சிலப்பதிகாரத்திற்குக் குறிப்புரை வரைந்த பழைய உரையாசிரியர். இவர் இயற்பெயரை அறியக்கூடவில்லை. இந்திர விழவூரெடுத்த காதைக்கு உரை எழுதுகையில் ‘அரும்பதவுரையாசிரியர்’ என்று அடியார்க்கு நல்லார் குறிப்பிடுதலால் அவர் காலத்திலேயே இவரது இயற்பெயர் வழக்கத்தில் இல்லையென்பது புலனாகிறது. சிலப்பதிகார அரும்பதங்களைத் தேர்ந்து அவற்றிற்குப் பயன்மிக்க குறிப்புரை எழுதியமையால் அச்சிறப்பு நோக்கி இவரது இயற்பெயரை நினையாமல் அரும்பதவுரையாசிரியர் என்றும், அரும்பதவுரைகாரர் என்னும் புலவர்கள் குறிப்பிட்டுப் போற்றினர். இவருடைய பெற்றோர், ஊர் பற்றிய செய்திகளும் கிடைக்கவில்லை. தம் உரைத் தொடக்கத்தில் விநாயக வணக்கம் கூறியுள்ளமையால் இவர் சைவ சமயத்தவர் ஆவர். விநாயக வணக்கம் நூலின் தொடக்கத்தில் கூறும் வழக்கம் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னரே ஏற்பட்டது என்பது கல்வெட்டறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் கருத்தாதலின், இவர் காலம் கி.பி. 9–ஆம் நூற்றாண்டாகலாம் என்று சிலர் கருதுவர். சீவக சிந்தாமணியிலிருந்து இவர்தம் உரைக்கு மேற்கோள் காட்டுவதால் இவரைப் பத்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்றுங் கூறுவர். அடியார்க்கு நல்லார் கி.பி. 14–ஆம் நூற்றாண்டினராதலின், இவர் கி.பி. 10–ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. 14–ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டவராதல் கூடும். சிலப்பதிகாரத்தில் பதிகம் முதல் வஞ்சிக் காண்டத்தின் இறுதிக் காதையாகிய வரந்தரு காதை முடிய இவர் அரும்பதவுரை வரைந்துள்ளார். எனினும், மதுரைக் காண்டத்தின் இறுதியிலுள்ள கட்டுரை என்னும் பகுதிக்கும், வஞ்சிக் காண்டத்தின் இறுதியிலுள்ள கட்டுரை, நூற்கட்டுரை ஆகிய பகுதிகளுக்கும் அரும்பதவுரை காணப்பெறவில்லை. மேலும், சிலப்பதிகாரத்திலுள்ள காதைகளுள் பன்னிரண்டின் இறுதியில் பதினைந்து வெண்பாக்கள் உள்ளன. இவற்றுள் வேனிற்காதை, கனாத்திறம் உரைத்த காதை, கொலைக் களக் காதை, அழற்படு காதை, கட்டுரை காதை ஆகியவற்றின் இறுதியிலுள்ள வெண்பாக்களுக்கும், வழக்குரை காதையின் இறுதியிலுள்ள மூன்று வெண்பாக்களுள் முதல் வெண்பாவிற்கும் ஆக ஏழு வெண்பாக்களுக்கு மட்டும் இவர்தம் அரும்பதவுரை கிடைத்துள்ளது. அடியார்க்கு நல்லாரின் பெருஞ் சிறப்பிற்குக் காரணமாக விளங்கியது அரும்பதவுரையாக அமைந்த இவர்தம் உரையேயாகும். அரும்பதவுரையாசிரியர் பெரிதுஞ் சிந்தித்துத் தாம் கண்ட கலை நுணுக்கங்களையும் நூலனுபவங்களையும் அக்கால மரபுகளையும் அரும்பதவுரையில் குறிப்பிட்டமை, அடியார்க்கு நல்லாருக்கு நல் வாய்ப்பினையளித்துச் சிலப்பதிகாரத்திற்கு வளமான விரிவுரை காணத் தூண்டிற்று என்பது பொருத்தமுடையதாகும். அரும்பதவுரையாசிரியரிடம் நன்மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவர் அடியார்க்கு நல்லார் எனினும், சில இடங்களில் அவர் கருத்திற்கு ஆக்கஞ் சேர்க்கும் வகையிலும் தம் மனத்திற்குப் பொருத்தமெனப்பட்டவற்றை அப்படியே எடுத்துரைக்கும் வகையிலும் உரைமாற்றங் கண்டுள்ளார். மங்கல வாழ்த்துப் பாடலில் கண்ணகியையும் கோவலனையும் அறிமுகப்படுத்தும் இளங்கோவடிகள் முதற்கண் கண்ணகியை இனிது புனைந்துரைக்கிறார். இதற்கு, அரும்பதவுரையாசிரியர் ‘இவளை முன் கூறிற்று கதைக்கு நாயகி யாதலான்’ என்று எழுதுவதும், அடியார்க்கு நல்லார் ‘கண்ணகியை முற்கூறினார் பத்தினியை ஏத்துதல் உட்கோளாகலான்’ எனக் கூறிச் செல்வதும் சிந்திக்கத்தக்கன. அரும்பதவுரையாசிரியர், செங்குட்டுவன் மலைவளங் காணச் சென்றது திருச்செங்கோடு என்று குறிப்பிட்டெழுதவும், அடியார்க்கு நல்லார் அதனை ஏற்க மனமில்லாமல் கொடுங்கோளூர்க்கு அயலதாகிய செங்குன்று என்னும் மலை என்று உரையெழுதியுள்ளார். இவ்வாறு, அரும்பதவுரையாசிரியர் கருத்திற்கு உடன்படாமல் அடியார்க்கு நல்லார் உரையெழுதும் பிற இடங்களுமுண்டு. ‘இருவரும் மாறுபட எழுதியிருக்கும் உரைகளை ஆராய்வுழிச் சில இடங்களில் அரும்பதவுரையே பொருத்தமுடையதாகக் காணப்படுகிறது’ என்பர் ந.மு. வேங்கடசாமி நாட்டார். அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் சில இடங்களில் மூலபாடங்கொள்வதிலும் வேறுபடுகின்றனர். அரும்பதவுரையாசிரியர் காட்டிய சில மேற்கோள்களையும் சில நூற்பெயர்களையும் அடியார்க்கு நல்லார் போற்றாமல் செல்கின்ற இடங்களுமுண்டு. எனினும், அடியார்க்கு நல்லாருரை கிடைக்காத பகுதிகளுக்கு அரும்பதவுரையே விளக்கங் காணத் துணை நிற்கிறது. இவருரை, அரும்பதவுரையே யாயினும் சிற்சில இடங்களில் பொழிப்புரையாகவும் காணப்படுகிறது. இவர் சங்க நூல்கள், சிந்தாமணி, வளையாபதி, பதினாறு படலம், மறைந்து போன ‘செயிற்றியம்’ முதலிய பல நூல்களைப் பயின்றவர் என்பதனை இவ்வுரையால் உணரலாம். ஆழ்ந்த புலமையும், ஆராய்ச்சித் தெளிவும், அரியவுழைப்புங் கொண்டவர் அரும்பதவுரையாசிரியர் என்பதனை அவரது உரை நன்கு புலப்படுத்துகிறது.செ.வை.