தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்குத் தென்கிழக்கில் 5 கல் தொலைவிலுள்ளது. பேருந்தில் சென்று இவ்வூரினை அடையலாம். இவ்வூர் இப்போது அழகார்புத்தூர் என வழங்கப்படுகிறது. இதனைப் பெரிய புராணம் செருவிலிபுத்தூர் எனக் குறிப்பிடுகிறது. காவிரியின் கிளைநதிகளில் ஒன்றாகிய அரிசிலாற்றின் தென்கரையில் இது அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரின் தேவாரப் பாடல்கள் இத்தலத்திற்குள்ளன. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்தையும் இதன்கண் வீற்றிருக்கும் இறைவனையும் சுட்டி. ‘அலைக்கும் புனல்சேர் அரிசில் தென்கரை அழகார் திருப்புத்தூர் அழகன்’ என்று குறிப்பிட்டுள்ளார். கடுவாய்க்கரைப் புத்தூர் என்னும் பிறிதொரு சோணாட்டுத் தேவாரத்தலத்தினின்றும் வேறுபட்டுத் தெரிவதற்கு அரிசிற்கரை என்னும் அடைமொழி சேர்த்து அரிசிற்கரைப் புத்தூர் எனப்பட்டது. இத்திருத்தலத்தில் உண்மையானந்த முனிவர் பூசித்தார் என்பது கூறப்படுகிறது. இங்கிருந்து புகழ்த்துணை நாயனார் வழிபாடு செய்து முத்தியடைந்த செய்தியினைச் சுந்தரமூர்த்தி சிவாமிகள் ‘அகத்தடிமை’ எனத் தொடங்கும் தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இத்தலம் கோச்செங்கட் சோழன் திருப்பணி செய்த தலங்களுள் ஒன்றாகும். இறைவன் பெயர் படிக்காசளித்த ஈசுவரர்; இறைவியின் பெயர் அழகாம்பிகை.