கடன் ஆவணங்களை வாங்குதல், பங்கு ஆவணங்கள் முதலியவற்றை விற்றல் ஆகியவை தொடர்பான பிற வாணிகப் பணிகளில் உதவுவதற்காகவும், இவ்வாணிகங்களை நெறிப்படுத்துவதற்காகவும், நிறுவப்பட்ட இணைக்கப்பட்ட அல்லது இணைக்கப்பெறாத அமைப்பு அல்லது தனிப்பட்டவர் தொகுப்பு இருப்பு மாற்றகம் (Stock Exchange) எனப்படுகிறது. இருப்பு மாற்றகத்திற்குப் பங்கு அங்காடி, கடன் ஆவணங்கள் அங்காடி இருப்பு அங்காடி என்ற பல பெயர்கள் உண்டு. கடன் ஆவண அங்காடியை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். அ) முதன்மை அங்காடி அல்லது புதிய வெளியீடுகள் அங்காடி புதிய கூட்டுப்பங்கு நிறுவனங்களின் புதிய கடன் ஆவணங்களையும், ஏற்கனவே உள்ள கூட்டுப் பங்கு நிறுவனங்களின் புதிய கடனுறுதிச் சீட்டுகளையும் வாங்கும், விற்கும் அங்காடி. ஆ) இருப்பு மாற்றகம் அல்லது பங்கு இருப்பு மாற்றகம் ஏற்கனவே உருவாக்கப்பட்டு இரண்டாம்–கை நிலையில் உள்ள கடன் ஆவணங்களை வாங்கும், விற்கும் அங்காடி. அடிப்படை நோக்கம் சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் உள்ளவர்களை அணுகும் முறைகளைக் கண்டுபிடித்து, அதன் வழியாக ஆதாயம் தரத்தக்க வழிகளில் முதலிடும் நோக்கத்துடன், அவர்களின் சேமிப்புகளையெல்லாம் திரட்டிப் பலதரப்பட்ட முதலிட விரும்புவோரின் பணத்தேவைகளை நிறைவேற்றிடும் நோக்கத்துடன் இருப்பு மாற்றகங்கள் செயற்படுகின்றன. பொருளாதார அமைப்பும், இருப்பு மாற்றகமும் உடைமைப் பொருளாதாரத்தில் உற்பத்தி, மாற்று, பகிர்வு நடவடிக்கைகளைத் தனிப்பட்டவர் மேற்கொள்வர். பெருமளவில் முதலிடுவதும், அதற்காக நுகர்வைக் கட்டுப்படுத்திச் சேமிப்பதும், இவற்றின் விளைவாகத் தோன்றும் சொத்துகளைத் தங்கள் சொந்த உடைமையாக்கிக் கொள்வதும், இவ்வகைப் பொருளாதாரத்தின் இயல்பாகும். இவ்வகைத் தனியார் உடைமைப் பொருளாதார அமைப்பில்தான். இருப்பு மாற்றகம் இயங்குதல் இயலும். அரசே எல்லாப் பொருளாதார நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதாய பொதுவுடைமைப் பொருளாதாரங்களில் இருப்பு மாற்றகம் இயங்க வாய்ப்பில்லை. அரசும் தனியாரும் சேர்ந்து பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கலப்புப் பொருளாதாரத்தில், இருப்பு மாற்றக நடவடிக்கைகள் முழு அளவில் தன்னியல்புடையனவாக இல்லாமல் ஓரளவுக்குக் கட்டுப்பட்டவையாக இருக்கும். இருப்பு மாற்றக இயல்புகள் இருப்பு மாற்றகம் நன்கு சீரமைக்கப்பட்ட அங்காடி வகையைச் சேர்ந்தது. இதில் பயன்படும் ஆவணங்களுக்குப் போக்குவரத்துச் செலவும் இல்லை; விரைவில் அறியத்தக்க தன்மையும் இல்லை. மாறாக, இவ்வாவணங்கள் யாவும் முற்றிலும் நிறைவான முறையில் தரப்படுத்தப்பட்டவையாகும். இருப்பு மாற்றக நடவடிக்கைகள் யாவும் வங்கி இருப்பு மற்றும் பலவகைப்பட்ட கடன் ஆவணங்களின் அளிப்பு, தேவை ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறுகின்றன. இருப்பு மாற்றகத்தில் பயன்படும் பலவகையான கடன் பத்திரங்களின் அளவு எப்போதும் குறைவதில்லை. பணிகள் இருப்பு மாற்றகப் பேரங்களில் ஈடுபடும் பலர் மிகக் குறுகிய கால அளவில் பெருஞ்செல்வர்களாகவும், பலர் எதிர்பாராத அளவுக்குப் பேரிழப்புகளுக்கு ஆளானவர்களாகவும் மாறுதலைக் கண்டு, இம்மாற்றகப் பணிகள் பற்றியும், இம்மாற்றகம் பற்றியும் பெரும்பான்மையோர் ஐயுறுவர். ஆனால், இவ்வேற்றத்தாழ்வுகள் இவ்வங்காடியில் மேற்கொள்ளப்படும் ஊக வாணிகத்தால் தோன்றுபவை. ஊக வாணிகம் அளவுக்கு மிஞ்சினால் சமுதாயம் கேடுறும். ஆனால், ஊக வாணிகம் ஓரளவுக்காவது இருந்தால்தான் வாணிகம் உயிரோட்டமுள்ளதாக இருக்கும். எனவே, இருப்பு மாற்றகப் பணிகள் சமுதாயத்திற்கு நன்மை விளைவிக்கத் தக்கவையே. பங்கு இருப்பு, கடன் ஆவணங்களுக்கு நிலையான அங்காடியை அமைத்துத் தருகிறது. கடன் பொறுப்பு வரையறை செய்யப்பட்ட கூட்டுப் பங்கு நிறுவனங்களின் தோற்றம், புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட விழைபவர்களுக்கு நல்ல வாய்ப்பாகும். இந்நிறுவனங்களின் பங்குகளை வாங்கும்போது நிறுவனங்களின் உரிமையையும் பெற இயலுகிறது. கடன் பொறுப்புகளும் வரையறுக்கப் பட்டுவிடுகின்றன. எனவே, தயங்காமல் இந்நிறுவனங்களின் பங்குகளையும், கடன் ஆவணங்களையும், வாங்குதல், விற்றல், மாற்றல் ஆகிய பணிகளை இம்மாற்றகம் செய்வதால் இவ்வகை ஆவணங்களுக்கு உறுதியான, நிலையான அங்காடி கிடைக்கிறது. இருப்பு மாற்றகம் முதலீட்டிற்கு நீர்மையைத் தருகிறது. சொத்தின் மதிப்புக் குறையாமல் பணமாக மாற்றத்தக்க தன்மையே நீர்மைத் தன்மை. அங்காடியில் அவ்வப்போது நிலவும் நிலைமைகளையும், கடன் ஆவணங்களின் விலைகளையும் மற்றும் பல செய்திகளையும் ஆய்ந்து, அறிக்கைகளை இவ்வகம் வெளியிடுவதால் கடன் ஆவணங்களின் நீர்மைத் தன்மை மிகுந்திருக்கிறது. கடன் ஆவணங்களை இம்மாற்றகம் மதிப்பிடுகிறது. ஒவ்வோர் ஆவணத்திற்கும் தோற்ற மதிப்பு, அங்காடி மதிப்பு, உண்மை மதிப்பு எனப் பல மதிப்புகள் உண்டு. மிகக் குறுகிய கால அளவில் மலிவான முறையில் பல ஏடுகள் மூலம் இம்மாற்றகம் மதிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. முதலிடுபவர்கள் தங்கள் பத்திரங்கள், சொத்துகள் ஆகியவற்றின் உண்மையான மதிப்புகளை அறிந்து செயற்பட இம்மதிப்பீடுகள் மிகவும் துணை செய்கின்றன. பாதுகாப்பை இம்மாற்றகம் உறுதிப்படுத்துகிறது. கடன் பத்திரங்கள் (ஒப்பந்தங்கள்) நெறிப்படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் இருப்பு மாற்றகப் பணிகளும் நடைமுறைகளும் நெறிப்படுத்தப்படுவதால் இம்மாற்றக நடவடிக்கைகள் பாதுகாப்பாக உள்ளன. ஏமாற்று வேலைகளும், தவறான நடவடிக்கைகளும், ஊக வாணிக முனைப்பான நடவடிக்கைகளும் களையப்படுகின்றன. மூலதனத் திரட்சிக்கு இது உதவுகிறது. ஆக்கத்திற்கு மூலதனம் இன்றியமையாதது. மூலதனத்தின் தோற்றுவாய் சேமிப்பு, அளவிறந்த மக்களிடம் சிறு சிறு துளிகள் போல் உள்ள இச்சேமிப்புகளைத் திரட்டித்தான் முதலிட முடியும். பணத்தைக் கொடுப்பவர் பாதுகாப்பையும் அதன் மூலம் வருவாயினையும் நாடுவர். இவற்றை உருவாக்கித் தருவது இருப்பு மாற்றகம். நேர்மையான மூலதனப் பங்கீட்டிற்கு இது உதவுகிறது. மூலதனம் திரளுவதோடு தகுதியாகப் பயன்படவும் வேண்டும். ஒரே தொழிலில் உள்ள பல தொழிற்கூடங்கள், ஒரே நாட்டிலுள்ள பல தொழில்கள், ஒரே நாட்டிலுள்ள பல பகுதிகள், உலகிலுள்ள பல பகுதிகள் ஆகியவற்றிடையே நேர்மையான மூலதனப் பங்கீட்டிற்கு இருப்பு மாற்றகம் துணை செய்கிறது. திட்டமிட்ட வளர்ச்சிக்கும் இது இன்றியமையாததே. சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் இம்மாற்றகம் பல வழிகளில் உதவுகிறது. இவ்வகையில் மாற்றகம் ஆற்றும் சிறப்புப் பணிகள் பல. இது உரிமையைப் பரவலாக்குகிறது. பல நிலைகளிலும் உள்ள மக்களுக்கு முதலிடும் கலையை திறம்பட விளக்குவதால், மிகுதியாகப் பணம் வைத்திருப்போர் உந்தப்பட்டுத் தம் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நாட்டின் ஆக்கப் பணி விரிவடைகிறது. இதனால் சமுதாயமும் பயன்பெறுகிறது. சேமிப்பைத் திரட்டும் பணியை வருவாய் ஈட்டும்பணியுடன் இணைத்துச் செயற்படுவதால், மக்கள் மென்மேலும் சேமிக்கவும், அதனை முதலீடு செய்து செல்வத்தைப் பெருக்கவும் இது துணை செய்கிறது. இது முதலிடுபவர்களுக்கு உதவுகிறது. இம்மாற்றகம் சேமிப்பின் நீர்மைத் தன்மை, ஆதாயம் ஈட்டும் தன்மை இரண்டையும் பெற விழைவோர், சேமிப்பை மிகுத்துப் பயன்பெற உதவுகிறது. இது கூட்டுப் பங்கு நிறுவனங்களுக்கு உதவுகிறது. புதிய புதிய முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்க விரும்பும்போது மூலதனத் தேவையும் பன்டமங்கு பெருருகிறது. இது அரசுக்கு உதவுகிறது. தற்கால அரசுகள் வெறும் காவல் அரசுகள் அல்ல; மக்கள் நலம் நாடும் நல அரசுகள், நலம், வளர்ச்சிப் பணி ஆகியவற்றிற்சென அரசின் பணத் தேவை பல மடங்கு பெருகியுள்ளது. இத்தேவையை நிறைவு செய்ய அரசுகள் கடன் ஆவணங்களை வெளியிட்டு மாற்றகம் மூலம் பணத்தைப் பெறுகின்றன. உறுப்பினர்கள் தகுதி வாய்ந்தவரே இருப்புமாற்றக உறுப்பினர்களாக முடியும் (தனி மனிதர்களையும், பதிவு செய்யப்பெற்ற நிறுவனங்களையும் ‘தனி ஒருவர்’ என்ற சொற்றொடர் குறிக்கிறது). மாற்றகத்தின் பல விதிகளுக்குக் கட்டுப்பட்டு உறுப்பினர்களாகும் இவர்கள் மட்டுமே மாற்றகப்பேரங்களில் ஈடுபட இயலும். ஒரு சில மாற்றகங்களில் உறுப்பினர் அல்லாதோரும் பேரங்களில் ஈடுபடுவர் என்றாலும் அவர்தம் கடமை, பொறுப்பு, உரிமை, சலுகை எல்லாம் குறைவே. நிருவாகம் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் குழுக்கள் இருப்பு மாற்றக நிருவாகத்தை மேற்கொள்கின்றன. நிருவாகக் குழு தவிர, அதற்குத் துணையான வகையில் தவறிழைப்போரை ‘மேற்பார்வையிடும் குழு’, ‘வரிசைப்படுத்தும் குழு’, ‘நடுவர் குழு’ போன்ற பல சிறப்புக் குழுக்களும் பணியாற்றுகின்றன. வாங்குபவர்கள் அங்காடியில் நுகர்வோர்போல், இருப்பு மாற்றகத்தில் பங்கு இருப்புகளையும், கடன் ஆவணங்களையும், பிறவகை ஆவணங்களையும், தனி மனிதர்களும் கூட்டுப் பங்கு நிறுவனங்களும் வாங்கும். விற்பவர்கள் தம் பணத் தேவைக்காகப் பங்கு இருப்புகளையும், கடன் ஆவணங்களையும், கூட்டுப் பங்கு நிறுவனங்களும் அரசுகளும் விற்கும். ஆவணங்கள், இருப்பு மாற்றகத்தில் கூட்டுப்பங்கு நிறுவனங்களின் முழுமையாகச் செலுத்தப்பட்ட பங்குகள், கடன் ஆவணங்கள், அரசு வெளியிடும் கடன் ஆவணங்கள், கடன் ஆவணங்களின் மீதான உரிமைகள் விற்கவும், வாங்கவும்படுகின்றன. அங்காடியில் செயற்படுவோரின் பல பெயர்கள் முன்னோக்கிய பேரங்களில் ஈடுபடும் வாணிகர்களைப் பலவகைப் பெயர்களில் குறிப்பிடுவதுண்டு. கரடிகள் (Bears): எதிர்காலத்தில் விலை உயருமெனக் கருதி இப்போது வாங்குபவர்கள். காளைகள் (Bulls): எதிர்காலத்தில் விலை குறையுமெனக் கருதி இப்போது விற்பவர்கள் நொண்டி வாத்துகள் (Lame Ducks): தமது பேரத்தை முடித்து வைக்க முடியாத நிலையில் திணறிக் கொண்டிருப்பவர்கள்–கரடிகள். கலைமான்கள் (Stags): கரடிகள் போன்றோ காளைகள் போன்றோ அல்லாமல் நல்ல எதிர்கால வாய்ப்புகள் உள்ள புதிய கம்பெனிகளின் கடன் ஆவணங்களின் பேரங்களில் ஈடுபடுபவர்கள். நிறைவிலா உறுப்பினர்கள் மாற்றகத்தின் முழு அளவிலான உறுப்பினர்களாக இல்லாமல் வெறும் தரகர்களாக மட்டும் இருப்பவர்கள். இவர்கள் தங்கள் பெயரில் பேரங்களை நிகழ்த்த இயலாது; மற்றவர்களுக்காகத் ‘தரகு மனிதர்கனாகச்’ செயற்படுவர். இசைவாணை பெற்ற உதவியாளர்கள் இவர்கள் மாற்றகத்தின் முழுமையான உறுப்பினர்களாக இல்லாமல், மிகுந்த அளவில் வாணிகம் செய்பவர்களால் அவர்தம் உதவிக்கென அமர்த்தப்படுபவர்கள். இவர்கள் தம் பெயரால் வாணிகம் செய்தல் இயலாது; உறுப்பினர்களின் இசைவாணை பெற்றவர்களாகப் பணியாற்றுவர். தாராவானி வாலாக்களும் தரகர்களும் (Taravani walas): அயல் நாடுகளில் அமைந்திருக்கும் மாற்றகங்களில் உள்ள உறுப்பினர்களைப் பணி செய்வோர், தரகர் என இருவகைப்படுத்தலாம். அதைப் போன்றே இந்தியாவில் தாராவானி வாலாக்கள், தரகர்கள் என இருவகையினர் உண்டு. மற்ற உறுப்பினர்களுக்காகவோ, பொதுமக்களுக்காகவோ செயற்படாமல், தம் கணக்கில் தமக்காகவே ஆவணப் பேரங்களில் ஈடுபடுவர் தாராவானி வாலாக்கள், பிறர் தரகர்கள். இந்தியாவில் இருவருக்குமிடையே வேறுபாடு அதிகமில்லை. வாணிகம் நடைபெறும் முறை இருப்பு மாற்றக வாணிகம் இருவகைப்படும். முதலாவது, உடனடிப் பட்டுவாடா ஒப்பந்தங்கள் அல்லது உடனடிப் பட்டுவாடா வாணிகம். இரண்டாவது, முன்னோக்கிய பட்டுவாடா ஒப்பந்தங்கள். இருப்பு மாற்றகம் முறைப்படுத்தப்பட்ட சீரிய அங்காடியாதலால் அதன் பேரங்களில் பயன்படும் ஆவணங்களை யாரும் பார்வையிடுவது இல்லை. கூட்டுப்பங்கு நிறுவனங்களின் பெயர்கனையும் இம்மாற்றகத்தில் மிகச் சுருக்கமாகவே குறிப்பிடுவர். எடுத்துக்காட்டாக, ‘டாடா, இரும்பு உருக்குத் தொழில்நிறுவனம் (இலிமிடெட்)’ என்பதைத் திசுகோ (Tisco) என்பர். ஆவணங்களை வாங்க, விற்க விரும்புவோர் தரகரிடம் தமது விருப்பத்தைச் சொல்லிப் பேரம் பேசுவர். அதனடிப்படையில் எந்தவிதமான ஆவணங்களை, எந்த அளவுக்கு வாங்க, விற்க வேண்டும் என்ற ஓர் ஆணையைத் தரகர் பெற்றுக்கொண்டு மாற்றக அரங்கிற்குச் செல்வார்; அவர் பெறுவது கீழ்வரும் ஆணைகளில் ஏதாவதொன்றாக இருக்கும். நிலையான ஆணை: குறைந்த அளவு விலையை வரையறை செய்து கொள்பவர் விற்கும்போது இவ்விலைக்குக் குறைத்து விற்கக் கூடாது; மிகுதியாக விற்கலாம். வாங்கும்போது இவ்விலைக்கு மிகுதியாக வாங்கலாம்; குறைத்து வாங்கக்கூடாது. கட்டுப்படுத்தப்பட்ட விலை ஆணை: உச்ச அளவு, மிகக் குறைந்த அளவு ஆகிய விலைகளைக் குறிப்பிட்டு அதற்குள் பேரம் நிகழ்த்தலாம். பேரவிலை ஆணை: மாற்றக நிலைக்கேற்பத் தரகர்கள் தாங்களே விலையை வரையறுத்துக் கொள்ள அனுமதிக்கும் ஆணை. உடனடி அல்லது தள்ளுபடி ஆணை: உடனடியாகப் பேரத்தை நிகழ்த்த அனுமதிக்கவும், அவ்வாறு நிகழாவிட்டால் பேரத்தைத் தள்ளுபடி செய்வதற்கும் வகை செய்யும் ஆணை. மாற்றக அரங்கில் வணிகர் வாங்குவதற்கான ஒரு குறைந்த விலையையும் விற்பதற்கான ஒருமிகுந்த விலையையும் உரக்கச் சொல்லுவர். தரகர், வியாபாரி விலைகள் ஒத்துப் போனால் பங்குகளின் எண்ணிக்கை, ஒப்புக்கொள்ளப்பட்ட விலை, விற்பவர் வாங்குபவர் பெயர்கள் போன்றவற்றைக் குறித்துக் கொள்வர். இவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்ட விலைகள், இருப்பு மாற்றகத்தில் உள்ள அறிக்கைப் பலகையில் குறிக்கப்பெறும். பின்னர் இவையே, அதிகார முறையிலமைந்த பட்டியல் விலையாகிறது. தரகர் குறிப்பிடும் விலையும் வணிகர் குறிப்பிடும் விலையும் ஒத்துப் போகாவிட்டால் தரகர் இன்னொரு வணிகரிடம் பேரம் நிகழ்த்துவார். உடனடிப் பட்டுவாடா நடவடிக்கையாக இருந்தால் உடனடியாகவும், முன்னோக்கிய பட்டுவாடா நடவடிக்கையாசு இருந்தால் காலம் தாழ்த்தியும் பேரம் தீர்வடைகிறது. உடனடிப் பட்டுவாடா ஒப்பந்தம் பம்பாய் இருப்பு மாற்றகத்தில் 7 நாட்களுக்கு மிகாமலும், கல்கத்தா இருப்பு மாற்றகத்தில் 3 நாட்களுக்கு மிகாமலும், பொதுவாக ஒரு வாரக் காலத்திற்கு மிகாமல் பேரம் தீர்வடைகிறது. ஒரேயொரு பேரம் என்றால், ஆவணங்களைப் பரிமாற்றிக் கொண்டு பணத்தைப் பெறுவர், செலுத்துவர். பல பேரங்கள் இருந்தால், நிகர வேறுபாடுகள் மட்டும் கழிவகங்கள் மூலம் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன. முன்னோக்கிய பேரங்கள் ஊக வாணிக அடிப்படையில் அமைந்தவை. பத்திரங்கள் வாங்கப்படவோ விற்கப்படவோ மாட்டா. வேறுபாடுகளை மட்டும் கழிவகங்கள் மூலம் தீர்த்துக் கொள்வர். முன்னோக்கிய பேரத்தில் விருப்பப் பேரம், இறுதி நிலை வாணிகம், நடுநிலை, மறைப்பு விற்பனை மூலை அடக்கம் (Cornering), பின்னிருந்து முடக்குதல், குறுகிய விற்பனை, எதிர்காலப் பயன்களையும் கொண்ட பேரம், முடிவுற்ற பலன்களையும் கொண்ட பேரம் எனப்பல வகைகள் உண்டு. ஆவணங்களை வரிசைப்படுத்துதல் முதலிட விரும்பும் பொதுமக்கள், கடன் ஆவணங்களை வெளியிடும் நிறுவனம் ஆகியவற்றின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் வெளியிடும் கடன் ஆவணங்களை இருப்பு மாற்றகம் வரிசைப்படுத்தலாம். இது ஒரு சிறப்புப் பணி. எல்லா நிறுவனங்களின் ஆவணங்களையும் வரிசைப்படுத்தப்பட வேண்டிய தேவை இல்லை. ஆனால், இவ்வாறு வரிசைப்படுத்தும் ஆவணங்கள் நீர்மைத்தன்மை, உடனடியாக விற்பனையாதல், மாற்றுதல், விலை தொடர்ந்து இருக்கும் நிலை போன்ற பல சிறப்புத் தகுதிகளைப் பெறுகின்றன. இவ்வாறு வரிசைப்படுத்தப்படும் ஆவணங்கள் தூய்மைப்படுத்தப்பட்ட ஆவணங்கள், தூய்மைப்படுத்தப்படாத ஆவணங்கள் என இருவகைப்படும். இந்தியாவில் இருப்பு மாற்றகம் இந்தியத் துணைக் கண்டத்தில் இருப்பு மாற்றகம் 1933–இல் பம்பாய், கல்கத்தா, அகமதாபாத்து ஆகிய முப்பெரு நகர்களில் மட்டுமே இருந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின் விரைவான வளர்ச்சியைப் பெற்றது இம்மாற்றக எண்ணிக்கை. ஆனால், திட்டமில்லா வளர்ச்சியின் விளைவாகக் குழப்பமும் வீழ்ச்சியும் தோன்றின. இவற்றைத் தவிர்க்க 1947–இல் டாக்டர் பி.டி. தாமசு அவர்களை மாற்றகங்களின் செயற்பாடு குறித்து ஆய்வு செய்ய இந்தியப் பேரரசு அமர்த்தியது. அவர் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏ.டி. கோர்வாலா அவர்கள் தலைமையில், 1951–இல் ஒரு புதிய குழுவை அரசு அமர்த்தியது. ‘கடன் ஆவண ஒப்பந்தம், இருப்பு மாற்றகங்கள் நெறிப்படுத்தும் உத்தேசச் சட்டக் குழு’ என்ற பெயருடன் அமைந்த இக்குழுவின் பரிந்துரைகள் பல. அவற்றுள் சிறப்பானவை: (அ) இருப்பு மாற்றகத்திற்கு அரசு ஒப்புதல் தரும் முறையை மேற்கொள்ள வேண்டும். (ஆ) ஊக வாணிகத் தீமைகளைக் களைய, ஒப்பந்தங்களை நெறிப்படுத்த வேண்டும். (இ) நிலையான ஓர் இருப்பு மாற்றகக் குழுவை அமர்த்த வேண்டும். இப்பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ‘1956-ஆம் ஆண்டின் கடன் ஆவணங்கள் (ஒப்பந்தங்கள்) நெறிப்படுத்தும் சட்டத்தை’ அமைத்தது. இச்சட்டத்தின் அடிப்படையில் பம்பாயைத் தலைமையகமாகவும், கல்கத்தாவையும், தில்லியையும் கிளைகளாகவும் கொண்ட ஓர் இருப்பு மாற்றகச் சிறப்பு இயக்குநரகம் தோற்றுவிக்கப்பட்டது. இப்போது இந்திய அரசின் ஒப்புதல் பெற்றுள்ள இருப்பு மாற்றகங்களின் எண்ணிக்கை ஒன்பது. அவையாவன: :: பம்பாய் இருப்பு மாற்றகம் (1957). :: அகமதாபாத்து பங்கு, இருப்புத் தரகர்களின் கழகம் (1957). :: கல்கத்தா இருப்பு மாற்றகக் கழகம் (1957). :: சென்னை இருப்பு மாற்றகம் (1957). :: தில்லி இருப்பு மாற்றகக் கழகம் வரையறுக்கப்பட்டது (1957). :: ஐதராபாத்து இருப்பு மாற்றகம் வரையறுக்கப்பட்டது (1958). :: இந்தூர் பங்குத் தரகர்கள் கழகம் (1958). :: பெங்களூர் இருப்பு மாற்றகம் (1963). :: கொச்சி இருப்பு மாற்றகம் (1979). இவற்றுள் பம்பாய் இருப்பு மாற்றகத்திற்கு மட்டும் நிலையான ஒப்புதல் உண்டு. மற்றவற்றின் ஒப்புதல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். என்.எஸ்.பா. துணை நூல்கள் Bhalla, V.K., Investment Management, S. Chand & Company, New Delhi, 1983. Doodhan, Kersi, D., Stock Exchanges in a Developing Economy, University of Bombay, Bombay, 1962. Garg, K.L., Stock Exchanges in India, N.R. Agarwal & Company, Agra, 1964. Gifford, Charles & Stevens, J.A., Making money on the stock Exchange, Mac Gibbon & Kec. 1960. Gupta Umrao Lal, Working of Stock Exchange in India, Thompson Press, New Delhi, 1972. Kapoor, N.D., Company Law and Secretarial Practice, Sultan Chand and Sons, New Delhi, 1980. Rajan Nair, N., Marketing, Sultan Chand and Sons, New Delhi, 1982.