கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். திருநெல்வேலி மாவட்டத்தில் வைப்பாற்றின் இடப்பக்கத்துள்ள ஆற்றங்கரை சமசுதானத் தலைநகரான பொய்கையூரில் பிறந்தவர். இவர் இச்சமசுதானத் தலைவர்களாக விளங்கியவர்களுள் ஒருவரான சொக்கலிங்கப் பெத்தண்ண பூபதி என்பவரால் வளர்க்கப் பெற்று அவர்தம் அவைப் புலவராகத் திகழ்ந்தார். கடிகை என்பது இப்புலவர் பிறந்த மரபாதலின் இவர் கடிகை அங்குமுத்துப் புலவர் என்று வழங்கப் பெற்றார், இவர் தம்மை வளர்த்த பெத்தண்ண பூபதியின் மீது பொய்கைப் பள்ளு என்னும் நூலை இயற்றியுள்ளார், இந்த நாலுக்கு இப்புலவரின் மைந்தரான சுப்பிரமணியப் புலவர் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். பொய்கைப் பள்ளு என்னும் இவர்தம் நூல் 82 செய்யுட்களைக் கொண்டுள்ளது.