நொறுக்கலும், தூளாக்கலும்
noṟukkalum, tūḷākkalum
கல்,நிலக்கரி, கசடு போன்ற பொருள்களைச் சாலைக் கட்டுமானம், தளக் காரைத்தொகுப்பு, உலை எரிப்பு போன்ற பணிகளின் பயன்பாட்டிற்கு ஏற்பத் தகுந்த அளவுகளாகக் குறைக்கும் முறையே நொறுக்குதலும், தூளாக்குதலும் (crushing and pulverizing) ஆகும்.
கல்,நிலக்கரி, கசடு போன்ற பொருள்களைச் சாலைக் கட்டுமானம், தளக் காரைத்தொகுப்பு, உலை எரிப்பு போன்ற பணிகளின் பயன்பாட்டிற்கு ஏற்பத் தகுந்த அளவுகளாகக் குறைக்கும் முறையே நொறுக்குதலும், தூளாக்குதலும் (crushing and pulverizing) ஆகும். இவை தாதுத் தூய்மிப்பின் போது, நடை பெறும் செயல் முறைகள் ஆகும். சிமெண்ட் சாம்பற்கட்டியை (clinker) மிகு நுண்ணிய போர்ட்லாண்ட் சிமெண்ட்டாகக் குறைக்கவும், தூளாக்கப்பட்ட நிலையில் எரிதலுக்கு ஏற்ற அளவிற்கு நிலக் கரியைக் குறைக்கவும், பருத்த பொருள்களை (bulk materials) உண்டாக்கவும், நொறுக்கலும், தூளாக்கலும் பயன் படும்.
சுரங்கங்களிலிருந்து பெறப் படும் மிகப் பெரிய கற்களை நொறுக்கப் பயன் படும் கருவிகளைக் கொண்டு, மிகு செம்மையாகத் தூளாக்க இயலாது. எனவே, இவ்வகைப் பயன்பாடுகளுக்கு முதன்மை நொறுக்குதல், துணைமை நொறுக்குதல் என அடுத்தடுத்து மூன்று நிலைகளும் உள்ளீட்டுப் பொருளின் அளவு, பொருளின் தொகு பயன், குறை விகிதம் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.
பொருள்களின் அளவு குறைப்பு, பின் வரும் ஐந்து முறைகளில் மேற்கொள்ளப் படுகிறது. அவை மிகு விசையை மெதுவாகச் செயல் படுத்தி நொறுக்குதல், சுத்தியைப் பயன் படுத்தி அடித்தல், உராய்வு அல்லது தேய்த்தலுக்கு உட்படுத்துதல், உள் அழுத்தத்தைத் திடீரென வெளியேற்றுதல், புற ஒலி விசைகளுக்கு (ultrasonic forces) உட்படுத்துதல் என்பன. இறுதியாக குறிப்பிடப் பட்டுள்ள இரு முறைகளும் பொதுவாகப் பயன்படா. அட்டவணை நொறுக்குதல் குறிப்பீடுகள்
முதன்மை நொறுக்கி. 1 மணி நேரத்திற்கு, 1000 டன் திறன் கொண்ட பிலேக் தாடை நொறுக்கிகள் 23 செ.மீ. விட்டமுள்ள விளை பொருளை உண்டாக்கும். பிலேக் தாடை நொறுக்கி பெரிய அளவுகளிலும்; டாட்ஜ் தாடை நொறுக்கி சிறிய அளவுகளிலும் தயாரிக்கப் படுகின்றன.
படலை வகைச் சுழல் நொறுக்கியில் (Gyratory Crusher) கீழ்த் தாங்கி உறையால், மைய விலகு இயக்கத்தைப் பெறும் ஒரு சுழலாக் கூம்பு மெல்லிய வலைப்பை (mantle) இருக்கும். (படம் .2) ஒரு 107/304 செ.மீ. நொறுக்கி மணிக்கு 850 டன் திறன் கொண்டது. இது 69 செ.மீ. மணிக்கு 850 டன் திறன் கொண்டது. இது 69 செ.மீ. விட்டமுள்ள பாறைகளை 20 செ.மீ. விட்டமாகக் குறைக்கும்.
சைமன் கூம்பு நொறுக்கியிலும், சுழல் இயக்கம் காணப் படும். ஆனால், இந்நொறுக்கியில் வாய் அகன்ற மெல்லிய வலைப் பை அல்லது கூம்பு காணப் படும். (படம். 3) மேற் பகுதியிலுள்ள கிண்ணம் (bowl) சுருள் வில்லால் நிலையாக வைக்கப் பட்டிருக்கும். இது முதன்மை அல்லது துணைமை நொறுக்கியாகப் பயன் படுகிறது. சீரான வழ வழப்பான தாடைகளுக்கு இடையே அரைக்க வேண்டிய கட்டியை நிலையாகப் பிடிக்கும் மிகப் பெரிய கோணம் நொறுக்கப் பயன் படும் பொருள்களைப் பொறுத்து 8–48 இருக்கும்.
துணைமை நொறுக்கி. ஒற்றை உருள் நொறுக்கி, இரட்டை உருள் நொறுக்கி இவற்றினுள் இயங்கும் உருளிகள் பற்களைக் கொண்டிருக்கும். இது நிலக் கரியை நொறுக்க மிகுதியாகப் பயன் படுகிறது (படம் .4). ஒற்றை உருள் நொறுக்கி 91 செ.மீ. நீளத்தையும், 137 செ.மீ. நீளத்தையும் மணிக்கு 275 டன் வெளியீட்டு திறனையும் கொண்டது. இது நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து வெளியேற்றப் படும். நிலக்கரியை 32 மி.மீ. வளைய அளவிற்கு நொறுக்கும். தாது, பாறை, நிலக்கரி போன்றவற்றை நொறுக்கச் சுத்தி ஆலை (hammer mill) என்னும் துணைமை நொறுக்கி பயன் படுகிறது படம் 5). எந்திரச் சுத்தி ஆலை (reversible hammer mill) இரு திசைகளிலும் செயல் படக் கூடியது.
107 செ.மீ. விட்டமும் 208 செ.மீ நீளமும் கொண்ட சுத்தி ஆலை ஒன்று, மணிக்கு 300 டன் பொருளை 6 மி.மீ. விட்டப் பொருள்களாகக் குறைத்து விடும். வளைய நிலக்கரி நொறுக்கி, சுத்தி ஆலை நொறுக்கியின் ஒரு வகை உருமாற்றமே ஆகும். ஏனெனில், சுத்தி ஆலையிலுள்ள சுத்திகளுக்குப் பதிலாக, இதில் வளையங்கள் பயன் படுகின்றன.
தூளாக்கி. திறந்த - சுற்றுத் தூளாக்கியிலிருந்து வெளியேறும் பொருள் வெளி வகுப்பிற்கு (external classifier) அனுப்பப் படுகிறது. இங்கு நுண் தூளானவை போக எஞ்சியுள்ள பெரிய அளவு பொருள்கள் மீண்டும் தூளாகும் வகையில் தூளாக்கிக்கு உட்செலுத்தப் படும். குண்டு மற்றும் குழாய் ஆலை; தண்டு ஆலை, சுத்தி ஆலை, உராய்வு தேய்மான ஆலை ஆகியவை உராய்வு, தேய்மானம் ஆகிய செயல்பாடுகளின் அடிப்படையில் இயக்குகின்றன. காண்க: பந்து மற்றும் தடத் தூளாக்கி.
உருட்டும் அல்லது புரளுகைத் தூளாக்கி. இதில் இரு வகை உண்டு. இரு வகையிலும் உருள் அல்லது வரிசையான (cascade) எஃகு குண்டுகள் கூழாங்கற்கள் அல்லது தண்டுகள் ஆகியவற்றைக் கொண்ட கிடை மட்ட உருளிகள் காணப் படும். உருளையின் நீளம் 2–3 அங்குல விட்டத்திற்குக் குறைவாக இருப்பின், அது குழாய் அலை ஆகும். 3 அங்குலத்தைவிட விட்டம் மிகுதியாக இருப்பின், அது குழாய் ஆலை (tube mill) ஆகும்.
தாது, பாறை ஆகியன தேய்ப்புப் பொருளாக உள்ளமையால், இத்தூளாக்கிகள் இயங்கும் போது, ஊடே குண்டுகளைச் சேர்ப்பது எளிது. 5–8 செ.மீ. விட்டமுள்ள பெரிய எஃகு குண்டுகளை உட்செலுத்தி, நொறுக்க வேண்டுமாயின், குண்டு ஆலைகளைத் திறந்த நிலையில் உள்ள ஒரு குழாய் ஆலையுடன் தொடராக இணைத்துப் பயன் படுத்தலாம். காண்க: கூழாங்கல் ஆலை.
சிமெண்ட் ஆலைகளிலும், சுரங்கப் பணிகளிலும் பயன் படும் குண்டு ஆலை, குழாய் ஆலை, தண்டு ஆலை, கூழாங்கல் ஆலை போன்றவை இயங்கும் போது, தேவையான அளவு நீர் சேர்க்கப் படுகிறது. நீர் சேர்த்தமையால், விளை பொருள் சேறாகக் கிடைக்கும்.
இவ்வகைத் தூளாக்கிகளில், சாய்வு அல்லது கூம்பு வகை வகுப்பிகள் பயன் படுத்தப் படும்.
நுண் தூளாக்கலை உண்டாக்கும் குழாய் ஆலைகள், திறந்த சுற்றில் பகுதி பிரிக்கப் பட்ட ஆலைகளாகவும் (compartment mill), மூடிய சுற்று ஆலைகளாகவும் பயன் படும். (படம் 7–(அ), (ஆ), (இ)) முப்பகுதியாகப் பிரிக்கப் பட்ட குழாய் ஆலை ஒன்றின் முதல் பகுதியில் உட்செலுத்தப் படும். பெரிய குண்டுகள், இரண்டாம் பகுதியில் இடை நிலைக் குண்டுகளாகவும், மூன்றாம் பகுதியில் சிறிய குண்டுகளாகவும் படிப் படியாக அளவில் குறைக்கப் படும். (படம் 7).
ஓடையிணைப்பித் தூளாக்கி (cascade Pulverizers) என்பது உருட்டுதல் தூளாக்கியின் பிறிதொரு வடிவமாகும். இது பெரிய கட்டிகளைத் தூளாக்கப் பயன் படும். வெளிக் காற்று வகுப்பி உள்ள மூடிய சுற்றில் காற்றுத் தூய்மையாக்கப் பட்ட கூம்புக் குண்டு ஆலை (airswept conical ball) பயன் படுகிறது. (படம் 8) ஆலையின் கூம்பு வடிவ அமைப்பு, குண்டுகளைப் பிரிப்பதுடன், உட்செலுத்தும் முறையில் பெரிய குண்டுகளையும், சிறு வெளியேற்று முனையில் சிறு குண்டுகளையும் பிரிக்கும். பாறை, தாது ஆகியவற்றின் திறந்த சுற்றில் இக்கூம்புக் குண்டு ஆலைகள் மிகுதியாகப் பயன் படுகின்றன.
உருளித் தூளாக்கி. காற்றில் தூய்மையாக்கப் படும் ஊசல் உருளித் தூளாக்கியில், ஒரு சுழல் அச்சின் மையத்தில் உருளைகள் பொருத்தப் பட்டிருக்கும். உருளிகளின் மைய விலகு விசை உருளிகளுக்கும் வளையத்திற்குமிடையில் அழுத்தத்தைக் கொடுக்கும். உருளிகளுக்குக் கீழே காற்றைச் செலுத்தி, நன்கு தூளாக்கப் பட்ட நுண் பொடிகள் அகற்றப் படுகின்றன. சுழலும் உருளிகளும், மேற்குடைக் கம்பி அமைப்பும் மைய விலகு விசைக்கு உட்படுத்தப் படுவதால், தூளாக்கப் படாத பெரிய அளவு பொருள்கள் மீண்டும் தூளாக்கும் இடத்திற்கே வந்து சேரும். இம்முறையில் மேலும் மிகு நுண் தூளாக்க, மேல் உறைவிடத்தில் (housing) கூடுதல் சுழல் வகுப்பி. ஒன்று இணைத்துச் செயல் படுத்தப் படும்.
குண்டுச் சாய்வு தூளாக்கிகளில் (ball race Pulverizers) சாய்வுகளுக்கு இடையே பெரிய எஃகு குண்டுகள் பயன் படுகின்றன. கீழ்ச் சாய்வு நிலையானதாகவும், இடைப் பட்ட சாய்வு இயங்கு முனைகளுக்கு இடையே சுழலுவதாகவும் இருக்கும். மேலும், மேல் சாய்வு சுருள் வில்களால் கட்டுப் படுத்தப் படும். மைய விலகு விசையால், மையத்திலிருந்து 31 செ.மீ. மற்றும் 32.5 செ.மீ விட்டமுள்ள குண்டுகள் வழியே பொருள் வெளியேறும். சிமெண்ட் பாறையைத் தூளாக்க மூடிய சுற்றில் ஒரு குண்டுச் சாய்வு தொகுதியுடன் ஒரு காற்றுப் பிரிப்பியை இணைத்துப் பயன் படுத்துவர்.
சல்லடை. தூளாக்க வேண்டிய பொருள்களை சல்லடை மூலம் சலிப்பதால், தேவையான அளவுக்கு அவற்றைப் பிரித்தெடுக்கலாம். 5 செ.மீ. அல்லது மேற்பட்ட விட்டமுள்ள பொருள்களுக்கு ஒரு திறந்த முனைத் துளைகளிடப்பட்ட உருளையான சுழலும் சல்லடை பயன் படுகிறது. சல்லடையின் ஒரு முனை சிறிதளவு உயர்த்தி வைக்கப் பட்டிருக்கும்.
சிறிய அளவு பொருள்கள் சல்லடையின் துளைகள் வழியே செல்வதுடன், பெரிய அளவு பொருள்கள் சல்லடையின் (sieve) தாழ் முனையின் வழியே வெளியேறும். 200 வலைக் கண் (mesh) உடைய சல்லடை வழியே பொருள்களைச் செலுத்தினால், சுமார் 5 செ.மீட்டருக்கும் குறைந்த விட்ட அளவிலிருந்து 200 வலைக் கண் சல்லடை வழியே கடந்து செல்லத் தகும் 77 மைக்ரோமீட்டர் நுண் துளைகள் வரை உள்ள மிகு செம்மையாகத் தூளாக்கப் பட்ட விளை பொருள் கிடைக்கும்.
அதிர்வுறும் சல்லடைகளில், அதிர்வு இயக்கத்தைக் கொடுக்க, மின்னோட்ட அதிர்வி பயன் படுகிறது. (படம் 9). அதிர்வுறும் சல்லடை அமைப்பில், எஃகாலான தலை மிசையிலிருந்து தண்டுகள், சுருள் வில்கள் (spring) இவற்றுடன் இணைத்துத் தொங்க விடப் பட்டிருக்கும். பிறழ் மையத்தில் சுழன்று அதிரும். சில சல்லடைகளில் ஈரடுக்குச் சல்லடைப் பரப்புகள் காணப் படும். இவ்வகைச் சல்லடைகளில் ஒவ்வொரு அடுக்கும், வெவ்வேறு துளை அளவுகளைக் கொண்டிருக்கும். இதனால், விளை பொருள் மூன்றும் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும்.
நேரடி நிலக்கரித் தூளாக்கி. இக்காலப் பெரிய நிலக்கரி எரி உலைகளுக்குத் தேவையான நிலக்கரி தூளாக்கியிலிருந்து, நேரடியாக ஊட்டப் படுகிறது. தூளாக்கியிலுள்ள நிலக்கரியை உலர்த்தவும், முன் சூடாக்கவும் 150–315°C வெப்ப நிலையிலுள்ள காற்று செலுத்தப் படுகிறது.
இடைப் பட்ட வேகத்தில் இயங்கும் கிண்ணத் தூளாக்கியில் சுழலும் சாணைப் பிடிப்புக் கிண்ண வளையத்திற்கும், சுழல் அச்சு மையத்தில் பொருத்தப் பட்ட நிலையான உருளைகளுக்கும் இடையே உள்ள நிலக்கரியைச் சுருள் வில்கள் நொறுக்கும். மேலும், நிலையான கூம்பு வகுப்பி தூளாக்கும் பகுதிக்குப் பெரிய அளவு பொருள்களை மீண்டும் செலுத்தும்.
இடைப்பட்ட வேகத்தில் இயங்கும் குண்டு, தட வகைத் தூளாக்கியில் ஒரு வெளியேற்றிக்குப் பதிலாக, காற்றூதி பயன் படுகிறது. குறைந்த வேகத்தில் இயங்கும் குண்டு ஆலை வகைத் தூளாக்கியில் வகுப்பிகள் காணப் படும். தூளாக்கப் படாத பெரிய அளவு பொருள்கள் மீண்டும் தூளாகத் தகுந்தவாறு, இரு புறங்களிலும் வெளியேற்றப் படும். மிகு வேகத்தில் இயங்கும் தூளாக்கியில் பொதுவாக, பல நிலைகள் காணப் படும். அதாவது, இரு நிலைத் தூளாக்கியில் முதன்மைத் தூளாக்கி, துணைமைத் தூளாக்கி என இரு தூளாக்கிகள் பயன் படும். தூளாக்கியினுள்ளே கட்டமைக்கப் பட்ட விசிறி ஒன்று காற்று, எரி பொருள் இவற்றை வெளியேற்றும். —இரா. இந்து
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 306)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zb3na462/
தமிழ்“நொறுக்கலும், தூளாக்கலும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zb3na462/APA
Oliyon Research. (2026). நொறுக்கலும், தூளாக்கலும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zb3na462/MLA
"நொறுக்கலும், தூளாக்கலும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zb3na462/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment