உசசு
ucacu
பண்டைய உரோமானியச் சட்டத்தில் கூறப்பட்ட உடைமை உரிமை (Right of Ownership), உடைமையை வைத்திருத்தல் (Right of Possession) ஆகியவற்றுள் ஒருவகை உரிமையைக் குறித்ததே உசசு (Usus) என்னும் சொல்.
பண்டைய உரோமானியச் சட்டத்தில் கூறப்பட்ட உடைமை உரிமை (Right of Ownership), உடைமையை வைத்திருத்தல் (Right of Possession) ஆகியவற்றுள் ஒருவகை உரிமையைக் குறித்ததே உசசு (Usus) என்னும் சொல். இது ஒரு பொருளை உரிமையாகப் பெறாதவர் அப்பொருளின் பயனை நுகரும் உரிமையைக் குறித்தது.
உரோமானியச் சட்டத்தில் கூறப்பட்ட உடைமை உரிமை வகைகள்
உரோமானியச் சட்டத்தின்படி நிலமும் அசையும் பொருள்களும் தனி ஆட்களால் வரம்பற்ற முழுமையான உடைமைகளாகக் கொள்ளப்படுதல் இயலும். இதுவே வரம்பற்ற தனி உடைமை (Dominium or Absolute Ownership) எனப்பட்டது. செருமனிய, ஆங்கிலச் சட்டங்களில் ஒருவர் ஒரு சொத்தை வைத்திருப்பதே (Possession) உடைமை உரிமையாகக் கொள்ளப்பட்டது. உரோமானியச் சட்டத்தின்படி, நிலத்தை ஒருவர் இரண்டாண்டுகளுக்கும் அசையும் பொருள்களை ஓராண்டிற்கும் தொடர்ந்து வைத்திருந்தால் அவர் அவற்றின் உரிமையாளராவர். ஆனால், அந்தச் சொத்து திருடப்படாத அல்லது வல்லந்தத்தினால் பறிக்கப்படாத ஒன்றாக இருத்தல் வேண்டும். நிலத்தின்மீது எந்தக் கட்டடம் கட்டப்பட்டாலும் அது நிலத்தின் பாகமாக ஆகுமே தவிர, அதைத் தனியாக எவரும் தம் உடைமையாக ஆக்கிக் கொள்ளுதல் இயலாது.
நிலத்தைக் குத்தகைக்கு எடுத்திருப்பவருக்கு, நிலச் சொந்தக்காரருக்கு எதிராக ஒப்பந்தப்படியான உரிமையைத் தவிர வேறெதுவும் பாதுகாப்பு இல்லை. ஆனால், சிலவகைக் குத்தகை முறைகளில் குத்தகைதாரருக்குச் சில பாதுகாப்புகள் இருந்தன. நிலங்களும் கட்டடங்களும் நெடுங்காலத்துக்கு அல்லது குறுகியகாலத்திற்ரு ஒருவருக்குக் குத்தகைக்குக் கொடுக்கப்படும்போது, அவர் உடைமை உரிமைகளை ஒத்த உரிமைகளையே பெற்றார்.
உரோமானிய உடைமை உரிமைச் சட்டத்தில் பிறர் உரிமைக்கு இடம் தரும் உடைமைப் பொறுப்பு (Servitude) என்பதும் இருந்தது. சிலவகையான ஒப்பந்தங்களில் ஒருவருக்கு உரிய உடைமையில் சில உரிமைகளை வேறொருவர் அடைந்தார்; ஒருவருடைய நிலத்தின் விளையொருளை வேறொருவர் அடைவதற்குரிய உரிமை உசசுபிரக்டசு (Ususfructus) எனப்படும். உசசு என்பது உசசு பிரக்டசு உரிமையை விட வரம்புக்குட்பட்ட உரிமையைக் குறித்தது. இதன்படி ஒரு பொருளை நுகர்பவர் அவருடைய வாழ்நாளுக்கு மட்டுமே அப்பொருளின் பயனைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, ஒருவர் தாமே ஒரு வீட்டில் குடியிருத்கல் கூடும்; ஆனால், அவர் அதை வாடகைக்கு விடுதல் இயலாது; அவ்வாறு செய்யின் அது அவ்வீட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்தைப் பெறுவதற்கு ஒப்பாகும். ஆகையால், உசசு என்ற உரிமையின்படி ஒருவர் ஒரு பொருளைத் தாம் நுகரலாமே தவிர அதை மற்றவருக்கு வாடகைக்குக் கொடுத்து வருமானம் பெறுதல் கூடாது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 743)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z2r2evkx/
தமிழ்“உசசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/z2r2evkx/APA
Oliyon Research. (2026). உசசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z2r2evkx/MLA
"உசசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/z2r2evkx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment