தனி மனிதனின் வாழ்க்கையில் அரசின் தொடர்பு இடைவிடாது நிகழ்கிறது. குழந்தை பிறந்தவுடன் அதன் பிறப்பு, அரசாங்கத்தில் பதிவு செய்யப்படுகிறது. வளரும்பொழுது அவனுடைய கல்விக்கு அரசு பொறுப்பேற்கிறது. பின்னர் அவனுக்கு வேலை வாய்ப்புகளை உண்டாக்கிக் கொடுக்கிறது. அவனுடைய உணவு, உடை, உடைமைகள் ஆகியவற்றுக்கான செலவுகள் யாவும் அரசின் கொள்கைகளால் தாக்கப்படுகின்றன. அவனது வருமானத்தின் ஒரு பகுதியை வரியாக அரசு எடுத்துக் கொள்கிறது. அதற்கு ஈடாக அரசு அவனுக்குக் கல்வி, இலவச மருத்துவம், ஓய்வு ஊதியம், போக்குவரத்து, காவல், பாதுகாப்புப் போன்ற வசதிகளை உண்டாக்கிக் கொடுக்கிறது. அவன் இறந்த பின்னர் அவனது இறப்பும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு மக்கனின் அன்றாட வாழ்க்கையில் அரசின் தொடர்பினைப் பலவகைகளில் காணலாம். கிரேக்க அறிஞர் அரிசுடாட்டில் (Aristotle) அரசு இயற்கையாகவே உருவாயிற்று என்று கருதினார். மேலும், அவர் மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவே குடும்பம் என்னும் அமைப்பு ஏற்பட்டது என்றும், அக்குடும்ப அமைப்பு குழந்தைகள், பேரக்குழந்தைகள் என்று பல குடும்பங்களாகப் பெருகிப் பின்னர் அவை ஒன்றுசேர்ந்து ஊரகமாயிற்று என்றும், மக்கள் ஒன்று கூடி ஒரே இடத்தில் வாழும்போது தங்களுடைய நல்வாழ்வுக்காக அரசு என்னும் அமைப்பை உருவாக்கினார்கள் என்றும் கூறுகிறார். தாமசு ஆப்சு (Thomas Hobbes) என்ற அறிஞர், அரசு தொடங்கிய சூழ்நிலையைப் பின்வருமாறு விளக்குகிறார். பண்டைக் காலத்து மனிதர்கள் எல்லோரும் உடல் வலிமையிலும் மனமுதிர்ச்சியிலும் ஏறத்தாழச் சமநிலையில் இருந்தார்கள். கூட்டமாக வாழ்ந்து வந்த மனிதர்கள் தமக்கு வேண்டியவற்றைப் பெற வன்முறையில் ஈடுபட்டார்கள். எவ்விதப் பாதுகாப்போ கட்டுப்பாடோ இல்லாமல், ஒழுங்கு, ஒழுங்கின்மை ஆகியவற்றை அறிந்திராமல், தன்னிச்சையாகத் தாம்மட்டும் நலமுற வாழவேண்டும் என்ற அடிப்படையில் குறுகிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். தங்களின் இந்த அவல நிலையை உணர்ந்து தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வேண்டி அவர்கள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள். நாகரிகம் முதிர்ச்சியுறாத சமூகங்களில் அரசு என்பது பெயரளவில் தான் இருந்தது. அவர்களுக்கு முறையான விரிவான அரசு தேவைப்படவும் இல்லை. ஏனெனில் மக்கள் கூட்டம் சிறியதாகவும் எளிதில் அடக்கி ஆளக்கூடியதாகவும் இருந்தது. ஏறக்குறைய 20 முதல் 200 பேர் வரை அடங்கிய சமூகத்தில் எல்லோருமே ஒருவரை ஒருவர் அறிந்திருந்தமையால் கட்டுப்பாடு நிலவியது. மேலும், நாகரிகம் வளர்ச்சியுறாமல் தேங்கி நின்றதால், பல நூறு ஆண்டுகளாகச் சமூக நிலையில் எவ்வித மாற்றமுமின்றி மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் தேவைகளும் குறைவாக இருந்தன. அத்தகைய சமூகத்துப் பெரியவர்கள் நல்ல நூல்நிலையங்களுக்கு ஒப்பானவர்களாக இருந்தனர். சிறியவர்கள் தமக்குத் தேவையானவற்றைப் பெரியவர்களிடமிருந்து கற்றுத் தெரிந்து கொண்டனர். அது மட்டுமன்றித் தனிப்பட்டவர் உடைமைகளும் குறைவாகவே இருந்தன. பண்டைய சிறிய சமூகத்தில் ஒருவருடைய உடைமைகள் எல்லோருக்கும் தெரிந்திருந்தமையால், களவாடிய பொருள்களை விற்கவோ வேற்றூருக்கு எடுத்துச் செல்லவோ முடியாததால் களவு நிகழ்வது அரிதாக இருந்தது, பொறாமை, பழி கூறல், தனிப்பட்ட பகைமை இவையே குற்றம் நிகழக் காரணங்களாக இருந்தன. ஒரு மனிதனின் நற்பெயரே அவனது பெரும் செல்வமாக மதிக்கப்பட்டது. பண்டைக் காலத்து மக்கள் நாடோடிகளாக வேட்டையாடித் திரிந்த போது, நிலையான தலைமை இருக்கவில்லை. தேவைக்கேற்பத்தான் தலைமை உருவாயிற்று. அதாவது கூட்டத்தினரிடையே சச்சரவு ஏற்பட்டாலோ வெளியிலிருந்து இடையூறு ஏற்பட்டாலோ மட்டுமே ஒரு தலைவனின் அறிவுரை, உதவி, அதிகாரம் முதலியன பிறரால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதுபோன்ற தலைமை பரம்பரையாக ஏற்படவில்லை. காலச் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தலைமை அமைந்தது. எடுத்துக்காட்டாக வேட்டையாடும் திறமை வாய்ந்தவன் பஞ்சக் காலத்தில் வேட்டையால் வாழ்பவர்களுக்குத் தலைவனானான். அனுபவம் முதிர்ந்தவர்களின் குழு. அவனுக்குத் தக்க அறிவுரை கூறி வந்தது. இந்த நாடோடி நிலைமை மாறி மக்கள் இடத்தில் பல குடும்பங்களாக வாழத் தொடங்கிய போது தனியார் உடைமைகள் மிகுந்தன. தேவைகளுக்குத் தகுந்தவாறு குடும்பத் தலைவர்கள் ஒன்று கூடி எண்ணிச் செயற்பட்டனர். பிறகு சேமிக்கப்பட்ட தானியங்கள், பிற பொருள்கள், பெண்கள் ஆகியோர்களைக் கவர்ந்து செல்ல அடிக்கடிப் போர்களும் கவர்தலும் நடக்கத் தொடங்கின. தோல்வியுற்றவர்களை வென்றவர்கள் அடிமைகளாக்கினர். அது முடியாதபோது கொன்று குவித்தனர். அவர்களின் உடைமைகளையும் விளை நிலங்களையும் கைப்பற்றினர். அந்நிலங்களில் வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டதால், மீண்டும் மீண்டும் போர் தொடுக்க வேண்டியிருந்தது. இதன் விளைவாகக் கூட்டங்கள் பெருகி, மக்கள் வாழும் இடங்கள் விரிவடைந்து சிற்றூர்களாகவும் நகரங்களாகவும் நாடுகளாகவும் மாறின. பலவகைப்பட்ட மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் அவர்களுக்கு வசதிகள் உண்டாக்கிக் கொடுக்கவும் திறமையான தலைமை தேவைப்பட்டது. தலைவன் கடமைகள் மிகுந்த போது அவனுக்குத் திறமையான நம்பிக்கையுள்ள உதவியாளர் தேவைப்பட்டனர். இவ்வாறாக அரசு உருவாயிற்று. தொடக்கத்தில் ஏற்பட்ட அரசுக்கும் இக்கால அரசுக்கும் வேற்றுமைகள் பல உள்ளன. போர்களையும் சச்சரவுகளையுமே எதிர்கொண்ட பண்டைக் காலத்தில் வன்முறையே அரசின் இயங்குமுறையாக இருந்தது. அது போர்க்கால அரசு (War State) எனப்பட்டது. காலப்போக்கில் வளர்ந்து வரும் நாகரிகத்திற்கு ஏற்பப் பல மாறுதல்களையடைந்து நலஅரசு உருவாயிற்று. பண்டைக் காலத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகக் குறைவாகத் தலையிடும் அரசே மிகச் சிறந்த அரசு என்ற கருத்து நிலவியது. அந்நிலை மாறி இன்றைய அரசு பல்வேறு துறைகளாக விரிவடைந்து தனிமனித வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் தொடர்பு கொள்கிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம் அரசால் முடிவு செய்யப்படுகிறது. உற்பத்தியைப் பெருக்குவதற்கு அரசு திட்டமிடுகிறது. நிலமில்லாத மக்களுக்கு நிலங்களை வழங்கி உற்பத்தியான பொருள்களை விற்கவும் உதவுகிறது. போக்குவரத்து வசதிகளைப் பெருக்கி வாணிகம் செழிக்க வழி செய்கிறது. பலவகைத் தொழில்களும் சீராக நடப்பதற்குத் திட்டங்களும் சட்டங்களும் இயற்றி நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தனியார் துறை நிறுவனங்கள் மட்டுமன்றி அரசும் பல தொழிற்சாலைகளை நிறுவி நடத்துகிறது. கல்விக் கூடங்கள் பல அமைத்து மக்களின் அறிவையும் திறனையும் வளர்க்க அரசு வழி செய்கிறது. கற்றுத் தேர்ந்த கல்வியையும் வேலைத் திறனையும் நன்கு பயன்படுத்த வேலை வாய்ப்புகளை உண்டாக்கிக் கொடுக்கிறது. ஊனமுற்றவர்களும் நலிவுற்றவர்களும் புறக்கணிக்கப்படாமல் அவர்களைக் காக்கும் பொறுப்பை அரசு ஏற்று அவர்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம் மட்டுமன்றி வேலை வாய்ப்புகளும் அளித்து அவர்களும் சமூகத்தில் சிறப்பாக வாழ வழி செய்கிறது. அதுமட்டுமன்றித் திக்கற்றோர் உதவியற்ற முதியோர், மனநலிவுற்றவர்கள் ஆகியோர்க்கான காப்பகங்களையும் அரசு நடத்துகிறது. இவ்வாறு விரிந்து செயலாற்றும் இன்றைய சமூக நல அரசின் முதன்மையான பணி, நாட்டை அயலார் தலையீட்டிலிருந்து காப்பாற்றுவதேயாகும். இதற்காகவே, படைகள், அவற்றுக்குத் தேவையான படைக்கலன்கள், பயிற்சிகள் ஆகிய இவற்றிற்காகப் பெருந்தொகையை அரசு செலவிடுகிறது. அது மட்டுமன்றி அயல்நாட்டவர்களுடன் நல்லுறவு ஏற்படுத்தி அமைதி காக்கவும் பொருளாதார உறவுகள் மேம்படவும் திட்டமிட்டுச் செயலாற்றுகிறது. தன் நிருவாகத்திற்கு உட்பட்ட இடங்களில் ஒழுங்கமைப்புச் சீராக நிலவச் செய்வது அரசின் அடுத்த பணியாகும். ஒரு சமூகத்து மக்களுக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்வது, அதைச் சமமாகப் பகிர்ந்தளிப்பது, மக்களுடைய கல்வி, உடல் நலம், பொழுதுபோக்கு, அயல்நாட்டுத் தொடர்பு, போக்குவரத்து யாவும் ஒழுங்காகச் செயற்பட ஒரு முறையான சமூக ஒழுங்கமைப்பு இன்றியமையாததாகும். இதனை ஏற்படுத்துவது அரசின் முதன்மையான பணியாகும். நாட்டின் பரப்பளவு மிகுதியாக உள்ள போது இந்தப் பணியைச் செயற்படுத்துவது கடினமானதாகிறது. எடுத்துக்காட்டாகச் சோவியத்து அரசின் நிருவாகத்தில் ஏறத்தாழ 84,73,000 சதுர மைல்கள் உள்- ளன. அடுத்துச் சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகியனவும் அதிகமான நிலப்பரப்புக் கொண்ட நாடுகள் ஆகும். அடிக்கடி புரட்சிகள் நடக்கும் நாடுகளிலும் ஒழுங்கமைப்பை நிலைநாட்டுவது கடினமானதாகும். நடு மற்றும் தென் அமெரிக்க நாடுகளை இதற்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். அடிக்கடி கலவரங்களும் சச்சரவுகளும் நடந்து கொண்டிருந்தால் அதை அடக்குவதிலேயே ஒரு அரசின் நேரமும் பொருளும் செலவிடப்படும். பொருள் இழப்பு மட்டுமன்றிப் பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு வளர்ந்துள்ள பொருளாதாரமும் சீர்குலைவதால் அரசின் பணிகள் மேலும் சிக்கலாகின்றன. அரசின் மூன்றாவது இன்றியமையாப் பணி மக்கள் நலனுக்காகத் திட்டமிடுவதும் அதை நிறைவேற்றுவதும் ஆகும். எல்லா மக்களுக்கும் பலனளிக்கும் வகையிலும் எல்லா மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலும் திட்டமிடுவது என்பது மிக மிகக் கடினமான அல்லது அறவே முடியாத செயலாகும். எடுத்துக்காட்டாக மிக்க வருமானமுள்ளவர்களிடமிருந்து வரிப்பணம் பெற்றுக் குறைந்த வருமானம் கொண்ட வரி செலுத்தாத மக்களுக்கு இலவச வசதிகளை அளிக்கிறது. இந்த வசதிகளைப் பெறும் மக்கள் அரசைப் பாராட்டி வரவேற்பது போல வரி கொடுப்பவர்கள் பாராட்டுவதில்லை. தனி மனிதனின் உரிமைகளையும் உடைமைகளையும் பாதுகாப்பது அரசின் தலையாய பணியாகும். அதற்காகவே சமூகம் அரசுக்கும் பலவித அதிகாரங்களை அளித்திருக்கிறது. தன் பாதுகாப்பிற்கும் மேம்பாட்டிற்கும் வேண்டிச் சில உரிமைகனைத் தனி மனிதன் விட்டுக் கொடுக்கிறான். அரசு சட்டங்களை இயற்றி மக்களைக் கட்டுப்படுத்துகிறது. அது மட்டுமன்றிக் குடும்பம், கல்வி நிலையம், சமயம் என்ற அமைப்புகளும் கட்டுப்பாடு வளர உதவுகின்றன.வி.கோ. துணை நூல்கள் Ogburn and Nimkoff., “A Hand Book of Sociology”, Routledge & Kegan Paul Limited, Broadway House, London, 1960. Reece MC Gee (Editor), “Sociology, An Introduction”, The Dryden Press, Hinddale, Illinois, 1977. Bottomore. T.B., “Sociology, A Guide to Problems & Literature”, George Allen & Unwin (India) Pvt. Limited, Bombay, 1971.