சமூகஉளவியல் அறிஞர் ஆவார். இவர் மானிடவியல், தொல்லியல், அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார். இவர் தாம் எழுதிய ‘கூட்டம்’ (The Crowd) என்னும் நூலின் மூலம் புகழ்பெற்றார். இவர் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தம் அனுபவங்களின் அடிப்படையில் பல நூல்களை எழுதினார். குறிப்பாக ‘மக்கள் உளவியல்’ (The Psychology of People), ‘உளவியல் சார் அரசியல்’ (Psychologic Politique), ‘சமதரும உளவியல்’ (Psychology of Socialism) ‘புரட்சிசார் உளவியல்’ (Psychology of Revolution) போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். இலி பான் (Le Bon) ஒரு கருத்து எவ்வாறு நிலைத்திருக்கிறது என்பதைப்பற்றி விளக்கும் பொழுது, கருத்துக்கள் உண்மையானவை என்ற காரணத்தால் மட்டில் நிலைத்திருப்பதில்லை; அவை திரும்பத் திரும்பச் செயற்படுத்தப்படுதல் போன்ற பல உளக்காரணிகளால் நிலைத்திருக்கின்றன என்று கூறுகிறார். உளவியல் காரணிகள் நனவிலியில் ஊடுருவிச் சென்று கருத்துகளை நனவிலியின் பகுதியாக ஆக்குகின்றன என்பது இவர் கருத்து. கற்றலும் இவ்வாறே நிகழ்கிறது என்றும் கருதுகிறார்; ‘நனவை நனவிலி நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும்’ என்று இவர் கருதுகிறார். மூளையின் வேறுபாடுகளின் அடிப்படையில் இவர் இனங்களை வரிசைப்படுத்துகிறார்; எடுத்துக்காட்டாக, ஆங்கிலோ–சாக்சன் (Anglo–Saxon) இனமக்கள் இலத்தீன் (Latin) இனமக்களை விட அறிவிற் சிறந்தவர்களாக இருக்கின்றனர் என்று குறிப்பிடுகிறார்; இதற்குப் பல சான்றுகளைத் தம் சுற்றுப் பயணத்தின் போது சேகரித்துள்ளார். இவர் எழுதியுள்ள ‘கூட்டம்’ என்னும் நூலில் கூட்டத்தின் இயல்புகளைப் பற்றி விளக்கியுள்ளார். தனிமனிதன் கூட்டத்தில் இருக்கும் பொழுது அவன் நடத்தைகள் கூட்டத்தின் தன்மைக்கேற்ப மாறுகின்றன. அவன் அக்கூட்டத்தில் தானாகச் செயற்படும் தன்மையை இழந்து எந்திரம்போல் ஆகி விடுகிறான் என்கிறார். கூட்டங்களின் உளப்பண்புகளை இவர் மூன்று வகைகளாகப் பிரிக்கிறார். அவை மனம் ஒருங்கிணைந்த ஒருமுகப்போக்கான தன்மை, உணர்ச்சிவயப்பட்ட தன்மை, இயந்திரம் போன்ற செயல் வகைப்பட்ட தன்மை எனப்படும். இவற்றுள் மனம் ஒருங்கிணைந்த ஒரு முகப் போக்குக் கோட்பாடு மிகுந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கற்றுத் தரப்படுகிறது.