உபாயம் என்னும் வடசொல்லுக்கு வழி என்பது பொருள். வழி, ஆறு, நெறி, சாதனம், பிராபகம், கதி, உபாயம் என்பவை ஒருபொருட் கிளவிகள். பேற்றினைத் தருவது எதுவோ அதுவே ஆறு. இறைவனை அடைவதற்குரிய வழிகள் பல, அவை செயல்நெறி (கருமயோகம்), அறிவுநெறி (ஞானயோகம்), அன்புநெறி (பக்தியோகம்), அடைக்கல நெறி (சரணாகதி), ஆசிரியப்பற்று (ஆசார்யாபிமானம்) என்பவை ஆகும். செயல்நெறியாவது உயிரை உள்ளபடி அறியும் அறிவை-அதாவது இறைவன் உயிர், அவனொழிந்த மற்றப் பொருள்களும் உயிர்களும் அவனுக்கு உடல் என்னும் அறிவைப்பெற்றுத் தன் சாதிக்கும், நிலைக்கும் தக்கதாய் விதிக்கப்பட்ட செயலை விளைவில் விருப்பமோ ‘நாம் செய்கிறோம்’ என்னும் எண்ணம், பற்று ஆகியவையோ இன்றி இறைவனுக்குச் செய்யும் வழிபாடு என்னும் நினைவோடு செய்வதாகும். இப்படிச் செயல் செய்யவே தடையான தீவினை அழியும்; மனம் மலமற்றுத் தன்மைவிளக்கம் (சொரூபப்பிரகாசம்) உண்டாகும்; அதனால் இறைவனை அறியும் அறிவும், அவனிடத்தில் விருப்பமும் பிறக்கும்; பின்னர், மேலான அன்பு (பரபக்தி) மேலான அறிவு. மிக்க மேலான அன்பு (பரமபக்தி) ஆகியவை பேற்றினை நல்கும். பொறிகளை அடக்கி நெறிப்படுத்தித் தன்மையை உணர்ந்தால் இறைவனை அறியும் அறிவும் அவனைக் குறித்து அன்பும் பிறக்கும்; அவை பிறக்கவே மேலான அன்பு, மேலான அறிவு, மிக்க மேலான அன்பு ஆகியவை பிறந்து பேற்றினை அடைவிக்கும். இதுவே அறிவுநெறியாகும். அன்பு நெறியாவது செயல், அறிவு இரண்டனையும் இறைவனுக்கு ஆக்கி, மேலான அன்பு, மேலான அறிவு, மிக்க மேலான அன்பு ஆகியவற்றை எய்தச் செய்து வீடுபேறு அடையச் செய்யும். சுருங்கச் சொல்லின், செயல் அறிவுகளினால் வளர்க்கப்பட்ட அன்பால் இறைவனை அடைவதாகும். இறைவனையே ஆறாகவும் பேறாகவும் கொண்டு அவன் திருவடிகளில் தஞ்சம் புகுவது அடைக்கல நெறியாகும். மற்ற நெறிகளில் வழியும் அதனால் அடையப்படுவதும் வெவ்வேறாக உள்ளன. இந்நெறியில் இரண்டும் ஒன்றாக அமைகின்றன. மற்ற நெறிகள் மேற்கொல்வதற்கு அரியன. அவற்றை மேற்கொண்டால் பயன்தரும் காலத்தில் இறைவன் கைபார்த்திருக்க வேண்டும். அவனையே வழியாகக் கொண்டால் வேறொன்றைத் தேட வேண்டுவதில்லை. இவ்வடைக்கல நெறியில் எக்கட்டுப்பாடும் இல்லை. ஆனால், அடைக்கலம் தருவோன், அடைக்கலம் புகுவோன் ஆகிய இருவரும் சில இலக்கணங்களை உடையவர்களாய் இருத்தல் இன்றியமையாதது. அடைக்கலம் தருவோன் ‘சரண்யன்’ என்றும், அடைக்கலம் புகுவோன் ‘சரணாகதன்’ என்றும் குறிக்கப்பெறுவர். அடைக்கலம் தருவோன் எல்லையற்ற இன்பம் தருபவனுமாய், பகையினை அழிப்பவனுமாய், எல்லோர்க்கும் எளியவனுமாய் இருத்தல் வேண்டும். மேலும், இறைவனை நெறியாகக் கொள்ளும்பொழுதி வேறு நெறிகளோடு தொடர்பு கூடாது. மேற்கூறிய வழிகளை மேற்கொள்ள ஆற்றல் அற்றவனாய் இருப்பவனுக்கு ஆசிரியன் திருவடிகளே தஞ்சமாகும். அன்பு நெறி (பக்தியோகம்) அந்தணர், அரசர், வணிகர் என்னும் முக்குலத்தோர்க்குரியது என்றும், அடைக்கல நெறி எல்லார்க்கும் உரியது என்றும் கூறுவர். எந்நெறியை மேற்கொண்டாலும் இறைவனே பயன்தரும் வழியாய் அமைகிறான். பிறபயன் விழைவோர்க்குப் பிறபயனைத் தருபவனாகவும், தன்னையே பற்றினார்க்கு நேரே வழியாகவும் அமைகிறான். தெ.ஞா.