அகநோக்கு முறை
akanōkku muṟai
அகநோக்கு முறை என்பது மனிதன் தன்னுடைய உணர்வுகளையும் பட்டறிவுகளையும் தானே உணரும் முறையாகும்.
அகநோக்கு முறை என்பது மனிதன் தன்னுடைய உணர்வுகளையும் பட்டறிவுகளையும் தானே உணரும் முறையாகும். இதனை ஓர் உளவியல் கோட்பாடாக விளக்கியவர் வில்கெல்ம் உண்ட்டு (Wilhelm Wundt) என்னும் செருமானிய உளவியல் அறிஞர். இம்முறை, அகநோக்கு உளவியல் என்னும் பழைமையான உளவியல் கோட்பாட்டினுள் அடங்கும் ஆய்வு முறையாகும். உண்ட்டு மனித மனத்தில் மூன்று அடிப்படை ஆக்கக்கூறுகள் உள்ளன என்று கூறுகிறார். அவை வெளித் தூண்டுதல்களினால் ஏற்படும் புலன் உணர்வுகள், உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளை ஒத்த பட்டறிவுகள், பட்டறிவுகளின் மனவெழுச்சிக் கூறுகள் அல்லது உணர்ச்சிகள் எனப்படும்.
அகநோக்கு (Introspection) என்பது ஒருவன் குறிப்பிட்ட ஏதேனும் ஓர் அனுபவத்தைப் பற்றித் தன்னுடைய எண்ணங்களை உடனுக்குடனோ. சில காலம் சென்ற பின்னரோ மனத்தில் உணரும் ஓர் அக அனுபவமாகும். இதுவரை ஒரு பொருளை நோக்கிய மனிதன் இப்பொழுது அகநோக்கு முறையின் மூலம், தான் அப்பொருளை நோக்குவதை மனத்தால் உணர்கிறான். இவ்வாறு அவன் உணரத் தொடங்கியவுடன் அவனுடைய தன்னுணர்வு விழிப்படைகிறது. இதுவே அவனுக்குத் தன்னுணர்வு ஏற்படும் தொடக்க நிலையாகவும் அமைகிறது.
அகநோக்குமுறையை நன்கு கற்றுத் திறமை மிக்க ஓர் அசுநோக்காளராக ஆவதற்கும் பொறுமையும் பயிற்சியும் தேவையாகும். மனித மனம் ஓர் எண்ணத்திலிருந்து அடுத்த எண்ணத்திற்கு முன்னோக்கிச் செல்வதேயன்றிப் பின்நோக்கித் திரும்புவதில்லை. ஆனால் அகநோக்குமுறையில் மனத்தைப் பின்னோக்கித் திருப்புவது இன்றியமையாததாகிறது. இது பெரும்பாலானவர்களுக்கு மிகக் கடினமான பயிற்சியாகும். இம்முறையில் ஒருவரே எண்ணங்களில் ஈடுபடுபவராகவும் அவற்றை ஆராய்பவராகவும் இருப்பதால், இயல்பான பட்டறிவுகளையும் உணர்வுகளையும் அறிய இயலாமற் போக வாய்ப்புண்டு.
வில்கெல்ம் உண்ட்டு
உளவியலை அறிவியல் பாதையில் செலுத்த எண்ணிய உளவியல் கோட்பாட்டினர் மனிதன் புற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே போதுமானதென்றும், சிந்தனைகள், உணர்ச்சிகள், கனவுகள், கற்பனைகள் போன்ற அனுபவ அடிப்படையிலான அக உணர்வுகளைப் பற்றி ஆராய்வது தேவையற்றது என்றும் கருதினர். உளவியல் ஓர் அறிவியலுக்கான தகுதியை அடைவதற்கு அகநோக்குமுறை ஒரு தடையாக இருப்பதாக முன்பு உளவியலாளர் கருதி வந்தனர். அகநோக்கு முறையின்போது தத்தம் விருப்பம்போல் உண்மைகளைத் திரித்துக் கூறவும் பொய் கூறவும் வாய்ப்பிருக்கிறது. இதை எவ்விதத்திலும் தடுக்க இயலாது. மேலும், இம்முறையில் உளவியலாளர் சோதனைக்கு உட்படுத்தப்படும் ஒருவரை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.
அவர் கூறுவதைச் சோதிக்கவோ அவர் கூற்றுகள் உண்மையா என்று கண்டுபிடிக்கவோ இயலாது. மேற்கூறிய குறைகள் இருந்தாலும் உளவியலை அறிவியலின் ஒரு பிரிவாக ஆக்குவதில் அகநோக்கு முறைக்குப் பெரும்பங்குள்ளது. இம்முறை உளம் இயங்கு முறைகளைப் பற்றிய பல அரிய விவரங்களை அறிய உதவுகிறது. இம்முறையைக் கவனத்துடன் பயன்படுத்தினால் சிறந்த பயனைப் பெறலாம். வாய்மொழி அறிக்கையுடன் நரம்பு சார்ந்த உடலியக்கங்களையும் ஒப்பிட்டு நோக்குவதன் மூலம் பட்டறிவு நிலைகளைச் சிறந்த முறையில் அறிய இயலும். பரிசோதனை முறையையும் அகநோக்கு முறையையும் இணைத்து, பினேயின் (Binet) “உருவமற்ற சிந்தனைகள்” மியுலரின் (Muller) “நினைவிலிருத்தும் முறை” போன்ற முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உளவியல் ஆய்வுகளுக்கு இன்றியமையாதனவாகவுள்ள வாய்மொழி அறிக்கை அகநோக்கு முறையால் பெறப்படுகிறது.
அகநோக்கு முறையால் சிறந்த பயனடையக் கீழ்க்கண்டவற்றில் கவனம் செலுத்துதல் வேண்டும்.
: அகநோக்கின்போது எவ்வித எதிர்பார்ப்பும் இன்றிப் பட்டறிவைக் கவனித்தல் வேண்டும். உண்மையான பட்டறிவையே வெளியிடுதல் வேண்டுமேயன்றி ஒருவர் விரும்பும் பட்டறிவைக் குறிப்பிடுதல் கூடாது.
: முழுக் கவனத்தையும் அனுபவத்தின்மீது செலுத்த வேண்டும். நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்பன பற்றிச் சிந்திப்பதோ அனுமானிப்பதோ கூடாது. தமக்கு ஏற்படும் அனுபவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
: உளச்சோர்வு இன்றிப் புத்துணர்வுடனும் இயல்பாகவும் இருத்தல் வேண்டும். உளச்சோர்வு, பட்டறிவை மாற்றியமைக்கக்கூடும்.
அகநோக்கு முறை, உளவியல் ஆய்வு முறையாக மட்டுமன்றி, தனி மனிதன் தன்னுடைய நடத்தை, பட்டறிவுகள், உணர்வுகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு சிறந்த முறையாகவும் விளங்குகிறது.
அகநோக்கு முறையுடன் தொடர்புடைய “புற அறிவு” (Meta–Knowledge) என்ற நிலை, மனிதனிடம் மட்டுமன்றி மிருகங்களிடமும் பறவைகளிடமும் காணப்படுகிறது. புறாக்கள் தம்முடைய செயல்களையும் நடத்தையையும் அறிய வல்லனவாக உள்ளன என்று ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. அகநோக்கு முறையின் உதவியால் சினம், காமம், அச்சம் போன்ற உணர்ச்சிகளின் வயப்படுதலினின்று மனிதன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலும்.
அகத்திற்கும் புறத்திற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்தல் அகநோக்கு முறையின் அடிப்படைத் தத்துவமாகும் ஆதலின், குழந்தைகளும் உள நோயாளிகளும் அகநோக்கு முறையைப் பயன்படுத்த முடியாது. வே.க.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 87)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z92p8mxk/
தமிழ்“அகநோக்கு முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/z92p8mxk/APA
Oliyon Research. (2026). அகநோக்கு முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z92p8mxk/MLA
"அகநோக்கு முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/z92p8mxk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment