சானிடின்
cāṉiṭiṉ
இது ஃபெல்ஸ்பார் வகுப்பைச் சேர்ந்த சிலிக்கேட் கனிமமாகும்.
இது ஃபெல்ஸ்பார் வகுப்பைச் சேர்ந்த சிலிக்கேட் கனிமமாகும். இக்கனிமம், பொட்டாசியம்—ஃபெல்ஸ்பார்களில் ஒன்றான ஆர்த்தோகிளேஸ் என்னும் கனிமத்தின் ஒரு வகையாகும். இதுவும் ஒரு பொட்டாசியம் அலுமினியம் சிலிகேட் (KAlSiO) ஆகும். இதில் பெரும்பாலும், சோடியம் கலந்திருக்கும். ஆகையால், இதைச் சோடியம்—ஆர்த்தோகிளேஸ் என்பர். இதைப் பொட்டாசியம்-ஃபெல்ஸ்பார்களில் அதிக வெப்ப நிலையில் தோன்றும் வகை எனக் கூறலாம். சானிடின் (sanidine) ஒற்றைச் சரிவுத் தொகுதியைச் சேர்ந்தது. இது பெரும்பாலும், படிகங்களாகக் காணப்படுகிறது. இதன் படிகங்கள் ஒளிபுகுத் தன்மையுடனும், கண்ணாடி போன்று பளபளப்பாகவும் இருக்கும். சானிடின் படிகங்கள் (010) தளத்திற்கு இணையாகத் தட்டையானவையாக இருக்கும். சில சதுரப் பட்டகங்களாகக் காணப்படுகின்றன. இதன் படிகங்கள் கார்ல்ஸ்பாடு விதிகளின் படி படிக—இரட்டுறல் அடைந்து காணப்படும். இதில் (010). (001) ஆகிய இரண்டு கனிமப் பிளவுகள் தெளிவாகக் காணப்படும். இது பொதுவாக அழுக்கடைந்த வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். சங்கு முறிவு அல்லது சீரற்ற முறிவும், கண்ணாடி மிளிர்வு அல்லது குறை கண்ணாடி மிளிர்வும் உடையது. இதன் கடினத் தன்மை 6; ஒப்படர்த்தி 2.57—2.58. நொறுங்கக் கூடியது.
சானிடின் அதன் இனத்தைச் சேர்ந்த ஆர்த்தோ கிளேஸ், அடுலேரியா ஆகியவற்றிலிருந்து சற்றே மாறுபாடான ஒளியியல் தன்மைகளைக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், இக்கனிமங்களை வேறுபடுத்தி அறிய முடிகிறது. இது இரண்டு ஒளி அச்சுகளை உடையது. சானிடின் கனிமத்தின் ஒளி அச்சுத் தளம் (010) முகத்திற்கு இணையாக அமைந்துள்ளது. இதன் ஒளி அச்சுகளுக்கு இடையேயான (2V) கோணம் மிகவும் குறைவாக இருக்கும். இதன் ஒளிச் சிதறல் சிவப்பு ஒளியில் ஏற்படுவதை விட ஊதா ஒளியில் குறைவாகவே காணப்படும். இது எதிர்மறை ஒளிக் குறி உடையது. இதன் ஒளி விலகல் எண்கள் α = 1.521; β = 1.526; γ = 1.527.
சானிடினை டிராக்கைட், ரயோலைட், ஃபோனாலைட் முதலிய நுண்ணிய துகள்களாலான பாறைகளில் பெரிய அளவிலான படிகங்களாகப் பொதிந்திருக்கக் காணலாம். சானிடின் ஜெர்மனியிலுள்ள ரைன்லன்ட், சிபென்கிபிரிஜ் முதலான இடங்களிலுள்ள அனற் பாறைகளில் காணப்படுகிறது. அமெரிக்காவிலுள்ள நிவேடா பகுதிகளில் தனித்த அல்லது இரட்டுறல் அடைந்த படிகங்கள் காணப்படுகின்றன. சானிடின் என்னும் பெயர் அதன் படிக உருவால், தட்டையான அல்லது பலகை என்னும் பொருள்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. —இல, வைத்திலிங்கம் நூலோதி. A. V. Milovsky, Mineralogy and Petrography, First Edition, Mir Publishers, Moscow, 1982.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 177)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zdtcgzqq/
தமிழ்“சானிடின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zdtcgzqq/APA
Oliyon Research. (2026). சானிடின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zdtcgzqq/MLA
"சானிடின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zdtcgzqq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment