்ளையடிக்கப்பட்டது. இப்போரின் விளைவாக ஈலத்தை ஆண்ட ஈல மரபினர் ஆட்சி முடிவுற்றது. இதன் பின்னர் ஈலத்தின் வரலாறு ஏறக்குறைய 300 ஆண்டுகள் வரை தெளிவாக அறியப்படவில்லை. இதனை ஈலத்தின் இருண்டகாலம் என்பர். புதிய ஈலமிய அரசு கி.மு. 8–ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் ஏற்பட்டது. இவ்வரசு அசிரிய அரசர் சார்கானுடனும் அவன் வழி வந்தவர்களுடனும் போரிட்டது. புதிய ஈலமிய அரசு பாபிலோனியாவுடன் கூட்டுச் சேர்ந்து அசிரிய அரசர் சென்னாசெரிபை எதிர்த்தது. ஆனால், சென்னா- செரிபு பாபிலோனியாவைக் கைப்பற்றினார். அவர் கி.மு. 693–இல் ஈலத்தையும் அதன் தாழ்நிலப்பகுதிகளையும் கைப்பற்றினார். ஈலம் பாரசீகத்துடன் கூட்டுச் சேர்ந்து போரைத் தொடர்ந்தது. தோல்வியைத் தழுவும் நிலையில் அசிரியாவுடன் உடன்படிக்கை செய்துகொள்ள ஈலம் விழைந்தது. ஆனால், போர் நடவடிக்கைகள் நிற்கவில்லை. இதனால், அசிரியர்கள் கி.மு. 653–இல் பெருவெற்றி பெற்றனர். புதிய ஈலமிய அரசின் ஆட்சியும் கி.மு. 647–இல் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. அகமீனியப் பேரரசின் ஒரு பகுதியாக ஈலம் ஆனது. மகா அலெக்சாந்தருக்குப்பின் ஈலம் எலிமயிசு (Elymais) என்னும் சிறு பகுதியாக இருந்தது. இப்பகுதி சூசாவிலிருந்து இலூரிசுதான் மலைப்பகுதி வரை பரவியிருந்தது. சசானியர்கள் இப்பகுதியை கி.பி. 3–ஆம் நூற்றாண்டில் அழித்தனர். அப்பொழுது இப்பகுதியில் குசி (Khuzi) என்னும் மக்கள் வாழ்ந்தனர் எனச் சில குறிப்புகள் கூறுகின்றன. இவர்களே இப்பகுதிக்கு குசிசுத்தான் எனப் பெயரிட்டனர். ஈலமிய மக்கள் சூசாவின் முதற்கடவுளான இன்சுசினாக்கையும் (Inshushinak) ஊபன் (Huban), கிரிரிசா (Kririsha) என்னும் பெண்கடவுள்களையும் வழிபட்டனர். இவர்கள் வண்ணந் தீட்டப்பட்ட மட்பாண்டங்களைப் பயன்படுத்தினர். இம்மக்களின் பழக்கவழக்கங்களை இப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களிலிருந்து நன்கறியலாம். அகமீனியர்களின் பழக்கவழக்கங்களை இவர்களும் பின்பற்றினர்.