இது ஒரு வேதித் தனிமம். குறியீடு Si; அணு எண் 14; அணு நிறை 28. 086. சிலிக்கான் (silicon) புவியின் மேற்பரப்பில் மிக அதிகமாகக் காணப்படும் நேர் மின்னேற்றமுடைய தனிமமாகும். தெளிவான உலோகப் பளபளப்பு இருந்த போதும், இது உலோகப் போலியாகவே (metalloid) வரையறை செய்யப்படுகிறது. வைரத்தின் படிகக் கூண்டு வடிவத்தைப் போலவே, இது படிக உருவைப் பெற்றுள்ளது. இதன் ஒப்படர்த்தி 20°Cஇல் 2. 42; உருகு நிலை 1420°C; கொதி நிலை 3280°C. இது பொதுவாக, நான்கு இணை திறன்களைப் பெற்றிருப்பினும், சில சேர்மங்களில் இரண்டு இணை திறன்களையும் பெற்றுள்ளது. வேதிப் பண்புகளில், இது நேர் மின்னேற்றம் பெற்றிருப்பது உறுதிப்படுத்தப் படுகிறது. இது தவிர, அணைவு எண் ஐந்து, ஆறு உள்ள சிலிக்கான் சேர்மங்களும் அறியப்பட்டுள்ளன. பயன்கள். தூய்மையற்ற சிலிக்கானும், அதன் உலோக இடைச் சேர்மங்களும் (intermetallic compounds) பொதுவாக அலுமினியம், மக்னீசியம், தாமிரம் முதலிய உலோகங்களுடன் கலந்து, வலிமையுள்ள உலோகக் கலவையைத் தருகின்றன. 98—99% தூய்மையுடைய உலோகவியல் சிலிக்கான், கரிம சிலிக்கோன் சேர்மங்களையும், சிலிக்கோன் ரெசின்களையும், நீள்நெகிழிகளையும் (elastomers), எண்ணெய்களையும் தயாரிப்பதற்கான தொடக்கப் பொருளாகப் பயன்படுகிறது. மீத்தூய்மை சிலிக்கான், மின்னியல் துறையில் பயன்படுகிறது. இத்துறைக்குப் பயன்படும் சிலிக்கானில் ஒரு மில்லியனுக்கு 0.1 பகுதி என்ற அளவிலேயே கார்பன், ஆக்சிஜன் போன்ற கசடுகள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், மின் தன்மையுள்ள தனிமங்களின் கசடு மில்லியனுக்கு 0.1 என்ற அளவிலேயே அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு, மீத்தூய்மையில் இருப்பதாலும், நிறைவான அமைப்பைப் பெற்ற படிகமாக இருப்பதாலும், சிலிக்கான் படிகங்கள் எக்ஸ் கதிர் விளிம்பு விளைவில் (x-ray diffraction) அடிப்படைத் தரம் நிர்ணயம் செய்யப் (calibration) பயன்படுகின்றன. குறை கடத்திகளின் வடிவமைப்பு மிகச் சிறியதாக மாறி வந்த போதும், தொழில் முறையில் மின்னியல் தரம் உள்ள சிலிக்கானின் தேவை, 1970 முதலாகவே படிப்படியாக உயர்ந்து வருகிறது. எனினும், மின்னியல் தர சிலிக்கானின் தயாரிப்பு பெருமளவில் உயர்ந்து வருவதால், அதன் விலை பன்மடங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. சூரிய ஒளியை நேரடியாக மின்னாற்றலாக மாற்றும் ஒளி வோல்ட்டா மின்கலங்களில் (photo voltaic cells) மின்னியல் தர சிலிக்கான் தகடுகள் பயன்படுகின்றன. சிலிக்கோன் நெகிழிகளால் (plastics) மூடப்பட்ட மின் தொடர்புகள், நீண்ட நாள் பயன் தரக் கூடியவை. குறை கடத்திகள் பயன் படுத்தும் தொழில்களில், மிக நுண்ணிய கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமாக, அவற்றின் தயாரிப்பும், விலையும் பெரிதும் குறைக்கப்படுகின்றன. ஆனால், இம்முறையில் நுன்ணிய கருவிகளைப் பயன்படுத்தி, ஒளி மின்கலங்களில் மின்னாற்றலைப் பெற இயலாது. ஏனெனில், சூரிய ஆற்றல் பரவும் (diffuse) தன்மை உடையதாகக் காணப்படுகிறது. இதற்காகப் பொருத்தமான ஒளியியல் அமைப்புகளைப் பயன்படுத்தி, அதிக அளவு சூரிய ஆற்றலை ஒரு சிறு பரப்பில் விழச் செய்து, மின்னாற்றலை மிகுதியாகப் பெறலாம். இவ்வாறு, பரப்பைக் குறைப்பதன் மூலம், ஒளி மின்னழுத்தக் கலத்தில் பெறப் படும் மின்சாரத்தின் அளவைப் போதுமான நிலையில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கு, ஒளியியல் துணைக் கருவிகளின் விலை, குளிர்ச்சியைத் தரும் அமைப்புக்கான செலவு முதலியவற்றைக் கவனமாகக் குறைத்திடல் வேண்டும். சரியான முறையில் அமைப்பு குளிர்விக்கப்படவில்லை எனில், வெப்ப நிலை உயரும் போது, சிலிக்கான் ஒளி மின் கலங்களின் செயல் திறன் குறைகிறது. சாதாரணமாக 20°Cஇல் புவியின் மேற்பரப்பில் காற்றின் நிறை பூஜ்யமாக (air mass zero) இருக்கும் போது, சிலிக்கான் ஒளி மின்கலத்தில், மின்னாற்றல் மாற்றுந் திறன் 28% ஆகும். தொழில் முறையில் பயன்படும் மின்கலங்களில் 15% மாற்றமே நடைபெறுகிறது. இதன் உச்ச விலையால், சிலிக்கான் ஒளி வோல்ட்டா மின் கலங்கள் விண்வெளிக் கலங்களிலும், தானியங்கு அமைப்புகளிலுமே (remote instalations) பயன்படுகின்றன. சிலிக்கான் ஒளி வோல்ட்டா மின் கலங்களின் விலையைக் குறைக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஆனால், ஒவ்வொரு முயற்சியிலும், ஏதேனும் ஒரு வழியில் சிலிக்கான் ஒளி மின் கலத்தில் மின்னாற்றல் தோற்றுவிக்கும் திறன் குறைகிறது. குறை கடத்திகளில் பயன்படும் தரமுடைய சிலிகான், பல் படிக அமைப்புச் சிலிக்கான் (polycrystalline silica) தகடுகள், படிக உருவற்ற சிலிக்கான் ஹைட்ரஜன் படலம் முதலியன விலை குறைவான, பயனுள்ள சிலிக்கான் பொருள்கள் ஆகும். பெருமளவில் மட்பாண்டத் தொழிலில் பயன்படும் சிலிக்கான் டைஆக்சைடு தனிமச் சிலிக்காவைத் தயாரிக்கவும், சிலிக்கான் கார்பைடு தயாரிக்கவும் மூலப் பொருளாகப் பெரிதும் பயன்படுகிறது. குறிப்பிடத் தக்க அளவு சிலிக்கான் படிகங்கள் வானொலியில் அதிர்வு எண்களைக் கட்டுப்படுத்த பெரிதும் பயன்படுகின்றன. மிக நுட்பமாகக் காலத்தைக் காட்டும் மின்னியல் கைக்கடிகாரங்களில் குவார்ட்ஸ் படிகங்களே காணப் படுகின்றன. இக்கடிகாரங்களில், சிலேன் இணைப்புக் காரணிகள் (silane coupling agents) கண்ணாடியுடன் மின் சுற்றுப் பலகையை ஒட்டப் பயன்படும். மேலும், சில கடிகாரங்கள் சிலிக்கான் சூரிய மின்கலங்களைப் பயன்படுத்தி, சூரிய ஆற்றலில் இயங்குமாறு அமைந்துள்ளன. உருக்கப்பட்ட குவார்ட்சும், மணலுமே சிலிக்கா கண்ணாடியாக உருவெடுக்கின்றன. இவ்வகைக் கண்ணாடிகள் வேதி ஆய்வுக் கூடங்களில் பெரும் பயன் உடையவை; மின் கடத்தாப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுகின்றன. சிலிக்காவும், நீரும் கலந்த பால்மம் பூச்சுப் பொருளாகப் (coating agent) பயன்படுகிறது. சில கரிம குளேரோசிலேன்களில் (எ—டு: CH₃SIHCL₂) சிலிக்கான் ஹைட்ரஜன் பிணைப்புக் காணப்படுகிறது. இவை முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இவற்றை எளிதில் சிலிக்கோன் பல்லுறுப்பிகளாக மாற்றலாம். இப்பல்லுறுப்பிகளில் வினை வலிமை மிக்க சிலேன் தொகுதிகள் இருக்கும். இவ்வகைச் சிலிக்கோன்கள், பொருள்களுக்கு நீரை விலக்கும் தன்மையை அளிக்கின்றன. கரிம குளோரோ சிலேன்கள், சிலிக்கோன் பல்லுறுப்பிகள் தயாரிக்கப் பெரிதும் பயன்படுகின்றன. இப்பல்லுறுப்பி ரெசின் போன்றது; பாகுத் தன்மை மிக்க நீர்மங்கள், இவ்வகைச் சிலிக்கோன்கள் மின் கடத்தாப் பொருள்கள் செய்யப் பயன்படுகின்றன. நீர் ஒட்டாத ஆடைகள் செய்யவும், நீர்ம அழுத்திகளில் பயன்படும் நீர்மமாகவும், பூச்சு, உயவுப் பொருள், மணப் பொருள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. உயர் வகை வண்ணப் பூச்சுகள் தயாரிப்பில் பயன்படும். தூய சிலிக்கான் தயாரிப்பதற்கு சிலிக்கேட் எஸ்ட்டர்கள் பயன்படுகின்றன. பண்புகள். இயற்கையில் கிடைக்கும் சிலிக்கானில் 92. 2%, அணு நிறை எண் 28 உள்ள ஐசோடோப்பே காணப்படுகிறது. 4.7%இல் சிலிக்கான்—29 காணப்படுகிறது. எஞ்சியுள்ள 3.1%இல் சிலிக்கான்—30 காணப்படுகிறது. இது போன்ற நிலைத் தன்மை மிக்க, இயற்கையில் கிடைக்கும் ஐசோடோப்புகள் தவிர, அணு நிறை எண் 25, 26, 27, 31, 32 உள்ள செயற்கைக் கதிரியக்க ஐசோடோப்புகளும் அறியப்பட்டுள்ளன. புரோட்டானின் எண்ணிக்கையும், நியூட்ரானின் எண்ணிக்கையும் இரட்டை, இரட்டையாக அமைவதால்தான், அணுவின் நிலைத் தன்மை மிகுதியாக உள்ளது என்ற கருதுகோள் மட்டுமே சிலிக்கான்—28இன் நிலைத் தன்மையை விளக்கப் போதுமானதாக இல்லை. இது தவிர, வேறு ஏதேனும் அடிப்படைக் கொள்கை இந்த ஐசோடோப்பின் மிக அதிகமான நிலைத் தன்மையை விளக்கத் தேவைப்படும். தனிம சிலிக்கான், உலோகப் போலி போன்ற இயற்பியல் பண்புகளைப் பெற்றுள்ளது. IV—A தொகுதியில் தனிம மீள் வரிசை அட்டவணையில் இடம் பெற்றுள்ளமையால், இதற்குக் கீழ் உள்ள தனிமமான ஜெர்மனியத்தின் பண்புகளை ஒத்துள்ளது. ஓரளவு V ஆம் தொகுதித் தனிமமான ஆர்செனிக் பண்புகளையும், மூலை விட்டத் தொடர்பைப் பெற்றுள்ள போரானின் பண்புகளையும் ஒத்துள்ளது. இது உலோகப் போலி எனினும், இதன் கடந்துந் திறன், குறை கடத்துந் திறனே ஆகும். ஏனெனில், வெப்ப நிலை உயரும் போது, கடந்துந் திறன் உயர்வதைக் காணலாம். தூய நிலையில், சிலிக்கான் ஓர் உள்ளார்ந்த குறை கடத்தி (intrinsic semiconductor) ஆகும்; எனினும், குறை கடந்துந் திறன் பெருமளவில், குறிப்பிட்ட கசடுகளைச் சேர்ப்பதால் உயருகிறது. போரான் போன்ற IIIஆம் தொகுதித் தனிமத்தைக் கசடாகச் சேர்க்கும் போது, எலெக்ட்ரான் குறை அணு என்பதால், படிக அமைப்பில் எலெக்ட்ரான் வெற்றிடங்கள் அல்லது குழிகள் தோன்றி, p—வகைச் சிலிக்கான் குறை கடத்தியைத் தருகிறது. இது போல் தூய சிலிக்கானில் Vஆம் தொகுதித் தனிமங்களைக் கசடுகளாகச் சேர்க்கும் போது, கடத்துந் திறன் அதிகரிக்கிறது. இவ்வகைக் கடத்திகளில் எலெக்ட்ரான் மிகுதியாக உள்ளமையால், கடத்துந் திறனுக்கு எலெக்ட்ரான் காரணமாக அமையும். எனவே, இவ்வகைத் திண்மக் கரைசல்கள் n-வகைச் சிலிக்கான் குறை கடத்திகளைத் தருகின்றன. அட்டவணை 1 (அறுகோண வடிவம்) <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்த அட்டவணை, பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வேதி வினைகளைப் பொறுத்த வரை சிலிக்கான், உலோகங்கள் போலச் செயல்படுகிறது. பாலிங் அளவுகோலில் இதன் எலெக்ட்ரான் கவர் ஆற்றல் (electronegativity) 1.8 அலகுகள் ஆகும். இதன் sp³ இனக் கலப்பு நிலைகளை ஆயும் போது, இத்தனிமம் வெள்ளீயத்தைப் போன்ற நேர் மின் தன்மையைப் பெற்றுள்ளது; குறிப்பாக, ஜெர்மேனியம் அல்லது காரீயத்தை விட, அதிக நேர் மின்னேற்றத்தைப் பெற்றுள்ளது. சிலிக்கான் நான்கு அலகுகள் நேர் மின்னேற்றம் உடைய, நேரயனிகளைக் கொண்ட சேர்மங்களைத் தருவதுடன், பல சக பிணைப்புச் சேர்மங்களையும் தருகின்றது. இவை அனைத்திலும் சிலிக்கான் நேர் மின் சுமையே பெற்றுள்ளது. மிகச் சில சிலிசைடுகளில் மட்டுமே இத்தனிமம் எதிரயனியாக அமைகிறது. ஆக்சி அமிலங்களிலும், சில அணைவு எதிரயனிகளிலும் சிலிக்கான் நேர் மின் நிலையையே பெற்றுள்ளது. இதன் ஆக்சிஜன் ஏற்ற வெப்பம் (heat of oxidation) மிக அதிகம். ஆகவே இயற்கையில் சிலிக்கான், ஆக்சிஜனேற்றமடைந்த சிலிக்கான் டை ஆக்சைடாகவும், சிலிக்கேட் தாதுக்களாகவும் காணப்படுகிறது. அட்டவணை 1 இல் கொடுக்கப்பட்டுள்ள உருவாதல் வெப்பத்திலிருந்து சிலிக்கானுக்கும், ஆக்சிஜன் மற்றும் ஹாலோஜன்களுக்கும் இடைப்பட்ட கவர்ச்சியை அறிந்து கொள்ளலாம். இவ்வட்டவணையில் சிலிக்கான் கார்பன் மற்றும் ஜெர்மானியத்தின் சேர்மங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. தூய சிலிக்கான் அறை வெப்ப நிலையில், விரைவாக ஆக்சிஜனேற்றமடைந்து 1 nm பருமனுள்ள சிலிக்கா அடுக்கைத் தருகிறது. 650°Cஇல் முழுமையாக ஆக்சிஜனேற்றம் அடைகிறது. ஆனால், 1200°Cக்குக் குறைந்த வெப்ப நிலையில், ஆக்சிஜனேற்றம் குறிப்பிடத் தக்க விரைவு நிலையை அடைவதில்லை. 1200°C வரை தோன்றும் ஆக்சைடு விளை பொருள், பொடி உருவில் உள்ளது; ஆனால், இதற்கு மேல் உள்ள வெப்ப நிலையில் டிரைடோமைட் அல்லது கிரிஸ்டோபலைட் போன்ற படிக உருவைப் பெறுகிறது. 1600°Cக்கு மேல் ஆவி நிலையை அடைகிறது. பொதுவாக, சிலிக்கான் குறை கடத்தி அமைப்புகளில் 1100-1300°Cஇல் கவனமாக ஆக்சிஜனேற்றம் செய்து, பாதுகாப்பான சிலிக்கா அடுக்கை ஏற்படுத்துகின்றனர். இத்தனிமத்தின் படிகங்கள் எந்த ஒரு தனித்த, நீர்த்த அல்லது அடர் அமிலத்திலும் கரைவதில்லை; ஆனால், அடர் நைட்ரிக் அமிலமும், ஹைட்ரோஃபுளூரிக் அமிலமும் சேர்ந்த கலவையில் மெதுவாக இத்தனிமம் கரைந்து டைஆக்சைடாக மாறுகிறது. இந்த டைஆக்சைடு மேலும் கரைந்து டெட்ராஃபுளுரைடை உண்டாக்கும். குறை கடத்தி அமைப்புகளில் குறியீடுகளை அமைக்க ஹைட்ரோஃபுளூரிக்—நைட்ரிக் அமிலம் அல்லது ஹைட்ரோஃபுளூரிக் நைட்ரிக்—அசெட்டிக் அமிலக் கலவை பயன்படும். இத்தனிமத்தின் படிகம் மெதுவாக அடர் சோடியம் அல்லது பொட்டாசியம் ஹைட்ராக்சைடு கலவையில் கரைகிறது. இச்செயலின் போது, ஹைட்ரஜன் வளிமம் வெளியேறுவதுடன், கார சிலிக்கேட் கரைசல் கிடைக்கிறது. சிலிக்கான் சேர்மங்களை அதன் உருகு நிலைக்குக் கீழான வெப்ப நிலையில் ஒடுக்கிப் பெறப்பட்ட சிலிக்கான் உலோகம் மேற்காணும் காரணிகளுடன் முனைப்பாக வினை புரியும். பல வரிசையான ஹைட்ரைடுகள் காணப்படுகின்றன. பல ஹாலோஜன்களும், ஆக்சிஜன் உள்ள சேர்மங்களும் உள்ளன. இவை அயனிப் பண்புகளையும், சக பிணைப்புப் பண்புகளையும் பெற்றுக் காணப்படுகின்றன. இயற்கையில் கிடைக்கும் விதம். பல்வேறு வடிவங்களில், சிலிக்கான் டைஆக்சைடாகவும், எண்ணற்ற சிலிக்கேட் வகைகளாகவும் சிலிக்கான் இயற்கையில் காணப்படுகிறது. ஆக்சிஜனை அடுத்து, மிக அதிக அளவில் புவியின் மேற்பரப்பில் இது காணப்படுகிறது. புவி முகட்டில் காணப்படும் திண்மமாக 27.7% உள்ளது. இதை விட அதிகமாக ஆக்சிஜன் 46.6% ஆகவும், சிலிக்காவை விடக் குறைவாக அலுமினியம் 8.13% ஆகவும் காணப்படும். கார்பனேட் மற்றும் பாஸ்ஃபேட் பாறைகளைத் தவிர, புவியின் பரப்பில் காணப்படும் திண்மப் பொருள்கள் அனைத்தும் சிலிக்காவை ஒரு பகுதியாகக் கொண்டவையே. இவ்வாறு பெருமளவில் கிடைப்பதாலேயே, தொழில் துறைகளில் மூலப் பொருளாக இதைப் பயன்படுத்தும் ஆய்வுகள் பெருகி வருகின்றன. தயாரிப்பு. உச்ச வெப்ப நிலையில், பொட்டாசியம் ஃபுளுவோ சிலிக்கேட் உப்பை, பொட்டாசியத்தால் ஒடுக்கிப் பெறப்பட்ட விளைபொருளில் உள்ள பொட்டாசியம் ஃபுளுரைடை நீரினால் கழுவி நீக்குவதன் மூலமாக, உலோக சிலிக்கான் ஆய்வகத்தில் தயாரிக்கப்படுகிறது. இதை விட எளிய முறையில், நன்கு பொடி செய்யப்பட்ட அல்லது வீழ் படிவாக்கப் பட்ட சிலிக்கான் டைஆக்சைடை, செஞ்சூடான நிலையில் மக்னீசியம் தூள் கொண்டு ஒடுக்கலாம். துணை விளை பொருளாகக் கிடைக்கும் மக்னீசியம் ஆக்சைடை, நீர்த்த அமிலத்தில் கரைத்து வடிகட்டிக் கழுவினால், பழுப்பு நிறச் சிலிக்கான் பொடி கிடைக்கும். இவ்விரு முறைகளிலும், மீதூய்மையான சிலிக்கான் கிடைப்பதில்லை. வினைக்கு உட்படா வினைப் படு பொருள் கசடு கலந்தே காணப்படும். சிலிக்காவின் உருகு நிலைக்கு அதிகமான வெப்ப நிலையில், இதன் ஆக்சைடைக் கார்பனுடன் கலந்து, மின் வெப்ப ஒடுக்கத்திற்கு உட்படுத்தி, சிலிக்கான் வணிக முறையில் தயாரிக்கப்படுகிறது. SiO₂+ 2C → Si + 2CO குவார்ட்ஸ், மணல் முதலிய ஆக்சைடு தாதுக்களில் இரும்பு, அலுமினியம், டைட்டேனியம் முதலிய தனிமங்களின் ஆக்சைடுகள் கலந்து காணப்படுவதால், மேற்காணும் வினையில் 98% தூய்மையான சிலிக்கானே கிடைக்கிறது. வணிக முறையிலான சிலிக்கான் தனிமத்தின் இயைபு அட்டவணை 2 இல் கொடுக்கப்பட்டுள்ளது. அட்டவணை 2 குறை கடத்திகளில் பயன்படுத்தும் தரமுடைய (ஒரு மில்லியனில் ஒரு பங்கிற்கும் குறைவான தூய்மையுடைய) சிலிக்கானைத் தயாரிக்க, மீதூய்மையான டிரைகுளோரோ சிலேன் அல்லது சிலிக்கான் குளோரைடை ஹைட்ரஜன் கொண்டு 1200°Cஇல் ஒடுக்க வேண்டும். முக்கிய சேர்மங்கள். கண்டறியப்பட்ட, நிலையாக உள்ள 96 தனிமங்களில் 64 உடன் சிலிக்கான் வினைப்பட்டுச் சேர்மங்களைத் தரும். ஏனைய 18 தனிமங்களுடன் சிலிசைடுகளைத் தருவதாகக் கருதலாம். உலோகச் சிலிசைடுகள் உலோகவியலில் பெரிதும் பயன்படுகின்றன. கார்பன், ஹைட்ரஜன், ஹாலோஜன்கள், நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் கந்தகத்துடன் பயனுள்ள பல சேர்மங்களைச் சிலிக்கான் தருகிறது. தவிர, பல கரிம—சிலிக்கான் சேர்மங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஹைட்ரைடுகள். சிலிக்கானின் ஹைட்ரைடுகள், சிலேன்கள் எனப்படும். SiH₄ என்பது மோனோசிலேன் என்றும் Si₂H₆ என்பது டைசிலேன் என்றும் பெயர் பெறுகின்றன. சிலிக்கான் அணுக்களுடன், ஆக்சிஜன் அணுக்கள் ஒன்று விட்டு ஒன்றாக அமைந்துள்ள சேர்மங்கள் சிலாக்சேன்கள் என்றும், நைட்ரஜன் அணுக்கள் அமைந்துள்ள சேர்மங்கள் சிலாஸேன் என்றும் கூறப்படும். சிலிக்காவின் பிற சக பிணைப்புச் சேர்மங்களின் பெயரிடுதல், கரிமச் சேர்மங்களின் பெயரிடுதல் போன்றே அமையும். இவ்வாறாக, ( C₂H₅)₃SiOH என்பது டிரைஎத்தில் சிலேனால் என்றும், [(CH₃)₂ SiO]₄ என்பது ஆக்ட்டா மெத்தில் சைக்ளோ டெட்ராசிலாக்சேன் என்றும், C₆H₅SiCl₃ என்பது ஃபினைல் டிரைகுளோரோ சிலேன் என்றும், CH₃SiHCL₂ என்பது மெத்தில் டைகுளோரோசிலேன் என்றும் கூறப்படுகின்றன. <!---- Chemical formulae verified in Google ----> அட்டவணை 3 (தோராயமாக) (தோராயமாக) (தோராயமாக) <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> ஆல்ஃபிரட் ஸ்டாக் என்பாரால் ஹைட்ரைடுகள் முதன்முதலில் முழுமையாக ஆராயப்பட்டன. சிலிக்காவுடன், அதிக அளவு மக்னீசியத்தைக் குறைந்த வெப்ப நிலையில் வினைப்படுத்திக் கிடைத்த மக்னீசியம் சிலிசைடுடன், நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அல்லது பாஸ்ஃபோரிக் அமிலத்தைச் சேர்ப்பதன் மூலமாக வரிசையாகப் பல சிலேன்களைத் தயாரித்தார். இவர் தயாரித்த சிலேன்கள் அட்டவணை 3இல் பட்டியலிடப்பட்டுள்ளன. இச்சேர்மங்கள் அந்தந்தக் குளோரைடு வழிச் சேர்மங்களை லித்தியம், அலுமினியம் ஹைட்ரைடு கொண்டு, ஈதர் கரைசலில் ஒடுக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. கிடைக்கும் விளைபொருளை, பொருத்தமாக அமைக்கப்பட்ட வெற்றிடம் உள்ள அமைப்புகளைப் பயன்படுத்திச் சேகரித்தல் வேண்டும். ஏனெனில், சிலேன்கள் எளிதில் காற்றினால் ஆக்சிஜனேற்றமடையும். மேலும் மிக விரைவில் தீப்பற்றிக் கொள்ளும் அல்லது காற்றுடன் கலந்து வெடி கலவையைத் தரும். அனைத்தும் மிக எளிதாக நுண்ணளவு ஹைட்ராக்சில் அல்லது நீருடன் விரைந்து வினைப்பட்டு, ஹைட்ரஜனை வெளிப்படுத்தி, சிலிசிக் அமிலத்தைத் தரும். மேலும் இச்சிதைவு வினை பல்வேறு கனிம மற்றும் கரிமக் காரங்களால் தூண்டப்படும். இவ்வடிப்படையே, ஒரு சேர்மத்திலுள்ள சிலிக்கான்—ஹைட்ரஜன் நேரடிப் பிணைப்பைத் துல்லியமாக அளக்கும் அளவறி செயல் முறையைத் தருகிறது. சிலேன்கள் நீரால் பகுக்கப்படும் வினையில் ஹைட்ராக்சில் அயனி சிலிக்கான் அணுவுடன் ஈதல் பிணைப்பின் மூலம் தொடர்பை ஏற்படுத்தி, ஒரு ஹைட்ரைடு அயனியை இழக்கிறது. இவ்வயனி நீர் மூலக் கூறில் உள்ள புரோட்டான் ஒன்றுடன் இணைந்து ஹைட்ரஜன் மூலக் கூறாக வெளியேறுகிறது. இவ்வழி முறையே சிலிக்கான்—ஹாலோஜன் நீராற் பகுப்பு வினைகளிலும் நடைபெறுகிறது. இங்கு ஹாலோஜன்களின் எதிரயனி வெளியேற்றப்படுகிறது (குளோரைடு, புரோமைடு அல்லது அயோடைடு). இவ்வயனி நீர் மூலக் கூறில் உள்ள ஒரு புரோட்டானுடன் இணைந்து, ஹைட்ரஜன் ஹாலைடுகளை வெளியிடுகிறது. மேலும் ஹைட்ராக்சில் அயனி ஈதல் பிணைப்பால் இணைவது போல, நீர் மூலக் கூறு சிலிக்கானுடன் இணைய முடியும். இச்செயல், கார்பன் அணுவில் நடைபெறுவதில்லை. சிலிக்கானில் வெற்றிட d—ஆர்பிட்டால் இருப்பதால், அதன் உதவியால் ஈதல் பிணைப்புத் தோன்ற முடிகிறது. கார்பனில் இவ்வகை d-ஆர்பிட்டால் இல்லாமையால், தன் அணைவு எண்ணை நான்குக்கு அதிகமாக்க இயலுவதில்லை. உயர் வெப்ப நிலையில் சிலிக்கான் ஹைட்ரைடுகள் சிதைந்து, ஹைட்ரஜனை வெளிப்படுத்துவதுடன், மென்மையான பழுப்பு நிறச் சிலிக்கான் படிவுகளையும் தரும். மிக நிலைத்த ஹைட்ரைடு மோனோசிலேன் 500°Cஇல் விரைந்து சிதைகிறது; 250°Cஇல் மெதுவாக, ஆனால், குறிப்பிடத் தக்க அளவு சிதைவடையும். வளிம நிலைச் சிலேன் வினைகள் குறைவாகவே காணப்படுகின்றன. ஏனெனில், வெப்ப நிலை உயரும் போது, சிதைதல், இரட்டைப் பிணைப்புடன் சேர்க்கை வினை போன்றவை நிகழ்கின்றன. உயர் வெப்ப நிலை அல்லது வினை வேகமாற்றியின் முன்னிலையில் இயங்கு உறுப்புகள் தோற்றுவிக்கப் படுகின்றன. மோனோசிலேன், எத்திலீனுடன் அறை வெப்ப நிலை அல்லது புற ஊதாக் கதிர்கள் முன்னிலையில் எத்தில் சிலேனை உண்டாக்குகிறது. இவ்வகை வினைகள் சிலிக்கான்—ஹைட்ரஜன் பிணைப்புள்ள சேர்மம் ஒன்று அல்க்கீன் அல்லது அல்க்கை னுடன் பொருத்தமான செறிவு வெப்ப நிலையில் வினையூக்கி முன்னிலையில் வினைப்பட்டுக் கரிமச் சிலேன்களைத் தரும். இவ்வழியாகவே, கரிமச் சிலேன் சேர்மங்கள் உருவாகின்றன. சிலேன்கள் மிக விரைவாக ஆக்சிஜனேற்றமடையும் அல்லது ஹாலோஜன்களுடன் வெடிக்கும். ஆனால், ஹைட்ரஜன் ஹாலைடுகளை, அலுமினியம் ஹாலைடு முன்னிலையில் பயன்படுத்தி, ஹாலோஜனேற்ற வினையைக் கட்டுப்பாட்டுடன் நடத்தலாம். செறிவைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஹாலோஜன் பதிலீட்டு வினையைக் கட்டுப்படுத்தலாம். நன்கு அறியப்பட்ட, சிலிக்கா குளோரோஃபார்ம் (SiHCl₃) என்ற ஹாலோஜன் பதிலீட்டு ஹைட்ரைடு, சிலிக்கான் தனிமத்துடன் ஹைட்ரஜன் குளோரைடை வினைப்படுத்திப் பெறப்படும். இதன் கொதி நிலை 31.8°C என்பதால், டெட்ரா குளோரைடு, குளோரோசிலேன்களிலிருந்து வாலை வடிப்பதின் மூலம் இதைப் பிரித்து விடலாம். இது சிலிக்கான்—ஹைட்ரஜன் பிணைப்பு, சிலிக்கான்—குளோரின் பிணைப்பு ஆகியவற்றின் வினைகளைப் பெற்றுள்ளது. ஒலிஃபீன்கள், அரோமாட்டிக் கரிமச் சேர்மங்களுடன் இது வினை புரிவதின் மூலமாக, கரிம டிரைகுளோரோ சிலேன்களைத் தருகிறது. சிலிக்கான் கார்பைடு. சிலிக்கானை அதிக அளவு கார்பனுடன் சேர்த்து, ஏற்ற சூழ்நிலையில் ஒடுக்கினால், சிலிக்கான் கார்பைடு கிடைக்கும். இதன் வாய்ப்பாடு SiC. இது பல படிக வடிவங்களில் தோன்றிய போதும், கன சதுர வைர வடிவில் நன்கு அறியப்பட்டுள்ளது. இவ்வடிவில் படிகத் தட்டுகளுக்கு இடைப்பட்ட தொலைவு 0.435nm ஆகும். தூய ஆல்ஃபா வடிவில் பச்சை நிறம் உடையது. வணிகத்தில் கருமை நிறத்தில் விற்கப்படும் இது கார்போரண்டம் எனப்படும். 1000°C க்குக் கீழ், இது காற்றினால் எளிதில் ஆக்சிஜனேற்றம் அடைவதில்லை. எனவே, இவ்வெப்ப நிலை வரை தன் வலிமையை இழப்பதில்லை. இக்காரணத்தால், மட்பாண்டத் தொழில் உலைகளின் கட்டுமானப் பொருளாக இது விரும்பப்படுகிறது. இதன் கடினத் தன்மை 9க்கும் (மோ அளவில்) அதிகம். எனவே, பெருமளவில் உறை கல்லாகப் பயன்படுகிறது. 2830°C இல் 35 வளிம மண்டல அழுத்தத்தில் இது உருகுகிறது. மீதூய்மையான சிலிக்கான் கார்பைடு, அல்க்கைல் குளோரோசிலேன்களை 1100—1400°C வெப்ப நிலையில் ஹைட்ரஜன் கொண்டு ஒடுக்குவதன் மூலமாகத் தயாரிக்கப்படுகிறது. சூடான இக்கார்பைடு குளோரினுடன் வினைப்பட்டுக் கார்பன் டெட்ராகுளோரைடும், சிலிக்கான் டெட்ரா குளோரைடும் கலந்த கலவையைத் தருகிறது. டெட்ராமெத்தில் சிலேனில் சிலிக்கான்—கார்பன் பிணைப்பாற்றல் 72 கி. கலோரி/மோல் ஆகும். சிலிக்கான் ஹாலோஜன். சிலிக்கான் டெட்ரா குளோரைடு (SiCl₄) நன்கு அறியப்பட்ட சிலிக்காவின் ஒற்றைச் சக பிணைப்பு மூலக் கூறு ஆகும். வணிக முறையில் எளிதில் கிடைக்கிறது. தனிம சிலிக்கானைக் குளோரினேற்றம் செய்தோ, சிலிக்காவும் நன்கு பொடி செய்யப்பட்ட கார்பனும் சேர்ந்த கலவையுடன் குளோரினை வினைப்படுத்தியோ, சிலிக்கான் கார்பைடைக் குளோரினேற்றம் செய்தோ, இதைத் தயாரிக்கலாம். எளிதில் ஆவியாகும் நீர்மம் ஈரக் காற்றில் புகைந்து சிலிக்காவையும், ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும் தரும். இப்பகுப்பு வினையின் மூலமாகவே, கார்பன் டெட்ராகுளோரைடை இதிலிருந்து வேறுபடுத்த முடிகிறது, இம்முறையில் கிடைக்கும் சிலிக்கா மீநுண்துகள்களால் ஆனது. எனவே, மிகப் பெரும் பரப்பளவைப் பெற்றுள்ளமையால், கரிமக் கரைசல்களிலும், சிலிக்கோன் ரப்பர்களிலும் நிரப்பியாகப் (filler) பயன்படுகிறது. இது ஆல்கஹால்கள் மற்றும் கிளைக்காலுடன் எளிதில் வினைப்பட்டு, ஈதர் வகைச் சேர்மங்களை உண்டாக்குகிறது. ஆனால், இச்சேர்மங்கள் சிலிசிக் அமிலத்தில் எஸ்ட்டர்களாகவும் கருதப்படும். இது கிரிக்னார்டு வினைப் பொருள், துத்தநாகம், லித்தியம், அல்க்கைல்களுடன் வினைப்பட்டு, கரிமச் சிலிக்கான் வழிச் சேர்மங்களைத் தருகிறது. அட்டவணை 4 <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சில சிலிக்கான் ஹாலோஜன்களும், அவற்றின் பண்புகளும் அட்டவணை 4இல் காட்டப்பட்டுள்ளன. சிலிக்காவின் சில அயோடைடுகள் மட்டுமே சிதைந்து, அயோடினை வெளியேற்றுகின்றன. ஆனால், பொதுவாக இவை சிலிக்கான்—ஹாலோஜன் பிணைப்பை உறுதிப் படுத்தும் வினைகளைப் பெற்றுள்ளன. சிலிக்கான் டெட்ராஃபுளுரைடு என்ற சேர்மம் ஹைட்ரோஃபுளுரிக் அமிலத்துடன் வினைப் பட்டு H₂SiF₅ என்ற ஃபுளுரோ சிலிசிக் அமிலத்தைத் தருகிறது. இவ்வமிலம் ஃபுளுரோசிலிகேட் என்ற வரிசை உப்பைத் தருகிறது. குளோரைடுகள், புரோமைடுகள், அயோடைடுகள் இவ்வகை அணைவு அமிலங்களைத் தருவதில்லை. இடுக்கி இணைப்புச் சேர்மங்களில் இரு இடுக்கிகளை உடைய ஈந்தணைவிகளைப் பெற்றுள்ள அணைவுச் சேர்மங்களில் சிலிக்கான், ஐந்து, ஆறு அணைவு எண்களைப் பெற்றுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட ஹாலோஜன் அணுக்களைப் பெற்றுள்ள சிலிக்கான் சேர்மங்களும் உள்ளன. சயனைடு, சயனேட், ஐசோசயனேட், தயோசயனேட் முதலிய போலி ஹாலோஜன்களைக் கொண்டுள்ள அணைவுச் சேர்மங்களைச் சிலிக்கான் டெட்ரா குளோரைடுடன் அணுமாற்ற முறையில் எளிதில் தயாரிக்கலாம் அல்லது சிலிசால் டெட்ரா குளோரைடுடன் வெள்ளி சயனைடு, சயனேட், ஐசோசயனேட் முதலியவற்றை வினைப்படுத்தித் தயாரிக்கலாம். சிலிக்கான் நைட்ரைடு. தனிம சிலிக்கானை, நைட்ரஜன் வளிமத்துடன் 1300°C அல்லது அதற்கு மேலான வெப்ப நிலைக்குச் சூடு செய்யும் போது, Si₃N₄ என்ற இயல்புடைய சிலிக்கான் நைட்ரைடு கிடைக்கிறது. மோனோசிலேன் அல்லது சிலிகான் டெட்ரா குளோரைடுடன் அம்மோனியா வினைப்பட்டுக் கிடைக்கும் சேர்க்கை வினைப்பொருளை, வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தியும் சிலிக்கான் நைட்ரைடைப் பெறலாம். சிலிக்கா போன்று பல வடிவமைப்பைக் கொண்ட சிலிக்கான் இமைடு SiNH)₂ என்ற இடைச் சேர்மத்தின் வழியாக இது கிடைக்கிறது. இது ஒரு மந்தமான சேர்மம் எனினும், உச்ச வெப்ப நிலைகளில் கார்பனுடன் வினைப்பட்டுச் சிலிக்கான் கார்பைடைத் தருகிறது. உலைகளின் உட்பகுதிகளை அமைக்கப் பயன்படும் இச்சேர்மத்தின் அடுக்குகள் மின் காப்புப் பொருளாகவும் பயன்படுகின்றன. சிலிக்கான் ஆக்சைடுகள். குவார்ட்ஸ் என்று நன்கு அறியப்பட்ட படிகப் பொருளான சிலிக்கான் டைஆக்சைடு ஒரு முக்கியமான ஆக்சைடு ஆகும். செயற்கை வைரங்களாகவும் பல நிறங்களில் காணப்படுகின்றன. சிலிக்கா எனப்படும் இச்சேர்மம் 22 நிலைமைகளில் (phases) கண்டறியப்பட்டுள்ளது. 573°Cஇல் சாதாரண α—குவார்ட்ஸ், மீளும் தன்மையுடைய அடர்த்தி குறைவான β—குவார்ட்ஸ் ஆக மாறுகிறது. 867°C இல் β—குவார்ட்ஸாகப் படிக வடிவில் மாற்றமடைந்து β டிரைடைமைட் ஆக மாறுகிறது. 1470°Cஇல் β—டிரைடைமைட் மூன்றாம் படிக வடிவமான β—கிரிஸ்டோபலைடாக மாற்றம் அடைகிறது. அனைத்து வடிவங்களும் அறை வெப்ப நிலையில் நிலைத் தன்மை மிக்கவை. ஒவ்வொரு வடிவமும் குறிப்பிட்ட உருகு நிலையைப் பெற்றுள்ளது. எனினும், சிலிக்கானின் உருகு நிலை என்று வழக்கமாகக் குறிப்பிடப்படும் 1723°C கிரிஸ்டோபலைட் உருகு நிலையைக் குறிக்கும். மிக விரைவாக இவற்றை நீர்ம நிலையிலிருந்து குளிரச் செய்தால், சிலிக்கா கண்ணாடி கிடைக்கும். சிலிக்கா கண்ணாடி குறைந்த வெப்பப் பெருக்க எண்ணைப் பெற்றுள்ள பொருள், இதன் மின் கடத்துந் திறனும் மிகக் குறைவாகையால், இது பெருமளவில் பயன்படுகிறது. தூய நல்லியல்புடைய குவார்ட்ஸ் படிகங்கள் அரிதாகவே உள்ளன. இவ்வகை மின்னழுத்தப் படிகங்கள் (piezoelectric crystals) மின்னணுவியல் துறையில் பெரிதும் பயன்வது முக்கிய காரணமாகும். தேவையின் காரணமாக, நல்லியல்பு சிலிக்காவைத் தயாரிப்பது குறித்துப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல ஒற்றைப் படிகச் சிலிக்கான் டைஆக்சைடுகள் காணப்படுகின்றன. நீரேற்றம் பெற்றுள்ள படிகமான ஒப்பல் (opal), மிகையளவு நீரேற்றம் பெற்ற சிக்கிமுக்கிக் கல் (flint), ஒனிக்ஸ், அகேட் முதலியன இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. சிலிக்கான் மோனாக்சைடு ஒரு பழுப்பு நிறப் பொடி, 1400°Cக்கு மேல் நன்கு பொடி செய்யப்பட்ட சிலிக்காவுடன் சிலிக்கான் தனிமத்தைச் சேர்த்து, ஆக்சிஜன் இல்லாச் சூழ்நிலையில் வினைப்படுத்தி இதைத் தயாரிக்கலாம். SiO₂ உடன் ஒப்பிடும் போது, இது மிக எளிதில் ஆவியாகும் சேர்மம், வில்லைகள், கண்ணாடிகள், எலெக்ட்ரான் நுண்ணோக்கி ஆகியவற்றில் ஒளித் தடுப்புப் பூச்சுகளை உண்டாக்கப் பயன்படுகிறது. 1300°Cக்குக் கீழ் மோனாக்சைடு நிலைத் தன்மையைப் பெற்றுள்ளதா என்பதைப் பற்றிய ஐயம் உள்ளது. கீழ் வெப்ப நிலையில் சீர்மையற்ற ஆக்சிஜனேற்ற—ஒடுக்க வினைக்குட்பட்டு, சிலிக்காவாகவும், தனிமச் சிலிக்கானாகவும் மாறுவதாகக் கருதப்படுகிறது. 300—400°Cஇல் ஹாலோஜன் வினைப்படுகிறது.சல்ஃபைடுகள். மோனோ சல்ஃபைடுகளில் எதுவும் அறியப்படவில்லை. ஆனால், பன்னெடுங் காலமாகவே டைசல்ஃபைடு நன்கு அறியப்பட்டதாகும். இது SiS₄ என்ற நான்முகிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் சங்கிலித் தொடர் அமைப்புடையது. சங்கிலித் தொடர் நீள்வாக்கில் எந்திரத் திறன் மிக்கது. ஆனால், எளிதில் பகுக்கப்பட்டு, சிலிக்காவையும், ஹைட்ரஜன் சல்ஃபைடையும் தரும். சிலிசிக் அமிலத்தின் எஸ்ட்டர்கள். எத்தில் ஆல்கஹாலுடன், சிலிக்கான் டெட்ராகுளோரைடு வினைப்பட்டு, எத்தில் சிலிக்கேட் என்ற நிறமற்ற, எளிதில் ஆவியாகும் தன்மையும், இனிய மணமும் உடைய நீர்மத்தைத் தருகிறது. இதன் கொதி நிலை 168°C. இச்சேர்மத்தை மிகத் தூய்மையான நிலையில், வாலை வடித்துப் பெற முடியும் என்பதாலும், இதன் வினைப் படு பொருள்களில் காரம் கலக்கப்படவில்லை என்பதாலும், அயனி, மாசு ஆகியன இல்லை என்பதாலும், சிலிக்கேட் ஒளிர்வான் (silicate phosphor) தயாரிக்கப் பயன்படுகிறது. இது தூய நீரினால் மிக மெதுவாகவே பகுப்படைந்து, சிலிக்காவையும், எத்தனாலையும் தருகிறது. இப்பகுப்பு வினையை, பயன்படுத்தும் நீரின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட நிலைக்குக் கட்டுப்படுத்த இயலும். இதன் விளைவாக எத்தில் ஃபுல்வி சிலிக்கேட்டுகள் கிடைக்கின்றன. இது வண்ணப் பூச்சுகள் தயாரிக்கப் பயன்படுகிறது. சிலிக்கான் டெட்ரா குளோரைடுடன் மெத்தனால் வினைப்பட்டு, மெத்தில் சிலிகேட்டைத் தருகிறது. இது கற்பூரம் போன்ற மணமும், 121°C கொதி நிலையும் உடைய நீர்மம். இது எத்தில் சிலிக்கேட் போன்று பயனுடையதாக இருக்குமென்று எதிர்பார்க்கலாம். ஆனால், இது மிகவும் தீங்குறு சேர்மம். கருவிழிகளில்துளையை ஏற்படுத்திப் பார்வையை இழக்கச் செய்யும். இதே மெத்தில் சிலிக்கேட்டை நேரடியாக உயர் வெப்ப நிலையில் மெத்தனாலுடன் சிலிக்கான் தனிமத்தை வினைப்படுத்தித் தயாரிக்கலாம். ஆனால், இங்கு ஹாலோஜன் சேர்மங்கள் எதுவும் பங்கு பெறுவதில்லை. இவ்வாறு தயாரிக்கப்பட்ட மெத்தில் சிலிக்கேட், விலங்குகளைக் கொண்டு ஆய்வு செய்து பார்த்ததில் மேற்கூறிய ஆபத்தான விளைவை ஏற்படுத்தவில்லை. உயர் வகை அல்க்கைல் சிலிக்கேட்டுகளும், சில அரோமாட்டிக் சிலிக்கேட்டுகளும் வணிக முறையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. வெப்பப் பரிமாற்ற அமைப்புகளில் பயன்படுகின்றன. அனைத்தும் வலிமிக்க அமிலங்கள் அல்லது காரங்கள் முன்னிலையில் பகுக்கப்படும். கரிமச் சேர்மங்கள். டெட்ரா அல்க்கைன்கள், டெட்ரா அரைல்கள், ஹாலோஜன்கள், ஹைட்ரைடுகள், கரிம சிலாக்சேன்கள் முதலியன முக்கியமான கரிம சிலிக்கான் வழிச் சேர்மங்கள் ஆகும். அட்டவணை 5 டெட்ரா அல்கைல்கள் மற்றும் டெட்ரா அரைல்கள். சிலிக்கான்—கார்பன் பிணைப்புள்ள கரிம சிலிக்கான் சேர்மங்கள் 1860ஆம் ஆண்டு முதலே நன்கு அறியப் பட்டச் சேர்மங்கள் ஆகும். இவை சிறந்த வெப்ப நிலைப்புத் தன்மையும், ஆக்சிஜனேற்ற தடுப்புத் தன்மையும் பெற்றுள்ளன. இவற்றைத் தயாரிக்க கிரிக்னார்டு காரணிகள், துத்தநாக அல்க்கைல்கள், லித்தியம் அல்க்கைல்கள் போன்றவற்றுடன் சிலிக்கான் டெட்ராகுளோரைடை வினைப்படுத்தி, கிடைக்கும் விளைபொருள்களை நீராற்பகுத்தல் வேண்டும். முக்கியமான கரிம சிலிக்கான் சேர்மங்கள் அட்டவணை 5 இல் காட்டப்பட்டுள்ளன. கரிம சிலிக்கான் ஹாலோஜன்களும் ஹைட்ரைடுகளும். சிலிக்கான்—குளோரின், சிலிக்கான்—ஹைட்ரஜன் பிணைப்புகளையுடைய கரிம சிலிக்கான் சேர்மங்களைப் பயன்படுத்திப் பல சிலிக்கான் கரிமச் சேர்மங்களைத் தயாரிக்கலாம். எனவே இவை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அல்க்கைல், அரைல் குளோரோசிலேன்கள் இவ்வகைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். சிலிக்கோன் பல்லுறுப்புகளைத் தயாரிக்க இடைநிலைச் சேர்மங்களாகப் பயன்படுகின்றன. பொதுவாக, கரிம சிலிக்கான் ஹாலோஜன் சேர்மங்களைத் தயாரிக்க நன்கு அறியப்பட்ட கரிம உலோகச் சேர்மங்களான துத்தநாக அல்க்கைல், கிரிக்னார்டு காரணி லித்தியம் அல்க்கைல் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன், சிலிக்கான் ஹாலோஜன் சேர்மத்தை வினைப்படுத்த வேண்டும். பொதுவான வினை முறை வருமாறு: இப்பதிலீட்டு வினையின் மூலமாக, ஆய்வுக் கூடங்களிலும் வணிக முறையில் கரிம சிலிக்கான் ஹாலோஜன் சேர்மங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனினும், நேரடியாக அல்க்கைல் அல்லது அரைல் குளோரைடுகளுடன் தனிம சிலிக்கானை வினைப் படுத்துவதன் மூலமாகச் சில குறிப்பிட்ட கரிம சிலிக்கான் குளோரைடுகளைத் தயாரிக்கலாம். காட்டாக,மெத்தில் குளோரைடு தனிம சிலிக்கானுடன் 300°C வெப்ப நிலையில் தாமிரப் பொடி வினையூக்கி உடனிருக்க வினைப்பட்டு, டைமெத்தில் டைகுளோரோசிலேனைத் தருகிறது. இத்துடன், மெத்தில் டிரை குளோரோசிலேன், டிரைமெத்தில் குளோரோசிலேன், மெத்தில் டைகுளோரோ சிலேன் போன்ற பல துணை விளைப் பொருள்கள் தோன்றுகின்றன. இவற்றை வாலை வடித்தலின் மூலமாகப் பிரித்துப் பெறலாம். இவற்றைப் பயன்படுத்தி, சிலிக்கோன் எண்ணெய்களும், ரெசின்களும், நீள் நெகிழிகளும் தயாரிக்கலாம். மெத்தில் குளோரைடைப் பெற மெத்தில் ஆல்கஹாலுடன், ஹைட்ரஜன் குளோரைடை வினைப் படுத்த வேண்டும். சிலிக்கானைப் பெறச் சிலிக்கா பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரியும், நீரும் பயன்படுத்தப்பட்டு மெத்தில் ஆல்கஹால் தயாரிக்கப் படுகிறது. சிலிக்கா, நீர், நிலக்கரி இவையே பயன்மிகு சிலிக்கோன் சேர்மங்களுக்கு அடிப்படையான மூலப் பொருள்கள் ஆகும். இவ்வாறு, ஃபினைல் குளோரோசிலேன்களைத் தயாரிக்க குளோரோ பென்சீனுடன் தனிம சிலிக்கானை வினைப்படுத்த வேண்டும். வெள்ளி அல்லது தாமிர வினையூக்கிகள் முன்னிலையில், சுமார் 350—500°C வெப்ப நிலை தேவை. இவ்வாறு பெறப்பட்ட ஃபினைல் குளோரோசிலேனுடன் மெத்தில் குளோரோசிலேனைக் கலந்து பகுப்பு வினைக்கு உட்படுத்தினால், மெத்தில் ஃபினைல் சிலிக்கோன் பல்லுறுப்பிகள் கிடைக்கும். இப்பல்லுறுப்பிகள் ஆக்சிஜனேற்ற தன்மையை எதிர்க்கும் இயல்பு மிக்கவை. சில கரிம குளோரோ சிலேன்கள் அட்டவணை 6 இல் கொடுக்கப்பட்டுள்ளன. அட்டவணை 6 RSiCl கரிம சிலாக்சேன்கள். கரிம ஹாலோஜன் சிலேன்களை நீராற்பகுப்பதன் மூலமாகக் கரிம சிலாக்சேன்களைத் தயாரிக்கலாம். இவை பல்லுறுப்பிச் சேர்மங்கள், வளைய, நேர்கோட்டு வடிவுடைய சிலாக்சேன்களும் உள்ளன. —பி. ஈ. எம். லியாகத் அலிகான் நூலோதி. F. Albert Cotton and Geoffrey Wilkinson, Advanced Inorganic Chemistry, Sixth Edition, Wiley Eastern Ltd, New Delhi, 1984.