முதன்மையான பல அறிவியல் பிரிவுகளுள் ஒன்றாகும். மனித அறிவியலாகிய மானிடவியலில் இத்துறை மனிதத் தோற்றம், மனித வளர்ச்சி, மனிதர்களுக்கிடையே காணப்படும் வேறுபாடுகள், மனித உடலமைப்பு, மனிதத் தகவமைப்பு முதலான பெரும் பரப்புகளைக் கொண்டதாகும். இதனாலேயே உடல்சார் மானிடவியல் (Physical Anthropology), உயிரியல்சார் மானிடவியல் (Biological Anthropology) என்றும் கூறப்படும். பெரும்பான்மையாக உடல்சார் மானிடவியலை உடற்கூற்றியல் (Anatomy), உடலியங்கியல் (Physiology), உயிரியல் முதலான அறிவியல் துறைகளோடு தொடர்புபடுத்தி ஒருசில அணுகுமுறைகளில் குழப்பம் பெறுவதுமுண்டு. உடற்கூற்றியல் முதலான துறைகள் இன்றைய மனிதன், விலங்குகள் ஆகியவற்றின் உடலமைப்பையும் செயல்களையும் விரிவாக அறிவதாகும். உடல்சார் மானிடவியல் பனியாற்றுக் காலத்திற்கு (Glacial Period) முற்பட்ட உயர்பாலூட்டிகள் முதல் இக்கால மனிதன் வரை அவற்றின் அனைத்து வளர்ச்சி நிலைகளையும் படி மலர்ச்சி (Evolution) நிலைகளையும் உயிரியல்சார் மாற்றங்களையும் அவற்றுடன் தொடர்புடைய புதைபடிவங்கள் (Fossils), காலக்கணிப்பு (Chronology), இன வகைகள் (Racial Types), விலங்கினச் சமூக அமைப்புகள், விலங்குகளின் நடத்தைகள் (Animal Behaviours) முதலான பல பிரிவுகளையும் உயிரியற் பண்பாட்டு அணுகுமுறையில் (Bio Cul- tural Appraoch) அறிய முற்படுகிறது. உடல்சார் மானிடவியல் ஓர் உயிரியல் சார் அறிவியலாயினும் (Biological Science) இதன் அணுகுமுறையில் பண்பாட்டு அடிப்படைகளும் கையாளப்படுகின்றன. மனித அறிவியல் மனிதப் பண்பாட்டோடு தொடர்புற்றது. மனிதப் பண்பாட்டின் அடிப்படையில் மனிதனைப் பற்றிய முழுமையான அறிவினைப் பெற இயலும் என்னும் அணுகுமுறையே உடல்சார் மானிடவியலைப் பிற உயிரியற் பிரிவுகளிடமிருந்து வேறுபடுத்துகிறது. உடல்சார் மானிடவியலாரின் அணுகுமுறை பன்னோக்குடையது; இறந்த உயிரிகளையும் (Organisms) வாழும் உயிரினங்களையும் குறிப்பாக மனிதனையும் நகர மக்கள் முதல் தனித்து வாழும் சிறு முதுகுடிச் சமூகங்கள் வரை அனைவரையும் ஆய்வுக் கூடங்களிலும் அவர்கள் வாழும் இயற்கைச் சூழல்களிலும் ஆராயும் முறை முதன்மையானதாகும். உடல்சார் மானிடவியலின் வரலாற்றுக்கால வளர்ச்சி இத்துறை கி.பி 19–ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திலும் 20–ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் தனிப்பெருந் துறையாக முகிழ்த்தது. மனித இன வேறுபாடுகளை அறிவதை முதன்மையாகக் கொண்டு முகிழ்த்த இத்துறை உயிரியல்சார் அறிவியலுள் ஒன்றானதால், இதன் வளர்ச்சி அறிவியலின் வளர்ச்சியில் ஒரு பகுதியாகவும் அதனின்று பிரிக்க முடியாததாகவும் ஆகிவிட்டது. புதிய நிலங்களையும் மக்களையும் கண்டறிந்த நூற்றாண்டாக கி.பி. 13–ஆம் நூற்றாண்டு போற்றப்படுகிறது. இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஆய்வாளராக மார்க்கோபோலோ (Marcopolo) திகழ்ந்தார். இவரைத் தொடர்ந்து பல ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுப் பயணத்தால் புதிய நிலப்பரப்புகள், உருவத்தோற்றத்தில் பல்வேறு அமைப்புடைய மக்கள், மக்களின் புதிய பழக்க வழக்கங்கள், பல்வேறு வாழ்க்கையமைப்புகள், தகவமைப்புகள் முதலானவை அறியப்பட்டன. இவ்வகையான மாற்றங்களுக்கு அடிப்படையான காரணங்களை அறியப் பலர் பல்வேறு அணுகுமுறைகளில் சிந்தித்ததே உடல்சார் மானிடவியல் தோற்றத்திற்கு வழிகோலிற்று எனலாம். இதன் பின்னர் தார்வின் (Darwin) உருவாக்கிய படி மலர்ச்சிக் கொள்கையை ஏற்று, உடல்சார் மானிடவியற்றுறை முழு வடிவம் பெற்று அறிவியல் துறையின் மனித இனம் பற்றிய முழுமையான அறிவியலாயிற்று. தார்வின் கொள்கைப்படி ஒவ்வொரு சிறப்பினமும் (Species) உடலமைப்பாறும் உடற்செயலாலும் வேறுபட்டது; படிமலர்ச்சி நிகழ்வில் தனிஇடம் பெற்றது. தார்வின் கி.பி. 1871–இல் எழுதி வெளியிட்ட ‘மனிதனின் மரபு’ (The Descent of Man) என்னும் நூல் மனிதப் படிமலர்ச்சி நிலைகளை அறிவதற்கான வினாக்களை முறைப்படுத்திக் கொடுத்தது. இதன் அடிப்படையிலேயே உடல்சார் மானிடவியலார் மனித மூதாதையரின் புதைபடிவங்களைக் கண்டறிந்து, மனித இன வளர்ச்சியின் கிளைப் படத்தை (Family Tree Diagram) வரையறுத்தனர். புதிய உடல்சார் மானிடவியலின் வளர்ச்சி இக்காலத்திய உடல்சார் மானிடவியல் துறையானது 1940–இல் குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின் வளர்ச்சி பெற்றதாகும். இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் இன உயர்வுவாதம் (Racial Superiority) தலைவிரித்தாடியது. இப்போரில் விளைவுகளினாலேயே இனஉயர்வு வாதத்திற்கு உயிரியல்சார் அடிப்படையில் முழுவிளக்கம் கொடுக்கப்பட்டது. இதனால் இன உயர்வுத் தன்மை என்னும் போலிச் சித்தாந்தம் வலுவிழந்து அழிந்தது. உலகத்தின் பல்வேறு ஆட்சியாளர்களும் வெள்ளை இனமத சித்தாந்த வாதிகளும் கடுமையாகக் கையாண்ட இன உயர்வு வாதத்திற்கு முழு உண்மையைக் கண்டதில் உடல்சார் மானிடவியலாரே மிகப்பெரும் பங்கேற்றனர். உடல்சார் மானிடவியலின் தந்தையெனக் கூறப்படுபவர் சே.எப். புளுமன்பேக்கு (J.F. Blumenback) ஆவார். இவர் ஒரு செருமானிய மருத்துவராவார். இவர் மனிதர்களுக்கு இடையே காணப்படும் மிகுந்த வேறுபாடுகளைக் கண்டறிய ஒப்பீட்டு மனித உடற்கூற்றியலைப் (Comparative Human Anatomy) படித்து அதன் அடிப்படையில் மனிதஇனங்களை வகைப்படுத்த முனைந்தார். உலக மக்களைக் காக்கேசியர் (Caucasian), மங்கோலியர் (Mongolian), எத்தியோப்பியா (Ethiopian), மலாயர் (Malayan), அமெரிக்கர் (American) என ஐந்து இனங்களாகப் பிரித்தார். எத்தியோப்பியர் என்னும் இனமானது பின்னர் நீக்கிரோ (Negro) இனமாகக் கொள்ளப்பட்டது. புளுமன்பேக்கு கி.பி. 1752–1840–இல் கூறிய வகைப்பாட்டிற்குப் பின்னர் வந்த மானிடவியலார் மனித இன வகைப்பாட்டிற்குச் சிறந்த பல முறைகளைக் கையாண்டனர். புது உடல்சார் மானிடவியலின் புதிய பரப்புகளுக்குப் பல பரிமாணங்களை வகுத்துக் கொடுத்தது மூன்று நூல்களாகும். இந்நூல்களுள் முதலாவது வில்லியம் பாயிடு (William Boyd) 1950–இல் எழுதிய ‘மரபியலும் மனித இனங்களும்’ (Genetics and Races of Man) ஆகும். இந்நூல் வெளியாவதற்கு முன் உடல்சார் மானிடவியலார் மனித வேறுபாடுகளையறியப் புதை படிவங்களையும், இடுகாடுகளிலும் அகழாய்வுகளிலும் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் அளவுகளையும், வாழும் இனத்தவர்களின் புற உடலளவையும் கணக்கிட்டு அறிவதையே பெரிதும் நம்பியிருந்தனர். ஆனால் பாய்டு வெளியிட்ட நூல் இந்த அணுகுமுறையை முற்றிலும் மாற்றிவிட்டது. பாய்டு புறத்தோற்ற உடலமைப்புப் பெரிதும் சூழ்நிலையைச் (Environment) சார்ந்திருப்பதால் அதை மட்டும் வைத்து அறிவியல் அடிப்படையில் முடிவு காண்பது அரிது என வாதிட்டார். மனிதனின் மரபுப் பண்பினை (Genetic Character) அறிய வேண்டும்; புறத்தோற்ற உடலளவு சூழ்நிலையைச் சார்ந்ததாகையால் அது, அம்மக்கள் குழுவின் சூழ்நிலை வரலாற்றை (Environmental History) மட்டிலுமே வெளிப்படுத்தக் கூடியது; இந்த நிலையை விடுத்து மக்கள் குழுவின் இரத்தக் குழுக்களையும் மரபுப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆராய வேண்டும் என்று பாய்டு கூறினார். மரபுப் பண்புகளும் இரத்தக் குழுக்களும் சூழ்நிலையைச் சாராதவை; அவற்றை எளிதில் மக்களிடையே கண்டறிய முடியும்; அவற்றின் வழியால் மட்டுமே உயிரியல் சார்ந்த முடிவுகளைக் காண இயலும் என வாதிட்டார். வில்லியம் பாயிடு இரத்தக் குழுக்களின் அடிப்படையில் மனித இனங்களைத் தொடக்ககால ஐரோப்பியர் (Early Europeans), ஐரோப்பியர் (காக்கேசியர் – Caucasoids), ஆப்பிரிக்கர் (நீக்கிரோக்கள் – Negroids), ஆசியர் (மங்கோலியர் – Mongoloids), அமெரிக்க இந்தியர் (American Indians), ஆசுத்திரேலியர் (Australoids) என ஆறு இனங்களாகப் பகுத்தார். இவர் அறிமுகப்படுத்திய மரபுப் பண்பு அடிப்படையிலான அணுகுமுறை இக்கால மானிடவியலில் மக்கள் தொகையியல் சார் மரபியல் (Population Genetics) என்னும் பரந்த பிரிவாக உருப்பெற்றுள்ளது. இதனையொத்தே உயிர்வேதியியல் (Bio–chemical) பகுப்பாய்வும் உடல்சார் மானிடவியலில் தலையான ஆய்வு நெறிகளுள் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாயிடு வெளியிட்ட அதே ஆண்டிலேயே சி.எசு. கூன் (C.S. Coon), எசு.எம். கார்ன் (S.M. Garn), சே.பி. பிர்ட்செல் (J.B. Birdsell) ஆகியோர் வெளியிட்ட ‘இனங்கள்: மனிதருள் இனம் தோன்றியமுறை பற்றிய ஆய்வு’ (Races: A Study of the Probelem of Race Formation in Man) ஆகியவை இத்துறையின் விரிவாக்கத்துக்கு உதவியது. உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு இனமக்களைப் பற்றி மிகுதியான அளவில் உடல்சார் மானிடவியல் தரவுகளைச் (Data) சேகரித்த இவர்கள், அவற்றைத் தார்வின் படிமலர்ச்சிக் கோட்பாட்டோடு தொடர்புபடுத்திப் பகுத்தாய்ந்தனர். மனிதருள் பலவகை காணப்படுவதற்கு அவர்கள் வாழும் சூழ்நிலை ஒரு காரணமாகும். சூழ்நிலைத் தகவமைப்பு மரபுப் பண்பமைப்பில் மாற்றத்தைத் தோற்றுவிக்கிறது. இது மரபு வழியில் கொண்டு செல்லப்படுகிறது எனப் புது விளக்கம் கொடுத்தனர். இதன் பின்னர் 1951 ஆம் ஆண்டில் செர்வுட்டு வாசுபர்ன் (Sherwood Wasburn) என்பவர் நியூயார்க்கு அறிவியற் கழகத்தில் பேசிய ‘புதிய உடல்சார் மானிடவியல்’ (The New Physical Anthropology) என்னும் உரை உடல்சார் மானிடவியலாரிடையே மேலுமொரு புத்தொளியைக் தொடுத்தது. இவர் மனித வேறுபாடுகளை அறிவதில் வகைப்பாட்டியல் பாகுபாட்டை (Typological Classification) விடுத்து, ஒவ்வொரு வேறுபாட்டிற்கும் உயிரியற் கருத்துகளின் அடிப்படையை முதலில் அறிவது இன்றியமையாதது எனக் கூறினார். இந்த உயிரியற் கருத்தினை அறியும்போது ஊக அடிப்படையை (Speculation) அறவே விடுக்க வேண்டும், ஊகக் கருத்துகள் உயிரியற் கருத்துக்களுக்குத் துணை நிற்காது என விளக்கினார். பருநிலை வேறுபாட்டிலிருந்து நுண் நிலை வேறுபாட்டை ஊக நிலையில் பகுக்கலாம். ஆனால் நுண் நிலையிலிருந்து மிக நுண்ணிய பாகுபாட்டை அறிய ஊகக் கருத்துகள் வழிவகுக்கா. எனவே உயிரியற் கருத்துகளை அறிவதே சிறந்தது என விளக்கும் இவரது வாதத்திற்கு இவர் பல அணுகு முறைகளைக் காட்டுகிறார். இந்த மூன்று வெளியீடுகளும் சற்றேறக்குறைய குறுகிய காலத்தில் வெளியானதால் உடல்சார் மானிடவியலாரிடையே ஒருமித்த கருத்து உண்டாக ஏதுவாயின. இக்கால உடல்சார் மானிடவியல் விரிந்த பல பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை, படி மலர்ச்சியியல், உயர்பாலூட்டிகளியல், மனித இனங்கள், மானிட உடலளவையியல், எலும்பியலும் பல்லமைப்பியலும், மனிதச் சூழலியல், மக்கள் தொகை மரபியல், மக்கள்தொகையியல், கருவியலும் உடலியலும், மூலக்கூறு உயிரியல், பயன்முறை உடல்சார் மானிடவியல் முதலியனவாகும். படிமலர்ச்சியியல் மனித இனத்தில் வளர்ச்சியில் படிமலர்ச்சி நிகழ்வே மையமாக அமைந்துள்ளது. விலங்கினத்தின் ஒவ்வொரு நிலையிலும் அது அடைந்த மாற்றங்களைப் பல்வேறு கோட்பாடுகளில் உயிரியலார் பலர் கூறியுள்ளனர். இருப்பினும் தார்- வினுடைய இயற்கைத் தேர்வுக் கோட்பாடே முழுமைபெற்ற படிமலர்ச்சிக் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் பின்னர், உடல்சார் மானிடவியலாரும் உயிரியலாரும் படிமலர்ச்சிக் கொள்கைக்கு மேலும் நுண்விளக்கங்கள் தந்துள்ளனர். ஓரணு உயிரியிலிருந்து (Unicellular Organism), வளர்ச்சி பெற்ற இக்கால மனிதன் வரையிலான படிமலர்ச்சியை அறியும் இப்பிரிவு, உடல்சார் மானிடவியலின் தலையான பிரிவுகளுள் ஒன்றாகும். இருப்பினும் இப்பிரிவு மனிதனை உள்ளடக்கிய உயர் பாலூட்டிகளின் (Primates) படிமலர்ச்சியினை விரிவாக ஆராய்கிறது. ஒவ்வொரு சிறப்பினத்திற்குள் ஏற்படும் மாற்றங்களையும், இம்மாற்றங்கள் மரபு வழியில் கொண்டு செல்லப்படும் தன்மை முதலானவற்றையும் பெருநிலைப் படிமலர்ச்சி (Macro Evolution) நிலையிலும் நுண்படிமலர்ச்சி (Micro Evolution) நிலையிலும் அறியலாம். தார்வின் காட்டிய இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டிலிருந்து விலகி, இன்றைய படிமலர்ச்சியியலார் படிமலர்ச்சி நிகழ்விற்குப் புதிய அணுகுமுறையில் விளக்கந் தருவர். இதற்கு உயிர் வேதியியலின் (Bio-chemistry) வளர்ச்சி துணை நிற்பதாகும். இதன் பின்னர், 20–ஆம் நூற்றாண்டின் தொடக்க முப்பதில் புதிய படிமலர்ச்சித் தொகுப்பிணைவு (The Modern Synthesis of Evolution) வழிமுறையைத் தியோடோசியசு தோப்சான்சுகி (Theodosius Dobzhansky), சி.சி. சிம்ப்சன் (G.G. Simpson), எர்ன்சுட்டு மேயர் (Ernst Mayr) ஆகியோர் மக்கள் தொகை மரபியலுடன் கணக்கியல் அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து, உடனிகழ்வுக் கொள்கையருக்கும் (Mutationists), தேர்வுக் கோட்பாட்டாளருக்கும் (Selectionists) இடையே வளர்ந்து வந்த விவாதத்திற்கு முடிவு கண்டனர். மக்களினத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு இயற்கைத் தேர்வும் சிறிய அளவிலான மரபு மாற்றங்களும் (Genetic Changes) படிமலர்ச்சி நிகழ்விற்கு இன்றியமையாதன என்னும் கூற்றை மக்கள் தொகை மரபியலார் ஏற்றுக் கொண்டுள்ளனர். படிமலர்ச்சியியலையும் இதனைச் சார்ந்த அனைத்துப் பரப்புகளையும் உடல்சார் மானிடவியலார் ஆராய்ந்து வருகின்றனர். உயர்பாலூட்டிகளியல் விலங்கினத்தில் உயரிய நிலையில் உள்ள உயர்பாலூட்டிகளைப் பற்றிய அறிவியலாகும். மனிதன் உயர்பாலூட்டிகளின் வரிசையில் (Order) அடங்கியிருப்பதால், இப்பிரிவு (Primatology) உடல்சார் மானிடவியலில் முதன்மையான பிரிவாகும். இப்பிரிவில் மனிதனையும் மனிதனுக்கு மிக நெருக்கமுள்ள மனிதரல்லாத உயர்பாலூட்டிகளான (Non-Human Primates) குரங்குகள், வாலில்லாக் குரங்குகள் (Apes) ஆகியவற்றையும் சிறப்பாக ஆராய்வர். மனிதனின் சமூகத் தோற்றத்தினையும் (Social Origin) உயிர்களின் படிமலர்ச்சியினையும் அறியும் பெரு நோக்கோடு மானிடவியலார் உயர்பாலூட்டிகளைப் பற்றிய விரிவான ஆய்வுகளை கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலேயே மேற்கொண்டனர். உயர்பாலூட்டிகளியலுள் பல பெரும் பிரிவுகள் உள்ளன. இந்த விலங்கின வரிசையில் உள்ள அனைத்து விலங்குகளின் உடற் செயலமைப்பு (Physiology), உடற்கூற்றமைப்பு (Anatomy), புறத்தோற்றம், தகவமைப்பு (Adaptation), நடத்தை முறைகள் முதலானவற்றை அறிந்து அதன்வழிப் படிமலர்ச்சித் தொடர்ச்சியினை அறிவர். வாலில்லாக் குரங்குகளும் உயிர்சார் அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் மனிதரைக் காட்டிலும் தாழ்ந்த நிலையில் இருந்தாலும், மனிதன் இன்று கண்டு வரும் மருத்துவம், உயிரியல் சார்ந்த அறிவியல் ஆகிய ஆய்வுகளில் மனிதரல்லாத உயர் பாலூட்டிகளே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் இவ்விலங்கினத்தின் ஆய்வுகள் மிகுந்து வருகின்றன. மனிதரோடு தொடர்புற்ற உயர்பாலூட்டிகளையும் பாலூட்டிகளையும் ஆய்வு செய்வதில் பல நெறிமுறைகள் கையாளப்படுகின்றன. மனிதரல்லாத உயர்பாலூட்டிகளின் நடத்தைகனையறியத் தொடர்ச்சியான நீண்ட காலப் புலக்காட்சியறிவுடன் உற்றுநோக்கல் (Observation) பெரும்பாலும் முதன்மையானதாகிறது. இவ்விலங்கினங்களை ஆய்வின் தன்மைக்கேற்ப இரண்டு நிலைகளில் கையாளுகின்றனர். விலங்குகளை அதன் சூழலிலேயே இருந்து ஆய்தல் ஒரு நிலையாகும். சில குறிப்பிட்ட வேதிப் பொருள்களின் விளைவுகளை ஆராயவும் ஒரு குறுகிய இடத்தில் அடைக்கப்பட்ட நிலையில் அதன் நடத்தை முறைகளை ஆராயவும் இவ்விலங்குகளைச் சோதனைக் கூடத்தில் சிறையிட்ட நிலையில் ஆராயுமுறை இரண்டாம் நிலையாகும். விலங்குகளின் நடத்தை முறைகளை அறிவது ‘விலங்கினப் பண்பியல்’ (Ethology) ஆகும். இப்பிரிவு உயர்பாலூட்டிகளியலில் தலையானதாகும். விலங்கினத் தொகுதியில் இரு வேறு விலங்கினக் குழுக்களிடையே நிலவும் பண்பு வேறுபாடுகளையும் இவற்றிற்கிடையே காணப்படும் இடைவெளியையும் அறுதியிட விலங்கினப் பண்பியலார் முற்படுகின்றனர். உயர் பாலூட்டிகள் குழுக்களாக ஒன்றுபட்டு வாழும் பண்பினைக் கொண்டுள்ளன. பொதுவாக இக்குழுக்கள் ஒரு குறிப்பிட்ட வாழிட எல்லையைக் கொண்டு பெரும்பாலான காலங்களில் இப்பகுதியிலேயே வாழ்கின்றன. உயர் பாலூட்டிகளின் வாழ்க்கை ஒத்துழைப்பு, போட்டி ஆகிய இவ்விரண்டு பொதுப்படையான நிலைகளைக் கொண்டுள்ளது. தம் வாழ்க்கைத் தேவைகளை ஈட்டும்போது ஏற்படும் போராட்டங்களிலும் போட்டிகளிலும் விலங்குகள் ஓடிஒளிதல், பயமுறுத்துதல், இணங்கிப் போதல் முதலான சூழ்நிலைகளை ஏற்றுச் செயற்படுகின்றன. உயர்பாலூட்டிகளில் மனிதன் மட்டுமே விலங்குகளைக் கொள்லும் ஆற்றல் பெற்றவன் என்னும் கருத்து, அண்மைக் கால ஆய்வுக் கருத்துக்களால் மறுக்கப்பட்டுள்ளது. வாலில்லாக் குரங்குகள் ஒன்றாகவோ தனித்தோ வேட்டையாடுந்தன்மையைக் கொண்டுள்ளன என்றும் இவை வேட்டையாடிய விலங்கினைச் சேர்ந்து உண்ணும் இயல்பினைக் கொண்டிருக்கின்றன என்றும் விளக்கப்படுகின்றன. விலங்கினத்தின் மேற்கூறிய அனைத்துச் செயற்பாடுகளின் நடத்தைமுறைகளையும் அறியும் இப்பரப்பில் தரவுகளைச் சேகரித்தல், அவற்றைப் பகுத்தாய்தல், ஒப்பிட்டாய்தல் முதலானவை இன்றியமையாதனவாகக் காணப்படுகின்றன. மனித சமூகத்தின் படிமலர்ச்சியினைப் பரந்த சான்றுகளுடன் அறியப் பாலூட்டிகளின் வாழ்க்கை முறைகள் அல்லது உயர்பாலூட்டிகளின் நடத்தை முறைகள் மட்டுமே சான்று பகரா. இதைப் போன்றே, மேற்கண்ட ஆய்வுகளை ஓர் உயிரினத்தின்பால் மட்டும் ஆய்வு செய்தலும் வழி வகுக்காது. மனிதனின் செயல் ஒப்புமைகளை மனிதனை ஒத்த குரங்குகள் முதலான ஓரிரு உயர்பாலூட்டிகளின் அமைப்பு முறைகளோடு ஒட்டிப் பார்ப்பதோடு நில்லாமல், பாலூட்டி உயிரினத் தொகுப்பின் ஒட்டுமொத்தத்தோடு ஒட்டிப் பார்க்கும் ஆய்வும் இன்றியமையாததாகும். இதைக் கருத்திற் கொண்டே கார்ப்பெண்டர் (Carpenter) ஒரு முடிவான பொதுவிதியினைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். உயர் பாலூட்டிகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் எண்ணிக்கை, அளவு, பால், வயது முதலானவற்றின் அடிப்படையில் தனித்த குழுக்களாகக் காணப்படும். இக்குழுக்கள் தம் எல்லைப் பரப்பை வகுத்துக் கொண்டு அப்பரப்பிலேயே வாழ முற்படும். தம் இனத்திற்கு உட்பட்ட வேற்றுக் குழுக்களுடனும் ஒன்றி வாழ இசையா. இதன் வழியே விலங்குகள் ஓங்கு பண்பைச் சார்ந்த முறையிலும் குழுக்களாக வகைப்படும். மற்ற உடனொத்த உயிரிகளை ஒடுக்கும் பண்பு, அதன் பரப்பிற்குள் உள்ள விலங்குகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் குறியீட்டு மொழி, சைகை நடத்தை முதலானவற்றை வைத்து இவ்விதமான குழுக்களை அல்லது தனிவிலங்கினை அளவிட முடியும். இப்பண்புகளின் அமைப்பு முறைகள் பல கால நிலைகளில் தொடர்ந்து புலக்காட்சி வழியாக ஆராயப்படும்போது வெளிப்படும். ஒரு விலங்கினத் தொகுதி தன் வாழிடப் பரப்பிலேயே ஆண்டு முழுவதும் உணவு சேகரித்து இனப்பெருக்கம் செய்து வாழ முடியாததாகிறது. உணவுப் பற்றாக்குறை, வாழும் சூழ்நிலையில் வேறுபாடு முதலானவற்றால் தன் பரப்பிலிருந்து அண்டைப் பரப்பைச் சார்ந்து வாழ முற்படுகிறது. அனைத்து உயர்பாலூட்டிகளின் சமூக வாழ்க்கையின் அமைப்பை ஒப்பிட்டு அறியும் நோக்கத்தோடு விலங்கினங்களின் வாழிடச் சூழலின் (Econiche) பின்னணியில் இவற்றின் பண்புகளை ஒப்பாய்வு செய்தனர். மனித இனங்கள் உலகின் ஒவ்வொரு பகுதியும் பல புவியமைப்புகளையும் கால நிலைகளையும் கொண்டு வெவ்வேறு பண்புகளையுடைய மக்களைக் கொண்டுள்ளது. இதனால், மக்கள் பலவாறாக வேறுபடுகின்றனர். மக்களும் காணப்படும் இந்த வேறுபாடுகளை அறிவது உடல்சார் மானிடவியலின் ஒரு பிரிவாகும். இப்பிரிவை இனவியல் (Raciology) எனக் கூறுவர். இக்கால மனிதனின் அனைத்து இனங்களும் நியாண்டர்தல் (Neanderthal) மூதாதையிலிருந்து தோன்றிய ஒரே சிறப்பினம் (Species) ஆகும். அதன் பின் இவர்கள் பல காரணிகளின் தாக்கத்திற்குட்பட்டுப் பல்வேறு வகையினராகப் பிரிந்தனர். பாகுபட்ட இவர்களின் உடலமைப்பு, பண்பாடு ஆகியவை அரசியல் வளர்ச்சியில் பல சிக்கல்களை ஏற்படுத்தி விட்டன. இதனால் உருவெடுத்ததே இனக் கொள்கை (Racism) ஆகும். இனவெறிக்குட்பட்ட இக்கொள்கையின் உண்மையினைப் புலப்படுத்துவதில் மானிடவியலாரின் பங்கே முதன்மையாக நின்றது. வெள்ளை இனத்தவர்கள் உயர்ந்தவர்கள்; கறுப்பு, மஞ்சள் நிறத்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்னும் இனவெறிவாதத்திற்கு அறிவியல் அடிப்படையில் உண்மை காண முற்பட்டனர். உயர்ந்த இனத்தவரால் மட்டுமே சிறந்த பண்பாடு தோற்றுவிக்கப்படுகிறது என்பதை மறுக்கப் பண்பாட்டு மானிடவியல் அடிப்படையிலும் தொல்லியல் அடிப்படையிலும் பண்டைய எகிப்திய சிந்துவெளி நாகரிகங்களைக் குறிப்பிட்டுக் காட்டுவர். பண்பாட்டின் தரத்திற்கு மண்டையோட்டின் அளவு தொடர்புடையதன்று. இனத்தின் அடிப்படையில் பண்பாடும் நாகரிகமும் அமைகின்றன என்ற இனவாதத்தினருக்குச் செருமானியரை எடுத்துக்காட்டாக மானிடவியலார் காட்டுவர். செருமானியரின் முதன் முன்னோர்கள் காட்டுவாசிகளாய் இருந்தனர். அவர்கள் நாடு இன்று தொழிற்றுறையில் உலகின் முன்னணியில் நிற்கும் நாடுகளுள் ஒன்றாய் விளங்குகிறது. இதைப் போன்றே நுண்ணறிவுத் திறன் (IQ) வெள்ளையினத்தவருக்கு மட்டும் மிகுதியாக உள்ளது என்பதை உடல்சார் மானிடவியலார் உளவியல், மரபியல் முதலான கருத்துகளைக் கொண்டு மறுத்துள்ளனர். மனித இனங்களின் தோற்றம் பற்றிய ஆய்வும் அதன் வேறுபாடுகளுக்கான முறைகளை ஆராய்வதும் இனவியலாரின் தலையான பணியாயின. இதற்கு இவர்கள் பலமுறைகளைக் கையாண்டனர். இவர்கள் மனித இனங்களின் வேறுபாட்டிற்கான காரணங்களைக் கண்டறிய, மனிதக் குலத்தின் வாழ்க்கையமைப்பு, அது சூழலுடன் கொண்டுள்ள தொடர்பு, உடலமைப்புக் கூறுகள், புறத்தோற்ற உடலளவு, மண்டையோட்டு அளவு, எலும்புகளின் அளவு முதலானவற்றைக் கண்டறிந்தனர். இதனால், முகிழ்த்ததே மானிட உடலளவையியல் (Anthropometry) ஆகும். மானிட உடலளவையியல் மனித வேறுபாடுகளையறிய உடலளவைகள் இன்றியமையாதன. மானிடவியலார் உடலளவையை முப்பெரும் பிரிவுகளாகப் பகுத்து ஆராய்வர். அவை புறத்தோற்ற உடலளவையியல் (Somatometry), மண்டையோட்டளவையியல் (Cranimetry), எலும்பளவையியல் (Osteometry) ஆகும். இம்மூன்று அளவைகளையும் கொண்டு மனித இனங்களை வகைப்படுத்தலாம். மனித வேறுபாடுகளிலுள்ள பல ஆழ்ந்த உண்மைகளைத் தருவது தோற்கூற்றியலாகும் (Dermatoglyphics). இப்பிரிவு கைவிரல்கள், உள்ளங்கை, கால்விரல், உள்ளங்கால் முதலிய பகுதிகளில் தோலில் காணப்படும் பலவகையான வரியமைப்புகளையும் (Ridge patterns) தலையில் காணப்படும் சுழிகளின் அமைப்புகளையும் ஆராய்வதாகும். உடலின் பிற உறுப்புகளிலில்லாத அளவில் இப்பகுதியில் வரியமைப்புகளும் இரேகைகளும் காணப்படுகின்றன. இவை மனித இனங்களின் வேறுபாடுகளைக் காட்டுகின்றன. காண்க: இனவகைப்பாட்டின் அலகுகள். இரத்தவியலின் (Serology) பயன்பாடு மானிட உடலளவையியலில் பெருமளவாகும். மானிட உடலளவையியலார் இரத்தப் பண்புகளைக் கணக்கிட்டு மனித வேறுபாடுகளை அறிய முடிகிறது. பல்வேறு இனங்களிடையே இரத்தக் குழுக்கள் (Blood Groups) தனித்தனியான பண்புகளைக் காட்டுகின்றன. இதன் வழி மனித இனங்களை உடல்சார் மானிடவியலார் வகைப்படுத்துவர். எலும்பியலும் பல்லமைப்பியலும் எலும்புகளையும் பற்களையும் பற்றிய அறிவியலே எலும்பியலும் (Osteology) பல்லியலுமாகும் (Odontology). எலும்புகளும் பற்களும் பற்றிய ஆய்வுகள் உடல்சார் மானிடவியலாரால் மேற்கொள்ளப்படுகின்றன. ஏனெனில் இவ்விரண்டு உடற்பகுதிகளே சிதைவுறாப் புதைபடிவமாக நெடுங்காலத்திற்கு மண்ணில் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த கால படிமலர்ச்சியைக் காட்டுவதற்குப் புதைபடிவங்களே மிகச் சிறந்த எடுத்துக் காட்டுகளாய் விளங்குவதால் இதனைப் பற்றிய அறிவியல் அறிவு இன்றியமையாததாகும். பற்களின் உருவத்தையும் அளவையும் கொண்டு வாழ்ந்த ஒரு விலங்கின் உணவு முறையையும் அது சுற்றுச் சூழலையும் அறிய முடியும். பற்களும் எலும்புகளும் உடலமைப்போடு தகவமைந்து பன்னெடுங்காலமாகப் படிமலர்ச்சி அடைந்து வருவதால், அவற்றின் வடிவம், நீளம், அகலம், உயரம் ஆகிய அளவுகளைக் கொண்டு வரலாற்றுக் கால வளர்ச்சியினையும் ஒரே தொகுதியில் உள்ள பல்வேறு சிறப்பினங்களின் படி மலர்ச்சியையும் விவரிக்க முடியும். இதனால் இப்பிரிவு படிமலர்ச்சியியமில் ஒரு துணைப் பிரிவாக உள்ளது. எலும்பளவையியல் என்பது எதும்புகளைக் குறிப்பாகப் பெரிய எலும்புகளை அளந்து ஆராயும் அறிவியலாகும். இதன் ஆய்வுகள் எலும்புக் கூடுகளின் அமைப்பைப் பல்வேறு மனித இனங்களுக்கிடையில் அளந்து இன வேறுபாடுகளை அறிவதற்குப் பெருந்துணை புரியும். மனிதச் சூழலியல் பல்வேறு சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் மனித இனங்களும் இதர உயர் விலங்கினங்களும் கொண்டுள்ள தகவமைப்பு முறைகளையும் சூழ்நிலையோடு இந்த உயிரிகள் கொண்டுள்ள தொடர்புகளையும் இந்தத் துணைப் பரப்பு ஆராய்கிறது. இந்த ஆய்வுகளின் வழி ஒவ்வோர் உயிரியும் தன் உடற்கூறு, உடலியக்கம், உயிர் வேதிநிலை, நோய் முதலான அனைத்து உடல்சார் நிலைகளிலும் தன் சூழ்நிலைகளோடு வினைபுரியும் முறைகளைக் கண்டறியலாம். மனிதனின் உடல் அமைப்பும் செயல்களும் அவன் சார்ந்துள்ள வாழிடப் பரப்பிற்கேற்பவும் கால நிலைக்கு (Climale) ஏற்பவும் செயற்படுவன. உலகின் ஒவ்வொரு புவியமைப்புப் பகுதியும் வெல்வேறானது. அனைத்துப் பகுதிகளிலுமே மனிதன் தகவமைந்து வாழ்ந்து வருகிறான். கடுங்குளிர் மிகுந்த தென் துருவம், வெப்பம் மிகுந்த வடதுருவம், தண்ணீர் குறைந்த பாலைநிலப் பகுதி, உயரம் மிகுந்த மலைப்பகுதி முதலான பல்வேறு சூழ்நிலைகளில் வாழும் மக்கள் உடற் செயலிலும் மரபணுப் பண்பிலும் பல மாற்றங்கள் பெற்று வாழ்கின்றனர். இதன் அனைத்துப் பண்புகளையும் அறியும் மனிதச் சூழலியல் பிரிவும் மனிதத் தகவமைப்பும் (Human Adaptation) உடலியங்கியல்சார் மானிடவியலும் (Physiological Anthropology) மனித வேறுபாடுகளையறிய உதவுகின்றன. மக்கள் தொகை மரபியல் மனித இனக் குழுக்களுக்கிடையே உயிர்சார் வேறுபாடுகளையும் ஒற்றுமைகளையும் காணும்பொருட்டு இனக்குழுக்களிடையே மரபுப் பண்புகளையும் மக்களின் பிறப்பு விகிதத்தின் முறைகளையும் மனித மரபியலின் வளர்ச்சியின் உதவிகொண்டு உடல்சார் மானிடவியலார் ஆராய்கின்றனர். இன்று மக்களிடையே காணப்படும் இனப்பெருக்க வீதத்தினை அறிதலும் பால்சார்ந்த மக்கள் விகிதத்தில் மரபணுப் பெயர்ச்சி (Genetic Drift) ஏற்கும் நிலைகளை அறிதலும் இப்பிரிவின் பரப்புகளாகும். மக்கள் தொகை மரபியல் (Population Genetics) மக்கள் குழுக்களிடையே காணப்படும் இணைதல் (Mating) முறைகளையும் அவற்றோடு தொடர்புற்ற மக்கள்தொகைச் சமநிலை (Population Equilibrium), இனப்பெருக்க மக்கள் தொகை (Breeding Population) முதலானவற்றின் பண்புகளையும் அறிவதாகும். இத்துறையின் ஒரு பிரிவு மக்களினங்களிலுள்ள உடல்சார் குறைகளைக் கண்டறிந்து, சில தனிப்பட்ட அணுகுமுறையில் மனித இனத்தை மேம்படுத்த முனைகிறது. இனமேம்பாட்டியல் (Eugenics) என்னும் இப்பிரிவு உடலாலும் உள்ளத்தாலும் வலிமையான மரபினரைப் பெற இனப்பெருக்கம் செய்வதை ஆதரிக்கிறது. இப்பிரிவின் ஒரு பகுதியான மரபணுப் பொறியியல் (Genetic Engineering), மேம்பட்ட குணங்களைக் கொண்டு செல்லும் மரபணுக்கள் (Gene) மனித மரபணுப் பொதுத் தேக்கத்தில் (Gene Pool) குறையாமலிருக்கவும் அவற்றை பேணிக்காக்கவும் கருத்திசு ஊநீரை (Germ Plasm) ஊக்கப்படுத்தி வளம்பெறச் செய்து நல்ல பண்புகளையுடைய எதிர்கால மரபினைப் பெறவும் முயலுகிறது. இதற்கு, இணக்கமான கலப்பினை மேற்கொள்ள வேண்டுவது தேவையாகிறது என இனமேம்பாட்டியலார் கருதுகின்றனர். இது தவிர்த்து மக்கள் குழுக்களிடையே காணப்படும் உடனடி மாற்றங்களை (Mutation) அறிந்து, அதனால் மக்கள் தொகையில் ஏற்படும் நுண்படி மலர்ச்சியினையும் பெருநிலைப் படிமலர்ச்சியினையும் மக்கள் தொகை மரபியலார் அறிய முனைவர். மக்கள்தொகையியல் இனப்பெருக்கக் கருவியல், நன்னடத்தை, இணைதல் (Mating), இடப்பெயர்ச்சி, மக்கள்தொகை எண்ணிக்கை முதலான மக்கள் தொகையியல் (Demography) ஆய்வுகளை இக்கால உடல்சார் மானிடவியல் தன்பரப்பில் கொண்டுள்ளது. மக்கட்டொகை எண்ணிக்கையும் மக்கள் தொகையின் அமைப்பும் அவர்களின் மரபணு அடுக்கு நிகழ்வில் (Genetic Frequency) முதன்மையாகச் சார்ந்திருப்பதால் இப்பரப்புத் தலையானதாகக் கருதப்படுகிறது. பண்பாட்டின் வடிவுருவத்திலும் மக்கள் தொகையின் எண்ணிக்கை முதன்மையான பங்கேற்றுள்ளது. ஓரினத்தின் பொருளாதாரச் செயற்பாடுகள், சமூக அமைப்புக்குட்பட்ட குடும்பம், திருமணம், தொழிற்பகுப்பு (Division of Labour) முதலானவை மக்கள் தொகையின் அமைப்பையும் எண்ணிக்கையையுமே சார்ந்துள்ளன. ஆதலால், மானிடவியலார் மக்கள் தொகையின் அமைப்புகளை அறிவதை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். இத்துறையின் பரப்புகளை விரிவான நிலையில் கொண்ட ஒரு சிலர் இதனை மக்கள் தொகையியல் சார் உயிரியல் (Population Biology) எனக் கூறுவர். கருவியலும் உடலியலும் கருத்தோற்றத்திலிருந்து இறப்பு வரை காணப்படும் வாழ்க்கை நிரலின் அனைத்துக் கூறுகளையும் பகுத்தாயும் கருவியல் (Embryology) அணுகுமுறை உடல்சார் மானிடவியலில் ஒரு பிரிவாக ஏற்று ஆராயப்படுகிறது. திணை சார்ந்த குடிகளின் மக்களிடையே காணப்படும் வளர்ச்சி நிலைகளின் செயற்பாட்டினைக் கருவியல், உடலியங்கியல், உணவூட்டம், மண்ணின் தன்மை முதலான உயிர்க் காரணிகளோடு ஒப்பிட்டு அதன் அடிப்படையில் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரின் உடலமைப்பு வளர்ச்சி வீதம் முதலானவற்றை ஆராய்வது இத்துறையின் ஒரு கூறாகும். மருத்துவ மானிடவியலும் இதன்கண் ஓர் உறுப்பே எனலாம். உடலியங்கியல் சார் மானிடவியல், குறை ஊட்ட உணவு, மக்களின் உடல் எடை, உயரம், உடலமைப்பு, தகவமைப்பு முதலானவற்றையும் இதனைச் சார்ந்த பால் வேறுபாடுகளையும் அறிவதனால், மானிடவியலின் இப்பரப்பு ஏனைய உயிரியல்சார் துறைகளோடு ஒருங்கிணைந்து செயற்பட முடிகிறது. மூலக்கூறு உயிரியல் உயிர்வாழும் மக்கள் குழுக்களிலும் உயர்பாலூட்டிகளிலும் மூலக்கூறு களின் பண்புக் கூறுகள் பரவிக் காணப்படுவதைக் கண்டறிவதில் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) அணுகுமுறையில் உடல்சார் மானிடவியலார் முனைந்துள்ளனர். இந்த ஆய்வுகள் இயல்பு கடந்த இரத்தச் சிவப்பணுக்கள் (Haemglobin), குன்றிய உடலமைப்புகள் ஆகியவை தோன்றுவதற்கான காரணங்களைக் கண்டறிகின்றன. மருத்துவ மானிடவியலிலும் உடலியங்கியல்சார் மானிடவியலிலும் இப்பிரிவு சார்ந்த ஆய்வுகள் பெருமளவில் மேற்கொள்ளப்படுகின்றன. பயன்முறை உடல்சார் மானிடவியல் உடல்சார் மானிடவியலின் பயன்முறைகள் விரிவானதும் மிகுதியானதுமாகும். ஆதலால் இவற்றின் அனைத்துப் பயன்பாடுகளையும் அறியப் பல தனித்தனித் தலைப்புகளில் காண வேண்டும். உயிரியலும் உடலியங்கியலும் மனித இனத்தின் படிமலர்ச்சியும் உயர்பாலூட்டிகளின் படிமலர்ச்சியும் புறஉடற் பண்புகளைச் சார்ந்து காணப்படுவதால் இந்தப் புறப்பண்பு மாற்றங்களை மனித உடலளவைக் கணிப்பின்வழி நன்கு கண்டறியலாம். எலும்புப் பகுதி, தசை, மூளை முதலான பகுதிகளை ஆய்வு செய்யும் உடலியங்கியல்சார் வேதியியலிலும் (Physiological Chemistry) வயது, பால் முதலானவற்றால் ஏற்படும் வேதியல் மாற்றங்கள், உடலமைப்பு மாற்றங்களின் தன்மையை அறிதல், ஒவ்வொரு மனித இனத்தின் நோயியல் பண்புகளையும் உறுதிப்படுத்துதல், சட்டத்துறை சார்ந்த மருத்துவம் (Forensic Medicine) முதலான துறைகளிலும் மனித உடலளவுகள் பயன்படுத்தப்படுகின்றன. உயிர் வகைப்பாட்டியல் மிகச் சிறந்த உயிர் வகைப் பாட்டியலாரான எச். இலாகியர் ஆண்டு இலண்டனில் நடந்த பன்னாட்டு மானிடவியல் அறிவியல் கழகத்தில் (International Congress of Anthropological Science) இத்துறையின் தேவையையும் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். உயிர் வகைப்பாட்டியலின் (Biotypology) அளவைகளையும் முறைகளையும் கொண்டு எங்கெங்கு மனிதச் சமூகத்தினை வகைப்படுத்தலும் தேர்வு செய்தலும் கையாளப்படுகின்றனவோ அங்கங்கு இம்முறை பயன்படுத்தப்படுகிறது. பணியாளர்களைத் தேர்வு செய்வதில் குறிப்பாகப் படைப்பிரிவு ஊழியர் வாழ்க்கைத் தொழில் சார்ந்த பிரிவில் துணைபுரிதல். சமூகம், தொழில் முதலான துறைகளில் மக்களைப் பயன்படுத்துதல், விளையாட்டு, கற்பித்தல் வழி வகைப்படுத்தல் (Pedagogical Classification) போன்ற பல்வேறு மனித இனங்களின் உயிர்சார் பண்புகளைப் பகுத்தல் முதலான துறைகளில் இவ்வகைப்பாட்டியல் பயன்படுத்தப்படுகிறது. இவ்வியலின் பயன்பாடுகள் மானிடவியலின் அனைத்துப் பரப்பிலும் இனக்குழு ஒப்பாய்வியல் (Ethnology), சமூகவியல் முதலான துறைகளின் ஆய்வுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தண்டனையியலும் குற்றவியலும் தொன்று தொட்டே தண்டனை, குற்றம் முதலியன குறித்த செயற்பாடுகளில் மானிட உடலளவையியலின் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. சட்டம் சார்ந்த கணிப்புகளுக்கு முன்னர்ப் பயன்படுத்தப்பட்ட பெர்ட்டிலன் (Bertillon) முறை மேலும் மேம்படுத்தப்பட்டு, இப்போது விரலமைப்பியல் (Dactyloscopy) துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. சிறிது காலத்திற்கு முன்பு குற்றவியல் புற உடலளவையியலின் ஒரு பகுதியாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. மருத்துவமும் பொது நலப்பணியும் மருத்துவத் துறையில் மானிட உடலளவையியலின் பங்கு குறிப்பிடத்தக்கது எனலாம். பெண் உறுப்பமைப்பியலார் (Gynaecologist) கர்ப்பிணிப் பெண்ணின் இடுப்பெலும்பின் நீளம், அகலம், உயரம் முதலானவற்றைக் கணக்கெடுத்தல் இன்றியமையாததாகிறது. இவ்வெலும்பின் பரிமாணத்தைக் கொண்டு பிறக்கும் குழந்தையின் தலை, நீளம், எடை முதலானவற்றின் அளவுகளை முன்கூட்டியே அறிகின்றனர். இதைத் தவிர்த்து மருத்துவத்தின் பிற துணைப் பரப்பிலும் பயன்படுகிறது. இது மானிட உடவளலையியல் மனித உடல் வளர்ச்சி காலத்திற்கேற்ப மாறி வருவதை அளவிட்டு, அது உடல் வளர்ச்சியுடன் இணைந்து காணப்படுகிறதா உறுப்புகளில் வேறுபாட்டு வளர்ச்சியுடன் (Differential Growth) காணப்படுகிறதா என்பதை அறிய உதவுகிறது. விளையாட்டு, மருத்துவம், பல்லியல், மூட்டியல் முதலான துணைப் பரப்பிலும் மானிட உடலளவையியல் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய மருத்துவ முறையில் செயற்கை உறுப்புகள் பொருத்துவது பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் கையாளப்படுகின்றது. இந்த உறுப்புகள் நீண்ட புற உறுப்புகள்முதல் நுண்ணிய அக உறுப்புகள் (Internal Organs) வரையிலானவையாகும். இந்த அனைத்து உறுப்புகளையும் உருவமைத்துச் செய்வதற்கும் பொருத்துவதற்கும் மானிட உடலளவை முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. படைப்பிரிவில் பயன்கள் இராணுவத்தில் ஊழியர்களைத் தேர்வு செய்யும்போது உடல் உறுப்புகளின் தன்மையையும் அளவுகளையும் கண்டறிந்து அவற்றின் அடிப்படையில் படைப்பிரிவில் சேர அனுமதிக்கப்படுவது பன்னெடுங்காலமாகக் கையாளப்படுவதாகும். இனவகைகள், அடையாளக் குறிகளைக் கண்டறிதல், உடலின் புற உறுப்புகளின் அளவினை எடுத்தல் முதலானவற்றில் தேர்ச்சி பெற்ற உடல்சார் மானிடவியலாளர்கள் இராணுவப் பிரிவுகளுக்கு ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருக்க வேண்டுமென சி.பி. தாவன்போர்ட்டு (C.P. Davenport), ஏ.சி. இலவ் (A.C. Love) ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர். படைப்பிரிவு ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும் அவர்கள் பயன்படுத்தும் கருவிகள், இருக்கைகள், துணைப் பொருள்களின் அமைப்புகள், மண்டைக் கவசங்கள், ஆவிக்கவசங்கள் (Gas–mask), இராணுவ வீரர்களின் உடைகளைத் தயாரித்தல் முதலானவற்றிலும் மானிட உடலளவையியலின் பங்கே முதன்மையானது. ஆடை, அணிகள், காலணிகள் செய்யும் தொழில்களிலும் பிற தொழில் துறைகளிலும் இத்துறையின் பயன் மிகுதியானதாகும். பொதுமக்களுக்கு ஆடைகளும் காலணிகளும் தயார் நிலைப் பொருள்களாகவே (Ready made Goods) இன்று மலிந்து கிடப்பது கண்கூடு. மானிட உடலளவையியலார் மக்களின் சராசரி உறுப்பளவுகளை எடுத்து. அவற்றிற்கேற்பப் பொருள்களை உருவாக்க உதவுகின்றனர். இத்தகைய சரியான அளவுகள் கிடைப்பதனால் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்திச் செலவும் அடிப்படைப் பொருள்களும் பெருமளவு குறைகின்றன; மக்களுக்குக் குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வரலாறு வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட வரலாறு (Prehistory); வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கும் வரலாற்றுக் காலத்திற்கும் இடைப்பட்ட வரலாறு (Protohistory) ஆகிய துறைகளில் மனித நிகழ்ச்சிகளையும் மனித வடிவங்களையும் உடல் அமைப்புகளையும் பிற வரலாற்று இயல் நிகழ்ச்சிகளையும் அறிவதில் உடல்சார் மானிடவியல் துணை நிற்பது கண்கூடாகிறது. சமூகவியலிலும் உடல்சார் மானிடவியலின் பங்கு பெரிதும் நாடப்படுவது இதன் பயன்பாட்டினைக் காட்டுவதாகும். தொல் சமூகத்தின் சமூக பொருளாதார அமைப்புகளை அறிந்து இக்காலச் சமூக அமைப்புகளுடன் ஒப்பிட இத்துறையின் களப்பணிகள் துணைபுரிகின்றன. கல்வி மரியா மாண்டசோரி (Maria Montessori) 1900–ஆம் ஆண்டில் வெளியிட்ட கற்பித்தலியல்சார் மானிடவியல் (Pedagogical Anthropology) என்னும் வெளியீடு இவ்விரு துறைகளின் இன்றியமையாமையை விளக்குவதாகும். சில நாடுகளில் ஆண்டுத் தேர்வுகளுக்குப் பின், மாணவர்களின் உடல் வளர்ச்சியையும் மன வளர்ச்சியையும் இதற்கிடையேயான தொடர்புகளையும் மானிடவியலார் துணைக்கொண்டு அறிகின்றனர். இவ்வகையான ஆய்வுகளில் உளவியல்சார் மருத்துவர்கள் துணையும் நாடப்படுகிறது. பி.கோ. & கே.நி. துணை நூல்கள் Boyd, W.C., Genetics and the Races of Man, Little Brown, Boston, 1950. Coon, C.S., Garn, S.M. and Birdsell, J.B., Races: A Study of the Problems of Race Formation in Man. Charles C. Thomas, Illinois, 1950. Darwin, C., Descent of Man and Selection in Relation to Sex, Appleton, Newyork, 1871. Hulse, F.S., The Human Species: An Introduction to Physical Anthropology, Random House, New york, 1971. Washburn, S.L., The New Physical Anthropology: Transactions of the New york Academy of Sciences, Reprinted in Yearbook of Physical Anthropology, New york, 1951.