ஐரோப்பாக் கண்டத்தின் இடையில் உள்ள நாடுகளுள் ஒன்று. இதன் வடக்கில் செக்கோசுலோவாகியாவும் வடகிழக்கில் சோவியத் உருசியாவும் கிழக்கில் உருமேனியாவும் தெற்கில் யுகோசுலோவியாவும் மேற்கில் ஆசுத்திரியாவும் எல்லைகளாய் அமைந்துள்ளன. பரப்பும் மக்கள் தொகையும் அங்கேரி (Hungary) நாட்டின் மொத்தப்பரப்பு 93,032 சதுரக் கிலோ மீட்டர்களாகும். 1981–ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி இந்நாட்டின் மக்கள் தொகை 1,07,10,000. இதன் தலைநகர் புதாபெகட்டு; ஆட்சிமொழி மாக்யார் எனப்படும் அங்கேரிய மொழி, அங்கேரி நாட்டு நாணயத்திற்குப் பாரின்ட்டு (Forint) என்பது பெயர். அதனை 100 பில்லர்களாகப் பிரித்துள்ளனர். நாடும் தட்பவெப்பமும் அங்கேரியைச் சுற்றிலும் நாடுகள் சூழ்ந்துள்ளன. அதனால் இதனை நாடுகளால் சூழப்பட்ட நாடெனலாம். இதன் மூன்றிலிரண்டு பங்கு நிலம், கடல் மட்டத்தைவிட 198 மீட்டர் வரை உயரமுள்ளது. உயரமுள்ளது. கீழை அங்கேரி, பெரும்பாலும் தட்டையானது. இதன் வடக்கில் உள்ள மலைகள் உயரமானவை. இங்குத்தான் அங்கேரியின் உயரம் மிகுந்த மலையுச்சியான கேகசு (Kekes) உள்ளது. மேலை அங்கேரியில் வளைந்து செல்லும் குன்றுகளையும் தாழ்ந்த மலைத் தொடர்களையும் காணலாம். இந்நாட்டின் மிக நீண்ட ஆறு திசா (Tisza) என்பதாகும். இந்த ஆறு ஏறத்தாழ 600 கிலோமீட்டர் வடக்கு தெற்காகக் கீழை அங்கேரி முழுவதிலும் பாய்ந்தோடுகிறது. திசா ஆறு தான்யூபு ஆற்றின் சிறப்பான கிளையாறாகும். தான்யூபு ஆறு, ஐரோப்பாவின் ஏழு நாடுகளில்–அங்கேரியையும் உள்ளடக்கிப் பாய்கிறது. தான்யூபு அங்கேரியின் வட எல்லையாகிப் பின்னர் வடக்கு – தெற்காக இந்நாட்டின் நடுவில் பாய்ந்து ஓடுகிறது. பால்ட்டன் ஏரி மேலை அங்கேரியில் அமைந்துள்ளது. இதுவே நடு ஐரோப்பாவின் பெரிய ஏரியாகும். இயற்கைப் பிரிவுகள் அங்கேரியை நான்கு இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை 1. பெரும் சமவெளி, 2. தான்யூபு ஆற்றுக்கப்பாலுள்ள பகுதி, 3. சிறு சமவெளி, 4. வடமேட்டு நிலங்கள். பெரும் சமவெளி என்பது தான்யூபு ஆற்றுக்குக் கிழக்கில் உள்ள பகுதிகள் அனைத்தையும் சுட்டும். வடபால் அமைந்துள்ள மலைகளை இது குறிக்காது. இப்பகுதி, இந்நாட்டின் அரைப் பகுதியை உள்ளடக்கி உள்ளது. சிறு குன்றுகள், மணல் மேடுகள், ஆற்றுப் பள்ளத்தாக்குகள் போன்ற அறுத்த பகுதிகளை விட ஏனைய பகுதிகள் தட்டையானவை. இப்பகுதி வேளாண்மைக்கு ஏற்றதாகும். இதன் தென்கிழக்குக் கோடியிலுள்ள பகுதியே அங்தேரியில் மண்வளம் மிக்க பகுதியாகும். தான்யூபு ஆற்றுக்கப்பாலுள்ள பகுதி என்பது தான்யூபு ஆற்றின் மேற்கில் உள்ளதாகும். வடமேற்குக் கோடி இதனுள் அடங்காது. இப்பகுதி பெரும்பாலும் குன்றுகளையும் மலைகளையும் கொண்டது. பால்ட்டன் ஏரியின் வடக்கில் உள்ள நடு மேட்டு நிலங்களும் தாழ்ந்து வளைந்து நிற்கும் மலைகளும் சங்கிலித் தொடர்போல் அமைந்துள்ள இதன் வளைவில் புதாபெசுட்டு நகரம் அமைந்துள்ளது. ஆசுத்திரிய ஆல்ப்சுமலை அடிவாரம் இப்பகுதியின் மேற்கில் உள்ளது. இப்பகுதி பெரும் பண்ணைகளைக் கொண்டது. சிறுசமவெளி அங்கேரியின் வடமேற்குக் கோடியிலுள்ளது. இது மிகச் சிறிய பகுதியாகும். மேற்கு எல்லையை அடுத்துள்ள ஆசுத்திரிய ஆல்ப்சு அடிவாரத்தைவிட இப்பகுதிகள் தட்டையானவை. இதன் பெரும் பகுதி பண்ணைகளுக்கேற்றது. வடமேட்டு நிலங்கள் என்பது தான்யூபு ஆற்றுக்கு வடகிழக்கிலும் பெரும் சமவெளிக்கு வடக்கிலும் அமைந்துள்ளது. மலைத்தொடர்களாக உள்ள இப்பகுதி, நடு ஐரோப்பாவின் பெரும் மலைத்தொடரான கார்ப்பேத்திய மலையின் பாகமாகும். அடர்ந்த காடுகள், குறுகிய ஓடைகள், கண்கவர் மலைத்தொடர்கள் போன்றவற்றைக் கொண்டு விளங்கும் இப்பகுதி இயற்கை அழகுக்கு எடுத்துக்காட்டான இடம். இங்குத் தொழிற்சாலைகளும் சுரங்கங்களும் சிறப்பாக உள்ளன. தட்ப வெப்பநிலை வகைவகையான இயற்கைக் கூறுகள் இல்லாமையால் அங்கேரியின் தட்பவெப்பத்தில் ஏற்றத் தாழ்வுகள் குறைவு. இந்நாட்டில் குளிர்ந்த மழைக் காலமும் வெப்பமான கோடைக் காலமும் நிலவுகின்றன, இந்நாட்டின் ஆண்டு மழையளவு 60 செ.மீ. மே, சூன், சூலை மாதங்கள் இங்கு மழைக்காலம். பொருளாதாரம் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரைக் காட்டிலும் மிகப் பெரும் அளவில் அங்கேரியத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து பெரும் பொருளீட்டி நாட்டின் வருமானத்தை உயர்த்தியுள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு முன்னர், அங்கேரி பெரும்பாலும் வேளாண்மையையே சிறப்பான தொழிலாகக் கொண்டிருந்தது. பொதுவுடைமைக்கட்சி அரசாங்கம் ஏற்பட்ட பின்னர், அக்கட்சியே இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தி வருகிறது. திட்டமிட்ட முறையில் தொழிற்சாலைகள் பெருகி வளர்ந்துள்ளமையால் அங்கேரி இன்று தொழில் மயமான நாடாகியுள்ளது. 1968-இல் உருவாக்கப் பெற்றுச் செயற்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரச் செயலமைப்புத் திட்டத்தில் தொழில் துறைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. பெரும்பாலும் அனைத்து அங்கேரியத் தொழிலாளர்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழிற்சாலைகளிலோ பண்ணைகளிலோ ஈடுபட்டுப் பணியாற்றுகிறார்கள். கூட்டுறவுத் துறைகளிலும் மக்கள் ஈடுபாடு கொண்டுள்ள- னர். இந்நாட்டில் சொந்தத் தொழில் செய்வோரும், பண்ணை வைத்திருப்போரும் சிறுபான்மையினரே. இயற்கை வளங்கள் அங்கேரியின் வளமான மண்ணும் வாழ்வுக்கேற்ற தட்பவெட்ப நிலையுமே இதன் சிறப்பான மூலதனங்களாம். நாட்டின் பரப்பில் முக்கால் பங்கில் பண்ணைகள் பரவியுள்ளன. அப்பண்ணைகள் மக்களின் அடிப்படைத் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. 15 விழுக்காடு நிலத்தில் காடுகள் உள்ளன. நாட்டு மக்களுக்குத் தேவையான மரப் பொருள்கள் போதுமான அளவிற்குக் கிட்டாமையால், அப்பொருள்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. பாக்சைட்டு உற்பத்தியில் அங்கேரி உலகிலேயே முதன்மையான இடத்தை வகிக்கிறது. இதிலிருந்து தான் அலுமினியம் செய்கிறார்கள். நிலக்கரி, இரும்புத் தாதுக்கள், மாங்கனீசு, இயற்கை எரிவாயு, பெட்ரோல் போன்றவை இங்குக் கிடைக்கும் பிற பொருள்களாம். ஆயினும், இப்பொருள்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை. ஆகவே, அங்கேரி, தேவையான பொருள்களைப் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்கிறது. உரேனியம், மின்சார உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது மெக்செக்கு மலைத் தொடருக்கருகில் உள்ள பெக்சு என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சோவியத் உருசியாவின் துணையுடன் உரேனியச் சுரங்கங்கள் பெருக்கப்பட்டுள்ளன. நாட்டிற்குத் தேவையான அளவு மின்சாரம் கிடைக்கப் பெறாமையால், பிற நாடுகளிலிருந்து அதைப் பெறுகிறார்கள். 1980–இல் அணு ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து, மின்சாரப் பற்றாக்குறையை ஈடுசெய்து வருகின்றனர். செய்தொழில்கள் அங்கேரியின் தொழிற்சாலைகள் அனைத்தும் பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமானவையே. சில கூட்டுறவுக் குழுக்களிடம் உள்ளன. பொதுவுடைமைக் கட்சி ஆட்சிக்கு வந்தபின், எந்திரங்களை உற்பத்தி செய்து, அவற்றைச் செய்தொழில் மூலச் சரக்காக்க முயலுகிறது. நுகர்வோருக்குத் தேவையான பொருள்கள் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாமையால், புதிய பொருளாதாரச் செயலமைப்புத் திட்டத்தின் மூலம் அவற்றைப் பெருக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அங்கேரி முயல்கிறது. அங்கேரியின் சிறப்பான செய்பொருள்கள் பின் வருவன: வேதியியல் பொருள்கள், உணவுப் பொருள்கள், மதுபானப் பொருள்கள், எந்திரப்பொருள்கள், எஃகு, துணிமணிகள், போக்குவரத்துத் துணையாக உதவும் கருவிகள், பாக்சைட்டிலிருந்து அலுமினியம் தயாரித்தல் முதலியவை சோவியத் உருசியாவின் துணையுடன் நடைபெறுகின்றன. புதாபெசுட்டு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் அங்கேரியின் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. அங்கேரி-புதாபெசுட்டுநகரம் வேளாண்மை அங்கேரியின் பண்ணைப் பொருள்கள் மூலம் 60 விழுக்காடு மதிப்புள்ள வருவாயும் கால்நடைகள் மூலம் எஞ்சிய 40 விழுக்காடு வருவாயும் கிடைக்கின்றன. இங்கும் பயிரிடப்படும் சிறப்பான பொருள்கள், உணவுப்பயிர்கள், உருளைக்கிழங்கு, பீட்டுச்சருக்கரை, கோதுமை, திராட்சைச்சாறு முதலியன. உழவர்கள் கோழிக்குஞ்சுகளையும் பன்றிகளையும் ஏனைய கால்நடைகளைவிட மிகுதியாக வளர்க்கிறார்கள். மாட்டிறைச்சிக்கான கால்நடைகளும் பால்மாடுகளும் குதிரைகளும் ஆடுகளும் ஏனைய கால்நடைச் செல்வங்களாகும். நாட்டின் மொத்தப் பண்ணை நிலங்களும் 5 விழுக்காடே தனியாருக்குச் சொந்தமானவை. ஏனையவை கூட்டுறவுப் பண்ணைகளும் அரசுப் பண்ணைகளும் ஆகும். அங்கேரியின் பண்ணை நிலத்தின் 80 விழுக்காடு கூட்டுறவுப் பண்ணைகள் ஆகும். பல குடும்பங்கள் இப்பண்ணைகளில் இணைந்து பணிபுரிகின்றன. பொதுவான பண்ணைக் கொள்கைகளை அரசு முடிவு செய்கிறது. அயல் நாட்டு வாணிகம் அங்கேரியின் பொருளாதாரம் பெருமளவு அயல் நாட்டு வாணிகத்தைச் சார்ந்துள்ளது. எந்திரக் கருவிகள், பேருந்துகள், நிலக்கரி, பருத்தி, மின்சாரம், செயற்கை உரங்கள், இரும்புத்தாதுக்கள், கால்நடைத் தீவனங்கள், பெட்- ரோலியப் பொருள்கள் போன்றவை சிறப்பான இறக்குமதிப் பொருள்களாம். அலுமினியம், கால்நடைகள், எந்திர வகைகள், மருந்துகள், பதப்படுத்தப்பெற்ற உணவுப்பொருள்கள், மதுபானங்கள், எஃகு, போக்குவரத்துக்குத் துணையான கருவிகள், குறிப்பாகப் பேருந்துகள் போன்றவை குறிப்பிடத்தகுந்த ஏற்றுமதிப் பொருள்களாகும். பொதுவுடைமை நாடுகளின் பொருளாதாரக் கூட்டிணைப்பில் அங்கேரியும் சேர்ந்துள்ளது. அங்கேரி மூன்றில் ஒருபங்கு வாணிகத்தைச் சோவியத் உருசியாவுடனும், மற்றொரு பங்கினைப் பிற பொதுவுடைமை நாடுகளுடனும், எஞ்சியதை ஆசுதிரியா, இங்கிலாந்து, மேற்குச்செருமனி போன்ற நாடுகளுடனும் செய்கிறது. போக்குவரத்து இந்நாட்டின் இருப்புப்பாதைப் போக்குவரத்து அரசின் உடைமையாக உள்ளது. இவ்விருப்புப்பாதை 9,000 கிலோ மீட்டர் நீளமுள்ளது சாலைகளின் நீளம் ஏறத்தாழ 30,000 கிலோ மீட்டர்களாம். அங்கேரியின் ஆறுகளும் கால்வாய்களும் படகுப் போக்குவரத்திற்குப் பெரிதும் பயன்படுகின்றன. இங்குக் கப்பல் போக்குவரத்து நிறுவனமொன்றும், வானவூர்தி வழிகளும் செயற்படுகின்றன. வரலாறு கிழக்கும் மேற்கும் ஒன்றையொன்று தழுவும் சந்திப்பில் அங்கேரி அமைந்துள்ளதால், படையெடுப்பாளர்கள் பலமுறை அதனைத் தாக்கிய வரலாற்றைக் காணலாம். ஏசுகிறித்து பிறப்பதற்கு முன்னர், அங்கேரி உரோமானியப் பேரரசின் பகுதியாய் இருந்தது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் கிழக்கிலிருந்து வந்த ஊணர்கள் அதைக் கைப்பற்றினர் என்றும், ஊணர்களின் அரசரான அட்டிலாவை அங்கேரியில் புதைத்தனர் என்றும், செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. பின்னர் இசுலாவுகளும், தியூடானியரும், அவார்களும் இந்நாட்டைக் கைப்பற்றினர். ஆனால், அங்கேரியர்கள் தம் வரலாற்றை கி.பி. 896–இலிருந்து தொடங்கியபோது, தான்யூப் ஆற்று வடிநிலத்தில் மாக்கியர்கள் குடியேறியிருந்தனர். மாக்கியர்கள் ஆசியாவிலிருந்து அங்கேரி வந்த முரட்டு இனமக்கள். அவர்கள் கொடூரமாகப் போரிடும் இயல்புடையவர்கள். காலப்போக்கில் அங்கேரியைக் கட்டுப்படுத்தினர். செருமானிய இனத்தாரிடமிருந்தும், பைசான்டியப் பேரரசரிடமிருந்தும் காத்துக் கொள்ளும் பொருட்டுத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனர். 10–ஆம் நூற்றாண்டில் மாக்கியர்கள் உரோமானியக் கத்தோலிக்கச் சமயத்திற்கு மாற்றப்பட்டனர். மதம் மாறிய மாக்கியர்கள் உரோமாபுரியுடன் சேர்ந்துகொண்டு பைசான்டியத்திற்கு எதிரிகளாயினர், கி.பி. 1001–ஆம் ஆண்டில் போப்பாண்டவர், மாக்கியரின் தலைவரான செயின்ட்டு இசுடீபன் என்பாருக்கு முடிகுட்டி, அவரை அங்கேரியின் முதல் கிறித்தவ அரசரென அறிவித்தார். இசுடீபன் மன்னர் அங்கேரியைப் பல பகுதிகளாகப் பிரித்து, அவற்றை ஆள ஒவ்வொன்றிற்கும் ஒரு கோமகனை அமர்த்தினார். பல சீர்திருத்தங்களை மேற்கொண்ட அவ்வரசர், மடாலயங்களை நிறுவி, அங்கேரியை மேலை ஐரோப்பிய நாடுகளுடன் நெருங்கிய உறவுடையதாகச் செய்தார். அன்றிருந்து இன்றுவரை, செயின்ட்டு இசுடீபனின் மணிமுடி அங்கேரியின் மதிப்பு மிக்க சின்னமாக இருந்து வருகிறது. 13–ஆம் நூற்றாண்டில் அரசர் பொன் ஆணை எனப்படும் பேரறிக்கை யொன்றை வெளியிட்டு, உயர்குடி மக்களுக்குப் புதிய உரிமைகளையும் மேலான அதிகாரங்களையும் வழங்கினார். ஆனால், அதே நூற்றாண்டில் தார்த்தார் இன மங்கோலியர்கள் கிழக்கிலிருந்து புற்றீசல்கள் போல் படையெடுத்து வந்து, நாட்டை அழித்து எரித்தனர். படையெடுத்து வந்தவர்களை எதிர்த்துப் போரிட்ட உயர்குடி மக்கள் மேலும் அதிகாரங்களைப் பெற்றனர். ஆனால், இவ்வுயர்குடிமக்கள் குடியானவர்களைப் பழித்துரைத்தனர். அதன் விளைவாக 1437 இல் குடியானவர்கள் கொதிந்தெழுந்தனர். ஆனால், அக்கலகம் எளிதில் அடக்கப்பட்டது. இதனிடையில், துருக்கியர் அங்கேரியின் எல்லைப் புறங்களைத் தாக்கி வந்தனர், 1443–க்கும் 1456–க்குமிடையில் உன்யாடி சானோசு, (Hunyadi Janos) என்பவர், செர்பியர்கள், உருமேனியர்கள் போன்றவர்களின் உதவியுடன் துருக்கியர்களைத் தோற்கடித்தனர். அவர் மகன் மத்தியாசு கார்னிவசு. 1458 முதல் 1480 வரை ஆட்சி புரிந்தார். நடு ஐரோப்பாவில் அங்கேரியை வலிமைமிகுந்த நாடாக்கிய பெருமை அவரையே சாரும். ஆனால், மத்தியாசு காலமானபோது, அவருக்கு அடுத்து யார் மன்னராக வேண்டுமென்பது குறித்து, உயர்குடிமக்கள் தமக்குள் சண்டையிட்டுக் தொள்ளவே, அங்கேரியில் மீண்டும் குழப்பம் மூண்டது. 1524–இல் மூண்ட உழவர் புரட்சி, கொடுமையாக அடக்கப்பட்டது. வலியிழந்த அங்கேரியின்மீது துருக்கியர் படையெடுக்கவே, நாட்டின் நிலை மேலும் மோசம் அடைந்தது. 1526–இல் துருக்கியர், மொகாக்சு (Mohacs) போரில் வெற்றி கண்டனர். இவ்வெற்றியின் விளைவாக, அங்கேரி மூன்று பகுதிகளாகப் பிரிந்தது. தான்யூப் ஆற்றுக்குக் கிழக்கிலிருந்து திசா ஆறு வரையிலுள்ள பகுதியைத் துருக்கியர் கைக்கொண்டனர். திரான்சில்வெனியா என்னும் பகுதியையும் அவர்கள் கட்டுப்படுத்தினர். எனினும், அதைத் தனியானதொரு அரசர் ஆண்டார். தான்யூப் ஆற்றுக்கு மேற்கில் இருந்த பகுதியை ஆசுத்திரியாவின் அரசரான முதலாம் பெர்டினான்டு பெற்றார். 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை துருக்கியர், அங்கேரியைத் தம் ஆட்சியின்கீழ் லைத்திருந்தனர். பின்னர், அங்கேரியர்கள் ஆசுத்திரியாவின் உறுதுணையுடன் துருக்கியரைத் தம் நாட்டிலிருந்து விரட்ட முயன்றனர். 1739-ஆம் ஆண்டளவில் ஆசுத்திரியர்கள் அங்கேரி முழுவதையும் தம் ஆட்சியின் கீழ்க் கொணர்ந்தனர். மேற்கூறிய உதவிக்காக அங்கேரியர்கள் கைம்மாறாகப் பெருவிலை கொடுக்க வேண்டியவராயினர். அங்கேரி ஆசுத்திரியாவின் குடியேற்றப் பகுதியாகியது. அம்மக்கள் தொடர்ந்து விடுதலைக்காகப் பாடுபட்டனர். 18, 19–ஆம் நூற்றாண்டுகளில் ஆகத்திரியாவுக்கெதிரான வெறுப்புணர்ச்சி மேலோங்கியது. 1848–49–ஆம் ஆண்டுகள் ஐரோப்பா முழுவதிலும் புரட்சிகள் மூண்ட காலமாகும். இலாசோசு காசூத் என்பாரின் தலைமையில் அங்கேரியிலும் விடுதலைப்போராட்டம் தொடங்கியது. ஆனால் உருசியாவின் துணையுடன் ஆசுத்திரியா சுலகத்தை அடக்கியது. 1867–இல் ஏற்பட்ட உடன்பாட்டின்படி ஆசுத்திரியா–அங்கேரி என்னும் பெயரில் இரட்டை அரசாங்கம் நிலைநாட்டப்பட்டது. அதன்படி அங்கேரிக்கு என்று தனியான நாடாளுமன்றமும், அதன் சொந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் உரிமையும் அந்நாட்டிற்குக் கொடுக்கப்பட்டன. அங்கேரி, ஆசுத்திரியாவுடன் இணைந்தது. ஆனால், ஆசுத்திரியாவின் பேரரசர் முதலாம் பிரான்சிசு சோசப், அங்கேரியையும் இணைத்து ஆட்சி நடத்தியதுடன், அங்கேரியின் அரசராகவும் முடிசூட்டப்பெற்றார். அங்கேரி, முதல் உலகப் போரின்போது செருமனி, ஆசுத்திரியா நாடுகளின் பக்கம் சேர்ந்தது. போருக்குப் பின்னர் ஏற்பட்ட புரட்சியின் பயனாய் அங்கேரி ஒரு குடியரசாயிற்று. பின்னர்ப் பொதுவுடைமைக் கட்சியினரும் சமநிலைச் சமுதாயக்காரரும் பேலாகுன் (Bela Kun) என்பாரின் தலைமையில், 1919–இல் ஆட்சியைக் கைப்பற்றிச் சிறிது காலம் ஆண்டனர். கப்பற்படைத் தலைவர் மிக்லோசு ஓர்த்தி என்பாரின் தலைமையில் வந்த படைகள், அவர்களது ஆட்சியைத் தூக்கியெறிந்தது. ஓர்த்தி அங்கேரியை அரசரற்ற முடியாட்சி நாடாக்கினார். அவர் அந்நாட்டின் அரசப் பேராளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1920–இல் செய்து கொள்ளப்பட்ட திரியானன் உடன்படிக்கையின்படி, பழைய அங்கேரியின் மூன்றிலிரண்டு பங்கு நிலமும் அதன் பெரும்பாலான கனிச் செல்வங்களும் மலைகளும் காடுகளும் பறிபோயின. அங்கேரி அவற்றைத் திரும்பப் பெறச் சூளுரைத்தது. இரண்டாம் உலகப் போர், அவ்வாய்ப்பைக் கொடுத்தது. தம் பழைய நிலப்பகுதிகளில் சிலவற்றை அவர்கள் மீண்டும் வென்றார்கள். ஆனால், அங்கேரியின் அரைகுறை ஆதரவைக் கண்ட செருமானியர் அந்நாட்டை முழுவதும் கைப்பற்றிக் கொண்டனர். 1944–க்கும் 1945–க்கும் இடையில் உருசியப் படைகள், செருமானியப் படைகளை அங்கேரியிலிருந்து விரட்டியடித்தன. தனக்குச் சொந்தமாயிருந்த பழைய பகுதிகளை அங்கேரி மீண்டும் பெற விரும்பியது. 1946–ஆம் ஆண்டில் அங்கேரி குடியரசாயிற்று. ஆனால், சில ஆண்டுகளுக்குள் பொதுவுடைமையாளர் அங்கேரியைக் கைப்பற்றிக் கொண்டார்கள். 1949–இல், சோவியத் உருசியாவின் அரசியல் விதியமைப்பினைப் போன்றதொரு திட்டத்தை அங்கேரி பெற்றது. மாத்யாசு இராகோசி என்பார், தலைமை அமைச்சராகிக் கொடூரமாய் ஆட்சி நடத்தினார். அவரைத் தொடர்ந்து, தலைமை அமைச்சரான இம்ரே நாகி என்பார் ஆட்சி செய்தார். அவருடைய ஆட்சி கொடுமைகள் குறைந்ததாக இருந்தபோதிலும், காலதாமதமாக வந்த அவருடைய முயற்சியைக் கண்டு அங்கேரியர் சினங்கொண்டனர். 1956–ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23–ஆம் நாள் அங்கேரியில் புரட்சி மூண்டது. மாணவர்களையும் தொழிலாளர்களையும் கொண்ட விடுதலை வீரர்கள், பொதுவுடைமைக் கட்சிக் கெதிராகப் புதாபெசுட்டு நகரச் சாலைகளில் கலகம் செய்தார்கள். கலசுக்காரர்களின் கையோங்கியபோது, அவர்களை உருசிய தாங்கிப் (Tanks) படைகள் அங்கேரியில் தாக்கி அடக்கின; புரட்சி நசுக்கப்பட்டது. ஏறத்தாழ 20,000 பேர் கொல்லப்பட்டனர்; இரண்டு இலட்சம் பேர் மேற்கு நாடுகளுக்குத் தப்பி ஓடினர். புதிய பொதுவுடைமைக் கட்சி அரசு ஒன்று நிலைநாட்டப்பட்டது. சானோசு கேதார் என்பார் பொதுவுடைமைக் கட்சியின் புதிய தலைவரானார். அவருடைய அரசு தாராள மனப்பான்மைக் கொள்கையை மேற்கொண்டது. செயின்ட்டு இசுடீபனின் மணிமுடி, இரண்டாம் உலகப்போர் முடியும் நிலையில் கைப்பற்றப்பட்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் வைக்கப்பட்டிருந்தது. அது 1978–ஆம் ஆண்டில் அங்கேரிக்குத் திரும்பக் கொடுக்கப்பட்டது. சானோசு கேதார் அங்கேரியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விளங்கிச் சோவியத் உருசியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார்.