அல்லா என்பது நபிகள் நாயகத்தால் நிலை நாட்டப்பெற்ற இசுலாம் மதத்தில் பரம்பொருளுக்கு அராபிய மொழியில் நிலவும் பெயர். அல்லா (Allah) என்னும் சொல் அல், இலாகி என்ற இரண்டு சொற்களின் இணைப்பாகும். அல் என்ற சொல் ஆங்கிலத்தில் ‘தி’ (The) என்ற சுட்டாகும். இலாகி என்றால் கடவுள் என்று பொருள்படும். இசுலாமியத் திருமறையான திருக்குரான் பரம்பொருளை அல்லா என்று குறிப்பிடுகிறது. ‘அல்லாவையன்றிப் பிறிதொரு தெய்வமில்லை; நபிகள் நாயகம் அல்லாவின் தூதர்’ என்பது முசுலிம்களின் கூற்றாகும்.