உதயணன்
utayaṇaṉ
கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதைக் காப்பியத்தில் அமைந்துள்ள கதை மாந்தருள் முதன்மையானவன்; வத்தவ நாட்டுச் சதானிகனுக்கும் மிருகாபதிக்கும் மகனாகப் பிறந்தவன்.
கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதைக் காப்பியத்தில் அமைந்துள்ள கதை மாந்தருள் முதன்மையானவன்; வத்தவ நாட்டுச் சதானிகனுக்கும் மிருகாபதிக்கும் மகனாகப் பிறந்தவன். குருகுலத்தைச் சேர்ந்த இவன் சூரியன் உதிக்கும் காலத்தில் பிறந்தமையால் இப்பெயர் பெற்றான். கருவுற்றிருந்த இவன் தாய் இரவில் உறங்கும்பொழுது அவளைச் சரபப்பறவை ஒன்று தசைத்தொகுதி என்று நினைத்துத் தூக்கி ஒரு காட்டிற்குச் சென்றது. அக்காட்டில் மிருகாபதி விழித்துக்கொண்டாள். அங்குத் தன் தந்தை தவமேற்கொண்டிருந்த படியால் மகளும் தந்தையும் ஓரிடத்தில் சந்தித்தனர். அங்கிருக்கும்பொழுது பேறுகாலம் நெருங்க ஆண் குழந்தையொன்றை ஈன்றெடுத்தாள். அதற்கு உதயணன் எனப் பெயரிட்டனர்.
உதயணன் இயற்கையிலேயே நல்ல அழகுடையவன். தன் பாட்டனாரால் பிரமசுந்தர முனிவரின் நட்பு உதயணனுக்குக் கிடைத்தது. பிரமசுந்தர முனிவரின் வாயிலாக யானையை அடக்கி ஆளும் மந்திரத்தையும், கோடபதி என்றும் யாழினையும் பெற்றான். இது எப்போதும் தன் தன்மை திரியாதது. இதன்பால் இவனுக்குப் பெருமதிப்பிருந்தது. இவன் யாழிற்குரிய மரங்களின் இயல்புகளையும் நரம்புகளின் இலக்கணங்களையும் நன்கு அறிந்திருந்தான். இளமை முதற்கொண்டே பல கலைகளையும் கற்றுத் தேர்ந்து, அவற்றைப் பயிற்றுவித்தலிலும் சிறந்து விளங்கினான். இதனால் ‘ஆசான் தேசிகன்’ என்றும், ‘விச்சை வீரன்’ என்றும் இவன் சிறப்பிக்கப் பெற்றான். இவன் பெற்றோர்தம் குல மரபு புகழ் மிக்கது. தந்தையின் குலமாகிய குருகுலத்திற்கும் தாயின் குலமாகிய ஏயர் குலத்திற்கும் இவன் உரிமை பெற்றுத் திகழ்ந்தான். இவன் அரசர்களுக்கு அரசனாகவும் தனிச் செங்கோல் செலுத்துபவனாகவும் கருதப்பட்டான்.
கோசம்பி நகரில் இவன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தபொழுது உச்சயினி நாட்டரசன் பிரச்சோதனனுக்கும் இவனுக்கும் போர் நடைபெற்றது, அப்போரில் உதயணன் சாலங்காயன் என்னும் அமைச்சனின் சூழ்ச்சியால் சிறைப்படுத்தப்பட்டான். அச்சமயம் பிரச்சோதனனின் பட்டத்து யானை மதம் பிடித்து அந்நகரை அழித்தது. அதனைக் கண்ட பிரச்சோதனன் செய்வதறியாது திகைத்தான். அப்பொழுது சாலங்காயன் என்பவன் உதயணன் இம்மத யானையை அடக்கி விடுவான் என்று கூறினான். அவ்வண்ணமே அரசன் ஆணையிட உதயணன் தன் மந்திரத் திறமையால் அம்மத யானையை அடக்கினான். அதனைக் கண்ட அரசனும் மற்றையோரும் இவனைப் பாராட்டினர். பிரச்சோதனன் தன் மகள் வாசவதத்தையைத் திருமணம் செய்து கொடுக்கத் திட்டமிட்டான். அதன் காரணமாக மன்னன் குஞ்சரச் சேரியில் மாளிகையொன்று அமைத்தான்.
உதயணனுக்கு வாசவதத்தை முதலிய மனைவியர் நால்வர் இருந்தனர். இடவகன், உருமண்ணுவா, யூகி, வயந்தகன் ஆகிய நால்வர் சிறப்பு வாய்ந்த அமைச்சர்களாகத் திகழ்ந்தனர். அவர்கள் இவனுக்குச் சிறந்த நண்பர்களாகவும் இருந்து பல உதவிகள் புரிந்தனர். மேலும், இசைச்சன் போன்ற பல நண்பர்களும் இருந்தனர். இவன் மலர்களால் கண்ணி தொடுப்பதிலும் வாழைக்குருத்தில் நகத்தினால் ஓவியங்கள் வரைவதிலும் வல்லவன்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 903)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z93mx7h6/
தமிழ்“உதயணன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/z93mx7h6/APA
Oliyon Research. (2026). உதயணன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z93mx7h6/MLA
"உதயணன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/z93mx7h6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment