இனச் சொற்கள்
iṉac coṟkaḷ
இத்தொடர் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் பொருள் ஒற்றுமையும், வடிவ ஒற்றுமையும் கொண்டு அமைந்துள்ள சொற்களைக் குறிக்கும்.
இத்தொடர் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் பொருள் ஒற்றுமையும், வடிவ ஒற்றுமையும் கொண்டு அமைந்துள்ள சொற்களைக் குறிக்கும். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலிய இருபதுக்கு மேற்பட்ட மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தனவாகும். திராவிட மொழிக் குடும்பத்தைப் போல ஆரிய மொழிக் குடும்பம் என்றும் ஒன்று உண்டு. வடமொழி என்று கூறப்படும் சமசுகிருதம் ஆரிய மொழிகளுள் ஒன்று. திராவிடம், ஆரியம் போன்ற பல்வேறு மொழிக் குடும்பங்கள் இவ்வுலகில் உள்ளன. ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்த்த மொழிகள் ‘இன மொழிகள்’ எனப்படும். இனமொழிகள் வேறு, இனச் சொற்கள் வேறு. தமிழில் மொழி என்பது சொல்லையும் குறிக்கும். எனவே, இனமொழிகளை இனச்சொற்களாகக் கருதி மயங்குதல் கூடாது.
இருபதுக்குமேல் இனமொழிகளை உடைய திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு பெரு மொழிகளில் உப்பு என்னும் சொல் பொருள் ஒப்புமையும், வடிவ ஒப்புமையும் கொண்டு விளங்குகிறது. இந்நான்கு மொழிகளிலும் ஒரே பொருளைக் குறித்து உப்பு என்ற வடிவில் வரும் நான்கு சொற்களையும் இனச் சொற்கள் என்று கூறலாம். உப்பு என்பது நான்கு மொழிகளிலும் கிட்டத்தட்ட ஒரே பொருளைக் குறித்து வரும். ஒவ்வொரு மொழியிலும் உப்பு என்ற சொல்லின் வடிவமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே அமைந்துள்ளது என்று கூறலாம். இங்கு ‘வடிவம்’ என்று குறிப்பிடப்படுவது ஒலிவடிவமாகும். எழுத்து வடிவம் அன்று. தமிழிலும், மலையாளத்திலும் உப்பு என்னும்போது அது குற்றியலுகரமாக உச்சரிக்கப்படுகிறது. கன்னடம், தெலுங்கில் அது முற்றிலுகரமாகும். உதடுகள் குவிந்து ஒலிக்கும் உகரத்தை முற்றியலுகரம் என்றும், குவியாது ஒலிப்பதைக் குற்றியலுகரம் என்றும் தமிழ் இலக்கண நூலார் கூறுவர்.
இனி வடிவத்தில் பெரிதும் வேறுபடாமல் பொருளில் மட்டும் ஒரு பகுதி வேறுபடும் இனச் சொற்களைக் காணலாம். தமிழ்: ஓடு ‘மிக வேகமாகச் செல்’, தெலுங்கு: ஓடு ‘தோற்றுப்போ’. இங்கே பொருளில் முழு மாற்றம் இல்லை. ஒரு பகுதிதான் மாறியுள்ளது. ஓடுதலுக்கும், தோற்றுப் போதலுக்கும் ஒருவகைத் தொடர்பு உண்டு, போரில் தோற்பவன் ஓடுபவன் ஆவான்.
பொருளில் பெரிதும் வேறுபடாமல் வடிவத்தில் ஒரு பகுதி வேறுபடும் இனச் சொற்கள் மூன்றாம் வகையைச் சார்ந்தன. எடுத்துக் காட்டு: தமிழ், மலையாளம், கன்னடம்: கெடு, தெலுங்கு: செடு. இங்குப் பொருள் கிட்டத்தட்ட ஒன்றே. தெலுங்கில் மட்டும் ஒலிமாற்றம் நிகழ்ந்திருக்கக் காணலாம். ககரம் சகரமாக மாறியுள்ளது. ககரத்துக்குப் பின்னர் இகரமோ எகரமோ வரும்போதுதான் தெலுங்கில் இத்தகைய ஒலிமாற்றம் நிகழும்.
இறுதி வகை இனச் சொற்கள் பொருளிலும் வடிவத்திலும் ஓரளவு வேறுபடுவதைக் காணலாம். எடுத்துக்காட்டு: தமிழ்; கூழ் ‘குழைந்த உணவு’, தெலுங்கு; கூடு ‘சோறு’, தமிழில் உள்ள ழகர வடிவம் தெலுங்கில் டகரமாக அமைந்துள்ளது. தமிழில் உள்ள இனச் சொல்லின் பொருள் கிட்டத்தட்ட திரவமாக உள்ள உணவையும், தெலுங்குச் சொல்லின் பொருள் திட உணவையும் குறிப்பதைக் காணலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட இனமொழிகளில் சொல்லிலும் பொருளிலும் முற்றிலும் மாறுபாட்டோடு அமைந்த சொற்களுக்கு இனச்சொற்கள் என்னும் பெயர் பொருந்தாது. தமிழில் உள்ள கல் என்ற சொல்லும் தெலுங்கில் உள்ள பேரு ‘பெயர்’ என்ற சொல்றும் இனச் சொற்கள் ஆகா, கல், பேரு என்ற சொற்களுக்கிடையே வடிவ ஒற்றுமையோ, பொருள் ஒற்றுமையோ சிறிதும் கிடையாது.
இனமொழிகளில் அமைந்த இனச் சொற்களில் மூன்று, நான்காம் வகைகளில் வடிவ வேற்றுமை அமைந்திருப்பது சுட்டிக்காட்டப்பெற்றது, தமிழ்: கோழி, தெலுங்கு: கோடி, தமிழ்: ஏழு, தெலுங்கு, ஏடு, தமிழ்: கூழ், தெலுங்கு: கூடு போன்ற சொற்களில் தமிழ் ழகரத்திற்கு இணையாகத் தெலுங்கில் டகரம் அமைந்துள்ளது. இந்த ழகர டகர வேறுபாட்டுக்கு அடிப்படையாக ஓர் ஒற்றுமை உண்டு. இந்த இரண்டு மொழிகளுக்கும் பொதுவான வடிவம் ழகரம். தமிழில் இது மாறாமல் அப்படியே உள்ளது. தெலுங்கில் ழகரம் உள்ள இடத்தில் டகரம் வந்துள்ளது. பண்டைக் காலத் தெலுங்கில் ழகர ஒலி இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.
தமிழில் பாடு என்பதற்கு இணையாகத் தெலுங்கில் பாடு என்ற சொல் உண்டு. வாயால் இசை உண்டாக்கும் இப்பணிக்கு இருமொழிகளிலும் ஒரே சொல். இங்கே இருமொழிகளிலும் டகரம் உள்ளது. தமிழுக்கும் தெலுங்குக்கும் முந்திய மொழியில் டகரமே இருந்ததாகக் கருதலாம்.
தமிழ்: கோழி, தெலுங்கு: கோடி போன்ற சொற்களில் மூல மொழியில் ழகரம் உள்ளதாகக் கருதலாம். இந்த ழகரம் தமிழில் காக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கு ழகரத்தை இழந்து அந்த இடத்தில் டகரம் பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளுக்கிடையே டகரம்: டகரம் ஓர் ஒலிச் சமன்பாடாகும். அதுபோலவே ழகரம்: டகரம் இன்னொரு ஒலிச் சமன்பாடாகும். இந்தச் சமன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மூலத் திராவிடத்தில் வடிவம் எவ்வாறு இருந்திருக்கலாம் என்று உய்த்துணர முடியும்.
ஒலிச் சமன்பாடுகள் இல்லாமல் உதிரியாக ஆங்காங்கே மொழிகளுக்கிடையே ஒப்புமையுடைய சொற்கள் இருந்தால் அவற்றை இனச் சொற்கள் என்று கருத முடியாது. தமிழிலும், அரபி மொழியிலும் தாலுக்கா என்ற சொல் உண்டு. தமிழ் இச்சொல்லை இரவல் வாங்கியது. எனவே, இதை இனச் சொல்லாகக் கருதக் கூடாது.
சில மொழிகளில் இயல்பாக ஒலியொப்புமையும் பொருள் ஒப்புமையும் அமைந்த சொற்கள் காணப்படலாம். தமிழில் ‘சாத்து’ என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் ‘Guild’ என்பதாகும். இந்த இரண்டு மொழிகளும் இனத் தொடர்பு உடையன அல்ல. ஆதலால், இச்சொற்களை இனச் சொற்களாகக் கருத முடியாது.
ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் பொருள் ஒப்புமையும் வடிவ ஒப்புமையும் உடைய சொற்கள் ஒலிச்சமன்பாட்டு விதிகளுக்கு உட்பட்டிருந்தால்தான் அவற்றை ‘இனச்சொற்கள்’ என்று கூறலாம். ந.கு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 609)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z2tnag7h/
தமிழ்“இனச் சொற்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/z2tnag7h/APA
Oliyon Research. (2026). இனச் சொற்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z2tnag7h/MLA
"இனச் சொற்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/z2tnag7h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment