ஒரு மொழியின் இலக்கண அமைப்பில் (Grammatical system) காணப் பெறும் நான்கு உட்பிரிவுகளுள் ஒன்று இலக்கணக்கூறு (Grammatical core) ஆகும். இலக்கணக்கூறுகள் ஒரு மொழியில் காணப்பெறும் பெயர் (Noun), வினை (Verb) போன்ற வடிவங்களின் இலக்கணப் பொருளைக் (Grammatical meaning) குறிக்கும் வகையில் அமையும். இவை சொற்களை வகைப்படுத்துவதற்குப் பெரிதும் துணைபுரிகின்றன. சான்றாக எண்வேறுபாட்டினைக் குறிப்பிடலாம். எண்வேறுபாடு காரணமாகப் பெயர், வினைகளை ஒருமை, பன்மை வடிவங்களாகப் பகுத்தல் இயலும். இதனைப் போன்றே இடவேறுபாடு காரணமாகத் தன்மை, முன்னிலை, படர்க்கை எனப் பெயர், வினைகளை வகைசெய்தலுமுண்டு. இலக்கணக்கூறுகள் எப்போதும் இலக்கணப் பொருளைச் சுட்டி அகரா- திப்பொருள் (Lexical meaning) தரும் வடிவங்களின் பொருளைச் சிறப்பித்து நிற்கின்றன. ஒரு மொழியின் தெரிவுக்கூறுகள் (Selective categories), சொல்திரிபுக்கூறுகள் (Inflected categories) அனைத்தும் இலக்கணக் கூறுகளாகச் செயற்படும். ஆங்கில மொழியில் பெயர்களைப் பொறுத்தமட்டில் பால்வேறுபாடு ஒரு தெரிவுக்கூறாக அமைந்துள்ளது. இலக்கணக்கூறுகளை அவற்றின் பயனடிப்படையில் பொதுவகை இலக்கணக்கூறு (Generic grammatical category) எனவும், சிறப்புவகை இலக்கணக்கூறு (Specific grammatical category) எனவும் பாகுபாடு செய்தல் இயலும். தமிழில் பால் ஒரு பொது வகை இலக்கணக்கூறாகும். ஈண்டு ஆண்பால், பெண்பால் போல்வன சிறப்புவகை இலக்கணக்கூறாகும். சிறப்புவகை இலக்கணக்கூறு பொதுவகை இலக்கணக்கூற்றின் ஓர் உறுப்பாக அமையப்பெறும். பால் (Gender), எண் (Number), இடம் (Person), வேற்றுமை (Case), காலம் (Tense), கருத்தாவின் வினைச்செய்கை (Voice), வினைப்பொருள் (Mood), வினைமை (Aspect) போல்வன ஒரு மொழியின் இலக்கணக்கூறுகளாகக் கருதப்பெறும். பால்வேறுபாடு பெயர், வினை வடிவங்களில் காணப்பெறும் ஒரு கூறாகும். சில மொழிகளில் பெயரடை (Adjective) வடிவங்களிலும் பால்வேறுபாடு காணப்பெறுகிறது. வேறு சில மொழிகளில் பெயர்ச் சொற்கள் மட்டுமே பால்வேறுபாடு அமைந்துள்ளன. இன்னும் சில மொழிகளில் பால் வேறுபாடு முழுமையாகக் காணப்பெறவில்லை. தச்சு, இசுகாண்டிநேவியன் மொழிகளில் இருவகையான பால்வேறுபாடு காணப்படுகிறது. செருமன், இலத்தீன், கிரீக்கு, வடமொழி போன்ற மொழிகளில் ஆண்பால் (Masculine gender), பெண்பால் (Feminine gender), அஃறிணைப்பால் (Neuter gender) என்னும் மூவகைப் பால்பாகுபாடு அமையப் பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் காணப்பெறும் மூவகைப் பால்பாகுபாட்டினை எழுவகைப் பாகுபாடாக விரித்துக் காண்பதும் உண்டு. உருசியன், செருமன், ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஒருமையில் மட்டுமே பால் வேறுபாடு காணப்படுகிறது. தமிழ்மொழியின்கண் ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் (Neuter singular) பலர்பால் (Epicene plural), பலவின்பால் (Neuter plural) என ஐந்து வகையான பால் வேறுபாடு அமைந்துள்ளதாக மரபிலக்கணங்கள் (Traditional grammars) குறிப்பிடுகின்றன. இவ்வைந்தனுள் ஒன்றன்பால்–பலவின்பால் வேறுபாடும். பலர்பால் வேறுபாடும் எண்வேறுபாடுகளாக அமையப் பெறுவதால் தமிழில் பால் வகைகளை மூன்றாகக் கருதவியலும். ஆண்பாலைக் குறிக்க ‘ன்’ உருபும் (அவன்), பெண்பாலைக் குறிக்க ‘ள்’ உருபும் (அவள்), ஒன்றன் பாலைக் குறிக்கத் ‘து’ உருபும் (அது), பலர்பாலைச் சுட்ட ‘ர்’ உருபும் (அவர்), பலவின்பாலைக் குறிக்க ‘ஐ’, ‘அ’ என்னும் உருபுகளும் (அவை வந்தன) பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் பெயர், வினை வடிவங்கள் பால் காட்டுவனவாக அமைந்துள்ளன. பால் காட்டும் உருபுகள் அனைத்தும் சொல்திரிபு உருபுகள் (Inflectional affixes) ஆகும். தமிழில் பெயர், வினை வடிவங்கள் தொடரில் செயற்படும்போது பால் ஒத்திசைவு (Concord) கட்டாயமாக அமையப்பெறுதல் வேண்டும். எண்வேறுபாடு பெயர், வினை வடிவங்களைப் பாகுபாடு செய்யப் பெரிதும் துணைபுரிகிறது. பெரும்பான்மையான மொழிகளில் ஒருமை (Singular), பன்மை (Plural) என்னும் இருவகை எண்வேறுபாடு காணப்படுகிறது. கிரீக்கு, சமசுகிருதம் போன்ற மொழிகளில் ஒருமை, இருமை (Dual), பன்மை என்னும் மூவகைப் பால் வேறுபாடு காணப்படுகிறது. பிசியனில் (Figian) ஒருமை, இருமை, சில (A few), பல (Many) எனவும் வேறு சில மொழிகளில் ஒருமை, இருமை, மும்மை (Trial), பன்மை எனவும் நால்வகை எண் வேறுபாடு காணப்பெறுகிறது. தமிழில் ஒருமை, பன்மை என்னும் இருவகை எண்வேறுபாடு அமையப்பெற்றுள்ளது. ஆண்பால் பெண்பால், ஒன்றன்பால் ஆகியன ஒருமையிலும் பலர்பால், பலவின்பால் ஆகியன பன்மையிலும் அமையப்பெறும். உயர்திணையில் ‘ன்’ ‘ள்’ உருபுகளும் (வந்தான், வந்தாள்). அஃறிணையில் ‘து’ உருபும் (வந்தது) ஒருமை எண்ணினைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ‘ர்’ உருபு உயர்திணைப் பன்மைக்கும் (கேட்டனர்) ‘அ’, ‘ஐ’ உருபுகள் அஃறிணைப் பன்மைக்கும் (ஓடுகின்றன. அவை) உருபுகளாகச் செயற்படுகின்றன. இக்காலத்தமிழில் ‘ர்’ உருபு உயர்வு ஒருமையில் (Honorific singular) பயன்படுத்தப்படுகின்றமையால் (அமைச்சர் வந்தார்), பலர்பாலில் இரட்டைப்பன்மை (Double plural) உருபுகள் பயன்படுத்தப்படுகின்றன. (அவர்கள் வந்தார்கள்). பால், எண் இரண்டினையும் சுட்டுவதற்குப் பெரும்பாலும் தமிழில் ஒரே உருபு தான் பயன்படுத்தப்படுகிறது. சான்றாகச் ‘செய்தாள்’ என்ற வினைச்சொல்லில் ‘ள்’ என்னும் உருபே பெண்பாலையும் ஒருமை எண்ணையும் குறிக்கிறது. தமிழ்மொழியின் பேச்சு வழக்கில் ஒப்புமையாக்- கத்தால் ஆண்பால் பன்மை (Masculine plural), பெண்பால் பன்மை (Feminine plural) வடிவங்கள் (அவனுக, அவளுக) தோற்றம் பெற்றுள்ளன. அன்றியும் பால்–எண் ஒத்திசைவிலும் பிறழ்ச்சி (அப்பா சொல்லிச்சி; மாடுகள் வந்தது) காணப்பெறுகிறது. பெரும்பான்மையான மொழிகளில் தன்மை (First person), முன்னிலை (Second person), படர்கை (Third person) என்னும் மூன்று வகையான இடவேறுபாடு காணப்படுகிறது. எசுகிமோ மொழியில் படர்க்கையில் அண்மை (Proximate), இன்மை (Obviative) வேறுபாடு காணப்படுகிறது. தமிழ் மொழியில் தன்மை, முன்னிலை ஆகிய இரு இடங்களிலும் எண்வேறுபாடு மட்டுமே காணப்படுகிறது. படர்க்கையில் மட்டும் பால்–எண்வேறுபாடு உண்டு. தன்மை ஒருமையினைச் சுட்ட ‘ஏ’ உருபு (வரு-வ்-ஏ-ன்) பெரிதும் கையாளப்படுகிறது. தன்மைப்பன்மையில் உளப்படுத்தும் தன்மைப்பன்மை (Inculsive plural), உளப்படுத்தாத் தன்மைப்பன்மை (Exclusive plural) என்ற பாகுபாடு உண்டு. இக்காலத் தமிழில் பதிலிப்பெயர்களில் (Pronouns) ‘நாம்’ என்பது உளப்படுத்தும் தன்மைப் பன்மைக்கும் ‘நாங்கள்’ என்பது உளப்படுத்தாத் தன்மைப்பன்மைக்கும் பயன்படுத்தப்படுகின்றன. வினைச்சொற்களில் ‘ஒ’ என்னும் உருபு தன்மை இடக்குறியீடாகப் (வரு–வ்–ஓ–ம்) பயன்படுத்தப்படுகிறது. முன்னிலையில் ‘ஆ’, ‘ஈ’ என்னும் வடிவங்கள் முறையே ஒருமையிலும் (காண்–ப்–ஆ–ய்), பன்மையிலும் (பார்–ப்–ஈ–ர்) முன்னிலைக் குறியீடாகப் பயன்படுத்தப்படுகின்றன. படர்க்கையில் ஆண்பால் (அவன்), பெண்பால் (அவள்), ஒன்றன்பால் (அது), பலர்பால் (அவர்), பலவின்பால் (அவை) என்னும் ஐந்துவகையான பால் வேறுபாடு காணப்படுகிறது. வினைச் சொற்களில் படர்க்கை இட உருபாக ‘ஆ/அ’ என்னும் வடிவம் (செய்-கிறு ஆ-ன்; செய்-த்-அ-து) பயன்படுத்தப்படுகிறது. தொடரியல் நிலையில் பெயர், வினைச்சொற்களுக்கிடையே காணப்பெறும் இலக்கண உறவே வேற்றுமை எனப்படும். ஒவ்வொரு மொழிக்கேற்ப வேற்றுமையின் எண்ணிக்கையில் வேறுபாடு காணப்படுகிறது. வெவ்வேறு மொழிகளில் வேற்றுமையின் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டு முதல் முப்பதுவரை காணப் பெறுகிறது. சில மொழிகளில் வேற்றுமை உறவினைக் குறிக்கும் வடிவங்கள் பெயர்களுக்கு முன்னும் வேறு சில மொழிகளில் பெயர்களுக்குப் பின்னும் அமையப் பெறுகின்றன. மரபிலக்கண நூல்கள் தமிழில் எட்டு வேற்றுமைகளைக் குறிப்பிடுகின்றன. இவ்வேற்றுமை உறவினைப் புலப்படுத்தும் வகையில் கையாளப் பெறும் உருபுகள் வேற்றுமை உருபுகள் (Case suffixes) எனப்படும். வேற்றுமை உருபுகள் அனைத்தும் சொல் திரிபு உருபுகளாகும். இவை தொக்கு வருதலும் உண்டு. வேற்றுமை உருபுகள் தொக்கு வருவது வேற்றுமைத் தொகை எனக் குறிப்பிடப் பெறும். முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை (Nominative case) எனப்படும்; இவ்வேற்றுமையில் பெயர், வினைகளுக்கிடையே காணப்பெறும் உறவு எழுவாய் பயனிலை உறவாக அமையும். இவ்வேற்றுமைக்கு எவ்வித உருபும் கிடையாது (சீதை நடந்தாள்). இரண்டாம் வேற்றுமை செயப்படுபொருள் வேற்றுமை (Accusative case) எனப்படும். இவ்வேற்றுமையில் பெயர்-வினை உறவு செயப்படுபொருள்-பயனிலை உறவாக அமையும். இரண்டாம் வேற்றுமையின் உருபாக ‘ஐ’ என்னும் வடிவம் (மாலையை அணிந்தான்) பயன்படுத்தப்படுகிறது. மூன்றாம் வேற்றுமை கருவிப்பொருளையும் (Instrumental) உடனிகழ்ச்சிப் பொருளையும் (Sociative) சுட்டும். கருவிப்பொருளை உணர்த்த ‘ஆல்’ உருபும் (பேனாவால் எழுதினாள்) உடனிகழ்ச்சிப் பொருளை உணர்த்த ‘ஓடு/ஒடு’ உருபும் (நாயோடு நடந்தான், அவனொடு சென்றாள்) பயன்படுத்தப் பெறுகின்றன. மூன்றாம் வேற்றுமையின் பெயர், வினைக்கிடையே காணப்படும் உறவுகள் முறையே கருவி–பயனிலை, உடனிகழ்வு–பயனிலை என்ற வகையில் அமையப்பெறும். இக்காலத்தில் கருவி, உடனிகழ்வு ஆகிய இரு பொருண்மைகளும் தனித்தனி வேற்றுமைகளாகக் கருதப்படுகின்றன. நோக்குப் பொருண்மையினைச் சுட்டும் நான்காம் வேற்றுமையின் (Dative case) உருபு ‘கு’ (தாலிக்குப் பொன்) என்பதாகும். ஈண்டுப் பெயர், வினை உறவு நோக்கு–பயனிலை என்ற முறையில் அமையும். ஐந்தாம் வேற்றுமையாகிய ஒப்புப் பொருள் வேற்றுமையின் (Comparative case) உருபு ‘இன்’ (அவனின் நல்லன்) என்பதாகும். காலப் போக்கில் இவ்வேற்றுமை நீக்கற் பொருளினைக் குறிக்கும் வகையில் (மலையின் வீழ் அருவி) நீங்கற்பொருள் வேற்றுமையாக (Ablative case) மாற்றம் பெற்றுள்ளது. இவ்வேற்றுமையில் பெயர், வினைகளுக்கிடையே காணப்பெறும் இலக்கண உறவு நீங்கல்-பயனிலை என்ற வகையில் அமையப் பெற்றுள்ளது. ஆறாம் வேற்றுமையாகிய உடைமைப் பொருள் வேற்றுமை (Genitive case) பெயர்களுக்கிடையே காணப்படும் உறவினைக் (நாயினது கால்) சுட்டும். இவ்வேற்றுமை வேற்றுமை இலக்கணத்தினின்றும் வேறுபட்டு வருவதால் இதனைச் சிலர் ஒரு வேற்றுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. ஏழாம் வேற்றுமையாகிய இடவேற்றுமையின் (Locative case) உருபுகளாக ‘இல்’, ‘கண்’ போன்ற வடிவங்கள் (காட்டில் வாழ்கிறது) செயற்படுகின்றன. இவ்வேற்றுமையில் பெயர், வினைகளுக்கிடையே காணப்பெறும் உறவு இடம்–பயனிலை என்னும் முறையில் அமையும். எட்டாம் வேற்றுமையாகிய விளி வேற்றுமை (Vocative case) பெயரின் திரிபினைச் (நெஞ்சு→நெஞ்சே; இராமன்→இராமா) சுட்டும் வகையில் அமையும். இவ்வேற்றுமையினைச் சிலர் எழுவாய் வேற்றுமையின் வகையாகக் கருதுகின்றனர். இக்காலத்தமிழில் சுமார் இருபத்து மூன்று வகையான வேற்றுமைகளை மொழியியல் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வேற்றுமைகள் அனைத்தையும் ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற வேற்றுமைகளுக்குள் அடக்கிக் காணுதல் இயலும். சில வேற்றுமைகளில் வேற்றுமை உருபேற்ற பெயர்ச் சொற்களுக்குப் பின்னர் வரும் வினைச் சொற்கள் காரணமாக அடிப்படைப் பொருளில் மாற்றம் காணப் பெறுகிறது. இத்தகைய பொருள் வேறுபாட்டினைத் (Semantic change) தனித்தனி வேற்றுமைகளாகக் கொள்ளவேண்டியதில்லை. இவற்றைக் குறிப்பிட்ட வேற்றுமையின் பொருள்வகையாகக் கொள்ளலாம். ஒரு வேற்றுமையின் இத்தகு பொருள் வேறுபாட்டினை மறைகூறுகள் (Covert categories) என்பர் அறிஞர். தொழில் நிகழ்வின் நேரத்தினை அடிப்படையாகக் கொண்டு அமையப்பெறும். சில மொழிகளில் இரு வகையான கால வேறுபாடு காணப்பெறுகிறது. பெரும்பான்மையான மொழிகளில் மூவகைக் காலவேறுபாடு அமையப்பெற்றுள்ளது. இன்னும் சில மொழிகளில் அண்மை (Immediate), சேய்மை (Remote) அடிப்படையில் மூன்றிற்கு அதிகமான கால வேறுபாடுகள் சுட்டப்பெறுகின்றன. தமிழில் இறந்த காலம் (Past tense), நிகழ்காலம் (Present tense), எதிர்காலம் (Future tense) என்னும் மூன்று வகையான கால வேறுபாடு காணப்படுகிறது. இறந்த காலத்தினைக் குறிக்க ‘த்’, ‘ற்’, ‘இன்’, ‘ந்த்’ போன்ற உருபுகளும், நிகழ்காலத்தினைக் குறிக்க ‘கிறு’, ‘கின்று’ போன்ற உருபுகளும், எதிர்காலத்தினைக் குறிக்க ‘ப்’, ஆகிய உருபுகளும் சொல்திரிபு உருபுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. வினைநிகழ்வில் கருத்தாவின் ஈடுபாட்டினை அடிப்படையாகக் கொண்டு வினைச்செய்கை அமையப் பெறுகிறது. இலத்தீன் மொழியில் இருவகை வினைச் செய்கைகளும் கிரீக்கு, சமசுகிருத மொழிகளில் மூவகைவினைச் செய்கைகளும் காணப்பெறுகின்றன. கருத்தாவின் வினைச்செய்கை ஒவ்வொரு மொழிக்கேற்ப எண்ணிக்கையில் வேறுபடுவதுமுண்டு, தமிழில் கருத்தாவின் வினையீடுபாட்டினை அடிப்படையாகக் கொண்டு வினைகளைச் செய்வினை (Active verb), செயப்பாட்டு வினை (Passive verb), செயப்படு பொருள் குன்றிய வினை (Intransitive verb), செயப்படு பொருள் குன்றாவினை (Transitive verb), இயக்கு வினை (Causative verb), எதிர்மறைவினை (Negative verb), பிரதிபலிப்பு வினை (Reflexive verb) என வகைப்படுத்துதல் இயலும். செய்வினையில் (கண்ணன் பாடத்தைப் படித்தான்) காணப்பெறும் எழுவாய் (Subject) செயப்பாட்டு வினையில் (பாடம் கண்ணனால் படிக்கப்பட்டது) மூன்றாம் வேற்றுமைக் கருத்தாவாகும். செய்வினையிலுள்ள செயப்படுபொருள் செயப்பாட்டு வினையில் எழுவாயாக மாற்றம்பெறும். ஈண்டுப் ‘படு’, ‘பெறு’ என்னும் துணைவினைகளை (Auxiliary verbs) முதல்வினையோடு (Primary verb) சேர்க்கப் பெறும் நிலையில் செய்வினைகளிலிருந்து செயப்பாட்டு வினைகள் ஆக்கம் பெறுகின்றன. செயப்படுபொருளை ஏற்றுவாரா வினைகள் செயப்படு பொருள் குன்றிய வினைகள் (நடந்தான்; ஓடினான்) எனவும், செயப்படு பொருளை ஏற்று வரும் வினைகள் செயப்படுபொருள் குன்றா வினைகள் (படித்தார்; கேட்டார்) எனவும் கருதப்பெறும். செயப்படுபொருள் குன்றா வினைகளை அதன் அமைப்பு அடிப்படையில் ஆக்கச் செயப்படுபொருள் குன்றா வினைகள் (Derived transitives), இயல்பு செயப்படுபொருள் குன்றா வினைகள் (Inherent transitives) என இருவகைப்படுத்தலாம். இயல்பு செயப்படுபொருள் குன்றா வினைகளில் இவ்வினைப் பொருண்மையினைக் குறிக்க எவ்வகைக் குறியீடும் (Sign) காணப்பெறுவதில்லை. ஆக்கச் செயப்படு பொருள் குன்றா வினைகள் செயப்படு பொருள் குன்றிய வினைகளுடன் சில உருபுகளைச் சேர்ப்பதன் வாயிலாகவோ அடிச்சொல்லில் (Stems) சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் வாயிலாகவோ ஆக்கம் பெறுகின்றன. தமிழில் செயப்படுபொருள் குன்றிய வினையிலுள்ள அடிச்சொல்லை இரட்டிப்பதன் வாயிலாகவும் (ஆகு→ஆக்கு). செயப்படுபொருள் குன்றிய வினையின் அடிச்சொல்லில் காணப்பெறும் மெல்லொலியை வல்லொலியாக மாற்றுவதன் வாயிலாகவும் (அடங்கு→அடக்கு), சில விகுதிகளைச் சேர்ப்- பதன் வாயிலாகவும் (நிகழ்+து→நிகழ்த்து) செயப்பாட்டு வினை வடிவங்கள் ஆக்கம் பெறுகின்றன. கருத்தா தொழிலைப் பிறர் வாயிலாகச் செய்யும் நிலையில் அமையப்பெறும் வினைகள் இயக்கு வினைகள் எனப்படும். தமிழில் ‘வி’, ‘பி’ போன்ற உருபுகள் இயக்குவினைகள் அமையத் (செய்வித்தான்; கேட்பித்தான்) துணை புரிகின்றன. தமிழில் சில செயற்படுபொருள் குன்றா வினைகள் இயக்கு வினைகளாக அமையப் பெற்றுள்ளன. எதிர்மறை வினையினையும் கருத்தாவின் வினைச் செய்கையாகக் கருதுவதுண்டு. ஈண்டு வினைவடிவம் தொழில் நிகழ்வின் எதிர்மறுத்த நிலையினைச் சுட்டும் வகையில் அமையப்பெறும். எதிர்மறைப் பொருண்மை சொல்லியல் நிலையிலும் (Morphological level) தொடரியல் நிலையிலும் (Syntactic level) கட்டப்பெறும். தமிழில் ‘இல்’, ‘அல்’, ‘மாட்ட’ என்பன எதிர்மறை அடிச்சொற்களாகவும் (இல்லை, அல்ல, மாட்டேன்), ‘ஆ’ என்பது எதிர்மறை உருபாகவும் (வாராது) செயற்படுகின்றன. மேலும் பிரதிபலிப்பு வினையினையும் சிலர் கருத்தாவின் வினைச் செய்கை வகையாகக் கருதுகின்றனர். ஈண்டு இப்பொருண்மை ‘கொள்’ என்னும் துணை வினையினை முதல் வினையோடு இணைப்பதன் வாயிலாகப் (அடித்துக் கொண்டனர்) பெறப்படுகிறது. வினைநிகழ்வின்கண் கருத்தாவின் உளநிலைக்கேற்ப வினைப்பொருள் அமையப்பெறும். வினைப் பொருளின் எண்ணிக்கையில் மொழிக்கு மொழி வேறுபாடு காணப்படுகிறது. மெனோமினி மொழியில் ஐந்து வகை வினைப்பொருள்கள் காணப்பெறுகின்றன. பாக்சு மொழியில் எட்டிற்கும் மேற்பட்ட வினைப்பொருள்கள் காணப்பெறுகின்றன. தமிழில் நிலைவினைப் பொருள் (Indicative mood), ஏவல் வினைப்பொருள் (Imperative mood), வியங்கோள் வினைப்பொருள் (Optative mood), நிபந்தனை வினைப்பொருள் (Conditional mood), செயவெனச்ச வினைப்பொருள் (Infinitive mood), அனுமதி வினைப்பொருள் (Permissive mood), ஆற்றல் வினைப்பொருள் (Potential mood), வாய்ப்பு வினைபொருள் (Probability mood), கட்டாய வினைப் பொருள்கள் (Obligatory mood) போன்ற வினைப் பொருள்கள் காணப்பெறுகின்றன. செயல்நிகழ்வின் நிலையினை நிலை வினைப் பொருளும் (அவன் பாடுகிறான்), முன்னிற்பானை ஒரு செயலைச் செய்யச் சொல்லும் வகையில் ஏவல் வினைப்பொருளும் (நீ பாடு), கூறுவோன் விருப்பினைச் சுட்டும் வகையில் வியங்கோள் வினைப்பொருளும் (ஆசிரியர் வாழ்க) அமையப்பெறும். ஏதேனும் ஒரு செயலின் நிபந்தனையினைக் குறிக்கும் வகையில் நிபந்தனை வினைப்பொருளும் (நீ வந்தால் தருவேன்), ஒரு செயலின் எஞ்சு நிலையினைக் குறிக்கும் வகையில் செயவெனெச்ச வினைப்பொருளும் (பார்க்கச் செல்வாள்), அனுமதிப் பொருளைச் சுட்டும் வகையில் அனுமதி வினைப்பொருளும் (தங்கை வரலாம்) அமையப் பெறுகின்றன. செயல்நிகழ்வின் திறனைக் குறிக்கும் வகையில் ஆற்றல் வினைப்பொருளும் (அவனால் படிக்க முடியும்), செயல் நிகழ்வின் வாய்ப்பினைச் சுட்டும் வகையில் வாய்ப்பு வினைப்பொருளும் (இன்று மழை வரலாம்), செயல்நிகழ்வின் கட்டாயத்தினைச் சுட்டும் வகையில் கட்டாய வினைப் பொருளும் (நீ போக வேண்டும்) அமையப்பெற்றுள்ளன. ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற வினைப்பொருள் தவிர்ந்த வேறு பிற வினைபொருள்களும் தமிழ் மொழியின்கண் காணப்பெறுகின்றன. செயல்நிகழ்வின் நிலையினை அடியொற்றியே ஒரு மொழியின் வினைமை அமையப் பெறும். வினை நிகழ்வின் வேறுபட்ட வகைகளை அல்லது நிலைகளைக் குறிக்கும் வகையில் வினைமைகள் செயற்படுகின்றன. வினைமைகளின் எண்ணிக்கையும் மொழிக்கேற்ப அமைந்துள்ளது. வினைமைகள் சில மொழிகளில் சொல்லமைப்புகளாலும் வேறு சில மொழிகளில் தொடரமைப்புகளாலும் உணர்த்தப்பெறுகின்றன. பெரும்பாலும் தமிழ் மொழியில் வெவ்வேறு துணைவினைகள் வாயிலாகவே வினைமைகள் உணர்த்தப் பெறுகின்றன. முதல் வினையுடன் பல்வேறுபட்ட துணைவினைகள் சேர்க்கப்பெறும் நிலையில் வினைமை வேறுபாடு சுட்டப்பெறுகிறது. தமிழ் மொழியில் செயல்முடிவு (Perfect), செயல் தொடர்ச்சி (Progressive), உறுதிப்பாடு (Definitive), முயற்சி (Trial), செயல் முழுமை (Completive), வழக்கம் (Habitual), வெறுப்பு (Contemptive), செய்து காட்டுதல் (Demonstrative) போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட வினைமைகள் காணப்பெறுகின்றன. செயலில் நிறைவு நிலையினைக் குறிக்கும் வகையில் செயல்முடிவு வினைமையும் (வந்திருந்தார்), செயல் நிகழ்வின் தொடர் நிலையினைக் குறிக்கும் வகையில் செயல் தொடர்ச்சி வினைமையும் (வந்து கொண்டிருக்கிறாய்), செயல் நிகழ்வின் உறுதிப்பாட்டினைக் குறிக்கும் வகையில் உறுதிப்பாடு வினைமையும் (வந்துவிடுவான்), முயற்சி செய்யும் நிலையில் அமையும் வினைநிகழ்வினைக் குறிக்கும் வகையில் முயற்சி வினைமையும் (செய்து பார்), செயல்நிகழ்வின் முழுமை நிலையினைக் குறிக்கும் வகையில் செயல் முழுமை வினைமையும் (வந்துவிட்டான்), செயல் நிகழ்வின் வழக்கத்தினைக் குறிக்கும் வகையில் (நாங்கள் கேட்டு வருகிறோம்), வினை நிகழ்வின் வெறுப்பு நிலையினைக் குறிக்கும் வகையில் வெறுப்பு வினைமையும் (செய்து தொலைத்தான்), வினை நிகழ்வினைச் செய்துகாட்டுகின்ற வகையில் செய்துகாட்டுதல் வினைமையும் (நடித்துக் காட்டினார்) அமையப் பெறும். ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற இலக்கணக்கூறுகள் தவிர்த்த சில கூறுகள் பிற மொழிகளில் காணப்பட்ட போதிலும், இங்கே தமிழ்மொழியின் கண்ணுள்ள இலக்கணக்கூறுகள் மட்டுமே சுட்டப்பெற்றுள்ளன. காலப்போக்கில் மொழியின் இலக்கணக்கூறுகளில் மாற்றங்கள் நடைபெறுதலுண்டு. இலக்கணக் கூறுகளில் நடைபெறும் அனைத்து மாற்றங்களும் இலக்கண மாற்றங்கள் (Grammatical changes) எனப்படும். இக்காலப் பேச்சுத் தமிழில் ஒப்புமையாக்கத்தின் காரணமாக ஆண்பால் பன்மை, பெண்பால் பன்மை என்னும் பால்களின் தோற்றம் காணப்படுகிறது. வேற்றுமையினைப் பொறுத்தமட்டில் பண்டைக் காலத்தில் ஒப்புப்பொருள் வேற்றுமையாகச் செயற்பட்ட ஐந்தாம் வேற்றுமை காலப்போக்கில் நீங்கற் பொருள் வேற்றுமையாக மாற்றம் பெற்றுள்ளது. ‘டகாரன்’ என்னும் சொல்லாக்க விகுதியினைக் (Derivative suffix) கடன் பெற்றமையால் தமிழில் ‘வீட்டுக்காரன்’, ‘தோட்டக்காரன்’ போன்ற சொல் வடிவங்கள் தோன்றியுள்ளன. ஆங்கில மொழியில் வினைப் புதிய ஆதிக்கம் காரணமாகத் தமிழில் பொருள், வினைமையினைச் சுட்டும் வினைவடிவங்கள் தோன்றியுள்ளன. இத்தகு மாற்றங்கள் அனைத்தும் இலக்கணக்கூற்றில் நடைபெறும் இலக்கண மாற்றத்திற்கு முறையான சான்றுகளாகும். ஏ.ஆ. துணை நூல்கள் Gleason, Hentry A.Jr., An Introduction to Descriptive Linguistics, New York, 1955. Hockett, C.F., A Course in Modern Linguistics, Oxford and IBH Publishing Co., New Delhi, 1976. Harris, Z.S., Methods in Structural Linguistics, Chicago, 1951. Lyons, J., Introduction to Theoretical Linguistics, Cambridge, University Press, Cambridge, 1968. Malmberk Bertill, New Trends in Linguistics, Stokholm, Sweden, 1967.